இந்தியாவில் 3 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை!



ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

“இந்தியாவில்  கடந்த 2020ம் வருடத்திலிருந்து காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை, 3 லட்சம். இதில் 58,665 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். காணாமல் போன குழந்தைகளில் பலரை மீட்டுவிட்டனர். இன்னமும் 36 ஆயிரம் குழந்தைகளைக் கண்டுபிடித்து மீட்க முடியவில்லை...’’ என்ற சமீபத்திய செய்தி நாட்டையே உலுக்கியிருக்கிறது.
மட்டுமல்ல, கடந்த நான்கு வருடங்களில் பீகாரில் மட்டுமே 24 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்.

இதில் 12,600 குழந்தைகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன 58,665 குழந்தைகளில், 45,585 பேரை நான்கு மாதங்களிலேயே காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். மீதிக் குழந்தைகளைக் குறித்து எந்த தடயமும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இதுபோக ஒடிசாவிலும் 24,291 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர். ஆனால், காவல்துறையினர் 4,852 குழந்தைகளை மட்டுமே கண்டுபிடித்திருக்கின்றனர்.
தில்லி, பஞ்சாப், நாகலாந்து, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் குழந்தைகள் காணாமல் போன விவரங்களைக் கொடுக்க மறுத்துவிட்டன.
இப்படி அதிர்ச்சியான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

வழி தவறி எங்கேயாவது சென்றுவிட்டு வீட்டுக்குப் போக முடியாமல் தவிப்பவர்கள், தங்களுக்கு மட்டுமே தெரிந்தவர்களுடன் செல்லுதல், பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்படுதல் என பல வழிகளில் குழந்தைகள் காணாமல் போவது நிகழ்கிறது. இதில் குழந்தைகள் கடத்தப்படுதல்தான் மிகவும் ஆபத்தானது. அப்படி கடத்தப்படும் குழந்தைகள் பாலியல் தொழில், பிச்சையெடுத்தல், குழந்தை தொழிலாளர் , மசாஜ் பார்லரில் வேலை, உடல்உறுப்பு கொள்ளை என பல்வேறு கொடூரங்களுக்கு ஆளாகின்றனர்.

ஒருசில குழந்தைகள் மட்டுமே பணயத் தொகை கேட்டு கடத்தப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய ஆய்வு. இன்றைய தேதியில் தினமும் இந்தியாவில் சுமார் 250 குழந்தைகள் காணாமல் போகின்றனர். 

இதில் 50 சதவீத குழந்தைகளை மட்டுமே  காவல்துறை கண்டுபிடிக்கிறது. குறிப்பாக 2023ம் வருடத்தில் மட்டுமே இந்தியா முழுவதும் 50 ஆயிரம் குழந்தைகளைக் காணவில்லை. இந்தக் குழந்தைகளில் 71.4 சதவீதத்தினர் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டாலுமே கூட, கடந்த சில வருடங்களாகவே காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியா முழுவதும் 2017ல் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, 2018ல் 5.6 சதவீதம் அதிகம். 2018ஐ விட 2019ல் 8.9 சதவீதம் அதிகம்.

குறிப்பாக 2020ல் காணாமல் போன குழந்தைகளைவிட, 2021ல் 30.8 சதவீதம் அதிகம். 2021ஐ விட 2022ல் 7.5 சதவீதமும், 2022ஐ விட 2023ல் 6 சதவீதமும், 2023ஐ விட 2024ல் 6.7 சதவீதமும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

மட்டுமல்ல, கண்டுபிடிக்க முடியாமல் போகின்ற குழந்தைகள் எல்லோரும் கடத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களைப் பற்றிய ரகசியங்கள் மர்மமாகவே இருக்கின்றன. இந்தக் கும்பல்கள் சர்வதேச அளவில் தங்களின் நெட்வொர்க்கை வைத்திருக்கின்றன. கடத்தல்காரர்களின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளைக் கடத்துவதுதான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்களின் படி, 2022ல் 76,069 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 62,099 குழந்தைகள் பெண்கள். இந்தப் பெண் குழந்தைகள் எல்லோருமே 18 வயது நிரம்பாத மைனர்கள். இதற்கு முந்தைய வருடத்தில், அதாவது 2021ல் 40,219 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கின்றனர்.

2022ல் 33,650 பெண் குழந்தைகளும், 2021ல் 29,364 பெண் குழந்தைகளும், 2020ல் 22,222 பெண் குழந்தைகளும், 2019ல் 29,243 பெண் குழந்தைகளும், 2018ல் 24,429 பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டிருக்கின்றனர். 2023 மற்றும் 2024லிலும் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருக்கும்.

‘‘காணாமல் போகும் குழந்தைகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்தக் குழந்தைகளின் மீது குற்றவாளிகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தக் குற்றவாளிகளின் குழுவில் ஒருவராக அந்தக் குழந்தைகள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மட்டுமல்ல, அந்த குழந்தைகள் விற்கப்படலாம் அல்லது பாலியல் தொழிலிலோ, சட்டத்துக்கு விரோதமான செயல்களிலோ ஈடுபடுத்தப்படலாம்...’’ என்று எச்சரிக்கிறார் தில்லியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி.‘‘குழந்தை காணாமல் போன முதல் 24 மணி நேரம் மிகவும் முக்கியம். அதற்குள் குழந்தையைக் கண்டுபிடித்துவிட வேண்டும். 

24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் உடல் நிலையும், மன நிலையும் மோசமடைய வாய்ப்புகள் உண்டு...’’ என்கிறார் ரிஷி காந்த்.  குழந்தை கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் இவர்.

மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 2018ல் 10,038 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. இதில் 7,574 சிறுமிகள் அடக்கம். அங்கே 2019ல் 11,022 குழந்தைகள் காணாமல் போனதில் 8,572 பேர் சிறுமிகள், 2020ல் 8,751 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர். இதில் 7,230 பேர் சிறுமிகள்.2021ல் 11,607 குழந்தைகளைக் காணவில்லை. இதில் 9,407 பேர் சிறுமிகள். 2022ல் 11,352 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர். இதில் 9066 பேர் சிறுமிகள்.

2023 மற்றும் 2024லிலும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர். இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி குழந்தைகள் காணாமல் போவது முடிவே இல்லாமல் தொடர்ந்துகொண்டே செல்கிறது. “மற்ற யாரையுமே நம்பாமல், தனிக்கவனம் எடுத்து  குழந்தைகளைப் பெற்றோர்களே  பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறோம்...” என்கிறார் ரிஷி.

த.சக்திவேல்