மும்மொழி கொள்கை அவசியமா?



ஒன்றிய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய தேசியக் கல்விக் கொள்கை மும்மொழித் திட்டத்தை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 2,152 கோடி ரூபாய் கல்வி நிதியைத் தர முடியாது எனப் பேசியிருக்கிறார் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனால், இந்தித் திணிப்பு விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.

இந்தச் சூழலில், இந்தி தேசிய மொழி; மும்மொழிக் கொள்கையில் என்ன தவறு?, இந்தி படித்தால் வேலைவாய்ப்புகள் பெருகும் அல்லவா?, இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே... இதுபோன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள்.எனவே, இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்விதமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், நடைமுறை நிலவரங்களின் அடிப்படையிலும் ஒவ்வொன்றாக அலசுவோம்.

இந்தி, தேசிய மொழியா?

இல்லை என்பதே பதில். இந்தியாவுக்கென தேசிய கீதம் உண்டு, தேசிய விலங்கு உண்டு, தேசியப் பறவை உண்டு. ஆனால், தேசிய மொழி கிடையாது.

ஏனெனில், அரசியலமைப்புச் சட்ட விவாதம் தொடங்கிய நாளிலிருந்தே தேசிய மொழி என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே இதில் சமரசம்தான் செய்யப்பட்டது. எந்தவொரு மொழியும் இறுதி செய்யப்படவில்லை.

அதேபோல் இந்தி ஆட்சிமொழியா, அலுவல் மொழியா என்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும், எந்த மொழியும் ஆட்சி மொழி என்று குறிப்பிடப்படவில்லை. Official language என்றுதான் குறிப்பிடப்படுகிறது. அதாவது அலுவல் மொழி. எனவே இந்தி ஆட்சி மொழி அல்ல, அலுவல் மொழிதான். சரி, இந்தி மட்டுமே அலுவல் மொழியா என்று கேட்டாலும் இல்லை என்பதுதான் பதில். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியும், ஆங்கிலமும் அலுவல் மொழிகள்.

அதாவது ஒன்றிய அலுவலகங்களுக்கும், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும் இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும்.

ஒன்றியத்துக்கும் இந்தி மொழி பேசாத மாநிலங்களுக்கும் இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும்; இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டால், அவற்றுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு சேர்த்து அனுப்பப்பட வேண்டும்.

இந்தி மொழி கற்பதால் வேலைவாய்ப்புகள் பெருகுமா? இல்லை என்பதுதான் பதில். இந்தி மொழியால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் குறைந்தது 3 கோடிப் பேர்களாவது (கேரளத்தில் மட்டும் 35 லட்சம் பேர்) வடக்கிலிருந்து இந்தி தெரிந்தவர்கள் புலம் பெயர்ந்து பல்வேறு வேலைகளுக்கு வந்திருப்பது ஏன்?  

வடக்கிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகவே இருந்தாலும் அவர்களிலும் படித்தவர்கள் நிறையவே உண்டு. BIMARU என்று அழைக்கப்படும் பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் பரப்பளவில் பெரும்பகுதியைக் கொண்டவை.ஆனால், அங்கே வேலைவாய்ப்புகள் இல்லை, போக்குவரத்து வசதிகள் இல்லை, ஆண்டு முழுவதும் நிரந்தர வேலைகள் இல்லை. அதனால் தொழிலில் சிறந்து விளங்கும் தென் மாநிலங்களை நோக்கி வருகிறார்கள்.

இந்தி தெரியாவிட்டால் ஒன்றிய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்காதா?

ஒன்றிய அரசில் வேலை செய்வதற்கு இந்தி கட்டாயம் இல்லை. இந்தி படித்திருந்தால்தான் அரசுத்துறையில் வேலை கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம். இன்றைய சூழலில், மொத்த வேலைவாய்ப்புகளில் அரசாங்க வேலைகளின் பங்கு வெறும் 2 விழுக்காடு மட்டுமே.

