பாஜகவின் வறுமை ஒழிப்பு நாடகம்!



இந்த Dry ஆன சப்ஜெக்ட் ‘குங்குமம்’ போன்ற வெகுஜன பத்திரிகைக்கு தேவையா?

தேவை. பாஜக அரசின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்த. தவிர நம் நாட்டின் வறுமை குறித்து அறியாமல் மக்கள் இருக்கலாமா?

வறுமை மற்றும் வறுமை ஒழிப்பு என்பது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயம். பொதுவாக எந்தவொரு நாடு அல்லது அரசு முறையின் வெற்றி - தோல்வியைக் கணக்கிடும் உரைகல்லாக வறுமை ஒழிப்பே நிலவுகிறது. அதனால்தான் இன்றைய சூழலில் வறுமை விகிதத்தை கணக்கிட்டு, அதன் அடிப்படையில்தான் வறுமையை ஒழிப்பதை நோக்கிய வளங்களும், பொதுச் செலவினங்களும் ஒதுக்கப்படுகின்றன.

*இந்தியாவில் வறுமை குறித்த ஆய்வுகள்

ஆய்வுக்கான முக்கிய விஷயம், ஊட்டச்சத்து. இதனால்தான் உலக வங்கி போல இல்லாமல், இந்தியாவில் வறுமையைக் கணக்கிடும் முறையானது ‘கலோரி போதாமை’-யை (Calorie Deficiency) கணக்கிடுவதன் மூலம் தொடங்கியது. 
1974ல் திட்டக் கமிஷன் மேற்கொண்ட ஆய்வில், ‘அத்தியாவசிய கலோரி அளவு’ என்பது ஊரக பகுதியில் 2200 கலோரிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 2100 கலோரிகள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த அத்தியாவசிய அளவில், ஊட்டச்சத்து நுகர்வு இல்லாத மக்கள் என்ற அடிப்படையில், ஊரக பகுதியில் 56.4 சதவீத மக்களும், நகர்ப்புறத்தில் 49.2 சதவீத மக்களும் வறுமையில் உள்ளதாக கணக்கிடப்பட்டது.

ஆக, இந்தியாவில், ‘இல்லாமை’ என்ற அடிப்படையில் அல்லாமல், ‘கலோரி நுகர்வு’ அடிப்படையில்தான் வறுமையைக் கணக்கிடும் பாரம்பரியம் உள்ளது.1990களுக்கு முன்பு இந்த வறுமையைக் கணக்கிடுவது ஆய்வுக்காக மட்டுமே செய்யப்பட்டது. 

அதாவது, ஐந்தாண்டுத் திட்டத்தின் பயன் அனைவரையும் சென்று சேருகிறதா என்பதை அறியவே இருந்தது. ஆனால், 90களுக்குப் பிறகு உலக வங்கியின் கட்டளைகளை பின்பற்ற துவங்கிய இந்திய அரசு, அனைவருக்குமான உணவு, கல்வி, சுகாதாரம் என்பதை நிறுத்தி, ‘ஏழைகளுக்கு’ மட்டும் மலிவு விலையில் தானியங்கள், கல்வி, சுகாதாரம் என முடிவு செய்தது.

இதனால் பல கோடி மக்கள் அவசியமான அரசு சேவைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்தத் திட்டத்தை அமலாக்க, ‘யார் ஏழை?’ என்ற கேள்விக்கு பதில் அளிப்பது அவசியமானது. இதனால் ‘வறுமையைக் கணக்கிடுவது’ மிக முக்கிய தேவையானது.

2005ல் திட்டக் கமிஷன் அமைத்த ‘டெண்டுல்கர் கமிட்டி’, வறுமையைக் கணக்கிடும் முறையை முன்மொழிந்தது. இந்த கமிட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேசிய ‘நுகர்வு’ கணக்கெடுப்பு தரவுகளை பயன்படுத்தியது. இந்த கணக்கெடுப்பில் மக்களின் உணவு மற்றும் உணவு அல்லாத பண்டங்களின் நுகர்வு அளவு மற்றும் ரூபாய் மதிப்பு சேகரிக்கப்படும்.

டெண்டுல்கர் கமிட்டி முன்பிருந்த ‘கலோரி போதாமை’ முறையை விமர்சித்தாலும், அதைப் பின்பற்றுவதாகக் கூறி, 1974ல் அந்த கலோரி அளவுக்கு (கிராமம் - 2200, நகரம் - 2100) நிகரான ரூபாய் மதிப்பை கணக்கிட்டு, அதை விலைவாசி உயர்வுக்கு உட்படுத்தி, அதன் மூலம் ‘வறுமைக் கோடு’ என்பதை நிர்ணயித்தது.

இது மக்களின் நுகர்வு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொள்ளாததால், இதை தவறான முறையாக சில அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், இதைத்தான் இந்திய அரசு அதிகாரபூர்வ ‘வறுமைக் கோடு’ என ஏற்றுக்கொண்டது. இதன்படி, 2011ல் கிராமத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 27 ரூபாய் செலவிடுபவர்களும், நகரத்தில் 33 ரூபாய் செலவிடுபவர்களும் வறுமையில் இருந்து மீண்டவர்களாகக் கருதப்பட்டனர்.

