பூமியின் பேரழகி இவர்தான்!



ஃபேர்னஸ் கிரீம், சன் ஸ்கிரீன், டி - டான், மாய்ஸ்சுரைசர், ப்ளீச், ஃபேசியல்... இப்படி எத்தனையோ ப்ராடக்ட்கள் நம் தோலை வெளுக்க வைக்க அல்லது சிவப்பாக்க வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், எதுவும் எந்த மாற்றமும் கொடுக்காது. 
இதில் எந்தத் திருமண வரன் தேடும் இணையத்தை திறந்தாலும் ‘Wanted Fair Looking Girl’ (சிவப்பான பெண் தேவை). டிவியை திறந்தாலே முகத்தை வெள்ளையாக்க 1000 விளம்பரங்கள். இந்தக் கொடுமை எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். ஆனால், உலக ஃபேஷன் மார்க்கெட், மாடலிங் உலகம் எதிர்பார்க்கும் அழகுக்கான வரையறை வேறு.

இதற்கு உதாரணமாக சூடானிஸ் சூப்பர் மாடல் அனோக்யாயைச் சொல்லலாம். உலகின் பேரழகி எனக் கொண்டாடப்படுகிறார். இத்தாலியின் உலகப்புகழ் ஃபேஷன் பிராண்டான ‘பிரதா’ (Prada S.P.A) நடத்திய ஃபேஷன் நிகழ்ச்சியை துவக்கி வைத்த இரண்டாவது கருப்பின சூப்பர் மாடல் அனோக் யாய். இவருக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த கருப்பின சூப்பர் மாடல் நவோமி கேம்பெல் பிரதா ஃபேஷன் ஷோவை ஆரம்பித்து வைத்தார்.

யார் இந்த அனோக் யாய்... ஏன் ஃபேஷன் உலகமும், டாப் பிராண்டுகளும் இவருக்காகக் காத்திருக்கின்றன?

சூடானிஸ் மக்கள் அதாவது எகிப்தின் அரேபிய கருப்பின பெண்களிலிருந்து வந்த முதல் சூப்பர் மாடலாக கொண்டாடப்படுகிறார் அனோக். சூடான் நாட்டில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பித்து எகிப்தின் கெய்ரோ நகருக்கு குடும்பத்துடன் ஓடி வந்தவர்கள்தான் அனோக் குடும்பத்தார். பிறகு அங்கிருந்து அனோக்கிற்கு 3 வயதாக இருந்தபோது, ​​அவரது குடும்பம் நியூ ஹாம்ப்ஷயர், மான்செஸ்டருக்கு குடிபெயர்ந்தது. அங்கே ஓரளவிற்கு குடும்பம் பொருளாதார ரீதியாக கொஞ்சம் முன்னேறத் துவங்கியது.

அனோக்கின் அம்மா செவிலியராக வேலை பார்க்கத் தொடங்கினார். அனோக்கின் அப்பா நாடு முழுவதும் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஈஸ்டர் சீல்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகிறார். அனோக்கிற்கு வேதியியல் மருத்துவராக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. 

எனவே பயோ கெமிஸ்ட்ரியை பாடமாக எடுத்து பட்டம் பெற்றார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவருக்கு வயது 19. அனோக்கின் வாழ்க்கை முற்றிலுமாக வேறு திசைக்கு செல்லவிருப்பதற்கான முதல் படி அந்த வருடம்தான் நடந்தது.

2017ம் ஆண்டு ஹொவார்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஹோம் கம்மிங் வார விழாவில் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ், அனோக்கின் தனித்துவமான கருப்பு அழகை படம் பிடிக்க விரும்பினார்.

அவரும் ஸ்டீவ் விருப்பத்திற்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இந்தப் புகைப்படங்களை ஸ்டீவ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்ற... சில மணி நேரங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து ஏராளமான மாடலிங் நிறுவனங்களும் பிராண்டுகளும் ஸ்டீவை அழைத்து அனோக் குறித்து விசாரித்தனர்.

அன்று ஆரம்பித்தது அனோக்கின் மாடலிங் வாழ்க்கை. வெறும் நான்கு மாதங்கள்தான்... சூப்பர் மாடல் என்னும் உச்சம் தொட்ட அனோக் தொடர்ந்து ‘பிரதா ஃபேஷன் ஷோ’ நிகழ்வை துவக்கி வைக்கும் பெருமையையும் பெற்றார். ‘‘நான் கடந்து வந்த போராட்டமான வாழ்க்கையும், நான் திட்டமிட்ட எதிர்காலமும் வேறு. இந்த ‘பிரதா’ நிகழ்வை துவக்கி வைப்பது நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று.

எனக்குக் கிடைத்த இந்தப் பெருமை உலகம் முழுவதும் இருக்கும் கருப்பின பெண்களுக்குள் இருக்கும் தனித்துவமான அழகை கொண்டாடுவதற்கான அடையாளமாக இருக்கும் என நம்புகிறேன்...’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் அனோக். இப்போது அனோக் கை அவ்வளவு சுலபமாக நாம் சந்தித்து விட முடியாது. 

அவருடைய ஒரு நாள்... ஏன் ஒரு மணி நேரம் கிடைக்க வேண்டும் என்றால் கூட 15,000 அமெரிக்க டாலர்களை நாம் செலவழிக்க வேண்டும்! அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13 லட்சம்!அனோக்கின் சகோதரி அலிம்தான் தற்போது அனோக்கிற்கு மானேஜராகவும் கணக்காளராகவும் இருக்கிறார்.  

Versace, Max Mara, Fendi, Burberry, and Louis Vuitton... போன்ற உலகப்புகழ் பிராண்டுகளில் நாம் ஒரு ஹேண்ட்பேக் வாங்க வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் ஒரு லட்சம்  ரூபாய் செலவிட வேண்டும். இந்த பிராண்டுகள் எல்லாம் தற்போது அனோக்கிற்கு காத்திருக்கின்றன! உலகத் தர பிராண்டுகளின் விளம்பரங்களில் அனோக்கிற்கு தனி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற  பத்திரிகைகள் அனோக்கின் 5 நிமிட நேர்முகப் பேட்டிக்காக காத்திருக்கின்றன! புகழ்பெற்ற குறும்படங்கள், இசை ஆல்பங்களிலும் அனோக் பணி புரிய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல ஃபேஷன் சார்ந்த நிறுவனங்கள் ‘பிரபஞ்சத்தின் மிக அழகிய பெண்’ என அனோக் கை உச்சிமுகர்கின்றன.

ஷாலினி நியூட்டன்