நேற்று அஜித் மகள்... இன்று 2கே கிட்ஸின் ட்ரீம் கேர்ள்!



குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தி ரன். ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மகளாக நடித்தபிறகு தமிழர்களின் செல்ல மகளாக மாறினார். இப்போது ஸ்டைலான பருவ மங்கையாக வளர்ந்து நிற்கிறார். 
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகி அனுபவம், 2 கே கிட்ஸ்களின் மனநிலை, விமர்சனங்கள் குறித்து அனிகா மனம் திறந்து பேசினார்.

தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாவோம் என்று எதிர்பார்த்தீர்களா?

மலையாளத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டேன். தமிழில் நல்ல கதைக்காக வெயிட் பண்ணினேன். காதல் கலந்த காமெடி கதை எனக்குப் பிடிக்கும். ஆடிஷனில் கலந்துகிட்டேன். தனுஷ் சார் டைரக்‌ஷனில் அறிமுகமாவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

இயக்குநர் தனுஷ் எப்படி?

கதாநாயகியாக என்னுடைய முதல் படம் இது. தனுஷ் சார் டைரக்‌ஷனில் நடிச்சதை ரொம்பவே சந்தோஷமாகப் பார்க்கிறேன். இப்போது வரை என்னால் நம்பவே முடியவில்லை. நல்ல டீமுடன் வேலை பார்த்தது பெரிய சந்தோஷம். அவர் டைரக்‌ஷனில் நடிச்சேன் என்பதைவிட சினிமாவை கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.தனுஷ் சாரின் டைரக்‌ஷன் ஸ்டைலை பற்றி சொல்வதாக இருந்தால் முதலில் நம்முடைய ஸ்டைலில் பண்ணச் சொல்லுவார். 
மாற்றம் தேவைப்படுவதாக இருந்தாலோ அல்லது அவர் எதிர்பார்க்கிற மாதிரி வேண்டும் என்றாலோ நடிச்சுக்காட்டி, அதை அப்படியே  பண்ணச் சொல்வார். அதுல நம்முடைய ஸ்டைல், இம்ப்ரவைஸ் என்று எதையாவது சேர்க்கச்சொல்வார்.

படம் பார்த்து பலரும் பாராட்டினார்கள். என்னதான் நான் நல்லா நடிச்சிருந்தாலும் அதோட அடித்தளம் என்பது அவர் அமைச்சுக்கொடுத்தது.படத்துல நடிச்ச பவிஷ், பிரியா வாரியர், மாத்யூ தாமஸ் உட்பட எல்லோருமே நியூ கம்மர்ஸ். 

எங்களை சகஜநிலைக்கு கொண்டுவர அவர் சைட்ல இருந்து சாஃப்ட் அப்ரோச் இருந்துகொண்டே இருக்கும். ஒருமுறை எங்களை உற்சாகப்படுத்துவதற்காக, ‘நான் நடிக்க வந்தபோது என்னை உடனே கேமரா முன்னாடி நிக்க வெச்சு நடிக்கச் சொன்னாங்க.

வழிகாட்டுதல் இல்லை. அந்த சமயத்துல எனக்கு அது கஷ்டமா இருந்துச்சு. உங்களை நான் அப்படி பண்ணச்சொல்லமாட்டேன். நார்மலா நீங்க எப்படி பிஹேவ் பண்ணுவீங்களோ அது மாதிரி பண்ணுங்க’ன்னு சொல்லி எங்களுடைய உடல்மொழியை புரிஞ்சு அதுக்கேத்த மாதிரி கேரக்டருக்கான பெர்பாமன்ஸை வாங்கினார்.

படம் கமிட்டான முதல் நாளிலிருந்து எனக்கான ஃப்ரீடம் கொடுத்தார். எந்த இடத்திலும் அழுத்தம் கொடுத்ததில்லை. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்  ஒர்க் ஷாப் நடந்துச்சு. அது யூஸ்ஃபுல்லா இருந்துச்சு.

தனுஷிடமிருந்து என்ன கத்துக்கிட்டீங்க?

அவர் ஆல்ரவுண்டர்ன்னு எல்லோருக்கும் தெரியும். எதைப் பண்ணினாலும் அதை பேஷனோடு பண்ணுவார். எல்லாத்தையும் கத்துக்கிட்டு பண்ணணும்னு நினைப்பார். நடனம் அவரே சொல்லித்தருவார். ஒருமுறை வெப் சீரீஸ் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, கத்துக்கணும்ல என்று ரியாக்‌ஷன் காட்டினார். அது  சினிமாவுல வளர்ந்து வர்ற நான் எவ்வளவு கத்துக்க வேண்டியது அவசியம் என்பதை காண்பிச்சது.

கடின உழைப்பு, பொறுமை அவரிடமிருந்து கத்துக்க வேண்டிய இன்னொரு விஷயம். படப்பிடிப்பு, கம்போஸிங், அவர் நடிக்கும் பட வேலைகள் என   சோர்வு இல்லாம வேலை செய்தது பெரிய உத்வேகத்தைக் கொடுத்துச்சு. 

