தமிழ் மருத்துவ மரபை அகத்தியா பேசுவான்!
‘‘மறைக்கப்பட்ட நம் தமிழ் வரலாறு, மறுக்கப்பட்ட நம் சித்தர்களின் சித்தாந்தங்கள் மற்றும் மருத்துவக்குறிப்புகள்... என தமிழர்கள் தொலைத்த அடையாளங்கள் ஏராளம். அப்படியான ஒரு தமிழ் சித்த மருத்துவர் அடிப்படையிலான திகில் கதைதான் இந்த ‘அகத்தியா’ திரைப்படம்...’’ நிதானமாக பேசத் தொடங்கினார் நடிகர் ஜீவா.

உங்களுக்கு இது திகில் சீசனா?
ஆமா! முன்பு ‘பிளாக்’, இப்ப ‘அகத்தியா’. நானும் இந்த பாயிண்டில் யோசிக்கலை. ஆனால், இந்தக் கதைகள் பார்க்க, கேட்கவே சுவாரஸ்யமா இருக்கு. ‘பிளாக்’ அருமையான முயற்சி. ‘டார்க்’ சீரிஸ் மாதிரி ஒரு வித்தியாசமான முயற்சி. ஆனால், எல்லோருக்கும் சட்டென புரியாது. இந்த அறிவியல் சார்ந்த திகில் படம், சீரிஸ் ரசிகர்கள் அந்தப் படத்தை பாராட்டினாங்க.
 ‘அகத்தியா’வும் திகில் படம்தான், ஆனால், நம்ம தமிழ் சார்ந்த மருத்துவ அடிப்படையிலான கதை. இந்தப் படம் வேறு ஒரு ஜானரில் குடும்பங்கள் பார்க்கக் கூடிய படமா இருக்கும். ‘அகத்தியா’..? என்னுடைய கேரக்டர் பெயர் அகத்தியா. 1940களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த சித்த மருத்துவ ப்ரொபசரான அர்ஜுன் சார் கதையும் என்னுடைய கதையும் ஒரு கட்டத்தில் இணையுது. ஏன் எதுக்கு அப்படிங்கறதுதான் கதை.

நான் ஒரு சினிமா ஆர்ட் டைரக்டர். ஹாரர் படம் எடுக்கறதுக்காக ஒரு அரண்மனையை தேடிப் பிடிக்கிறோம். அங்கே உண்மையாவே மர்மமான அமானுஷ்ய சம்பவங்கள் நடக்குது. அதுக்கு மேலயும் இந்த அரண்மனை ரகசியத்தை தெரிஞ்சுக்காம போகக்கூடாதுனு முடிவு எடுத்து மொத்த குழுவா அங்கேயே தங்குகிறோம். அதன் பிறகு நடக்குற சம்பவங்கள் சுவாரசியமாக இருக்கும்.
இயக்குநர் பா.விஜய்..?நிறைய புத்தகங்கள் படிப்பார், நிறைய எழுதுவார். அதனாலயே அவருடைய திரைக்கதையிலும் நல்ல தெளிவு இருக்கும். இந்தப் படமும் கூட அவர் படித்த மற்றும் எழுதிய புத்தகங்களின் தாக்கம்தான். வேலையில் அவ்வளவு டெடிகேஷன். அவர்கிட்ட டென்ஷனை பார்க்க முடியாது.
இதே மாதிரிதான் அர்ஜுன் சாரிடமும் பார்த்தேன். அவ்வளவு அனுபவசாலி. எத்தனையோ படங்கள் செய்திருக்கிறார். ஆனாலும் அந்தக் கூலான குணம் மட்டும் அவர்கிட்ட மாறவே இல்லை.
எங்க தயாரிப்பிலேயே இரண்டு படங்கள் செய்திருக்கிறார். அவருடைய ‘ஜெய்ஹிந்த்’ படத்தை பார்த்து வளர்ந்தவன் நான். அவரிடம் முதன் முதலில் அறிமுகமாகும் போதே ‘உங்க ரசிகர் சார் நான்’னு சொன்னேன். அவர் கூட சேர்ந்து நடிக்கும் போது இன்னும் நிறைய கத்துக்க முடிஞ்சது.
ராஷி கண்ணா இந்தி, தெலுங்கு, தமிழ் இப்படி மொழிவாரியா ஏகப்பட்ட படங்கள் நடிக்கிறாங்க. செம பிஸி. ஷாட் ரெடி என்றதுமே அவங்களுக்குள்ள சீரியஸ் மோட் தொத்திக்கும். உடனே கேரக்டருக்குள் வந்துடுவாங்க. ஒரு நல்ல தோழியாகவும் இப்ப எனக்கு மாறிட்டாங்க. யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லீ, விடிவி கணேஷ் சார், அழகம்பெருமாள் சார் , ராதா ரவி சார்... இப்படி ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிச்சிருக்காங்க.
‘83’, ‘யாத்ரா 2’, ‘ஃபர்சி’ டப்பிங்... பான் இந்தியா நடிகராக அடுத்த கட்டமா?
