வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது. 1969 முதல் 2021 வரையிலான 52 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கான தரவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது 591 மோசமான வெப்ப அலை நாட்கள் பதிவாகியுள்ளன.
 அதிலும், 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில், சராசரியாக ஓராண்டுக்கு எட்டு வெப்ப அலை நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக, இந்த ஆண்டுகளில் மார்ச் - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கூடுதலான வெப்பம் பதிவாகியுள்ளது.
மனிதர்கள் சராசரியாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், 60% ஈரப்பதம் இருக்கும் சூழலிலும் இருப்பது உகந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 74%க்கும் மேலான மக்கள் தொகை 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கூடுதலான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிக வலுவான வெப்ப அழுத்தத்தை சந்திக்கும் ஆபத்துள்ள பகுதிகளில் தமிழ்நாட்டின் 50% மக்கள் வசிக்கின்றனர்.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், மாநிலத்தின் 68% மக்கள் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு காலநிலை பேரிடர் காரணமாகவும் 300 முதல் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பை தமிழ்நாடு சந்திக்கிறது.
வெப்பமண்டல பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, வெப்ப அலை காரணமாகவும் அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு நேர வெப்பம் அதிகரிப்பு, தீவிர வெப்ப அலை நெடு நேரம் நீடிப்பது, குளிர்ந்த பருவகாலங்களிலும் வெப்பமான நாட்களின் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் ஏழை எளிய மக்கள், முறைசாரா தொழிலாளர்கள், உடல் பலவீனமானவர்களையே அதிகமாக பாதிக்கும். உற்பத்தியிலும் நேரடியான பாதிப்பு இருக்கும். 2030ம் ஆண்டுக்குள் இந்தியா தனது ஒட்டுமொத்த வேலை நேரத்தில், 3.4 கோடி வேலைகளுக்கு இணையான, 5.8% வேலை நேரத்தை இழக்கக் கூடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் செலுத்தக் கூடும். வெப்ப அலையின் காரணமாக நிலத்தின் ஈரப்பதம் குறைகிறது. இதனால் பயிரிடும் பரப்பு குறைகிறது. இதுபோன்ற தாக்கங்களால், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை இழக்கக் கூடும்.
வெப்பம் காரணமாக ஏற்படும் அழுத்தம் (stress) பணியாளர்களின் வேலைத்திறனையும் உற்பத்தியையும் குறைக்கும். பொருட்களின் விநியோகச் சங்கிலியில் இதன் தாக்கத்தை உணரலாம். தொடர்ந்து அதிக வெப்பம் நீடித்தால் பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது சவாலாகும். இதன் மூலம் கிக் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது, ஊதிய இழப்பு ஏற்படலாம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வெப்பம் அதிகரித்தால் தண்ணீர் தேவையும் சக்திக்கான தேவையும் அதிகமாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, வனம் சார்ந்த உற்பத்தி ஆகியவற்றை வெப்ப அலை பாதிக்கும். நிலத்தடி நீரை நம்பியிருக்கும் கோடைகாலச் சாகுபடி கடுமையான பாதிப்பை சந்திக்கும். இந்தச் சூழலை கணக்கில் கொண்டு தமிழ்நாடு விவசாயத்தில், அதிக வெப்பத்தை தாங்கும் பயிர்களை அறிமுகப்படுத்தலாம் என்றும், அந்த பயிர்கள் விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்க தேவையான சந்தை, கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும் எனவும் திட்ட ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைக்கிறது.
காலநிலை மாற்றம் மிகவும் சிக்கலான விவகாரம். இதனை கருத்தில் கொண்டு பாதிப்புகளை தவிர்ப்பதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.இதற்கு ஒன்றிய அரசு பொருளாதார ரீதியாக துணை நிற்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஒன்றிய அரசு இதை கவனத்தில் கொள்ளும் என நம்புவோமாக.
என்.ஆனந்தி
|