அன்று சாராய கிராமம்... இன்று சதுரங்க கிராமம்!
கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் வீற்றிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது மரோட்டிச்சல் எனும் கிராமம். இந்தியாவின் சதுரங்க கிராமம் என்று இதனைப் புகழ்கின்றனர். இன்று இக்கிராமத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் 4,500 பேர், அதாவது 75 சதவீதம் பேர் திறமையான சதுரங்க ஆட்டக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலேயே மரோட்டிச்சல்லின் சதுரங்கப் புகழ் திருச்சூர் முழுவதும் பரவத் தொடங்கியது. அங்கிருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு திறமையான சதுரங்க ஆட்டக்காரர் இருப்பார்.  தேநீர்க் கடை, பேருந்து நிலையம், வீட்டுக்கு முன்பாக இருக்கும் காலி இடம், மளிகைக்கடைக்கு அருகிலிருக்கும் இடம், கோயில் திண்ணை, மர நிழல், படகு என எல்லா இடங்களிலும் சதுரங்கம் விளையாடுவதுதான் மரோட்டிச்சல் மக்களின் ஒரே பொழுதுபோக்கு.  ஆசிய அளவில் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர்களைக் கொண்ட ஊர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியிருக்கிறது இந்தக் கிராமம். அதாவது, இக்கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் பங்குபெறுகின்றனர். ஒரு சிறிய ஊரில் வசித்து வரும் ஆயிரக்கணக்கானோர் ஒரு விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பது ஆச்சர்யம்.
விஷயம் இதுவல்ல.ஐம்பது வருடங்களுக்கு முன்பு குடிகாரர்களின் கூடாரமாக, சூதாட்ட விடுதியாக இருந்தது மரோட்டிச்சல் கிராமம். எழுபதுகளில் மரோட்டிச்சல்லில் இருந்த பல வீடுகளில் சாராயம் காய்ச்சி, மற்றவர்களுக்கு விநியோகம் செய்து வந்தனர். அப்போது அங்கே முழு நேரமும் போதையில் மிதப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
எண்பதுகளில் இந்தக் கிராமம் சாராயம் உற்பத்தி செய்யும் மையமாகவே மாறியது. ‘‘அப்போது மரோட்டிச்சல்லில் வசித்த ஆண்கள் வெறும் குடிகாரர்களாக மட்டுமல்லாமல், சாராயம் காய்ச்சி, இரவு நேரங்களில் உள்ளூரிலும், வெளியூரிலும் விற்பனை செய்து வந்தனர்...’’ என்கிறார் மரோட்டிச்சல்லைச் சேர்ந்த ஜெயராஜ் மனழி. தவிர, திருச்சூரில் உள்ள பல ஊர்களுக்கு மதுவை விநியோகிக்கும் இடமாக மாறியது மரோட்டிச்சல். இன்னொரு பக்கம் பல குடும்பத்தலைவர்கள் எப்போதுமே மது போதையில் இருந்ததால், விவசாயம் தடைபட்டது. எந்தத் தொழிலும் சரியாக நடக்கவில்லை. வெளி வேலையில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கூட குடும்பத்தினருக்குக் கொடுக்காமல், மதுவில் கொட்டினார்கள் அந்த குடும்பத் தலைவர்கள்.
சாராய மோகம் அதிகரிக்க, இன்னொரு பக்கம் சூதாட்டமும் ஆரம்பமானது. மரோட்டிச்சல் ஆண்கள் குடும்பத்தைக் கவனிக்காமல் 24 மணி நேரமும் மது போதையிலும், சூதாட்டத்திலும் திளைத்திருந்தனர். மரோட்டிச்சல்லில் வசித்து வந்த ஆண்கள் எல்லோரும் மதுவுக்கும், சூதாட்டத்துக்கும் அடிமைகளாக மாற, குடும்ப வருவானம் முற்றிலுமாக பாதிப்படைந்தது. பல குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி வறுமைக்குத் தள்ளப்பட்டன. அத்துடன் குடும்ப வன்முறையும் அதிகரித்தன.
மாலை நேரங்களில் சண்டையே நடக்காத தெருக்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மரோட்டிச்சல்லின் நிலைமை மோசமாக இருந்தது. அதைவிட, பல குழந்தைகள் உணவும், உடையும் இல்லாமல் துன்பப்பட்டனர்.
இதற்கு ஒரு விடிவு காலமே இல்லையா என்று பெண்கள் ஏக்கம் கொண்டனர். ஒரு சில குடும்பங்கள் வேறு ஊருக்கு குடிபெயரும் அவலமும் ஏற்பட்டது. இருந்தாலும் மது போதையும், சூதாட்டமும் குறையவே இல்லை.இப்படியான ஒரு இக்கட்டான சூழலில்தான் உன்னிகிருஷ்ணன் ஊருக்குத் திரும்பினார். மரோட்டிச்சல்லின் தலை எழுத்தையே மாற்றி எழுதினார் உன்னி என்றால் அது மிகையாகாது.
