கல்வியும் உயர்வும் முதல்வரின் சாதனை எனத் தகும்!



கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியாவில் கல்வி முன்னேற்றத்தில் தலைசிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது தமிழகம். சமீபத்திய அறிக்கைகளும் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகத் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில் இந்த மார்ச் ஒன்றாம் தேதி 72வது வயதில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளில் அவரின் திராவிட மாடல் அரசு கல்விக்காகக் கொண்டுவந்த திட்டங்களையும், செய்த பணிகளையும் கொஞ்சம் பார்ப்போம்.

*முதல்வரின் காலை உணவுத் திட்டம்

காலையில் வீட்டில் உணவு உண்ணாமலேயே பள்ளிக்கு வருகின்றனர் என்பதைப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் கூறக் கேட்டு அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக உருவாக்கிய திட்டம்தான் இது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். 
தொடர்ந்து செப்டம்பர் மாதமே செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 18.54 லட்சம் மாணவ, மாணவியர்களும்; அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 2.50 லட்சம் மாணவ - மாணவியர்களும் பயனடைந்து வருகின்றனர்.

பள்ளி வந்ததும் சூடான, சுவையான காலைச் சிற்றுண்டியை உண்டு படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இத்திட்டத்தை, தெலங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று அங்கே நடைமுறைப்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

*இல்லம் தேடிக் கல்வி

கொரோனா கால கற்றல் இடைவெளியை சரிசெய்திடும் நோக்கில் 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில் இதுவரை சுமார் 30 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். அதுமட்டுமல்ல. சமீபத்திய ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை ஒரு புதுமையான முயற்சியென வெகுவாகப் பாராட்டியுள்ளது.

*எண்ணும் எழுத்தும் திட்டம்

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் திட்டமாக எண்ணும் எழுத்தும் தொடங்கப்பட்டது. எண்ணறிவையும், எழுத்தறிவையும் குழந்தைகள் பெறவேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

கல்வியாளர்கள் வரவேற்கும் இந்தத் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 5ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

*நுழை - நட - ஓடு - பற - திட்டம்

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதன் முதல்கட்டமாக குழந்தைகள் அணுகக்கூடிய எளிய மொழியில், புத்தகங்களின் மேல் ஆர்வத்தை ஈடுபடுத்தும் வகையில் வண்ணப்படங்களுடன் நுழை, நட, ஓடு, பற என நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகள் கொண்டதாக 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப்
பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன.இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, இந்தக் கல்வியாண்டில் 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.  

*தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்

நல்ல வகுப்பறைச் சூழ்நிலைகள் குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கருதிய முதல்வர், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை ரூ.455 கோடி மதிப்பில் அமைத்துத் தந்துள்ளார். இதேபோல், அரசுப் பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இவ்விரு திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 43 லட்சத்து 89 ஆயிரம் மாணவ - மாணவியர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுமட்டுமில்லாமல் அனைத்து அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதியையும் ஏற்படுத்தித் தந்துள்ளது தமிழக அரசு.

தவிர, முதல்வரின் சிறப்புத் திட்டமாக, தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 79 ஆயிரத்து 723 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு கையடக்கக் கணினிகள் வழங்க ஆவன செய்தார்.

*மாற்றுத் திறன் மாணவர்கள் மீது தனி கவனம்

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற வகையில், ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறன் மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு திறன்களை உறுதிசெய்யும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மாணவர் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு போன்ற கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 

இதனுடன் தற்போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணும் வகையில் ‘நலம் நாடி’ எனும் செயலியையும் உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

*பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாக ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.
இந்தத் திட்டத்தின்கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கென ரூ.1,887 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 3,374 வகுப்பறை கட்டடங்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 227 வகுப்பறைக் கட்டடங்களும் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென மொத்தம் ரூ.667 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

*நான் முதல்வன் திட்டம்

இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தற்போது லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

*மிதிவண்டி

கிராமப்புற மாணவ - மாணவிகள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் வந்துசெல்ல வசதியாக சுமார் மூன்றரை லட்சம் மாணவ - மாணவியர்களுக்கு  இலவச மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

*புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்துப் பின்னர் உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். இதேபோல மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவை மூலம் சுமார் 6 லட்சம் மாணவ - மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

*தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு திட்டம்

இத்திட்டத்தின் மூலம் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணவ - மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வீதம் இளநிலை, முதுநிலைப்
பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

*அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம்

இந்தத் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு ஆராய்ச்சித் திறனை உருவாக்கும் அடிப்படையிலும், மின்னணு அறிவியலுடன் இணைக்கவும் சென்னை ஐஐடியை கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதுமட்டுமல்ல. சமீபத்தில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சான்றிதழும், மடிக்கணினியையும் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.இப்படி பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.

பேராச்சி கண்ணன்