இந்தியா முதல் உலகம் வரை... அதிகரிக்கும் பூச்சிகள் உணவு... சந்தை மதிப்பு ரூ.11 ஆயிரத்து 733 கோடி!
நாமெல்லாம் கத்திரிக்காய், காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் ஏதேனும் புழுக்கள் நெளிகிறதா, பூச்சிகள் கிடக்கிறதா எனக் கண்களாலும், கைகளாலும் துழாவிப் பார்த்தபிறகே குழம்பு மற்றும் பொரியல்களில் சேர்ப்போம்.  குறிப்பாக உண்ணும் உணவுப் பொருட்களில் ஏதேனும் பூச்சிகள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். அதனை உட்கொள்ள மனது எளிதில் ஏற்றுக்கொள்ளாது. அந்தளவுக்கு பூச்சி, புழுக்கள் என்றாலே ஒருவித அலர்ஜி அனைவருக்கும் உண்டு. 
ஆனால், சமீப காலங்களாக பூச்சிகளை உட்கொள்ளும் போக்கு உலக அளவில் அதிகரித்துள்ளதாக சொல்கின்றன செய்திகளும், ஆய்வுக் கட்டுரைகளும். உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது 200 கோடிக்கும் அதிகமானவர்கள் தினமும் பூச்சிகளை உட்கொள்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வுக் கட்டுரை.  பூச்சி இறைச்சியில் அமினோ அமிலங்கள், கொழுப்புகள், சர்க்கரைகள் நிறைந்துள்ளதும், வைட்டமின் பி மற்றும் கே அதிகளவில் இருப்பதுமே இதற்குக் காரணங்கள் என்கின்றனர் நிபுணர்கள். 
இதனால், உண்ணக்கூடிய பூச்சிகள் என்றே தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை ஆங்கிலத்தில், ‘Edible insects’ எனக் குறிப்பிடுகின்றனர். இந்த உண்ணக்கூடிய பூச்சிகளின் பயன்பாட்டில், இந்தியா முன்னணியில் உள்ளது. ஆம். இந்தியாவில், சுமார் 12 மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி சமூகங்களால் 303 பூச்சியினங்கள் வரை உட்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுக் கட்டுரைகள்.  இதேபோல் உலகளவில் நிலம் மற்றும் நீரில் வாழும் சுமார் 2,300க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் உணவாக எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
இவை பிடிக்கப்பட்டும் உண்ணப்படுகின்றன. தவிர அமெரிக்கா, ஃபிரான்ஸ், தாய்லாந்து, டென்மார்க், சீனா, தென்னாப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் பெரிய அளவிலான ஃபார்ம்கள் அமைத்தும் விற்பனை செய்கின்றன.
அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு உண்ணக்கூடிய பூச்சிகளின் (Edible insects) சந்தை மதிப்பு 1.35 பில்லியன் டாலர் தொட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ‘கிராண்ட் வியூ ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனம். அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 11 ஆயிரத்து 733 கோடி ரூபாய் ஆகும். அதுமட்டுமல்ல. 2025 முதல் 2030க்குள் இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 25.1 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் பாரம்பரியமான புரதங்களுக்குப் பதிலாக ஆரோக்கியமான மாற்றுகளை நுகர்வோர் அதிகளவில் தேடுவதுதான் எனச் சொல்லப்படுகிறது. அதாவது அதிக புரதம், குறைந்த கொழுப்புள்ள உணவு ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவது முக்கிய காரணியாகும்.
இவை உண்ணக்கூடிய பூச்சிகளில் கிடைப்பதால் மக்கள் இதனை நோக்கி நகர்கின்றனர். வழக்கமான கால்நடைகளுடன் ஒப்பிடும்போது நிலம், நீர், தீவனம் போன்ற குறைந்தபட்ச வளங்களே இதற்குத் தேவைப்படுகின்றன.
அத்துடன் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்படுவதும், இந்தப் பூச்சிகள் எளிதாக கிடைக்கும் என்பதாலும் உண்ணக்கூடிய பூச்சிகளின் சந்தை பெரியளவில் விரிவாக்கம் அடைந்துள்ளன.