வறுமை விகிதம் 22% எனக் கூறியது. இந்தக் குறைந்த செலவில், போதிய கலோரிகளை பெற வாய்ப்பே இல்லை. இதனால் இந்த முறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு பதிலளிக்க, மீண்டும் ஓர் ஆணையத்தை அமைத்தது திட்டக் கமிஷன். அதுதான் ‘ரங்கராஜன் கமிட்டி’. இந்த கமிட்டியின் வறுமையை கணக்கிடும் முறையும் விமர்சிக்கப்பட்டாலும், பிழைகளை ஓரளவு சரி செய்தது. 

முதலாவதாக வறுமையைக் கணக்கிட ‘கலோரி போதாமை’யை ஓர் அங்கமாக மீண்டும் சேர்த்துக்கொண்டது. மேலும் உணவு அல்லாத பண்டங்களையும் தன் கணக்கிடும் முறையில் சேர்த்துக் கொண்டது. இந்த கமிட்டியின் அறிக்கையின்படி, 2011ல் இந்தியாவின் வறுமை விகிதம் சுமார் 30% ஆகும்.

ஆனால், முதல் முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு - 2015ல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ‘ரங்கராஜன் கமிட்டி’ அறிக்கையை பாஜக அரசாங்கம் கிடப்பில் போட்டது.
இன்று வரை ‘டெண்டுல்கர் கமிட்டி’ கூறிய அற்பமான வரையறையைத்தான் பின்பற்றி வருகிறது. இதனால் கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் பலனை பல கோடி மக்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

*மோடி அரசும், வறுமையும்

2014ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ‘வறுமை’யைக் கணக்கிடுவதில் பல ஏமாற்று வேலைகளைச் செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.முதலாவதாக, திட்டக் கமிஷனை அழித்து உருவாக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’, ‘நுகர்வு’ அடிப்படையிலான வறுமை என்பதை முற்றிலுமாகப் புறந்தள்ளி, ‘பன்முகத்தன்மை கொண்ட வறுமை’ (MPI) கணக்கிடும் முறையை பின்பற்றத் துவங்கியது. 

இது ‘வருமானக் குறியீடு’, ‘கல்விக் குறியீடு’, ‘சுகாதாரக் குறியீடு’ என்ற தொடர்பே இல்லாத பல்வேறு குறியீடு எண்களை ஒன்றாக்கி வறுமையைக் கணக்கிடும் ஒரு அபத்தமான முறை என்கிறார்கள்.

இது மீண்டும் ‘இல்லாமை’ என்ற அடிப்படையில் வறுமையைக் கணக்கிட முயல்கிறது. உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்றால் இந்த கணக்குப்படி வறுமை விகிதம் குறையும்.

இது தவறல்லவா என சமூக நோக்கர்கள் கேட்கிறார்கள். கல்வி என்பது மக்களின் உரிமை என்றாலும், பள்ளி / கல்லூரி கல்வி பெறுவதாலேயே வறுமை ஒழிந்து விட்டதாக அர்த்தமா?
கல்வி பெற்று வேலைவாய்ப்பு இல்லாமல் இன்று பல கோடி இளைஞர்கள் தவிக்கின்றனர். இப்படி இருக்க, வறுமை எப்படி குறைந்ததாக ஆகும்? ஆனால், இப்படிப்பட்ட மோசமான ‘குறியீடு’ எண்ணைப் பயன்படுத்தித்தான் வறுமை குறைந்து விட்டதாக வாதிட முயன்றது நிதி ஆயோக்.

இரண்டாவதாக, வறுமை யைக் கணக்கிடுவதைத் தடுக்க, பாஜக அரசு தரவுகளை மறைக்க முயல்வதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘நுகர்வு’ கணக்கெடுப்பு 2017ல் நடைபெற்றாலும், அந்தத் தரவுகளை வெளியிடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுத்தது. 

ஆனால், ஊடகத்தில் இந்தத் தரவுகள் கசிந்து, அதில் மக்களின் சராசரி நுகர்வு சரிந்து, வறுமை கூடியதாகத் தெரிய வந்தது. இது பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் மோடி அரசின் இதர கொள்கைகளின் தாக்கத்தை வெளிச்சமிட்டுக்காட்டியது.

இந்தப் பின்னணியில், 2011க்குப் பிறகு அதிகாரபூர்வ தரவுகளே இல்லாததால், சந்தேகத்திற்குரிய ‘ஜி.டி.பி’ தரவுகளைப் பயன்படுத்தி, பாஜக ஆதரவு ஆய்வாளர்கள் 2021ல் இந்தியாவில் வறுமை ஒழிந்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்யத் துவங்கினர். இதனைக் கண்டித்து பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் குரல் கொடுத்ததை அடுத்து இறுதியாக 2022ல் ‘நுகர்வு’ கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு ஒப்புக்கொண்டது.

