நீரெலிகள் கட்டிய அணை!
சாதாரணமாக ஓர் அணை கட்டுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று ஆண்டுகளாவது ஆகும். ஆனால், இரண்டு நாட்களில் ஓர் அணையைக் கட்டமுடியுமா? முடியும் என நிரூபித்திருக்கின்றன நீரெலிகள். செக் குடியரசு நாட்டில்தான் இப்படியொரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. இதனால், செக் குடியரசு அரசாங்கத்திற்கு சுமார் 10.8 கோடி ரூபாயை நீரெலிகள் மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர்.

செக் குடியரசின் தலைநகரான பிராக்கிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது பிரடி பகுதி. இந்தப் பகுதியில் முன்பு இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக ஓர் அணை கட்ட செக் அரசாங்கம் நீண்ட காலமாக திட்டமிட்டிருந்தது.  இதற்கான நிதியைப் பெற்றபோதிலும் நில உரிமை பிரச்னைகள் இந்த நடவடிக்கைக்குப் பின்னடைவாக இருந்தன. இந்நிலையில்தான் எட்டு நீரெலிகள் இந்த அணையைக் கட்டி முடித்துள்ளன.
இயற்கையாகவே அணையைக் கட்டுவதற்குப் பெயர் போனவை நீரெலிகள். அதிகபட்சம் இரண்டு இரவுகளில் அவை ஓர் அணையைக் கட்டிவிடும். தங்களை வேட்டையாடும் கரடிகள் மற்றும் ஓநாய்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள இவை நீருக்கடியில் ஒரு வாழ்விடத்தை உருவாக்குகின்றன. அவையே அணையாக பரிணமிக்கின்றன. அப்படியாக செக் குடியரசு பயனடைந்து இருக்கிறது.
பி.கே
|