இது இரண்டு பெண்களின் கதை!



‘‘சினிமாவைப் பொறுத்தவரை எல்லா படைப்புகளும் மக்களுக்கானது. வியாபாரத்துக்காக ஏ சென்டர், பி சென்டர் என்று பிரிக்கலாம். ஆனால், எமோஷன் என்பது ஏழை, பணக்கார்கள் என எல்லோருக்கும் ஒரேமாதிரிதான். அந்த வகையில் ‘ஜென்டில் வுமன்’ எல்லோருக்குமான படமாக இருக்கும்...’’ என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்.
இது வுமன் சென்ட்ரிக் கதையா?

இரண்டு பெண்கள் லீட் ரோலில் நடிக்கிறதால வுமன் சென்ட்ரிக் கதையாக பார்க்கப் படுகிறது. இது இரண்டு பெண் களைப் பற்றிய கதை. ஆண் நடிகர் லீட் ரோல் பண்ணும்போது மேல் சென்ட்ரிக் கதை, மேல் டைரக்டர் படம்னு சொல்லமாட்டோம். பெண்கள் லீட் ரோல் பண்ணும்போது வுமன் சென்ட்ரிக் படம் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கு.
‘ஜென்டில் வுமன்’ என்ற டைட்டில் ஏன் செல்ட்க் பண்ணினேன் என்றால் சில விஷயங்களில் ஸ்டீரியோடைப்புக்கு பழக்கப்பட்டு இருப்போம். பேசும்போது லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்போம். அடுத்து பெண் என்பவள் மென்மையானவள், அழகானவள் என்று வர்ணிப்போம்.

ஆனால், ஜென்டில் என்ற வார்த்தையை அவர்களுக்கு கொடுக்காம, வீரன், சக்திமான் என்று ஆணுக்கு ஜென்டில் என்ற வார்த்தையைக் கொடுப்போம். இந்த மாதிரி விஷயங்களை யோசிச்சு பொதுவான ஸ்டீரியோடைப்பை பிரேக் பண்ணணும் என்றுதான் ‘ஜென்டில் வுமன்’ என்ற டைட்டில் வெச்சேன்.

படம் எதைப்பற்றி பேசுகிறது?

இது சோஷியல் டிராமா. இரண்டு பெண்களைப் பற்றிய கதை. நகரத்தில் வாழும் பெண், கிராமத்தில் வாழும் பெண். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்கள், சூழ்நிலைகள், பிரச்னைகள், அடக்குமுறைகள்தான் படத்தோட மையப்புள்ளி. பொதுப்புத்தியில் ஒரு வாகனத்தில் ரைட் சைட் இண்டிகேட்டர் போட்டுவிட்டு லெஃப்ட் சைட் போகும்போது அது பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் மனநிலை இருக்கு. அந்தப் பார்வையை இந்தப் படம் கொஞ்சமாவது மாத்தும்னு நினைக்கிறேன்.

ஆண் என்றால் இப்படித்தான் பெண் என்றால் இப்படித்தான் என்ற பார்வையை வேறு ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். இது பெண்ணியம் பற்றிய படம் கிடையாது. ஆணாக இருப்பதால் பெண்ணியத்தைப் பற்றியும் பேச முடியாது. ஆனால், பெண் விடுதலை என்பது ஒட்டு மொத்த சமூகத்துக்கான விடுதலை என்ற புரிதலுடன் சொல்லியுள்ளேன்.

என்ன சொல்கிறார் உங்கள் ‘ஜென்டில் வுமன்’?

பூரணி என்ற கேரக்டரில் லிஜோமோல் வர்றார். லிஜோமோல்  இந்தப் படத்துக்கு முன் ‘ஜெய்பீம்’ பண்ணியிருந்தாங்க. அதுல செங்கனி கேரக்டர் சூர்யா, ராஜகண்ணு கேரக்டர்களைத்தாண்டி ரொம்ப வீக்கான கேரக்டர். படம் முழுவதும் தனக்கு ஒரு மீட்பர் வேணும் என்ற மனநிலையிலே அந்தக் கேரக்டர் இருக்கும். அந்த மனநிலையில் இல்லாம தனக்காக, தானே போராடுகிற மாதிரி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிச்சு உருவாக்கிய கேரக்டர்தான் பூரணி.லிஜோவும் இது மாதிரி கேரக்டர் பண்ணாததால ஆர்வமா கதைகேட்டு ஓகே சொன்னார். 
இந்தப் படத்தை சீக்கிரமா முடிப்பதற்கு காரணம் ஆர்ட்டிஸ்ட்ஸ் கொடுத்த ஒத்துழைப்பு. அதுக்கு முக்கிய காரணம் லிஜோ. வேற மாநிலத்திலிருந்து முன்பின் தெரியாத டீமுடன் வேலை செய்வது பாராட்டுக்குரியது. ஒட்டு மொத்த டீம், கதை என நம்பிக்கையுடன் வேலை பார்த்தார்.