தூக்கம் இல்லன்னாலும் அப்புறம் தூங்கிக்கலாம்னு சொல்வார். எந்த இடத்திலும் அவர் டென்ஷனாகி பார்த்ததே இல்லை. சின்சியரா வேலை பார்த்தாலும் ஜாலியாவும் பழகுவார். கொஞ்சம் இறுக்கமா இருந்தாலும் அவரே அதை உடைச்சு ஜாலியா இருங்கப்பான்னு சகஜ நிலைக்கு கொண்டுவருவார்.

டீன் ஏஜ் லவ் குறித்து உங்கள் பார்வை என்ன?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ற வயசும், மெச்சூரிட்டியும் எனக்கு இல்லை. நாலைஞ்சு வருஷம் கழிச்சு கேட்டீங்கன்னா கொஞ்சம் டீட்டைலா பதில் சொல்ல முடியும்.
அஜித் மகளாக நடிச்சதை எப்படிப் பார்க்கிறார்கள்?

‘விஸ்வாசம்’ படத்துக்குப் பிறகு மக்கள் எல்லோரும் என்னை அஜித் சார் மகளாகப் பார்ப்பது பெரிய சந்தோஷம். அது சினிமாவில் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. 

ப்ரொமோஷனுக்காக பல இடங்களுக்குச் செல்லும்போது ‘அஜித் சாரின் மகளா நீங்கள்’ என்று கேட்டிருக்கிறார்கள். அஜித் சார் எப்போதும் தன்னை உச்ச நட்சத்திரமாக வெளிப்படுத்தவே மாட்டார். மிகவும் எளிமையாகப் பழகுவார். இனிமையாகப் பேசுவார்.

2 கே கிட்ஸ்களுக்கு 90ஸ் கிட்ஸ்கள் மேல் அப்படிஎன்ன  கோபம்? சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதல் நடக்கிறதே?

90ஸ் கிட்ஸ்தான் 2 கே கிட்ஸ் கிட்ட வம்பு பண்றாங்க. அது ஜெனரஷன் மாறுதல். உண்மையில் 90ஸ் கிட்ஸ் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எல்லாமே சிறந்தவைகளாக கிடைத்தது. 80, 90களுக்கு நடுவே பெரிய மாற்றம் இருக்காது. 90ஸ், 2 கே கிட்ஸ் அப்படியல்ல. அப்போது உலகம் வேகமாக மாறியது.

90ஸ் கிட்ஸ்களிடம் பூமர் அம்சங்களாக எவற்றைப் பார்க்கிறீர்கள்?

துருவித் துருவி கேள்வி கேட்டுட்டு இருப்பாங்க. ஒரே நாளில் மொத்த வரலாறையும் விசாரிப்பாங்க. அதே சமயம் அவர்களிடம் உள்ள  உண்மைத்தன்மை, மக்களிடம் நெருங்கிப் பழகுதல், உறவுகளுக்கு மதிப்பு, மரியாதை தருவது என்று பல நல்ல விஷயங்களைப் பார்க்கமுடியும். போன் அதிகமா யூஸ் பண்ணமாட்டாங்க. அனுபவரீதியாக நிறைய கத்து வெச்சிருப்பாங்க. 2 கே கிட்ஸ் போன்ல நிறைய கத்துக்கறாங்க. 2 கே கிட்ஸ்களிடம் எமோஷனுக்கான கனெக்‌ஷன் அவ்வளவாக இருக்காது.

விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீங்க?

நான் இன்னும் குழந்தைத்தனமாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவரை அப்படிப்பட்ட கேரக்டர்களைத்தான் செய்துள்ளேன். சிலர் என்னுடைய உயரத்தைக் கமெண்ட் அடிச்சதுண்டு. ஆரம்பத்தில் என்னை அது காயப்படுத்தியது. இந்த வயதிலேயே பாடி ஷேமிங் கமெண்ட் செய்வது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

பெரும்பாலும் நான் கமெண் ட்ஸ் படிப்பதில்லை. என்னை அறியாதவர்களின் வெற்று வார்த்தைகளை நான் ஏன் கவனிக்க வேண்டும்? பகிர்வதற்கு நல்ல விஷயம் இருந்தாலோ அல்லது நாலு பேருக்கு யூஸாகும் என்று இருந்தாலோ விமர்சனம் பண்ணலாம். இல்லைன்னா பேசாம இருப்பது மேல். 

ஆக்கபூர்வமான விமர்சனம் எப்போதும் ஆரோக்யமானது. ஆனால், ஒருவரை கீழே தள்ளி ரசிப்பதுதான் பலரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது. ஆக்கபூர்வமான விமர்சனம் வரும்போதுதான் பலருடைய திறமை வெளி உலகத்துக்குத் தெரியவரும்.

எஸ்.ராஜா