Must Watch



மார்க்கோ

சமீபத்தில் திரையரங்கு களில் வெளியாகி, வசூலை அள்ளிய மலையாளப்படம், ‘மார்க்கோ’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. இளைஞன் விக்டருக்குக் கண் தெரியாது. அவனுடைய நெருங்கிய நண்பன் கொலை செய்யப்படுகிறான். 

அப்போது விக்டரும் அருகில் இருக்கிறான். கொலைகாரன் பயன்படுத்திய வாசனைத் திரவியம், டிபெண்டர் காரை வைத்து யார் கொலை செய்திருப்பார்கள் என்பதை விக்டரால் அடையாளம் காண முடியும். விக்டர் சொல்கின்ற அடையாளங்களை வைத்து காவல்துறையினர் கொலையாளி யார் என்பதை ஊகிக்கின்றனர்.

உஷாராகும் கொலைகாரன் விக்டரை கொடூரமான முறையில் கொலை செய்கிறான். விக்டரின் மரணத்தால் அவனது குடும்பம் நிலைகுலைந்து போகிறது. விக்டருக்கு நேர்ந்ததைப் பற்றி வெளிநாட்டிலிருக்கும் மார்க்கோவுக்குத் தெரிய வருகிறது. விக்டரின் மரணத்துக்குக் காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்கப்போவதாக மார்க்கோ சபதம் எடுக்கிறான். 

விக்டருக்கும், மார்க்கோவுக்கும் என்ன உறவு? எடுத்த சபதத்தை மார்க்கோ முடித்தானா என்பதே மீதிக்கதை.அளவுக்கதிகமான வன்முறையால் கதை சொல்லப்பட்டிருப்பதால் குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கலாம். படத்தின் இயக்குநர் ஹனீஃப் அதேனி.

மை ஃபால்ட் : லண்டன்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஆங்கிலப் படம், ‘மை ஃபால்ட் : லண்டன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.

அமெரிக்காவில் வசித்து வருகிறாள் எல்லா. அவளுடைய மகள் நோவா. எல்லாவின் கணவர் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் லண்டனில் இருக்கும் பணக்காரர் வில்லியமுடன் எல்லாவுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. மகள் நோவாவுடன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார் எல்லா. நோவாவுக்கு வளர்ப்புத் தந்தையாகிறார் வில்லியம். அவருக்கு நிக் என்ற மகன் இருக்கிறான். நோவாவுக்கும், நிக்கிற்கும் இடையில் ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது. நிக் மூலமாக நோவாவுக்கு நிறைய நணபர்கள் கிடைக்கின்றனர். நிக்கிறகும், நோவாவுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

ஒரு கோடை காலம் முழுவதும் லண்டனில் இருந்ததால், நோவாவுக்குப் புது நகரம் பழகிப் போகிறது. இந்நிலையில் நோவாவின் தந்தை சிறையிலிருந்து வெளியாகி, மகளைத் தேட ஆரம்பிக்கிறார். சூடுபிடிக்கிறது திரைக்கதை. கலகலப்பான இப்படத்தை டேனி கிர்ட்வுட் மற்றும் சார்லட் ஃபாஸ்லர் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.

ஹலோ, லவ், எகெய்ன்

‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படம் , ‘ஹலோ, லவ், எகெய்ன்’. இந்த ஃபிலிபினோ மொழிப்படம் ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.
கொரோனா காலத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஜோயிடம் கேட்கிறான் ஈதன். ஜோயும் ஒப்புக்கொண்டு, ஈதனுடன் வாழ ஆரம்பிக்கிறாள். விரைவில் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்று திட்டமிடுகின்றனர்.

இச்சூழலில் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்படுகிறது. ஜோய் கிளம்பிவிடுகிறாள். இன்னொரு பக்கம் ஈதனின் அப்பாவுக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது. அப்பாவைப் பார்க்க போக வேண்டும் என்று நினைக்கிறான் ஈதன். 

அதற்குள்ளேயே அப்பா இறந்துவிடுகிறார். அப்பாவின் மரணம், ஜோயின் பிரிவு ஈதனை விரக்திக்கு தள்ளுகிறது. வேறொரு பெண்ணுடன் இரவில் தங்குகிறான் ஈதன். இது ஜோயிக்குத் தெரியவர நிச்சயதார்த்தத்தை நிறுத்துகிறாள். ஈதனும், ஜோயும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை. ஒரு வித்தியாசமான, ஃபீல் குட் காதல் கதையைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் கேத்தி கார்சியா- சம்பனா.

ஹேஷ்டேக் தடேவ் லக்னம்

‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கும் மராத்தி படம், ‘ஹேஷ்டேக் தடேவ் லக்னம்’. மராத்தி பேராசிரியராக வேலை செய்து வருகிறார் அதா  மகாஜன். இவருக்கு வயது 40. திருமணம் ஆகவில்லை. 35க்கும் மேற்பட்ட முறை பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அவருக்குத் திருமணத்தின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிட்டது. ஆனாலும், தன்னை யாராவது திருமணம் செய்ய நினைத்தால், தயாராக இருக்கிறார் மகாஜன்.

இன்னொரு பக்கம் நவீனமான பெண்ணாக வலம் வருபவர் காயத்ரி. இவருக்கு வயது  நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காயத்ரியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணத்தின் மீது எதிரான கருத்துடையவர் காயத்ரி. திருமணம் பெண்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களை அடிமையாக்குகிறது என்ற கருத்துகொண்டவர். அதனால்தான் இவ்வளவு காலமாக திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் காயத்ரியும், மகாஜனும் சந்திக்கின்றனர். இருவருக்குமிடையில் நல்ல நட்பு உண்டாகிறது. இருவரும் ஒன்றாகவே நேரத்தைச் செலவிடுகின்றனர். நாளுக்கு நாள் மகாஜன் மீது காயத்ரிக்கு ஈர்ப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்பதே கிளைமேக்ஸ். படத்தின் இயக்குநர் ஆனந்த் திலீப் கோகலே.

தொகுப்பு: த.சக்திவேல்