உணவில் கலக்கப்படும் கலர்களால் கேன்சர் வருமா..?



கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்குத் தடை, தமிழ்நாடு - பாண்டிச்சேரியில் பஞ்சுமிட்டாய்க்குத் தடை... எனும் செய்திகளை நாம் அண்மையில் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்தத் தடைகளுக்குக் காரணம் இந்த உணவுப் பொருட்களில் மிதமிஞ்சிக் கலக்கப்பட்டிருந்த செயற்கையான நிறமிகள் (கலர்ஸ்). 
இவை இரண்டில் மட்டுமல்ல... இதுபோல பல உணவுகளிலும் இன்னும் பல நுகர்வுப் பொருட்களிலும் கலக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘ரெட் 3’ எனும் ஒரு நிறமியை அமெரிக்கா வெகு விரைவில் தடைசெய்யப்போவதாக அறிவித்திருப்பது உலக நாடுகளை யோசிக்க வைத்திருக்கிறது.

காரணம் இந்த ‘ரெட் 3’ செயற்கை நிறமியை பல நாடுகள் உணவுகளிலும் மற்ற பொருட்களிலும் கலக்க அனுமதித்திருக்கின்றன.இந்த ‘ரெட் 3’ நிறமியின் இரசாயனப் பெயர் ‘எரித்ரோசின்’ (Erythrosine). இந்தியாவும் இந்த இரசாயனத்தை உணவுகளில் அனுமதித்திருக்கும் சூழ்நிலையில் நுகர்வோர் செயற்பாட்டளரான சோமசுந்தரத்திடம் இதுகுறித்து பேசினோம்.
‘‘முதலில் எரித்ரோசின் என்ற நிறமி ஒரு செயற்கையான இரசாயனம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளை தமிழ்நாட்டில் வெகு சீக்கிரமாக பழுக்க வைக்கப் பயன்படும் கார்பைட் எனும் ஒரு கனிமத்தின் சில பகுதிகள் இந்த எரித்ரோசினிலும் ஒரு பங்கு இருக்கிறது.

இரசாயனம் என்றாலே மனித உடலுக்கு கேடானது என்று புரிந்துகொண்டால் இந்த எரித்ரோசினும் நமக்கு கேடானது என்றுதான் சொல்லவேண்டும். இந்த எரித்ரோசின் நிறமியை ஆண் எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் அவற்றுக்கு புற்றுநோய் ஏற்பட்டது என்பதால்தான் அமெரிக்கா விரைவில் இந்த நிறமியை உணவில் தடை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது...’’ என்றவரிடம் இந்தியா இந்த எரித்ரோசினை அனுமதி பட்டியலில் வைத்திருக்கிறதே என்றோம்.

‘‘எரித்ரோசின் மட்டும் அல்லாமல் மஞ்சள் நிறத்தைத் தரக்கூடிய டார்ட்ராசின் (Tartrazine - Sunset yellow), சிகப்பு நிறத்தை தரக்கூடிய கார்னோசின் (Carnosine -allura red), நீல நிறத்தை தரக்கூடிய பிரில்லியண்ட் ப்ளூ (Brilliant blue) போன்ற செயற்கை நிறமிகளையும் இந்திய உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதிப் பட்டியலில்தான் வைத்திருக்கிறது.
ஆனால், என்ன... இதற்கு எல்லாம் ஓர் அளவுகோல் இருக்கிறது. இதை மீறும்போதுதான் பிரச்னையாகிறது.

பிராண்டட் கம்பெனிகளாவது ஓரளவு இந்த விதிகளைக் கடைப்பிடிக்கும். ஆனால், ரோட்டோரம் விற்கும் உணவுப் பொருட்களில் இந்த கலர் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு கலக்கப்பட்டிருக்கும்போது அவை உடல் நலத்துக்கு வேட்டு வைத்துவிடும்.

 நம் ஊரில் விற்கும் சிக்கன் 65, ஐஸ்க்ரீம், கேக், குளிர்பானங்கள், அப்பளம், ஜூஸ் வகைகள், சர்பத்... என இந்த உணவுகளில் அதிகமாக ரெட் 3 இரசாயனம் கலந்திருப்பது ஆபத்தானது...’’ என்று சொல்லும் சோமசுந்தரத்திடம் இந்திய அரசால் முழுவதுமாக தடை செய்யப்பட்ட இரசாயன நிறமிகள் பற்றியும் கேட்டோம்.