தமிழ் தெரியும் என்பதால் வசன உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பதைவிட ஒரு காட்சியைப் பற்றி சொல்லிவிட்டோம் என்றால் அதை அவர் கன்சீவ் பண்ணுவது இயக்குநருக்கே சர்ப்ரைசாக இருக்கும். கற்பனையா ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொடுத்தால் அதை அப்படியே நிஜமாகவே பண்ணக்கூடிய திறமை உள்ளவர். 
இந்தப் படத்துக்காக அவர் காண்பித்த ஒத்துழைப்பு வேற லெவல். லஞ்ச் பிரேக்ல கூட செட்டைவிட்டு நகரமாட்டாங்க. இயக்குநர் சொன்னால் மட்டுமே செட்டை விட்டு வெளியே போவார்.

எந்த இடத்திலும் என்னை முதல் பட இயக்குநராக பார்த்ததில்லை. அந்த வகையில் படம் சிறப்பா வருவதற்கு முழுமையா சப்போர்ட் பண்ணினாங்க.

லாஸ்லியா, ஹானா என்ற கேரக்டர்ல வர்றார். அவர் கேரக்டரும் பேசப்படும். அவரை ஏன் செலக்ட் பண்ணினேன் என்றால் ஹானா கேரக்டர் சுதந்திரமா இயங்கும் சக்திவாய்ந்த பெண். நிஜவாழ்க்கையிலும் லாஸ்லியா சுதந்திரமா இயங்கும் சக்திவாய்ந்த பெண்.

மற்ற மாவட்டத்துல இருந்து தலைநகருக்கு வேலைக்காக பெண்கள் வருவது சவாலான விஷயம். அந்தச் சூழ்நிலையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்து அதுவும் சினிமா துறையில்  தன்னம்பிக்கையுடன் போராடி சர்வைவல் பண்ணுவதற்கு திடமான மனநிலை வேணும். அவருடைய அந்த மனநிலை  கதையோட அடிநாதமாகவே இருந்துச்சு.

பொதுவெளியில் எப்படி பார்க்கிறார்கள் என்றால் லிஜோ நல்லா பெர்பாமன்ஸ் பண்ணுவாங்க. லாஸ்லியா டிவி புகழ் நடிகை... என்று அவருடைய  அழகை மையப்படுத்தி பார்க்கிறார்கள்.
இந்தப்படம் லாஸ்லியாவின் நடிப்பாற்றலைப் பேசும். லிஜோ தரத்துக்கு பண்ணியிருக்காங்க. அது எனக்கே பிரமிப்பா இருந்துச்சு. இன்னொரு லீட்ல ‘வித்தைக்காரன்’ தாரணி பண்ணியிருக்கிறார்.

ஹரிகிருஷ்ணாவை உங்களுக்கு தெரியும். ‘மெட்ராஸ்’ படத்துல  ஜானியா கலக்கியவர். ‘தங்கலான்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என பல படங்களில் வித்தியாசமான வேடங்கள் செய்தவர். பொதுவா அவர் பண்ணும் கேரக்டர் எல்லாமே தனித்துவமா இருக்கும். இதுல மென்மையான கேரக்டர். இவர்களோடு நந்திதா, சுதீஷ், ராஜீவ் காந்தி இருக்கிறார்கள்.

பாடல்கள் எப்படி வந்துள்ளது?

இசை கோவிந்த் வசந்தா. என்னுடைய நண்பர் என்பதால் ‘ரைட்டர்’ படத்துக்கு கமிட் பண்ணிக் கொடுத்தேன். அப்படியே என் படத்துக்கும் பண்ணுங்க என்று கேட்டேன். அப்படி கோவிந்தாவுடன் நண்பராகத்தான் பழக்கம் ஏற்பட்டுச்சு.ஜாஸ், லவ், ஒப்பாரி என வெரைட்டியா கொடுத்தார். ‘ஆசை நாயகி...’ பாடல் அதிகம் பேசப்படும்.

 பாடல்களை யுக பாரதி எழுதினார். பேக்ரவுண்ட் மியூசிக்கும் பேசப்படும். ஏனெனில் பேக்ரவுண்ட் ஸ்கோர்தான் முதலில்  பண்ணிக்கொடுத்தார். அதைவெச்சுதான் ஷூட் போனேன். படம் பார்த்துவிட்டு கூடுதலா செலவு பண்ணி பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணிக் கொடுத்தார்.காத்தவராயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதவியாளர்களாக ஒர்க் பண்ணும்போதே பழக்கம். தயாரிப்பு ஹரிபாஸ்கர்.

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

சொந்த ஊர் சென்னை. பூனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சேன். மியூசிக்ல ஆர்வம் இருந்ததால ரஹ்மான் சார் இசைக் கல்லூரியில் மியூசிக் கத்துக்கிட்டேன்.
ஆரம்பத்துல மியூசிக் கம்போஸராக வரணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு சில அரசியல் பார்வை இருந்ததால சமரசம் செய்துகொண்டு மியூசிக் பண்ணமுடியாதுன்னு தோணுச்சு.
இன்னொருத்தர்  படைப்புல நம்முடைய கருத்தியலை சொல்ல முடியாது என்பதால் நானே டைரக்‌ஷன் பண்ணலாம்னு முடிவு பண்ணி, இயக்குநர் ராஜுமுருகனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.

எஸ்.ராஜா