பொதுவாக தமிழகத்தில் ஈசல் உண்ணும் பழக்கம் இருப்பது நாம் அறிந்தது. சென்னையிலேயேகூட ஈசல் வறுவல் விற்பனையை பார்த்திருப்போம். அந்தவகையில் உலகிலும், இந்தியாவிலும் என்னவிதமான பூச்சிகள் உட்கொள்ளப்படுகின்றன என்பதை கொஞ்சம் பார்ப்போம்.
*உலக நாடுகள்
உலகில் பூச்சிகள் அதிகளவில் உண்ணும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மெக்ஸிகோ. சுமார் 450 பூச்சியினங்கள் இங்கே உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
அதாவது மெக்ஸிகோ சமையல் பாரம்பரியத்தின் ஒருபகுதியாகவே இந்தப் பூச்சி உணவுகள் இருக்கின்றன.
குறிப்பாக மாகுவே புழுக்கள், வெட்டுக்கிளிகள், எஸ்கமோல்ஸ் எனப்படும் எறும்பு லார்வாக்கள், ஸ்டிங் பக்ஸ் எனப்படும் துர்நாற்றப் பூச்சிகள், அட்டா எறும்புகள் ஆகியவை குழம்பு அல்லது சூப்களில் வேகவைக்கப்படுகின்றன. தவிர, சாஸ்கள் தயாரிக்கவும் அரைக்கப்படுகின்றன. இந்தப் பூச்சிகளை டாகோஸில் நிரப்பியோ அல்லது ஃப்ரை செய்தோ ருசித்து சாப்பிடுகின்றனர் அங்குள்ள மக்கள். எறும்பு லார்வாக்களில் ஐஸ் கிரீம்களும் அங்கே சக்கைபோடு போடுகின்றன.
இதற்கடுத்தபடியாக தாய்லாந்து உள்ளது.
தாய்லாந்தின் தெருக்ககளில் வறுத்து உப்பு சேர்க்கப்பட்ட பூச்சிகள் வழங்கும் உணவு வண்டிகளை சாதாரணமாகக் காணலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் என நினைத்து அவற்றை அணுகினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
ஏனெனில், அவை மொறுமொறுப்பான கிரிக்கெட்ஸ் எனப்படும் சில் வண்டுகள், வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் மற்றும் மூங்கில் புழுக்களாக இருக்கலாம். இங்கே 300க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் உண்ணக்கூடியவையாக உள்ளன.
தொடர்ந்து சீனாவைக் குறிப்பிடுகின்றனர் உணவியல் நிபுணர்கள். தற்போது சீனாவில் 325 பூச்சியினங்கள் வரை உட்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே மலிவான மற்றும் பொதுவாக உண்ணக்கூடிய பூச்சி என்பது பட்டுப்புழு லார்வாக்கள்தான்.
இவை தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இதனுடன் வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்கள், ராட்சத சிக்காடா எனப் பல்வேறு பூச்சியினங்கள் உண்ணும் பட்டியலில் உள்ளன.
பல்வேறு வீடியோக்களில் சீனாவில் குச்சிகளில் குத்தி வைக்கப்பட்டியிருக்கும் பூச்சிகளையும், வண்டுகளையும், தேள்களையும், புழுக்களையும் பார்த்திருக்கலாம். தென் அமெரிக்காவைப் பொறுத்தவரை பிரேசில் நாடு உண்ணக்கூடிய பூச்சிகளில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 200க்கும் மேற்பட்ட பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இதில் குறிப்பாக இறக்கைகள் கொண்ட ராணி எறும்புகள் அதிகம் உண்ணப்படுகின்றன. இவற்றை ஃப்ரை செய்தோ அல்லது சாக்லெட்களில் அமிழ்த்தியோ உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இதேபோல் ஜப்பானில் 150க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் உட்கொள்ளப்படுகின்றன. பொதுவாக வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்கள், தேனீ லார்வாக்கள், மக்கட்ஸ் எனப்படும் புழுக்கள், பட்டுப்புழுக்கள் ஆகியவை அதிகளவில் அங்கே உணவாக உள்ளன. இதுதவிர கம்போடியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு, தென்கொரியா எனப் பல்வேறு நாடுகளிலும் பூச்சிகள் அதிகம் நுகரப்படுகின்றன.
*இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை ஜார்க்கண்ட், தமிழ்நாடு, ஒடிசா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மிசோரம், அசாம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பூச்சிகள் உணவாக அதிகம் உட்கொள்ளப்படுவதாகச் சொல்கின்றன ஆய்வுகள்.
கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. அங்குள்ள கந்தமால், சுந்தர்கார், மயூர்பஞ்ச், கோராபுட் உள்பட சில மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடிகள் இந்தச் சிவப்பு எறும்புச் சட்னியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுகின்றனர்.
இதில் அதிகப் புரதச்சத்து இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அவர்கள். இந்த வழக்கம் சத்தீஸ்கர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இருக்கின்றன. தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சிவப்பு எறும்பினை உண்ணும் வழக்கம் இருக்கிறது.
இவர்கள் எறும்புகளின் முட்டைகள் மற்றும் லார்வாக்களை உட்கொள்கின்றனர்.தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள சில பழங்குடிகள் ஆசிய தேனீக்கள், வல்லூறு தேனீக்கள், சிவப்பு எறும்புகள், குளவிகள், ஈசல்கள் ஆகியவற்றை உட்கொள்ளும் பழக்கம் வைத்துள்ளனர். இதில் ஈசல் உண்ணும் வழக்கம் பெருவாரியான மக்களிடம் உள்ளது. கேரளா மற்றும் தெலுங்கானாவில் பருவமழைக்கு முன்பு ஈசல் ருசியான உணவாக இருக்கிறது. இதனுடன் இந்திய தேனீக்கள், பாறை தேனீக்கள், சிவப்பு எறும்புகள், வெட்டுக்கிளிகள் ஆகியவை உண்ணும் பழக்கமும் கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்புரா மலைத்தொடரில் உள்ள பழங்குடிகள் பத்து வகையான பூச்சியினங்களை உண்பதாக பதிவுகள் உள்ளன.
சிவப்பு எறும்பு, சிவப்பு குளவிகள், இந்திய தேனீக்கள், கறுப்பு குளவிகள், பட்டுப்புழுக்கள், கொப்புள வண்டுகள், வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சி லார்வாக்கள் உள்ளிட்டவற்றை உண்ணுகின்றனர். இதுமட்டுமல்ல. மத்திய பிரதேசத்திலுள்ள மாநில பட்டு கூட்டமைப்பு பட்டு நூல் தயாரிப்புக்குப் பின் வீணாகும் பட்டுப்புழு கூட்டுப்புழுவிலிருந்து ஊறுகாய் போன்ற ரெசிபி தயாரிக்கும் முயற்சியை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, மக்களை சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது.
வடகிழக்கு இந்தியப் பகுதிகளைப் பொறுத்தவரை மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 41 வகையான பூச்சியினங்கள் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அங்கே ராட்சத நீர்ப் பூச்சிகள், நீர் வண்டுகள், ஸ்கார்லட் ஸ்கிம்மர் எனப்படும் தும்பிகள் சில பழங்குடிகளுக்குப் பிரியமான உணவாக இருக்கின்றன.
இதேபோல் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நியிஷி மற்றும் காலோ பழங்குடிகள் இடையே 81 வகையான பூச்சியினங்களை உண்ணும் வழக்கம் உள்ளது. இதில் குறிப்பாக பட்டுப்புழு லார்வாக்கள், தேனீக் குஞ்சுகள், குளவிக் குஞ்சுகள், தட்டாம்பூச்சிகள், அதன் லார்வாக்கள், மூங்கில் கம்பளிப்பூச்சிகள், மண் கிரிக்கெட்கள், பழுப்பு நிற அனோமலா சிலந்திகள் உள்ளிட்டவை அடங்கும். நாகலாந்து மாநிலத்தில் கார்பென்ட்டர் புழுக்களின் லார்வாக்கள் திருவிழாக் காலங்களில் படைக்கப்படுகின்றன. இங்குள்ள பேக், திமாபூர், கோஹிமா பகுதி பழங்குடிகள் வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்கள், சிவப்பு எறும்புகள், பட்டுப்புழுக்கள் உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அசாமில் போடோ மக்கள் 23 வகையான பூச்சிகளை உண்ணுகின்றனர். இங்கே பல்வேறு வகையான பழங்குடிகள் வெவ்வேறு பூச்சியினங்களை உட்கொள்கின்றனர்.
*பேராச்சி கண்ணன்
|