அதாவது நூறு வேலை வாய்ப்புகள் உள்ளன என்றால், அதில் இரண்டு மட்டுமே அரசுப் பணியாக இருக்கும். அதிலும், 2 சதவிகிதம் என்பதும்கூட ஒன்றிய அரசினுடையது மட்டுமல்ல, மாநில அரசுகளின் வேலைகளும் சேர்த்து. ஆக, இந்தி படித்தால் இந்தி பேசப்படும் பகுதியில் அரசாங்க வேலை கிடைப்பது மிகமிகக் குறைவான வாய்ப்புதான்.  

இன்றைய சூழலில் அரசாங்க வேலைகளைவிட தனியார் துறைகளில்தான் ஊதியம் அதிகம். தனியார் துறைகளில் கல்விக்கும், வேலைத் திறமைக்கும்தான் முக்கியத்துவம் தருவார்களே தவிர, மொழியைப் பொறுத்து வேலை தருவதில்லை. அதிகபட்சமாக, எங்கே வேலைக்குப் போகிறாரோ அந்தப் பகுதியின் மொழி தெரிந்திருந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம். 

அப்படி வேற்று மொழிப் பகுதிக்கு வேலைக்குச் செல்கிறவர்கள் சில மாதங்களுக்குள்ளேயே அந்த மொழிகளைப் புரிந்து கொள்ளவும், ஓரளவுக்குப் பேசவும் முடியும். வடக்கிலிருந்து தமிழோ மலையாளமோ தெரியாமல் வரும் கோடிக்கணக்கானோர், தெற்கே வந்த சில மாதங்களிலேயே நம்முடைய மொழியைப் பேசுகிறார்கள் என்பதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஏற்கனவே பல பள்ளிகளில் இந்தி இருக்கிறதே?  

ஐஐடி, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு சிபிஎஸ்இ கல்வி பொருத்தமாக இருக்கும் என்று நம்புவதால் பெற்றோர் சிபிஎஸ்இ கல்வியின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். பள்ளிகள் நடத்துகிறவர்களும் சிபிஎஸ்இ பள்ளிகளையே நடத்த விரும்புகின்றனர்.  

சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி இருப்பதன் காரணம், பள்ளியை நடத்துகிறவர்களுக்கோ மாணவர்களுக்கோ பெற்றோருக்கோ இந்தியின் மீதான பற்று அல்ல. இந்தி மொழியும் சேர்த்தால்தான் சிபிஎஸ்இ அங்கீகாரம் கிடைக்கும் என்ற கட்டாயத்தால்தான். இப்போது சிபிஎஸ்இயில் இருப்பதை மாநிலப் பாடத்திட்டத்திலும் திணிப்பதைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

மும்மொழிகள் என்று சொல்லும்போது இந்திதான் கற்க வேண்டும் என்பதில்லை. வேறெந்த மொழியாகவும் இருக்கலாம்தானே எனக் கேட்கலாம். இதற்குத் திபெத்தை உதாரணமாகச் சொல்லலாம். திபெத், இந்திய - சீன எல்லையில் இருக்கும் பகுதி. கொஞ்சம் கொஞ்சமாக சீனா அதை ஆக்கிரமித்து விட்டது. 

எந்தவொரு நாட்டையும் அல்லது சமூகத்தையும் அடக்கி ஆள நினைத்தால், எந்தவொரு அரசும் செய்யக்கூடிய முதல் வேலை, அதன் மொழியையும் பண்பாட்டையும் அழித்தல். சீனமும் திபெத்தில் அதைத்தான் செய்கிறது.

திபெத் பள்ளிகளில் இருமொழிக் கொள்கை. அதாவது, சீனமும் திபெத்திய மொழியும். ஆனால், நடைமுறையில் சீனத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு, திபெத்திய மொழி கற்பதிலிருந்து திபெத்தியினர் தடுக்கப்படுகின்றனர். அண்மை ஆண்டுகளாக, தொடக்கப் பள்ளியிலிருந்தே சீன வழிக் கல்வி மட்டுமே தரப்படுகிறது. திபெத் மொழி ஒரு பாடமாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது.