‘83’ இந்திப்படம் என் வாழ்க்கையில் கிடைத்த மைல் ஸ்டோன். அந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருக்குமே நிஜ கேரக்டர்ஸ்தான். ரன்வீர் சிங்குக்கு கபில்தேவ் சார் கேரக்டர், எனக்கு ஸ்ரீகாந்த் சார் கேரக்டர். இப்படி அத்தனை பேருமே இன்னொருத்தர் வாழ்க்கையை அந்தப் படத்தில் வாழ்ந்தோம்.
நிறைய பாராட்டுக்கள், நிறைய அங்கீகாரம் கிடைத்தது.ஒரு வயசு வரையிலும் நாம லவ்வர் பாய், காதல், ரொமான்ஸ் இப்படி செய்யலாம். ஆனால், வயது ஆக ஆக நம்முடைய கேரக்டர் சாய்ஸில் முதிர்ச்சி இருக்கணும். அந்த முதிர்ச்சியான கேரக்டர் சாய்ஸ்தான் இதெல்லாம்னு நினைக்கிறேன்.
‘யாத்ரா 2’ தெலுங்குப் படம் பார்த்துட்டு நிறைய பேர் ஜெகன்மோகன் ரெட்டி சாரை அப்படியே பாக்குற மாதிரி இருக்கிறதா பாராட்டினாங்க. இத்தனை வருஷம் இந்த சினிமா தொழிலில் நடிகரா மட்டும் இல்லாம தயாரிப்பாளராகவும் இருந்திருக்கோம். அதனால் இன்னொருவருடைய பணம் எவ்வளவு முக்கியம் என்கிறது தெரியும். அதனால் அதற்கான சிறப்பு என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
‘கோ’ படம் தெலுங்கிலும் வெளியாகி நல்லாவே ஹிட் ஆச்சு. அந்த நேரமே அப்பா ‘தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்துடா... அங்கே இருந்து நிறைய வாய்ப்பு வருது’னு சொன்னார். ஆனால், ‘தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாம எப்படிப்பா நடிக்கிறது’னு அப்ப விட்டுட்டேன். ஒருவேளை தெலுங்கிலும் ஆர்வம் காட்டி இருந்தால் இப்ப இரு மொழி நடிகனா கூட இருந்திருக்கலாம். இதுக்குதான் அப்பா, அம்மா சொல்ற பேச்சைக் கேட்கணும்னு சொல்லுவாங்க போல!
இனி என்னுடைய கதைகள் இப்படித்தான் இருக்கும். என் பையனுக்கு 14 வயதாகுது. அவன் முன்னாடி போய் மறுபடியும் காதல் படம், ரொமான்ஸ் இப்படி நின்னா ‘அப்பா... போப்பா’னு சொல்லிடுவான். அதேசமயம் ‘பிளாக்’ மாதிரி படத்தை ரொம்ப என்ஜாய் பண்ணி என்னை புகழ்ந்து தள்ளிட்டான். ‘83’ படம் பார்த்துட்டு மொத்த குடும்பமும் பாராட்டினாங்க. அப்பா என்னை பெருமையா பார்த்தார்.
ஒரு தயாரிப்பாளரா இப்ப சினிமா தொழில் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க ?
இப்ப இருக்கற ட்ரெண்டிங் சினிமாவை கணிக்கவே முடியல. ஓடிடி தளங்களும் தனி கார்ப்பரேட் பிசினஸா இயங்கத் தொடங்கி இருக்கு. நம்ம கிட்ட ஒரு கதை இருக்குனு கொண்டு போனால் கூட அங்கே ஒரு குழு அவங்களுடைய பான் இந்தியா ஸ்டைலுக்கு ஏற்ப மாத்தறாங்க.
அதுவும் வொர்க் அவுட் ஆகும்.ஆனா, ஓர் இயக்குநரா பார்க்கும் பொழுது தன்னுடைய கதை முழுமையா வரணும்னுதான் யோசிப்பாங்க. இந்தச் சிக்கல்கள் ஓடிடியில் நிறைய இருக்கு. அதேபோல் பெரிய பட்ஜெட் படமா நம்பி செலவு செய்யவும் முடியல. எந்தப் படம் ஓடுது, எதை மக்கள் ஏத்துக்கிறாங்கனு நிறைய குழப்பங்கள் இருக்கு.
உண்மையை சொன்னால் ‘பிளாக்’ மாதிரி படத்தைப் பற்றி சொல்லும் பொழுது ‘ஏன் ஹாரர் படம்’னு கேட்டாங்க. ஆனா, ‘ஏன் ஹாரர் படம் கூடாது’ என்கிற கேள்வியோடுதான் அந்தப் படத்தை செய்தேன். வொர்க் அவுட் ஆச்சு. இப்படி எல்லாப் படத்தையும் கச்சிதமாக கணிக்க முடியல. இந்த டிஜிட்டல் விமர்சனங்கள், சமூக வலைத்தள ஆதிக்கம் இதெல்லாம் இப்ப இருப்பதால இன்னொரு அஞ்சு, ஆறு வருஷங்கள் போனா இதிலும் அனுபவம் கிடைக்கும்னு நினைக்கிறேன்.
