ஒரே ஆண்டில் இந்தியாவில் வெறுப்புப் பேச்சு அதிகரித்திருக்கிறது!
வருடா வருடம் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வரும்தான். ஆனால், ஒரு வருடத்தில் இரண்டு தீபாவளி, இரண்டு கிறிஸ்துமஸ் தினம் எல்லாம் வராது.
ஆனால், இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் உமிழும் வெறுப்புப் பேச்சு (Hate Speech) மட்டும் வருடா வருடம் கூரையைப் பிய்த்துக்கொண்டு போவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. கடந்தவாரம் ‘த இண்டியா ஹேட் லேப்’ (The India Hate Lab) எனும் அமைப்பு 2024ம் ஆண்டு - அதாவது சென்ற வருடம் - இந்தியாவில் நிகழ்ந்த வெறுப்புப் பேச்சு சம்பவங்களைக் கணக்கிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
 இதில் கடந்த ஆண்டு சுமார் 1165 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக பதிவு செய்திருக்கிறது. இது 2023ம் ஆண்டைவிட 74.4 சதவீதம் உயர்வு என்றும் கணக்கிடுகிறது. 2023ம் ஆண்டு வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் 668 என்பதை நாம் நினைவில் வைத்தால் இந்தக் கணக்கு புரியும். சரி, ஏன் கடந்த ஆண்டு வெறுப்பு ப்பேச்சு பற்றிக்கொண்டது?மூன்று முக்கியமான காரணங்களை அடுக்குகிறார்கள் ஆய்வாளர்கள்.
1.ஏப்ரல் மற்றுப் மே மாதத்துக்கு இடையேயான பொதுத் தேர்தல். 2.மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் அரியானா மாநிலத் தேர்தல்கள். 3.2024ம் ஆண்டு ஆகஸ்டில் பங்களாதேஷ் நாட்டின் வீழ்ச்சியின்போது அங்கே உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதாக இந்தியாவில் வதந்திகள் பரவ அதை சாக்காகக் கொண்டு இந்திய இஸ்லாமியர்கள் மேல் இந்து அமைப்பினர் தொடுத்த வெறுப்புப் பேச்சு.
சரி... இந்த வெறுப்புப் பேச்சுகளை யார் எல்லாம் அதிகம் விதைத்தனர்?
2024ல் நிகழ்ந்த 1165 சம்பவங்களில் அதிகபட்சமாக 340 சம்பவங்களில் பாஜக கட்சியினர் வெறுப்பை உமிழ்ந்திருக்கின்றனர். அடுத்து பாஜகவின் தோழமை அமைப்புகளான விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் 279 சம்பவங்கள் செய்திருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநில தேர்தலின்போது ‘சாகால் இந்து சமாஜ்’ என்ற அமைப்பு சுமார் 56 சம்பவங்களை செய்திருக்கிறது. பாஜக செய்த 340 சம்பவங்களில் 76 சதவீதம் தேர்தல் பிரசாரத்தின்போது செய்ததுதான்.
சாகாலும் மகாராஷ்டிரா தேர்தலின்போதுதான் 56 சம்பவங்களை நிகழ்த்தியது. பாஜகவின் 340 சம்பங்களிலும் அதிகம் பேசப்பட்ட வெறுப்புப் பேச்சு பிரதமர் மோடி, இராஜஸ்தான் பன்ஸ்வாராவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்புப் பேச்சுதான் என்கிறது இந்த ஆய்வு.
வெறுப்புப் பேச்சு பேசிய தலைவர்களில் மோடி முன்னிலையில் இருந்தால், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி 86 பேச்சுகள் மூலம் இரண்டாம் இடத்திலும், அமித்ஷா 58 பேச்சுகள் மூலம் மூன்றாம் இடத்துக்கும் வருவதாக இந்த ஆய்வு ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறது. 1165 வெறுப்புப் பேச்சில் 90 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றாலும் இந்த வெறுப்புப் பேச்சிலும் 259 பேச்சுகள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும்படியாக இருந்தன என்று ஆதாரம் காண்பிக்கிறது ஆய்வு நிறுவனம்.