இந்தப் போக்கு முதலில் நகர்ப்புறப் பகுதிகளில் மட்டுமே இருந்தது. இப்போது ஊரகப் பகுதிகளுக்கும் விரிவாக்கப்படுகிறது. இதன் விளைவாக தாய்மொழி வழியில் யாரும் கற்க முடியாது.

இதைப்பற்றிக் கேட்டால், இரண்டு மொழிகளும் பரப்பப்பட வேண்டும் என்பதுதான் கொள்கை என்று சொல்வார்கள். ஆனால், எந்த மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதை அந்தந்தப் பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி, மறைமுகமாக நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

திபெத்திய மொழி கற்பிக்கும் ஆசிரியர்களைவிட சீனமொழி கற்பிக்கும் ஆசிரியர்களையே அதிகம் நியமித்தால், முடிந்தது வேலை. பள்ளிகள் வேறு வழியில்லாமல் சீனமொழி வழிக் கல்வியைத்தான் தேர்வு செய்யும். 

அதுதான் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. இங்கே புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்கிறது ஒன்றிய அரசு. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவதாக ஏதேனும் ஓர் இந்திய மொழி. கூடுதலாக ஒரு மொழியைக் கற்பது நல்லதுதானே? அந்த மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்யலாம்தானே, பிறகென்ன பிரச்னை? - இது ஒன்றிய அரசின் கொள்கையை ஆதரிப்போர் முன்வைக்கும் வாதம்.

திபெத்திய உதாரணம்தான் இங்கே பொருந்தும். உங்கள் குழந்தை 6ம் வகுப்பில் படிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வகுப்பில் 50 பேர். அதில் 10 பேர் மலையாளம், 10 பேர் கன்னடம், 10 பேர் தெலுங்கு, 10 பேர் இந்தி, 10 பேர் ஃபிரெஞ்ச் எனத் தேர்வு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மொழிக்கும் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறார்களா? 

நிச்சயமாக அதற்கு சாத்தியம் இல்லை. இப்போதே அத்தியாவசியப் பாடங்களுக்கே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது ஒவ்வொருவரின் விருப்ப மொழிக்கும் தேவையான ஆசிரியர்களை எங்கிருந்து நியமிப்பார்கள்?

எட்டாவது அட்டவணையில் உள்ளவை 22 மொழிகள். ஒவ்வொரு மாணவரும் ஆளுக்கு ஒரு மொழியைத் தேர்வு செய்தால், எல்லா மொழிகளுக்கும் ஆசிரியர்களை நியமிப்பார்
களா? அத்தனை மொழிகளுக்கும் பாடங்கள், தேர்வுகள் சாத்தியமா? நிச்சயமாக சாத்தியமில்லை. அப்படியானால் என்னதான் நடக்கும்?

மூன்றாவது மொழியாக இந்த மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றுதான் இருக்கிறது என்று சொல்லி, உங்கள் விருப்பமாக அவர்களே முடிவு செய்து ஏதேனும் ஒரு மொழியைத் திணிப்பது மட்டுமே சாத்தியமாகும்.  இல்லையேல் உங்களுக்கு விருப்பமான மொழியைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்து கொள்ளுங்கள். இங்கே இடம் இல்லை என்பார்கள். ஆக, வேறு வழியில்லாமல் அவர்கள் முன்வைக்கும் மொழியை நீங்களாகவே தேர்வு செய்வீர்கள்.

ஒருவேளை, நீங்கள் தேர்வு செய்த மொழியையே முதலில் தந்தாலும், சில காலம் கழித்து, அந்த மொழிக்கான ஆசிரியர் இல்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? அவர்கள் முன்வைக்கிற மொழியை மட்டுமே தேர்வு செய்வீர்கள். அந்த மொழி இந்தி மொழியாகவே இருக்கும். ஆக, இந்தித் திணிப்பு என்று சொல்ல முடியாதபடி மறைமுகமாக இந்தி திணிக்கப்படும்.