‘‘‘சுடான் ரெட்’ (Sudan red) எனும் சிகப்பு நிறமி, ‘ஒராமின் ஓ’ (Auramin O) எனும் நிறமி, ‘ரோடாமின் பி” (Rhodamin B), ‘மெட்டானில் யெல்லோ’ (Metanil yellow) எனும் நிறமிகள் எல்லாமே முழுவதுமாக தடை செய்யப்பட்டவை. 

‘ரோடோமின் பி’ துணிகளுக்கு சாயம் கொடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு அண்மையில் தடை வந்தது பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் ‘ரோடாமின் பி’ எனும் நிறமி எக்கச்சக்கமாக இருந்ததே இந்த தடைக்குக் காரணம்.

‘மெட்டானில் யெல்லோ’ எனும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமியைத்தான் ‘கேசரி பவுடர்’ என்று கடைகளில் விற்கிறார்கள். உண்மையில் இந்த ‘மெட்டானில் யெல்லோ’வின் ராவான வடிவத்தைத்தான் வெள்ளை அடிக்க நாம் வீட்டுக்கு பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட கேசரி பவுடரைத்தான் நாம் வாங்கி உணவுகளில் தாறுமாறாக கலக்கி பயன்படுத்துகிறோம்...’’ என்று சொல்லும் சோமசுந்தரம் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான நிறமிகள் பற்றியும் வகுப்பு எடுத்தார்.

‘‘செயற்கையான நிறமிகளைவிட இயற்கையான நிறமிகள் நம்மிடையே நிறைய உள்ளன. உண்மையில் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையே இதற்கு ஒரு பட்டியலும் கொடுக்கிறது.
உதாரணமாக ‘கரோட்டீன்’ (Carotene), ‘க்ளோரோஃபில்’ (Chlorophyll), ‘கேரமல்’ (Caramel), ‘ரிபோஃபிளேவின்’ (Riboflavin), ‘சஃப்ரோன்’ (Saffron), ‘அன்னட்டோ’ (Annatto), ‘குர்குமின்’ (Curcumin) போன்றவையே அவை. இதில் ‘கரோட்டின்’ எனப்படுவது கேரட் மற்றும் பப்பாளியில் இருந்து தயாரிக்கப்படுவது. இது மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். ‘க்ளோரோஃபில்’ இலை தழைகளிலிருந்து தயாரிப்பது. இது பச்சை நிறத்தைக் கொடுக்கும்.

‘கேரமல்’ பிரவுன் நிறத்தைக் கொடுக்கும். ‘ரிபோஃபிளேவின்’ ஆரஞ்சு நிறத்தைக் கொடுக்கும். ‘சஃரோன்’ குங்கும்பூவில் இருந்து தயாரிப்பது. ‘குர்குமின்’ மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். இது தவிர பீட்ரூட், பிங்க் காலிஃப்ளவர், பாலக்கீரையிலிருந்தும் நாம் இயற்கையான நிறமிகளை தயாரிக்கமுடியும். 

உதாரணமாக சிகப்பு கலர் வேண்டும் என்றால் பீட்ரூட்டை நன்றாக வேக வைத்து, அரைத்து, வடிகட்டி எடுத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, வெண்ணிலா பவுடர் கலந்துவிட்டால் இயற்கையான சிகப்பு நிறமி நமக்குக் கிடைத்துவிடும்...’’ என்பவரிடம் எலிகளிடம் எரித்ரோசின் ஏற்படுத்தும் புற்றுநோயைப் போல மனிதர்களுக்கும் அது புற்றுநோயைக் கொண்டுவரும் என்று சொல்வதை சிலர் மறுக்கிறார்களே என்று கேட்டோம்.

‘‘எதுவுமே சிறிய அளவு இருந்தால் ஆபத்து இல்லைதான். ஆனால், தொடர்ச்சியாக சில கலர் உணவுகளையே சிலர் வாழ்நாளில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். இதுதான் ஆபத்து.
அத்தோடு இரசாயனம் என்றாலே ஆபத்து என்று உணரவேண்டும். சிறிதுதான் என்றாலும் அதையும் நம் உடல்தான் வெளியேற்றவேண்டும். 

நம் உடலில் கிட்னிதான் தேவையில்லாத ஆணிகளை எல்லாம் பிடுங்கி எறிகின்றது. அப்படியிருக்கையில் கிட்னியை சட்னியாக்கும் இதுபோன்ற வேண்டாத இரசாயனங்களை கூடிய மட்டும் தவிர்ப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டும்...’’ அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் சோமசுந்தரம். ‘கருப்புதான் நமக்குப் பிடிச்ச கலரு‘.

டி.ரஞ்சித்