பெங்களூர் ஏரியை மீட்ட தமிழ்ப் பெண்மணி!
‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...’ எனும் நடிகர் விவேக்கின் திரைப்பட வசனம் தமிழகத்தில் என்றுமே பிரபலம். இந்தப் புகழ்பெற்ற வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் பெங்களூரிலுள்ள புட்டகெரே ஏரிக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஆம். பெங்களூரின் புட்டேனஹள்ளி பகுதியில் உள்ள இந்த புட்டகெரே ஏரி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏரி என்கிற இலக்கண வரையறைக்குள் அடங்காமல் இருந்தது. சுற்றிலும் குப்பைக்கூளமாகவும், கட்டடக் கழிவுகளுடனும், கழிவு நீருமாகக் காட்சியளித்தது.
 இப்படி கண்முன்னே அழிந்து கொண்டிருந்த ஓர் ஏரிதான் இன்று மரங்கள் சூழ்ந்து, தண்ணீர் முழுவதும் நிரம்பிய நிலையில், பறவைகளின் புகலிடமாகவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கும் இடமாகவும் மாறியிருக்கிறது.
எப்படி நடந்தது இந்த மாற்றம்?
இதற்குத் தமிழரான உஷா ராஜகோபாலனும், அவரின் குழுவினருமே முழுக் காரணம். ஓர் அறக்கட்டளையே நிறுவி இன்றுவரை ஏரியைப் பொக்கிஷமாக பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.  ‘‘கடந்த 2006ம் ஆண்டுதான் நான் பெங்களூருக்குக் குடிவந்தேன். இங்கே வருவதற்கு முன்பு மூன்று புத்தகங்கள் எழுதியிருந்தேன். பசங்க பெரியவர்களாக வளர்ந்துவிட்டதால் இனி முழுநேர எழுத்தாளராகப் பயணிக்கலாம் என ஆர்வமாக இருந்தேன். ஆனால், இந்த ஏரி அந்த எண்ணத்தை எல்லாம் மாற்றிவிட்டது...’’ சிரிக்கிறார் உஷா ராஜகோபாலன். ‘‘பெங்களூரில்தான் நாங்கள் முதல்முறையாக ஒரு அபார்ட்மெண்டிற்குள் குடியேறினோம். அதுவரை தனியான வீடுகளில் வசித்தே பழக்கப்பட்டிருந்தோம். அதனால், அபார்ட்மெண்ட் வாழ்க்கை எங்களுக்குப் புதியது.
19 மாடிகள் கொண்ட எங்கள் அபார்ட்மெண்டின் 5வது மாடியில் எங்கள் குடியிருப்பு இருந்தது. இங்கிருந்துதான் அருகிலுள்ள புட்டகெரே ஏரியை முதன்முதலாகப் பார்த்தேன். அப்போது பெரிய அளவில் ஒரு பள்ளம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஏரி இருந்தது. புதர் மண்டி, குப்பைகளுடன் கழிவுநீர் கலந்தபடி கிடந்தது. இரவு நேரத்தில் யாராவது லாரிகளில் வந்து கட்டடக் குப்பைகளைக் கொட்டுவார்கள். சிலர் அங்குள்ள குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டுப் போவார்கள்.
மனது வலித்தது. காரணம், நான் பிறந்தது மானாமதுரையில். வளர்ந்தது திருவனந்தபுரத்தில். படித்தது எம்ஏ ஆங்கில இலக்கியம். அப்பா ஐஎஃப்எஸ் அதிகாரியாக இருந்தவர். அதனால் இயற்கை சம்பந்தமான செயல்பாடுகளுடனே வளர்ந்தேன்.எங்காவது அடிபட்டுக் கிடக்கும் விலங்குகள், பறவைகளைப் பார்த்தால் அப்பா வீட்டுக்குக் கொண்டு வருவார். நாங்கள் அதைக் குணப்படுத்தி, பெயர் எல்லாம் வைத்து திருவனந்தபுரம் மிருகக்காட்சிச் சாலைக்கு அனுப்பி வைப்போம்.
மழைக்காலத்திற்கு முன்பு எங்களை அழைத்து ஓடைகளை எல்லாம் சுத்தம் செய்யச் சொல்வார். அதிலுள்ள குப்பைகளை அகற்ற வைப்பார். எங்கள் பயணம்கூட காடுகளாகவே இருக்கும்.
அப்படி இயற்கை சூழலில் வாழ்ந்துவிட்டு இப்படியொரு ஏரியைப் பார்த்ததும் மனம் கவலைக்குள்ளானது. என் அப்பாவுக்கு செய்யும் கடமையாகவே இதை ஆரம்பித்தேன்...’’ என்கிறவர், முதல்கட்ட முன்னெடுப்பைப் பற்றித் தொடர்ந்தார்.
‘‘எங்கள் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் பெரியது. 2000 வீடுகள் வரை இருக்கின்றன. இதற்கு சௌத்சிட்டி என்று பெயர். அதனால், எல்லா மக்களும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் இந்த ஏரியை மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கையாக நினைத்தேன். 2008ம் ஆண்டு அனைவருக்கும் இமெயில் அனுப்பி ‘சேவ் த லேக்’ - அதாவது ஏரியைக் காப்போம் - என்ற ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தேன்.
இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. காரணம், நானே பெங்களூருக்கு புதுசு. 2 ஆயிரம் வீடுகளில் உள்ளவர்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கும் அவர்களைத் தெரியாது. எந்த நம்பிக்கையில் அவர்கள் முன்வருவார்கள்? இருந்தும் ஒரு முயற்சியாகத் தொடங்கினேன்.
நல்லவேளையாக அந்நேரம் என் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் அஸ்வின் மகேஷ் என்பவர் அறிமுகம் கிடைத்தது. அவர் பெங்களூரு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். நிறைய பேர்களின் தொடர்புகளும் வைத்திருந்தார். அவரிடம் இதற்கு ஏதாவது செய்யுங்கள் என்றேன். அவர் பிபிஎம்பி எனச் சொல்லப்படும் பெங்களூர் பெருநகர மாநகராட்சியிடம் என் கோரிக்கைகளைப் பரிந்துரைத்தார். இது 2009ம் ஆண்டு நடந்தது.இதன்பின்னர் உடனடியாக ஜேசிபி வந்து குப்பைகளை அகற்றியது. ஏரியை சுத்தம் செய்து கொடுத்தது. தொடர்ந்து மாநகராட்சி நடைபாதை அமைத்து, அமர்வதற்கு பெஞ்சுகள் கொடுத்து ஏரியை அழகாக்கித் தந்தது.
ஏரியை புனரமைக்கத் தொடங்கியதுமே நிறைய வதந்திகளும் வந்தன. இது புட்டேனஹள்ளி பஸ் நிலையமாக மாறப்போகிறது என்றும், மெட்ரோ ஸ்டேஷன் வரப்போகிறது என்றும் பேசிக் கொண்டனர். இதற்கிடையில் என்னுடன் பிரசன்னா வைனதியா, ஆரத்தி மானே, ஓ.பி.ராமசாமி என மூன்று பேர் கரம் கோர்த்தனர்.நாங்கள் அபார்ட்மெண்ட் அசோசியேஷனுடன் சேர்ந்து 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூமி தினத்திற்கு ஏற்பாடு செய்தோம். இதற்கு எல்லா குடியிருப்பாளர்களையும் ஏரிக்கு வரச்செய்து ஏரி குறித்து விழிப்புணர்வு செய்தோம்.
பிறகு, நாங்கள் பெங்களூர் மாநகராட்சிக்கு உதவி செய்யலாம் என நினைத்தோம். ஏனெனில் பிந்தைய பராமரிப்பு இல்லையென்றால் மாநகராட்சி செய்தது எல்லாம் வீணாகி
விடும். அதனால், நாங்கள் நான்கு பேருமாக சேர்ந்து ஜூன் 2010ம் ஆண்டு ஓர் அறக்கட்டளை தொடங்கினோம்.
இதன் பெயர் ‘புட்டேனஹள்ளி சுற்றுப்புற ஏரி மேம்பாட்டு அறக்கட்டளை’. இதன்வழியாக அடுத்த மாதமே பெங்களூர் பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து மரம் நடும் விழாவையும் முன்னெடுத்தோம். மாநகராட்சி மரக்கன்று கொடுத்து உதவியது. நாங்கள் எம்எல்ஏவையும், குடியிருப்புவாசிகளையும் அழைத்து வந்து 125 மரங்கள் நட்டோம். இப்போது 500 மரங்களாக இவை பரந்து விரிந்துள்ளன. இவை அனைத்தும் குடியிருப்புவாசிகளால் நடப்பட்டவை. அன்றிலிருந்து இப்போதுவரை நாங்கள் சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். மரங்களைப் பராமரிக்க தோட்டக்காரர்களை நியமித்திருக்கிறோம். இதற்கு எல்லாம் குடியிருப்பாளர்கள் தன்னார்வமாக நன்கொடை தருகிறார்கள்.
ஆரம்பத்தில் யாரெல்லாம் இதில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருந்தார்களோ அவர்கள் எல்லாம் இப்போது எங்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகயும் இருக்கின்றனர். தற்போது எங்கள் அறக்கட்டளைக் குழுவில் ஏழு பேர் இருக்கிறோம். இதில் ஓ.பி.ராமசாமி மட்டுமே ஆண். மற்ற அனைவரும் பெண்கள். எல்லோருமே ஹவுஸ்வொய்ஃப்...’’ என உற்சாகமாகச் சொல்லும் உஷாராஜகோபாலன், ஏரி நிரம்பிவழிந்த கண்கொள்ளாக் காட்சியை வியந்து குறிப்பிட்டார்.