தமிழ்நாட்டில் மும்மொழியின் பெயரால் இந்தி அறிமுகம் செய்யப்படுவதுபோல, வடமாநிலங்களில் மும்மொழிகளில் ஒன்றாக தென்னிந்திய மொழிகளும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உண்டு அல்லவா? வடமாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கவில்லையே? என்றும் கேட்கலாம்.

புதிய கல்விக் கொள்கை வடமாநிலங்களில் ஏற்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை மும்மொழிகளில் எந்தெந்த மொழிகள் இடம்பெற்றுள்ளன என்று யாருக்கும் தெரியாது. இனிமேல்தான் செய்யப் போகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்கள் தெரியுமா? அல்லது, மாணவர்கள் என்ன மொழியைத் தேர்வு செய்வார்கள் தெரியுமா?

சமஸ்கிருதம். காரணம், இந்தி, சமஸ்கிருதம் இரண்டுக்கும் வரி வடிவம் எழுத்து வடிவம் - ஒன்றேதான். ஓரிரு எழுத்துகளில் மட்டும் சற்றே மாறுதல் நிகழலாம். மற்றபடி, இந்தி வாசிக்கத் தெரிந்தவர்கள் சமஸ்கிருதம் எளிதாக வாசிக்க முடியும்.

எனவே, அவர்கள் மற்றொரு மொழியாக சமஸ்கிருதம் தேர்வு செய்தால், புதிதாக ஒரு மொழியின் எழுத்துகளை எழுதி, வாசித்துப் பழக வேண்டிய தேவை இருக்காது என நினைப்பார்கள். ஆக, வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது, நடைமுறையில் ஆங்கிலம் - இந்தி - சமஸ்கிருதம் என்பதாகவே இருக்கும். வருகின்ற தரவுகளும் இதைத்தான் நிரூபிக்கின்றன.

இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. அதில் சமஸ்கிருதம்தான் தமது தாய்மொழி என்று சொல்பவர்கள் வெறும் 25,000 பேர் மட்டுமே; அதாவது, வெறும் 0.002 விழுக்காட்டினர். ஆனால், இந்த மிகச்சிறுபான்மையினரின் மொழிக்காக ஆயிரம் கோடிகளை இறைக்கிறது ஒன்றிய அரசு.

மக்களிடையே வழக்கிலேயே இல்லாத சமஸ்கிருத மொழிக்காக 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பதும், 288 கல்லூரிகளில் சமஸ்கிருதத்தில் பட்டப்படிப்புகள் உள்ளன என்பதும் வியப்புக்குரிய, கவனிக்க வேண்டிய செய்தி. 2017 - 20 வரை மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழுக்கு ஒதுக்கியது 23 கோடி ரூபாய், தெலுங்குக்கு 3 கோடி, கன்னடத்துக்கு 3 கோடி. ஆனால், 2017 - 22 வரை ஐந்து ஆண்டுகளில் சமஸ்கிருத மேம்பாட்டுக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1074 கோடி!

சமஸ்கிருதம் படிப்பதால் வேலைவாய்ப்பு உண்டா, வெவ்வேறு நாடுகளுக்குப் போகும்போது பயன்படுமா என்றால் அதுவும் இல்லை. அதனால், இந்த மும்மொழிக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டால், அடுத்து ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேர்தல் என்ற கோஷம் முன்வைக்கப்படுவது போல ஒரே கல்வித்திட்டம், ஒரே சிலபஸ், ஒரே மொழி, ஒரே மொழிவழிக் கல்வி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்று தொடரும். அதனால், தாய்மொழி யைக் காப்போம். எல்லா மொழிகளையும் மதிப்போம். மொழித் திணிப்பை எதிர்ப்போம்.

 - ஆர்.ஷாஜஹான்