பிங்க் ஆட்டோக்களே வருக... வருக!
பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை மாநகரில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக அரசு கொண்டுவரப்போவதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ். இந்த முன்னெடுப்புக்கு நாலாப்பக்கம் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. கடந்த 2012ம் வருடம் தில்லியில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்தன.

இதன் விளைவாக 2013ம் வருடம் ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் முதன் முதலாக பிங்க் ஆட்டோவை அறிமுகப்படுத்தினார்கள். ஜார்க்கண்டின் காவல்துறையின் சார்பாக முதல் கட்டமாக பெண் பயணிகளுக்காக 200 பிங்க் ஆட்டோக்கள் களத்துக்கு வந்தன.  வழக்கமான ஆட்டோவில் பயணிக்கும்போது பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் உட்பட பல்வேறு குற்றங்கள் அரங்கேறுகின்றன. இதனைத் தடுப்பதுதான் இந்த பிங்க் ஆட்டோ திட்டத்தின் முக்கிய நோக்கம். 
பிங்க் ஆட்டோவில் பெண்களின் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் டிராக்கிங் மற்றும் பேனிக் பட்டன்கள் இருக்கின்றன. இந்த வகை ஆட்டோக்கள் முழுவதும் பிங்க் வண்ணத்தில் இருக்கும் அல்லது அதன் கூரை மட்டும் பிங்க் வண்ணத்தில் இருக்கும். நன்றாக பயிற்சி பெற்ற பெண் ஓட்டுநர்கள்தான் பிங்க் ஆட்டோவை இயக்குவார்கள்.
ஜார்க்கண்டில் பெண் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக ஆண்களும் பிங்க் ஆட்டோவை ஓட்ட அனுமதிக்கப்பட்டனர். இந்த ஓட்டுநர்களின் இருப்பிடம் உட்பட முக்கியமான ஆவணங்களை பரிசோதனை செய்த பிறகே , அவர்களை ஓட்டுநர் பணியில் அமர்த்துவார்கள். இந்த ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பிங்க் ஆட்டோக்கள் பெண் பயணிகளுக்கானது என்பது முக்கிய விதி. ராஞ்சியில் ஆட்டோவைப் பயன்படுத்துகிற பெண்கள் குறைவு. மணிக்கணக்கில் பிங்க் ஆட்டோக்கள் காத்திருந்தாலும் ஏதொவொரு பெண் பயணிதான் சவாரிக்கு கிடைப்பார். பெண் பயணிகள் கிடைக்காத நேரத்தில் ஆண் பயணிகளை ஏற்றிக்கொண்டும் பிங்க் ஆட்டோக்கள் இயங்கின. அங்கே பிங்க் ஆட்டோ திட்டம் தோல்வியில் முடிந்தது.
வேறு எந்தெந்த நகரங்களில் பிங்க் ஆட்டோ சேவை இருக்கின்றன?
சூரத்கடந்த 2017ம் வருடம் ஜூலையில் சூரத்தின் மாநகராட்சி பிங்க் ஆட்டோ சேவையைக் கொண்டு வந்தது. மாநகராட்சியே பெண்களைத் தேர்வு செய்து, ஓட்டுநர் பயிற்சியைக் கொடுத்தது. நன்றாகப் பயிற்சி பெற்ற பெண்கள் மானியத்துடன், 7 சதவீத வட்டியில் கடன் வாங்கி ஆட்டோ வாங்க மாநகராட்சியே உதவி செய்தது.
எழுபதுக்கும் மேற்பட்ட பெண்களைத் தேர்வு செய்து, 15 பெண்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்தனர். அந்தப் பெண்கள் பள்ளிக் குழந்தைகளையும், பெண்களையும் தங்களின் பிங்க ஆட்டோக்களில் ஏற்றி, அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்கின்றனர். போங்கைகோன்
அசாமின் முக்கியமான வணிகம் மற்றும் தொழிற்பகுதிதான் போங்கைகோன். அங்கே இயங்கி வரும் நகர்ப்புற வாழ்வாதார மையம் பிங்க் ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. இது முற்றிலும் பெண்களே இயக்கக்கூடிய ஒரு திட்டம். லைசென்ஸ் வைத்திருக்கும் பெண்களுக்கு டிரைவிங் ஸ்கூல் நிறுவனம் ஆட்டோ ஓட்ட பயிற்சி கொடுத்தது. இப்போது அங்கே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 14 பிங்க் ஆட்டோக்கள் பெண்களுக்கான பயணச் சேவையை வழங்குகின்றன.
புவனேஸ்வர்
கடந்த 2015ம் வருடம் ஜூன் 27ம் தேதியன்று புவனேஸ்வர் நகரில் பிங்க் ஆட்டோ சேவை அறிமுகமானது. இந்த அறிமுக நிகழ்வை ஒடிசாவின் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆண் ஓட்டுநர்களால் புவனேஸ்வரில் பிங்க் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
ஆபத்து சூழல்களில் பெண்களைப் பாதுகாப்பது குறித்த பயிற்சிகளும் அந்த ஓட்டுநர்களுக்கு தரப்பட்டுள்ளன. இன்று புவனேஸ்வர் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பிங்க் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பிங்க் ஆட்டோக்கள் புவனேஸ்வர் பெண்களிடம் நன்மதிப்பைப் பெற்று வருகின்றன. குர்கான்
ராஞ்சியில் பிங்க் ஆட்டோக்கள் அறிமுகமாவ தற்கு முன்பே குர்கானில் சிறிய அளவில் பிங்க் ஆட்டோ திட்டம் அறிமுகமானது. குர்கானில் நிறைய பெண்கள் பயணத்தின் போது டாக்ஸி டிரைவர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினர். அதனால் 2010லேயே அங்கே பெண்களுக்கான பிரத்யேகமான ஆட்டோக்கள் அறிமுகமாகின. ஆனால், குர்கானில் பிங்க் ஆட்டோக்கள் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்ததால் அங்கே பிங்க் ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குர்கானில் ஊபர் டாக்ஸியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்வை உண்டாக்கியது. பிறகு 2013ல் குர்கான் போக்குவரத்து காவல்துறையினரால் மீண்டும் பிங்க் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது. இந்த முறையும் பிங்க் ஆட்டோ சேவை தோல்வியைத்தான் சந்தித்தது.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு குர்கானில் 2015ல் மீண்டும் பிங்க் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது. 61 ஆட்டோக்களுடன் ஆரம்பமான இந்த பிங்க் ஆட்டோ சேவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இப்போதும் தொடர்கிறது.
த.சக்திவேல்
|