மெஜோரானா 1 இது கம்ப்யூட்டர் புரட்சி!



கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கணினி உலகில் முதல்முறையாக குவாண்டம் சிப் ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. இதனால், 2027 - 2029ம் ஆண்டுக்குள் குவாண்டம் கம்ப்யூட்டரை வணிகப் பயன்பாட்டிற்காக உருவாக்கமுடியும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா.
குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் வேகமாக செயல்பட்டுவரும் நிலையில், மைக்ரோசாஃப்ட்டின் இந்த முயற்சி கணினி யுகத்தில் ஒரு புதிய பாய்ச்சல் எனலாம்.   

*புதிய பொருளின் பிறப்பு

பொதுவாக பொருட்கள் திட, திரவ, வாயு என மூன்று நிலையில் இருக்குமென படித்திருப்போம். ஆனால், இப்போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, ‘டோபோகண்டக்டர்ஸ்’ (Topoconductors) எனப்படும் ஒரு புதிய பொருளைக் கண்டறிந்துள்ளது. இது எந்த நிலை என்பதைச் சொல்லமுடியாது. 

‘Entirely new state of matter’ என்றே குறிப்பிடுகின்றனர். இது சாதாரண விஷயமல்ல. கம்ப்யூட்டிங் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விஷயம்.காரணம், இந்த டோபோகண்டக்டர்ஸ் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ‘மெஜோரானா 1’ (Majorana 1) என்ற பெயரில் ஒரு புதிய குவாண்டம் சிப்பை உருவாக்கி இருப்பதுதான்.

இது குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதிலுள்ள க்யூபிட்ஸ் அதிவேகமாகவும், நம்பகத்தன்மையுடனும் வேலை செய்யக்கூடியது. அத்துடன் அவை அளவிலும் மிகச் சிறியது. 

ஒரு மில்லிமீட்டரில் 100ல் ஒரு பங்கு அளவு மட்டுமே!இதனால், உங்கள் கையில் அடங்கும் ஒரு சின்ன சிப்பில் ஒரு மில்லியன் க்யூபிட்ஸை பொருத்த முடியும். அதாவது ஒரு சிறிய சிப், உலகிலுள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் சேர்ந்து தீர்க்க முடியாத பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கிறது.

இந்த முன்னேற்றம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் பொறுமையாகவும், தொடர்ந்தும் வேலை செய்ததன் விளைவாக நடந்தது.
முன்பு பயனுள்ள குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது, இந்த டோபோகண்டக்டர்ஸ் மூலம், அது சில ஆண்டுகளில் சாத்தியமாகி உள்ளது.  

*எதிர்காலமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலும்

குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறது. இந்த மெஜோரானா 1 சிப், கம்ப்யூட்டர்களை அதிவேகமாகவும் சிறியதாகவும் மாற்றுவதுடன், AI-யின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். 

ஆனால், AI மற்றும் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் வளர வளர, அவற்றுக்கு தேவையான சக்தி (எரிசக்தி) பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் மிக அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன.

ஆனால், மெஜோரானா 1 போன்ற சிப்கள் இதை மாற்றும். இவை சிறியவை, திறமையானவை. எனவே குறைவான ஆற்றலைக் கொண்டு அதிக வேலைகளைச் செய்யும். இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் AI-யை உருவாக்குவது எளிதாகும். 

இந்தப் புதிய ஆரம்பம் கம்ப்யூட்டிங் உலகில் மட்டுமல்ல, நம்முடைய எதிர்காலத்திலும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சும் என்கின்றனர். மெஜோரானா 1 போன்ற கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தை மட்டும் முன்னேற்றுவதில்லை; அது நம் உலகத்தை சிறப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றும்.

குவாண்டம் கம்ப்யூட்டிங்

குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது அல்டிமேட் பவர் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம். உலகிலேயே அதிக திறன் வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள்கூட இந்தக் குவாண்டம் கம்ப்யூட்டர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. அந்தளவுக்கு அதிசக்தியுடன் இயங்கக்கூடியது. தற்போதைய கம்ப்யூட்டிங் சிஸ்டம் என்பது பைனரியாக அதாவது 0 அல்லது 1 என்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இதனை Bit என்பார்கள். 

ஆனால், குவாண்டம் கம்ப்யூட்டிங் 0 அல்லது 1 அல்லது இரண்டும் கலந்தது என மூன்று நிலைகளிலும் இயங்கவல்லது. அதனால், இதனை Qubit என்கிறார்கள். இதன் வேகமும் அபரிமிதமானதாக இருக்கும்.  

ஒரு நாணயத்தைச் சுண்டிவிடும்போது, அது நிற்கும் வரையில் பூவா தலையா என்பதைத் தீர்மானிக்க முடியாது. நிற்கும் வரையில் அது இரண்டுமாகத்தான் இருக்கும். இரண்டுமாக இருக்கும்போது அதில் ஒரு ஆற்றல் இருக்கும். கியூபிட் அந்த ஆற்றலைக் கொண்டது. 

அதனால்தான் கியூபிட்டின் ஆற்றலில் இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வேகம் அசுரத்தனமானது எனக் குறிப்பிடப்படுகிறது.உதாரணத்திற்கு நம் கையில் உள்ள ஒருபிடி மணலை தற்போதைய சாதாரண கம்ப்யூட்டரிடமோ அல்லது சூப்பர் கம்ப்யூட்டரிடமோ காட்டினால், அது அடையாளம் காண்பதற்குள், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் அதிலுள்ள ஒவ்வொரு துகளையும் அலசி ஆராய்ந்துவிடும்.

அதேபோல குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது ஒளித்துகள்கள், அணுக்கரு, அணு, அயனிப் பொறிகள், கருந்துளைகள் என பல்வேறு வகையான இயற்பியல் அமைப்புகளையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கக்கூடியதாக மாறிக்கொண்டே இருக்கும் முறையைக் கொண்டவை. இப்போது உள்ள கம்ப்யூட்டர் முறையோ எலக்ட்ரானியலை அடிப்படையாகக் கொண்டவை.

சாதாரண கம்ப்யூட்டர்களில் செய்திகள் அல்லது தகவல்கள் எல்லாம் பூஜ்யம் அல்லது ஒன்றுகளின் கலவையாகத்தான் சேமிக்கப்படும். ஆனால், குவாண்டம் கம்ப்யூட்டிங் நுணுக்கமானது.

அணுவைப் பிளந்தால் அதற்குள் அணு, அந்த அணுவுக்குள் அணு எனப் போய்க்கொண்டே இருக்கும். அதுபோல ஒன்றைப்பிளந்தால் அதற்குள் உள்ள பூஜ்யம், பூஜ்யத்தைப் பிளந்தால் அதற்குள் ஒன்று என பல நிலைகளாக குவாண்டம் கம்ப்யூட்டரில் சேமிப்பு நிகழும்.

எனவேதான் சிக்கலான கணித வினாக்கள், இயற்பியல் கணக்கீடுகள், வானியல் இயற்பியல் வினாக்களுக்கு தீர்வு தேடும்போது வழக்கில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களைவிட குவாண்டம் கம்ப்யூட்டிங் வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படும் என்கிறார்கள்.

ISR செல்வகுமார்