‘‘மாநகராட்சி ஏரியைப் புனரமைக்கும்போதே கழிவுநீர் பிரச்னையையும் சரிசெய்தது. இருந்தும் 2017ம் ஆண்டு இந்தப் பகுதி வளர்ந்தபோது புது கட்டடங்கள் வந்தன. இதனால், அதிகப்படியான கழிவுநீரை பராமரிக்க முடியாமல் அது ஏரிக்குள் வந்தது.உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தந்து அதனை சரி செய்தோம். இன்றுவரை கழிவுநீர் ஏதேனும் கலக்கிறதா என்பதை கழுகு போல் பார்த்து வருகிறோம்.
இதேபோல் மாநகராட்சி, ஏரியை புனரமைக்கும் போது எங்கிருந்து அதிகம் மழைநீர் வருகிறதோ அதற்கேற்ப ‘இன்னர் பைப்’ அமைத்தார்கள். ஆனாலும் ஏரி நிரம்பவில்லை. அப்போது என் நண்பர்கள் வசிக்கும் அருகிலுள்ள அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் ரொம்ப பெரியது.
நாங்கள் ஒரு நிறுவனம் மூலம் சர்வே நடத்தினோம். அவர்கள் அங்கே மழைக்காலத்தில் வீணாகும் நீரை இந்த ஏரிக்குத் திருப்பலாம் என்றார்கள். இதனை மாநகராட்சிக்குத் தெரிவித்தோம். அவர்களும் ஏரிக்கு வரும் நீர் குழாய்களை டைவர்ஷன் பண்ணித் தந்தார்கள்.
மழைக்காலத்தில் அங்கே வெள்ளமாகும் நீர் இந்த ஏரிக்குள் வந்துவிடும். இதன்பிறகும் ஏரி நிரம்பவில்லை. பிறகு நான் வசிக்கிற அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் ஒரு பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. இங்கே 19 பிளாக்குகள் இருக்கின்றன.
இதில் கடைசியாக கட்டிய ஐந்து பிளாக்குகளில் சுத்திகரிப்பு நீரைத்தான் கழிப்பறை உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.
நாங்கள் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸை அணுகி இதில் அதிகப்படியான உபரிநீர் இருந்தால் அதை ஏரிக்குத் திருப்பும்படி கேட்டோம். அவர்களும் சரி என்றனர். பின்னர் மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றை அணுகினோம்.
அப்படியாக பெங்களூரில் முதல் ஏரியாக எங்கள் ஏரி சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரைப் பெறுகிறது. இது 2015ம் ஆண்டு மே மாதம் முதல் நடக்கிறது. இதன்பிறகு, 2016ம் ஆண்டு ஜூலையில் முதல்முறையாக எங்கள் புட்டகெரே ஏரி நிரம்பி வழிந்தது. அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் பரவசம் பூக்கிறது. இதற்கிடையே ஏரி நீரை சுத்தப்படுத்தும் நோக்கில் உள்ளே செயற்கை நீரூற்று அமைத்தோம்.
அடுத்து சுத்திகரிப்பு நீரிலும் ஏதாவது நச்சுக்கழிவுகள் இருந்தால் அதைத்தடுக்க ஏரியின் உள்ளே பைப் அமைத்து கல்வாழை, வெட்டிவேர் உள்ளிட்ட நீரை சுத்தப்படுத்தும் செடிகளை வளர்க்கிறோம். இப்போது ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது. அருகிலுள்ளவர்கள், முன்பு இந்தப் பகுதியில் 600, 700 அடிக்கு தண்ணீர் போர் போட்டோம். இப்போது 150 அடியில் தண்ணீர் வருகிறது எனச் சொல்வதைக் கேட்கிறோம். இது மனநிறைவைத் தருகிறது.
இன்று இந்த ஏரி, பறவைகளுக்கு ஒரு சரணாலயமாகவும் மாறியிருக்கிறது. 40 பறவையினங்கள் வருவதை சமீபத்தில் கண்டறிந்துள்ளோம். எப்படி மாநகராட்சியுடன் இணைந்து வேலை செய்வது, ஏரியை எப்படி புனரமைப்பது என மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறோம். இப்போது 67 ஏரி குழுக்கள் பெங்களூரில் உள்ளன.இங்கே மொத்தம் 205 ஏரிகள் இருக்கின்றன. இதில் லைவ்லைட்டில் உள்ளவை 183. எல்லாமே லைவ்வாக இருக்க அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், அரசுடன் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும்.
எனக்கும் என் நண்பர்களுக்கும் எந்த ஸ்பெஷல் குவாலிட்டியும் கிடையாது. நாங்கள் எடுத்த வேலையை விடாமல் செய்தோம். அந்த முயற்சிதான் ஏரியை மீட்டெடுக்க வைத்தது...’’ என்கிற உஷா ராஜகோபாலன், கடந்த 2023ல் ஹோமி பாபா ஃபெல்லோஷிப் பெற்று இந்த ஏரியின் விஷயங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.
‘‘இந்த ஏரி புனரமைப்பு என் ஒருத்தியின் வெற்றி கிடையாது. மாநகராட்சியும், என் குழுவினரும், நன்கொடையாளர்களும் இல்லாமல் இந்த ஏரியை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது...’’ நிறைவுடன் சொல்கிறார் உஷா ராஜகோபாலன்.
பேராச்சி கண்ணன்
|