கள்ளத்தனமாக அமெரிக்கா சென்ற இந்தியர்களில் குஜராத்திகளே அதிகம்!
சட்டவிரோதமாகக் குடியேறிவர்கள் என அண்மையில் அமெரிக்கா 104 இந்தியர்களை அவமானப்படுத்தி இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதை பலர் அறிந்திருக்கலாம். இதில் என்ன விசேஷம் என்றால் இந்த 104 பேரில் 33 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். குஜராத் மாடல் என தூக்கத்தில்கூட உச்சரிக்கும் பாஜக, இதற்கு எந்த விளக்கமும் அளிக்கத் தயாரில்லை.
ஆனால், இந்த குஜராத் மாடலுக்கும், குஜராத்திகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு போகும் போக்கையும் இணைத்து பல அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விளக்கமளித்திருப்பது குஜராத் மாடலின் உண்மையான முகத்தை அறியக்கூடியதாக இருக்கிறது.
 பொதுவாக எல்லா மாநிலங்களைப் போல குஜராத்தில் இருந்தும் வேலைக்காக வெளிநாடு செல்வது என்பது வழக்கமாக இருந்திருக்கிறது; இருக்கிறது. மலையாளிகள் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக படையெடுத்தது - படையெடுப்பது - போல், குஜராத்திகள் ஆப்பிரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றது அல்லது செல்வது வழக்கம்தான். ஆனால், இந்தப் புலப்பெயர்வு எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டவை என்று சொல்லும் நிபுணர்கள், இன்னொரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்.
அதாவது இன்று குஜராத்திலிருந்து மேற்குலக நாடுகளுக்குச் செல்லும் நபர்கள் சட்டப்படி செல்வதற்குக்கூட கையில் பணமில்லா படு ஏழைகளாக இருக்கிறார்கள். இதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாகக் குடியேறுகிறார்கள் என்கிறார்கள். ஆம். குஜராத் மாடலில்தான் பரம ஏழைகளாக பெரும்பான்மையான மக்கள் வசிக்கிறார்களாம். புள்ளிவிபரங்கள் அப்படித்தான் முகத்தில் அறைகின்றன.
‘அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் தொகை 67 ஆயிரத்து 391. இதில் குஜராத்திகள் மட்டுமே 41 ஆயிரத்து 330.
குஜராத் மாநிலம் மற்ற மாநிலங்களைவிட பணக்கார மாநிலம் மாதிரி தோற்றமளிக்கிறது. உதாரணமாக ஒரு குஜராத்தியின் வருட உற்பத்தியின் மொத்த கூட்டுத் தொகை 2023ம் ஆண்டில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 963 என்ற கணக்கு வரும்.
ஆனால், தேசிய அளவில் ஓர் இந்தியனின் வருட மொத்த உற்பத்தியின் மதிப்பு வெறும் 99 ஆயிரத்து 404 மட்டுமே. இதை வைத்து குஜராத்திகள் எல்லோருமே பணக்காரர்கள் என்று நாம் நினைக்கிறோம். உண்மை அப்படியல்ல...’ என்கிறார்கள் நிபுணர்கள். குஜராத்தில் வசிக்கும் பணக்கார்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் நிபுணர்கள், அம்மாநிலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட பன்மடங்கு அதிகம் என்கிறார்கள்.
உதாரணமாக, ஐநா-வின் பரம ஏழை எனும் ஒரு முறையியல்படி 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் குஜராத்தில் ஏழைகளின் எண்ணிக்கை அந்த மக்கள் தொகையில் 11.66 சத
வீதம். இது மற்ற மாநிலங்களைவிட மிக அதிகம். இந்த ஏழைகளின் பொருளாதார நிலையையும் அவர்கள் படம் பிடித்துக் காண்பிக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒப்பந்தமில்லாமல் வேலை செய்யும் உள்ளூர் குஜராத்திகளின் எண்ணிக்கை சுமார் 74 சதவீதம். ஆனால், தமிழ்நாடு இதில் 53 சதவிகிதம்தான். போலவே கர்நாடகா 51%, மத்தியப்பிரதேசம் 57%.
அடுத்து கேஷுவல் வேலை. இதில் ஒரு குஜராத்தி ஏழை வாங்கும் ஊதியம் ரூ.375. தேசிய அளவிலேயே இது ரூ.433. தமிழகத்திலோ இது ரூ.584.
குஜராத்தில் சம்பளக்காரர்களின் மாத ஊதியம் சராசரியாக ரூ.17,503. தமிழகத்திலோ இது ரூ.21,260. இதிலும் குஜராத் மாநிலம்தான் மிகவும் பின்தங்கியிருக்கிறது. அப்படியென்றால் குஜராத் மாடலுக்கு என்னவானது?
மாநிலத்தின் மொத்த உற்பத்தியை குஜராத் மக்கள் அனைவர் மீதும் வைப்பது தவறானது. ஒருகாலத்தில் குஜராத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கொடிகட்டிப் பறந்தன. ஆனால், முதல்வராக அம்மாநிலத்தில் மோடி ஆட்சி செய்தபோது பெரும் மூலதனத் தொழிற்சாலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் சுமார் 60 ஆயிரம் குறு மற்றும் சிறு தொழில்கள் மூடப்பட்டன.
குஜராத்தில் அடிமட்டத்துக்கு வாங்கப்பட்ட விவசாய நிலங்களில் பெரும் துறைமுகங்கள், மின் நிலையங்கள், பெட்ரோ நிறுவனங்கள், சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டன. உதாரணமாக குஜராத் மாநிலம்தான் நிரந்தர மூலதனத்தில் முதல் மாநிலமாக இருக்கிறது. அங்கே இதன் எண்ணிக்கை பல்வேறு மூலதனங்களில் சுமார் 17.7 சதவீதம். தமிழ்நாட்டில் இது 9.8 சதவீதம்தான்.
ஆனால், குஜராத்தின் இந்த நிரந்தர மூலதனத்துடன் இயங்கும் ஃபேக்டரிகளில் வேலை செய்யும் நபர்கள் வெறும் 9.8%தான். ஆனால், தமிழ்நாட்டில் இது 16 சதவீதம். இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வேலையின்மைதான் குஜராத்திகளை பாஸ்போர்ட் இல்லாமலும் திரவியம் தேட வைத்திருக்கிறது.
டி.ரஞ்சித்
|