ஒரு பால் காதலராக நடித்ததில் என்ன தவறு?



கேட்கிறார் ஜெய்பீம் செங்கனி

‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல். இப்போது செங்கனியை மறக்கச் செய்யுமளவுக்கு ‘காதல் என்பது பொதுவுடைமை’யில் இவர் ஏற்று நடித்த சாம் கேரக்டருக்கு எப்பக்கத்திலும் பாராட்டு குவிந்துள்ளது. மகிழ்ச்சி பொங்க நம்மிடம் சினிமா, குடும்பம் என எல்லாவற்றையும் சகஜமாகப் பகிர்ந்து கொண்டார்.

‘காதல் என்பது பொதுவுடைமை’ பட வாய்ப்பு எப்படி வந்தது?

முதன் முதலாக இயக்குநர் ஜெயப்பிரகாஷ் போன் பண்ணினார். அதற்கு முன்  மலையாள நடிகரும், இயக்குநருமான ஜியோ பேபி போன் பண்ணி ஜெயப் பிரகாஷ் சார் பற்றி சொல்லி

யிருந்தார். போனில் முழுக் கதையும் சொன்ன இயக்குநர் ஸ்கிரிப்ட்டையும் அனுப்பி வெச்சிருந்தார். படிச்சதும் கதை, என்னுடைய கேரக்டர் தனித்துவமா இருந்ததால் ஓகே சொன்னேன்.
லைம்லைட்ல உள்ள நடிகைகள் லெஸ்பியன் கேரக்டரில் நடிக்க அவ்வளவு சீக்கிரத்துல சம்மதம் சொல்லமாட்டார்கள். நீங்கள் எப்படி?

லெஸ்பியன் கேரக்டர் என்பதால் இதைப் பண்ணலாமா, பண்ணவேண்டாமான்னு யோசிச்சது கிடையாது. காரணம், நான் ஒரு நடிகை. சொசைட்டியில் நம்மள சுத்தி பல்வேறுவித குணம் உள்ள நபர்கள் இருப்பார்கள். அதில் ஒரு வகை இது. சொசைட்டியில் இருக்கிற எந்தக் கேரக்டர் பற்றியும் படம் எடுப்பது, அதைப் பற்றி பேசுவது, அந்தக் கேரக்டரில் நடிப்பதைக் குறித்து எனக்கு தயக்கமும் இல்லை. சாம் கேரக்டர் எனக்கு அப்படித்தான் தோணுச்சு.

பொதுவாக எனக்கு வரும் வாய்ப்புகளில் அந்தக் கேரக்டருக்கு என்னால் நியாயம் சேர்க்க முடியுமா என்றுதான் பார்ப்பேன். அப்படி என்னால் முடியும் என்ற நம்பிக்கை வரும்போது அந்தக் கேரக்டரை எடுத்துப் பண்ணுகிறேன். அதைத்தாண்டி ஒரு படத்தை கமிட் பண்ணும்போது வேறு எந்த எண்ணமும் வராது.

வினீத், ரோகிணி போன்ற ஆளுமைகளுடன் நடிக்கும்போது அழுத்தம் இருந்ததா?

இருவருமே மிகவும் அனுபவசாலிகள். அவர்களுடன் நடிக்கும்போது ஒரு கேரக்டரை எப்படி உள்வாங்கவேண்டும், அதிக பிரயத்தனம் இல்லாமல் ஒரு கேரக்டரை எவ்வளவு ஈசியா பண்ணமுடியும் என்பதைப் பார்க்கும்போது அது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துச்சு.அது மட்டுமில்லாம, அவர்களுடைய அனுபவத்தைக் கேட்டு தெரிஞ்சுகிட்டது பிடிச்சிருந்துச்சு. குறிப்பாக அவர்கள் சினிமாவுக்கு வந்த 80, 90களில் ஆர்ட்டிஸ்ட், இயக்குநர்கள் அணுகுமுறை, படப்பிடிப்பு நடக்கும் விதம் போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஒண்ணா உட்கார்ந்து பேசியது பிடிச்சிருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் அவர்களுடைய திறமையையும், அனுபவத்தையும் பார்க்க முடிஞ்சது.இயக்குநர் ஜெயப்பிரகாஷ் சிறந்த இயக்குநர். அவருக்கு என்ன வேணும் என்ற புரிதலுடன் வேலை செய்வார். ஒரு காட்சியில் என்ன மாதிரி எக்ஸ்பிரஷன் காண்பிக்கணும் என்பதை அழகா சொல்லித் தருவார்.

