8 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மினி உலகக் கோப்பை!



விறுவிறுப்பாகத் தொடங்கியிருக்கிறது 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி. மினி உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் இந்தக் கிரிக்கெட் போட்டி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் விளையாடுகின்றன.
முதல்முறையாக இலங்கை அணி இந்த டிராபியில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்திருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கே தகுதி பெறவில்லை. இந்தச் சாம்பியன்ஸ் டிராபிக்கு உலகக் கோப்பையின் புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் முன்னேறும். அப்படியாக 9ம் இடம் பிடித்து வாய்ப்பை தவறவிட்டது இலங்கை.

தற்போது இந்தப் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதலில் பாகிஸ்தான்தான் தனியாக இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தது. 
ஆனால், இந்திய அணி பாதுகாப்புக் கருதி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமாக துபாய்க்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கும், இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் அதுவும் துபாயில்தான் நடக்கும்.

இந்தமுறை இந்திய அணி, பங்களாதேஷ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் அடங்கிய குரூப் ஏ பிரிவில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் இருக்கின்றன. 

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிறகு இறுதிப் போட்டி. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபியை யார் வெல்வார் என்ற கணிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

*எப்போது தொடங்கியது?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஒரு குறுகிய கால கிரிக்கெட் போட்டியாக சாம்பியன்ஸ் டிராபியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி திட்டமிட்டது. அதுவும் கிரிக்கெட் வளர்ந்து வரும் நாடுகளில் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.

அப்படியாக ஐசிசி நாக்அவுட் டிராபி என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையென இந்தப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.முதல் டிராபி 1998ம் ஆண்டு பங்களாதேஷில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. தொடர்ந்து 2000ம் ஆண்டு கென்யாவில் இரண்டாவது சீசன் நடத்தப்பட்டது. அப்போது நாக்அவுட் டிராபி என்பது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எனப் பெயர் மாற்றப்பட்டு போட்டிகள் நடந்தன.

இதன் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து கோப்பையை வென்றது.பிறகு, 2002ம் ஆண்டு இலங்கையில் நடந்த மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதின. 

இதில் மழை குறுக்கிட வெற்றி, தோல்வி இன்றி இரண்டு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன.இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்டவற்றிலும் நடத்த முடிவானது. அப்படியாக 2004ம் ஆண்டு இங்கிலாந்தில் நான்காவது சாம்பியன்ஸ் டிராபி நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.

தொடர்ந்து 2006ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐந்தாவது டிராபியில் ஆஸ்திரேலியா அணி கோப்பையைக் கைப்பற்றியது. ஆறாவது டிராபி 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்தது. ஆனால், பாதுகாப்புப் பிரச்னைகளால் அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வர மறுத்தன. இந்நிலையில் ஓராண்டு சாம்பியன்ஸ் டிராபி தள்ளிப்போனது.

இந்நிலையில் 2009ம் ஆண்டு ஆறாவது சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா நடத்தியது. இந்த சீசனில் இருந்து எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்கும் கோப்பையாகவும் மாறியது. இதற்குமுன் 9 அணிகள், 10 அணிகள், 12 அணிகள் வரை சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றன. இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. இதன்பிறகு உலகக் கோப்பை போன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோப்பையாக மாறியது.

*நிறுத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி

இந்நிலையில் 2013ம் ஆண்டு 7வது சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை வென்று கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. தொடர்ந்து 2017ம் ஆண்டு நடந்த 8வது சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தியது. இப்போது நடப்பு சாம்பியனாக வலம் வருவது பாகிஸ்தான் அணிதான்.

ஏனெனில், 2021ம் ஆண்டு நடக்க வேண்டிய 9வது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடத்தப்படவில்லை. காரணம், சாம்பியன்ஸ் டிராபியை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததுதான். ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கோப்பையும் இருக்கின்றன. இதனால், இது தேவையில்லாதது எனச் சொல்லப்பட்டது.  

ஆனால், இப்போது மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியைத் தொடங்கியுள்ளது ஐசிசி. கடந்த 2021ம் ஆண்டே இதனை ஐசிசி அறிவித்துவிட்டது. அடுத்து 2029ம் ஆண்டு 10வது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை இந்தியா நடத்தும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

*9வது டிராபியை யார் வெல்வார்கள்?  

இந்தியாவைப் பொறுத்தவரை ரோகித் சர்மா தலைமையிலான அணி களம் இறங்குகிறது. இருந்தும் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியுடன் மோதவிருக்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளும் வலுவானவைதான்.  சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றிருக்கிறது. இதே தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்த 352 ரன் என்ற இமாலய இலக்கை எளிதாக சேஸ் செய்திருக்கிறது. இதனால் இரண்டு அணிகளுமே நல்ல ஃபார்மில் இருக்கின்றன.

அதேபோல் சமீபத்தில் இந்தியாவும் இங்கிலாந்து அணியை மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி சாதித்திருக்கிறது. இதில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியது அணியினரிடையே மிகுந்த நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.ஆனால், வேகப்பந்து ஜாம்பவான் பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருந்தும் முகமது சமியும், அர்ஷ்தீப் சிங்கும், ரானாவும் அந்த இடத்தை நிரப்பிவிடுவார்கள் என நம்பிக்கையாய் சொல்லப்படுகிறது.

இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யா, சுழலில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கைகொடுப்பார்கள் என்றும்,  பேட்டிங்கில் ரோகித்துடன் ஃபார்மிற்கு திரும்பிய சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட் ஆகியோர் வெற்றியை வசப்படுத்துவார்கள் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

இதனால், இந்திய அணி இந்தப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எனவும் கணிக்கின்றனர். இந்நிலையில் குரூப் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணி சமீபத்தில் இலங்கை அணியுடன் இரண்டு ஒருநாள் போட்டியிலும் மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது.குறிப்பாக இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோர் விளையாடவில்லை. இது மற்ற அணிகளுக்கு ஒரு நற்செய்தியாய் அமைந்திருக்கிறது.

அதனால், இந்தப் பிரிவிலிருந்து இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும் என கணிக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்தப் பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஒரு வாய்ப்புள்ளதாக அவர்களின் சமீபத்திய பெர்ஃபாமன்ஸைக் கொண்டு கணிக்கின்றனர் சில முன்னாள் வீரர்கள்.

இருந்தும் நிறைவாக இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கே கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அதிலும் இந்திய அணிக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாகச் சொல்கின்றனர். எது எப்படியோ, மார்ச் 9ம் தேதி கோப்பையை யார் வசப்படுத்துவார்கள் என்பது தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருந்து போட்டிகளை ரசிப்போம்.

யாருக்கு எவ்வளவு..?

இந்தச் சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பையுடன் 2.24 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என அறிவித்துள்ளது ஐசிசி. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் முதல் பரிசு. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டாலர் அதாவது சுமார் 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்படும்.அரையிறுதியில் தோற்ற மற்ற இரண்டு அணிகளுக்கும் தலா 5 லட்சத்து 60 டாலர், அதாவது சுமார் தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும்.

5 மற்றும் 6வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாயும், 7 மற்றும் 8வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கலந்துகொண்ட எட்டு அணிகளுக்கும் சுமார் ஒரு  கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

பேராச்சி கண்ணன்