இளம் வயதில் குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு, மரோட்டிச்சல்லைவிட்டு, வெளியேறி மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். சில வருடங்களாக ஊருக்கே திரும்பாமல், தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்.
தொண்ணூறுகளில் மாவோயிஸ்ட் குழுவிலிருந்து வெளியேறி, மரோட்டிச்சல்லுக்குத் திரும்பினார் உன்னி. தன்னுடைய கிராமத்தின் மையப்பகுதியில் ஒரு தேநீர்க் கடையைத் திறந்தார். ஊரில் சாராயமும், சூதாட்டமும் தலை விரித்தாடுவது அவரை மிகவும் வருத்தியது. ஒரு போராளியாக இருந்ததால் ஊருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். மரோட்டிச்சல்லில் பிறந்து, வளர்ந்த சில பால்ய காலத்து நண்பர்களைச் சந்தித்து, ஒரு குழுவை உருவாக்கினார் உன்னி. பிறகு சூதாட்டத்திலும், மது போதையிலும் உழல்பவர்களின் அம்மாக்களும், மனைவிகளும் அந்தக் குழுவில் தாமாகவே முன் வந்து இணைந்தனர். இந்தக் குழு சில மாதங்களுக்குக் கண்காணிப்பில் மட்டுமே ஈடுபட்டது. ஒரு நாள் சாராயம் காய்ச்சும் இடத்துக்குச் சென்று, அங்கிருந்த அனைத்து மூலப்பொருட்களையும் அழித்தது உன்னியின் தலைமையிலான குழு.
இதனால் சாராய வியாபாரிகளுக்கும், உன்னிக்கும் இடையில் பிரச்னை உருவானது. ஆனால், ஊரிலிருந்த பெண்களும், சில ஆண்களும் உன்னிக்கு உறுதுணையாக இருக்க, சாராய வியாபாரிகளால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆனாலும் சாராய வியாபாரத்தையோ, குடிப்பழக்கத்தையோ, சூதாட்டத்தையோ முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. சாராய விற்பனையும், சூதாட்டமும் ரகசியமாக அரங்கேறின.
இந்நிலையில் சாராயத்தையும், சூதாட்டத்தையும் அழிப்பதற்காக உன்னி எடுத்த ஆயுதம்தான், சதுரங்கம். புகழ்பெற்ற பல வீரர்களுடன் சதுரங்கம் ஆடிய அனுபவம் உடையவர் உன்னி. முதலில் தன்னுடைய குழுவை அழைத்து சதுரங்க விளையாட்டை ஆடச் சொன்னார் உன்னி. பலபேருக்கு சதுரங்க விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. இன்னும் பலபேர் முதல் முதலாக அப்போதுதான் சதுரங்க போர்டையே பார்க்கின்றனர்.
மரோட்டிச்சல்லைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு சதுரங்க விளையாட்டைக் கற்றுக்கொடுத்தார் உன்னி. அவரது தேநீர்க் கடையே சதுரங்க விளையாட்டின் முதல் மைதானமாக மாறியது. மது போதையும், சூதாட்டமும் ஆக்கிரமித்திருந்த ஆண்களின் மனதை சதுரங்கம் பிடித்துக் கொண்டது.
மரோட்டிச்சல் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக சதுரங்கம் மாறியது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இல்லாமல், சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய வீரர்கள் உருவாகி வந்தனர். சதுரங்க விளையாட்டு மரோட்டிச்சல்லின் சாராய பாட்டில்களையும், சூதாட்டத்தையும் சுவடே இல்லாமல் அழித்தது.
“சதுரங்க விளையாட்டுதான் கிராமத்தை ஒன்றிணைத்தது. எப்போதுமே சதுரங்கத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். குடிப்பதற்காக மக்கள் சந்திப்பதைக் காட்டிலும், விளையாடுவதற்காக மக்கள் சந்திப்பது அதிகமானது.
மதுவையும், சூதாட்டத்தையும் மறக்கடித்தது சதுரங்கம்...” என்கிறார் ஜான். மரோட்டிச்சல்லைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து நிதி திரட்டி, சதுரங்கப் போட்டிகளை நடத்தி வருகிறார் ஜான். மட்டுமல்ல, அந்தக் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு முக்கிய அங்கமாக மாற இவரும் ஒரு காரணம்.
இன்று உன்னியின் வயது 67. அவரை மரோட்டிச்சல்லின் மக்கள் தங்களின் ராஜாவைப் போல, மீட்பரைப் போல பார்க்கின்றனர்.
த.சக்திவேல்
|