கேரக்டருக்காக ஹோம் ஒர்க், ரிசர்ச் செய்வீர்களா?

கண்டிப்பாக. இந்தப் படத்துக்கு மட்டுமல்ல, என்னுடைய ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு கேரக்டருக்கும் ஹோம் ஒர்க், ரிசர்ச் இருக்கும். இந்தப் படத்திலும் லெஸ்பியன் கேரக்டர் எப்படி இருப்பாங்க, அவர்களுடைய பழக்க வழக்கம் எப்படி இருக்கும், ஏன் அவர்களுக்கு தன்பாலினத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிச்சிருக்கு போன்ற விஷயங்களை ஆராய்ந்து, யோசிச்சுதான் என்னுடைய கேரக்டரை பண்ணினேன்.

ஏற்கனவே வெளிவந்த அவ்வகைப் படங்களைப் பார்த்தேன். அது சம்பந்தப்பட்ட மக்களிடமும் பேசியிருக்கிறேன். அப்படி ‘காதல் என்பது பொதுவுடைமை’ சாம் கேரக்டருக்காக சில ஹோம் ஒர்க் பண்ணினேன். அப்படி எல்லாமே கேரக்டர் எப்படி இருக்கணும்ன்னு சிந்திச்சு பண்ணியதுதான் அதிகபட்ச ஹோம் ஒர்க்காக இருந்துச்சு.

உங்கள் முதல் தமிழ்ப் பட அனுபவம் ஞாபகம் இருக்கிறதா?

மலையாளத்துக்கும், தமிழுக்கும் மொழியைத்தாண்டி பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. அப்போது எனக்கு தமிழ் சுத்தமா தெரியாது. பாண்டிச்சேரியில் பிஜி படிச்சதால கொஞ்சம் பேசத் தெரியும். ஆனால், படிக்கத் தெரியாது. அது கஷ்டமா இருந்துச்சு. மத்தபடி ஆக்டிங் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாமே ஒரேவிதம்தான். சொல்லப்போனால் இயக்குநர் சசி சாரின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பண்ணியதை என்னுடைய அதிர்ஷ்டம் என்பதைவிட ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்.

ஏனெனில், அந்தப் படத்துல சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் என சிறந்த நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அந்த வகையில் புதுமுகமாக எனக்கு அது நல்ல தொடக்கமா இருந்துச்சு. அதைத்தவிர ஆகச் சிறந்த டீமுடன் வேலை செய்ததை நினைக்கும்போது என்னை ஆசீர்வதிக்கப்பட்டவளாகப் பார்க்கிறேன்.அந்தச் சமயத்தில் அவ்வளவு தமிழ்ப் படங்களையும் பார்த்ததில்லை. தமிழ் சினிமாவைப் பற்றியும் தெரியாது. சசி சாரின் ‘பூ’ படத்தையும் பார்க்கவில்லை.

‘பூ’, ‘பிச்சைக்காரன்’ எடுத்த இயக்குநர் என்று தெரியும். ஆனால், அந்தப் படங்களைப் பார்க்கவில்லை. அது தெரியாமதான் படம் பண்ண வந்தேன். இப்போதுவரை சசி சார் எனக்கு காட்ஃபாதர் மாதிரி.

‘ஜெய்பீம்’ பெரிய வெற்றிப் படம். அந்த வெற்றிக்கான அறுவடை உங்களுக்குக் கிடைச்சதாக நினைக்கிறீர்களா?