இப்போது வரும் நடிகர்கள் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லையே..?
ஷார்ட் டைம் ஃபேமஸ் வேணும்னு நினைக்கிறாங்க. கடின உழைப்பு மூலமா கிடைக்கிற நீண்ட நாட்களுக்கான வெற்றி மேல ஆர்வம் குறைஞ்சிடுச்சு.
எல்லாமே இன்னைக்கு ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரமாகிடுச்சு. ஒரு படம் முடிஞ்சு அதன் மூலமா ஒரு புகழ் கிடைச்சா அவங்களுக்குன்னு ஒரு குரூப்பை உருவாக்கி போலியா ஒரு டிரெண்டை உருவாக்கறாங்க. இதெல்லாம் நீண்ட நாட்கள் நிலைக்காது.
வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திச்சு அனுபவ பாடங்கள் கத்துக்கிட்டு அதன் மூலம் கரியரை வளர்த்துக்கிறதுதான் சினிமா மட்டுமல்ல எல்லா தொழிலிலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை சொன்னா நம்மை பூமர் ஆக்கிடறாங்க.காதல் எப்போ உண்மையில் ஜெயிக்கும்?
ஓ... இது பிப்ரவரி மாதம், காதல் மாதம் என்பதால் இந்தக் கேள்வி! புரியுது. நான் தமிழ்நாடு, என் மனைவி சுப்ரியா பஞ்சாபி. யோசிச்சு பாருங்க எங்களுக்குள்ள கலாசாரம், பண்பாடு, சாப்பாடு... இப்படி எல்லாவற்றிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. அத்தனையும் தாண்டி கைகோர்த்து நாங்க நிற்க காரணம் ரெண்டு பேரும் சரிசமமா எங்களுடைய உறவுக்கு நேரம் கொடுப்பதுதான்.
காதல் மட்டும் கிடையாது... எல்லா உறவுகளிலும் நேரம்தான் ரொம்ப முக்கியம். காதலிக்கும் போது குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது அவங்களுக்காக செலவு செய்வோம். ஆனா, திருமணத்துக்கு அப்புறம் ரெண்டு நிமிஷம் கூட நாம கொடுக்க மறுக்கறோம். அதுதான் எல்லா ரிலேஷன்ஷிப்பிலும் முதல் பிரச்னை.
டைம் மேனேஜ்மென்ட்தான் வேலை, படிப்பு, குடும்பம், குழந்தைகள்... இப்படி எல்லாத்தையும் ஆரோக்கியமா மாத்தும். எட்டு மணி நேரம் வேலை, நான்கு மணி நேரம் ஃபிட்னஸ், சாப்பாடு, இன்னொரு ரெண்டு மணி நேரம் குழந்தைகள், அடுத்து ஒரு ரெண்டு மணி நேரம் அப்பா அம்மா, இதற்கிடையில் ஃபிரண்ட்ஸ்... இப்படி எல்லாத்துக்குமே சரியான நேரத்தை கொடுக்கிறோம்.
ஆனா, ஏன் துணைக்கு அந்த நேரத்தை கொடுக்கிறதில்லை? ஒரு ரெண்டு மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் அவங்க கூட உட்கார்ந்து பேசினாலே போதும். முக்கியமா அவங்க பேசறதை காது கொடுத்து கேட்டாலே போதும்.
சுப்ரியா, இன்டீரியர் டிசைனர். கரியரிலும் அவங்க பிஸியா இருக்காங்க. அவங்களுக்கான நேரத்தையும் நாம மதிக்கணும். கூடுமானவரை எல்லாரும் பிஸியா இருங்க; அந்த பிஸி நேரத்துக்கு நடுவுல ஒரு கொஞ்ச நேரம் உங்க வாழ்க்கைத் துணைக்காக செலவு பண்ணுங்க.
‘அகத்தியா’ எப்படிப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்?
ஹாரர் படம் அப்படினா சின்ன பட்ஜெட் அப்படின்னு நினைச்சுதான் ஆரம்பிச்சோம். ஆனா, இந்தக் கதைக்கு பட்ஜெட் நினைத்ததை விட அதிகமாகவே இருந்துச்சு. நிறைய இடங்களில் செட்டு போட்டு வேலை செய்ய வேண்டியதா இருந்துச்சு. ரெண்டு காலகட்டத்தில் கதை நடக்குது. 1940 மற்றும் இப்ப. இதனால பீரியட் செட்டிங்கும் போட வேண்டியதா இருந்தது. அத்தனைக்கும் ஐசரி கணேஷ் சார் மிகப்பெரிய சப்போர்ட்டா தயாரிப்பில் இருந்தார்.
நம்ம தமிழ் கலாசாரம் சார்ந்த திரைப்படம் , பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். இந்தப் பட ரிலீஸ்க்கு பிறகு ‘டாடா’ இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஒரு படம். ‘கோல்மால்’ படம் ஏற்கனவே முடிஞ்சு போஸ்ட் புரொடக்ஷன் போயிட்டு இருக்கு.
ஷாலினி நியூட்டன்
|