ஆனால், வறுமையின் உண்மை நிலையை மறைக்க கணக்கெடுப்பு முறையை மாற்றியது. எனினும் இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளையும் 2024 தேர்தல் வரை வெளியிடவில்லை. தேர்தலுக்கு முன் இதிலிருந்து ஒருசில தரவுகளை மட்டும் வெளியிட்டு, ‘நுகர்வு’ அடிப்படையிலான வறுமை 5%க்கு குறைந்து விட்டதாக வாதிட்டது.

*இந்தியாவில் இன்றைய வறுமையின் நிலை

‘ரங்கராஜன் கமிட்டி’ முன் மொழிந்த வறுமையைக் கணக்கிடும் முறையில் பிழைகள் இருந்தாலும், அது ஓரளவு உதவிகரமான முறையே என்கிறார்கள். அண்மையில் வெளியான ஓர் ஆய்வு, இந்த முறையை 2022 ‘நுகர்வு’ கணக்கெடுப்பு தரவுகளுக்கு பொருத்திப் பார்த்தது. ஆனால், ‘கலோரி போதாமை’யைக் கணக்கிட 1974ல் பயன்படுத்திய அதே வரையறைகளைப் பயன்படுத்த முடியுமா?

நாட்டில் பொதுப் போக்குவரத்து, சுகாதாரம், கட்டுமானம் ஆகியவை முன்னேறி உள்ளன. எந்திரமயமாக்கல் முன்னேறி உள்ளது. அதனால் மக்களின் ஊட்டச்சத்து தேவை மாறியுள்ளது.
இதனால்தான் இந்த ஆய்வில் ‘அத்தியாவசிய கலோரி’களின் அளவு கிராமங்களில் 1900 கலோரிகள் எனவும், நகரங்களில் 1750 கலோரிகள் எனவும் குறைத்து வைத்து கணக்கிடப்பட்டது.
இந்தக் குறைந்த அளவை வைத்து கணக்கிட்டால் கூட, வறுமை விகிதம் 26% ஆக உள்ளது. 2011ல் இது 30%. இந்த முறைப்படி 2011ல் வறுமையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 36 கோடி; 2022ல் அது 37 கோடி என அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆக, அரசின் தரவுகள்படியே கணக்கிட்டாலும், பிழைகள் நிறைந்த முறையை பயன்படுத்தினாலும் கூட, இன்றும் மிக அதிக அளவிலான மக்கள் மோசமான வறுமை நிலையில் வாழ்வது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது எப்படி சாத்தியம்? 2011ல் இருந்து இன்று வரை பொருளாதாரம் வளர்ந்துள்ளதே? இதற்கு முக்கிய காரணம், மக்களின் ஊட்டச்சத்து அளவு போதுமான அளவு உயரவில்லை என்பதுதான்.

இதற்கு பதில் அளிக்கும் பாஜக ஆய்வாளர்கள், ‘மக்கள் இன்று உணவு போன்ற அடிப்படைத் தேவை குறித்து கவலைப்படாமல், உணவு அல்லாத பண்டங்கள் நுகர்வில் முனைப்பு காட்டுகின்றனர். ஸ்மார்ட்போன் வைத்துள்ளார்கள், வாகனம் வைத்துள்ளார்கள்’ என வாதிடுகின்றனர்.

இது பிழையான வாதம். இன்றைய சூழலில் இப்படிப்பட்ட உணவு அல்லாத நுகர்வு இன்றி யமையாததாக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக, இன்று ‘கிக்’ பொருளாதாரத்தில் (Swiggy, Rapido போன்ற தளங்களில்) பணி புரியும் பல கோடி இளைஞர்கள், அவர்கள் வேலைக்காகவே ஸ்மார்ட்போன் மற்றும் வாகனம் வாங்க வேண்டியது அவசியமாக உள்ளது.

ஆனால், இந்தப் பணிகளில் இவர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழல்கின்றனர். இப்படி இருக்கையில் மக்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதால் வறுமை இல்லை என வாதிடுவது சரியா?  
மேலும், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் பாஜக அரசில் தனியார்வசம் சென்றிருப்பதால் மக்கள் ‘உணவு அல்லாத’ செலவினங்களை உயர்த்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால்தான் உணவு ஊட்டச்சத்து உயர்வதில்லை; வறுமை விகிதம் குறைவதில்லை.

மோடி அரசு காலத்தில் மக்கள் சந்திக்கும் நெருக்கடி பன்மடங்கு உயர்ந்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வில், பெண்கள் மத்தியில் இரத்த சோகை (அனீமியா) அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. பட்டினிக் குறியீட்டில் இந்தியா தொடர்ந்து கடைக்கோடியில் உள்ளது. 

பல்வேறு ஆய்வுகளும், இன்றும் இந்தியாவில் மூன்றில் இரண்டு பேர் உணவுப்
பாதுகாப்பு இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.இந்தச் சூழலில், மோடி அரசு மற்றும் அரசு சார்பு ஆய்வாளர்களின் வறுமை விகிதம் சரமாரியாகக் குறைந்துள்ளது என்ற வாதங்கள், உண்மை நிலையை மறைக்கும் பொய் புனைவுகளே.

ஜான்சி