மனித கால்குலேட்டர்!



மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்யன் சுக்லா என்ற சிறுவனை ‘மனித கால்குலேட்டர்’ என்று கணித உலகமே புகழ்ந்து வருகிறது.  
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என எந்தவிதமான கணக்கைக் கொடுத்தாலும் மனதுக்குள்ளேயே கணக்குப் போட்டு, சரியான பதிலைச் சொல்லிவிடுகிறார். இந்தக் கணக்குச் செயல்பாட்டை கால்குலேட்டர் வேகத்தில் செய்கிறார் ஆர்யன். ‘‘ஒளியின் வேகத்தில் கணக்குப் போடுகிறார்...’’ என்று ஆர்யனைப் பாராட்டுகின்றனர்.

‘‘அமைதியாக இருக்கவும், ஒரு விஷயத்தில் முழுமையாக கவனம் செலுத்தவும் யோகா எனக்கு உதவுகிறது. தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கும் பயிற்சியைச் செய்கிறேன்...’’ என்கிறார் ஆர்யா. 

சமீபத்தில் மனதுக்குள்ளேயே வேகமாக கணக்குப் போடும் 6 கின்னஸ் சாதனைகளைத் தன்வசமாக்கியிருக்கிறார் ஆர்யன். பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்யனுக்கு அழைப்புகள் வருகின்றன.மட்டுமல்ல, கணக்கு சம்பந்தமான நிகழ்வுகளை நடத்துவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார் ஆர்யன். இப்போது அவரது வயது 14.

த.சக்திவேல்