அது என்ன..?
259 வன்முறையான வெறுப்புப் பேச்சில் முஸ்லிம்கள், ‘ஊடுருவல்வாதிகள்’ என்றும் அதை சரிசெய்ய அவர்களை ‘விலக்குவது’தான் தீர்வு என்றும் அதிகப்படியான பேச்சுகள் இருந்ததாகவும் பதிவு செய்யும் இந்த ஆய்வு அமைப்பு 111 பேச்சுகள் இஸ்லாமியர்களை பொருளாதார விலக்கம் செய்யும்படியும், 175 பேச்சுகள் முஸ்லிம்களின் மசூதி, வீட்டை உடைக்கும்படியும் அறைகூவல் விடுத்ததாக சுட்டிக் காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும் சிகரமாக 123 பேச்சுகள் இந்துக்களை ஆயுதம் ஏந்தவும் கேட்டுக்கொண்டதாம்.பொதுவாகவே இந்துத்துவக் கட்சிகள் வெறுப்புப் பேச்சுக்கு பெயர் போனவை என்பது கடந்தகால வரலாறு. அதைத்தான் இந்த ஆய்வும் புள்ளிவிபரங்களுடன் மெய்ப்பித்திருக்கிறது.ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால் வழக்கத்தைவிட அதிகப்படியாக ‘பேசுகிறார்கள்’ என்பதையும் இந்த ஆய்வு பொட்டில் அறையும்படி புரிய வைத்திருக்கிறது.
இச்சூழலில் இந்தியாவில் வெறுப்புப் பேச்சின் உளவியல் என்ன என தேனி அரசு மருத்துவமனையின் க்ளினிக்கல் சைக்காலஜிஸ்டான சஃபியிடம் கேட்டோம்.
‘‘வெறுப்புப் பேச்சுக்கு மிக அடிப்படையானது ‘நாம்’, ‘அவர்கள்’ என்ற எதிர்நிலைகளே. ஒரு நாட்டில் அவலநிலை தாண்டவமாடுகிறது என்றால் அது எல்லா சமூகங்களையும்தானே பாதிக்கும்?
ஆனால், இந்த அவலங்கள் எல்லாமே சில குறிப்பிட்ட சமூகத்தால் தனக்கு ஏற்படுகிறது என்று கற்பனையாக கட்டமைக்கப்படும்போது எதிரி தோன்றி விடுகின்றான். அதுவும் வாட்ஸ்அப், கூகுள் மற்றும் சமூக ஊடகங்களின் பெருக்கத்தில் இந்த கற்பனைகள் எல்லையில்லாமல் செல்கிறது.
தன் அவலத்துக்கு இன்னொருவரைக் குறை சொல்வதை உளப்பகுப்பாய்வில் ‘ப்ராஜக்ஷன்’ (Projection), அல்லது தமிழில் சொல்லவேண்டுமென்றால் ‘புறத்தெறிதல்’ என்பார்கள்.
இது ஒரு சுய தற்காப்பு (டிஃபன்ஸ் மெக்கானிஸம்) உத்தி. இது சமூக அளவிலும், தனிமனித அளவிலும் இயங்கக்கூடியது.
சமூக அளவில் நிகழ்ந்தால் (மாஸ் - கும்பல்) பெரிய விளைவுகள் ஏற்படும். இதற்கு உதாரணமாக ‘ஜெர்மானியர்களின் சகல வீழ்ச்சிக்கும் காரணம் யூதர்கள்தான்’ என்று கட்டமைக்கப்பட்ட வரலாற்றை ஹன்னா ஹாரண்ட் என்பவர் ஒரு புத்தகத்தில் ஆராய்ந்திருப்பார். இதுதான் இந்தியாவில் இப்போது நடக்கிறது...’’ என்கிறார் சஃபி.
டி.ரஞ்சித்
|