‘ஜெய்பீம்’ வெற்றிக்குப் பிறகு தமிழைவிட மலையாளத்தில் சிறந்த வாய்ப்புகள் வந்துச்சு. ஏன் அப்படி நடந்துச்சுன்னு தெரியல. ஆனாலும் மலையாளத்தில் வாய்ப்புகள் வந்ததில் சந்தோஷம். அதைப்பற்றி அவ்வளவுதான் சொல்லணும். அதுக்குமேல சொல்லத்தேவையில்லைன்னு நினைக்கிறேன். தமிழில் எனக்கு பிடிச்ச ஸ்கிரிப்ட் என்றால் அது அரிதாகவே  இருக்கும். பிடிச்ச படங்களை மட்டுமே பண்ணியிருக்கிறேன். அதைவிட சிறந்த வாய்ப்புகள் மலையாளத்தில் வந்துள்ளது.

சூர்யாவிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

புகழ், செல்வாக்கு உள்ளவர் எப்படி எல்லோரோடும் சகஜமாக, எளிமையாக இருக்க முடியும் என்பதையும், அது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் கத்துக்கிட்டேன். அதுதான் சூர்யா சார். பெரிய ஸ்டாராக இருந்தாலும் இரக்கமுள்ளவராக, சராசரி மனிதராகப் பழகுவார். தொடர்ந்து அவரிடம் நான் பார்த்து வியந்தது சினிமா மீது அவருக்குள்ள பேஷன்.

சினிமாவுக்காக என்னவெல்லாம் கத்துக்கமுடியுமோ அதைத் தொடர்ந்து செய்வார். அடுத்தடுத்த காட்சியில் எவ்வளவு பெட்டரா பண்ணலாம்ன்னு யோசிச்சு
இம்ப்ரவைஸ் பண்ணிட்டே இருப்பார். அந்தளவுக்கு தன் கவனம் முழுவதையும் கேரக்டரில் குவிச்சு நடிப்பார்.

அப்படியொரு அர்ப்பணிப்பை அவரிடத்தில் பார்க்கலாம்.நான் எப்படின்னா, ஒரு டேக் நல்லா வரலைன்னா அடுத்த டேக், இல்லைன்னா ரீ டேக் என்று இருப்பேனே தவிர எவ்வளவு இம்ப்ரவைஸ் பண்ணலாம்னு யோசிச்சதில்லை. ஆனால், பெட்டரா பண்ணணும் என்ற எண்ணத்தில் பண்ணுவேன். அந்த வகையில் பெட்டரா எப்படி இம்ப்ரவைஸ் பண்ணலாம் என்பதை சூர்யா சாரிடமிருந்துதான் கத்துக்கிட்டேன்.

திருமணத்துக்குப் பிறகு உங்களுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதா?

திருமணத்துக்குப் பிறகு என்னிடம் வித்தியாசம் வந்திருப்பதாக நினைக்கவில்லை. சொல்லப்போனால் திருமணத்துக்குப் பிறகுதான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு.

சமீபத்தில் நீங்களே உங்களை மெச்சிக்கொள்ளும்படி ஏதேனும் நடந்துள்ளதா?

என்னை நானே கேர் பண்ண ஆரம்பிச்சிருக்கிறேன். அதுதான் இப்போது என்னை நெனைச்சு நானே பெருமைப்படும் விஷயமாக உள்ளது.

அடுத்து என்ன மாதிரி கேரக்டரில் உங்களைப் பார்க்கலாம்?

‘ஜென்டில்வுமன்’ ரிலீசுக்கு ரெடி. அறிமுக இயக்குநர் ஜோஸ்வா இயக்கியுள்ளார். ‘காதல் என்பது பொதுவுடைமை’ சாம் கேரக்டரை விட வித்தியாசமான கேரக்டர். ஹரிகிருஷ்ணன், லாஸ்லியா லீட் பண்ணியிருக்கிறார்கள். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் ‘ஃப்ரீடம்’ பண்றேன். ஷூட் முடிஞ்சு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்துட்டிருக்கு. மலையாளத்துல ‘சன்ஷைன்’ படமும் ஒரு வெப் சீரீஸும் இருக்கு.

எஸ்.ராஜா