தினமும் விமானத்தில் பயணம் செய்யும் சூப்பர் மாம்!
பொதுவாக நம்ம ஊரில் பேருந்து, இரண்டு சக்கர வாகனம், கார், ஆட்டோ, லோக்கல் மற்றும் மெட்ரோ ரயில், ஷேர் ஆட்டோ ஆகிய வாகனங்களைப் பயன்படுத்தி வேலை செய்யும் இடங்களுக்குச் செல்வார்கள். வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் இடையில் அதிகபட்சம் 10 அல்லது 20 கிலோ மீட்டர் தூரம் இருப்பதாகப் பார்த்துக்கொள்வார்கள்.
ஒருவேளை வெளியூரில் அலுவலகம் இருந்தால், அந்த ஊருக்கே குடிபெயர்ந்துவிடுவார்கள்; அலுவலகத்துக்கு அருகிலேயே வீட்டை வாடகைக்கு எடுத்து, வேலை செய்வார்கள்.
இப்படி வெளியூரில் வேலை செய்வதற்காக தங்கும்போது, சொந்த ஊரையும், அங்கிருக்கும் வீட்டையும் தவறவிடுவோம். வீட்டையும், வேலையையும் சமநிலையில் வைத்திருக்க முடியாது.
இந்நிலையில் தினமும் விமானத்தின் மூலம் வேலைக்குச் சென்று வந்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறார் ரேச்சல் கவுர். மலேசியாவில் உள்ள ‘ஏர் ஆசியா’ நிறுவனத்தில் பைனான்ஸ் ஆபரேஷன் துறையில் அசிஸ்டென்ட் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார் இவர்.
‘‘எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவருக்கு வயது 12. இளைய மகளுக்கு வயது 11. இந்த வயதில் குழந்தைகளின் அருகில் அம்மா இருப்பது முக்கியம் என்று நினைத்தேன். குழந்தைகளுக்கும் அம்மாவின் தேவை அடிக்கடி இருக்கும்.
இதன் காரணமாகத்தான் தினமும் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். இரவில் கிடைக்கும் நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிடுகிறேன்...’’ என்கிற ரேச்சல், கோலாலம்பூரில் இருந்த ‘ஏர் ஆசியா’வின் அலுவலகத்துக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். வார விடுமுறையில் மட்டுமே பெனாங்கில் இருக்கும் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கமாக இருந்தது. இது ரேச்சலின் குடும்ப வாழ்க்கையைப் பாதித்தது; ஆனால், வேலையைச் சரியாகச் செய்ய முடிந்தது. வேலைக்காக வேறு ஒரு ஊரில் தங்கியிருப்பதால், குடும்ப வாழ்க்கையைத் தவறவிடுவதாக உணர்ந்தார். இதன் காரணமாக, 2024ம் வருடத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து தினமும் வீட்டிலிருந்தே அலுவலகத்துக்குச் சென்று வருகிறார்.
அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் இடையிலான தூரம் சுமார் 350 கிலோ மீட்டர். ஆம்; தினமும் விமானம் மூலம் வேலைக்குச் சென்று வருகிறார் ரேச்சல். இந்த விமானப் பயணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், வேலையையும் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அலுவலகத்துக்குச் செல்வதற்கான பயணமும், மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதற்கான பயணமுமே பெரிய வேலை.
ஆம்; தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுகிறார் ரேச்சல். 5 மணியளவில் வேலைக்குச் செல்ல தயாராகிவிடுகிறார். 5.55க் குள் விமான நிலையத்துக்குச் சென்று போர்டிங் வேலைகளை முடித்துவிட்டு, விமானம் ஏறி, 7.45க்குள் அலுவலகத்தை அடைந்துவிடுகிறார். விமானப் பயணம் மட்டுமே 40 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. வேலை முடிந்து மாலையில் கிளம்பி, இரவு 8 மணிக்குள் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறார். அலுவலகத்துக்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்தபோது ஆன செலவைவிட, தினமும் வீட்டிலிருந்தே விமானம் மூலம் அலுவலகம் சென்று, வருகிற செலவு குறைவு என்பதுதான் இதில் ஹைலைட்.
ஆம்; அலுவலகத்துக்கு அருகிலிருந்த வீட்டுக்கான வாடகை; வீட்டிலிருந்து அலுவலகம் சில கிலோ மீட்டர் தூரம் இருந்தது; அதனால் அலுவலகம் செல்வதற்கான பயணச் செலவு, உணவு என செலவுகள் அதிகம்.
வீட்டிலிருந்தே வேலைக்குச் செல்வதால் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமிப்பதாகவும் சொல்கிறார் ரேச்சல். அலுவலகத்துக்கு அருகில் தங்கியிருந்தபோது, மாதம் 42,000 ரூபாய் செலவானது. இப்போது மாதம் 28,000 ரூபாய்தான் செலவு செய்கிறார். இத்தனைக்கும் ரேச்சல் வேலை செய்யும் ‘ஏர் ஆசியா’வின் விமானத்தில்தான் பயணம் செய்கிறார்.
பயணச்சீட்டுக்கான தொகையில் நிறுவனம் எந்த சலுகையையும் தருவதில்லை. தவிர, ‘‘விமானப் பயணத்தின்போது தனக்கான நேரம் கிடைக்கிறது...’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் ரேச்சல். விமானம் ஏறிய சில நிமிடங்களிலேயே தனக்கு விருப்பமான பாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். ஜன்னலோர இருக்கையைத் தேர்வு செய்வதால், விமானத்தில் பறந்துகொண்டே, இயற்கையை ரசிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். விமானத்தைவிட்டு இறங்கிய உடன், அலுவலகத்துக்கு நடந்தே செல்வார். விமான நிலையத்திலிருந்து ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் அலுவலகத்துக்குச் சென்றுவிடுவார். சமீபத்தில் ரேச்சலிடம், ‘‘நீங்கள் வீட்டிலிருந்தே வேலையைப் பார்க்கலாமே? இப்போது அதுதானே டிரெண்ட்...’’ என்று ஒரு நேர்காணலில் கேட்டனர்.
அதற்கு ரேச்சல், ‘‘அலுவலகத்தில் இருக்கும்போது என்னால் 100 சதவீதம் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது. வீட்டிலிருக்கும்போது 100 சதவீதம் குடும்பத்துடன் இருக்க முடிகிறது. அலுவலகத்துக்குச் செல்வதால்தான் என்னுடைய ப்ரொஃபஷனல் வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் சமநிலையில் வைக்க முடிகிறது.
மட்டுமல்ல, நம்மைச் சுற்றியும் மனிதர்கள் இருக்கும்போதும், நம்முடன் வேலை செய்பவர்களை நேருக்கு நேர் பார்த்து தொடர்பு கொள்ளும்போதும் வேலையைச் சுலபமாகச் செய்ய முடிகிறது. வீட்டில் இது சாத்தியமில்லை...’’ என்கிறார்.
‘‘காலையில் 4 மணிக்கு எழுந்து கிளம்பி, அலுவலகம் செல்வது உடலையும், மனதையும் சோர்வடையச் செய்யும். வேலை முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பி, குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த சோர்வு காணாமல் போய்விடும். இது ஓர் அற்புதமான உணர்வு...’’ என்கிற ரேச்சலின் வேலைக்கான பயணத்தை பலரால் நம்பவே முடியவில்லை. ‘‘வாவ்...’’, ‘‘சூப்பர் பயணி...’’, ‘‘சூப்பர் மாம்...’’ என்று ரேச்சலை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
த.சக்திவேல்
|