சிறுகதை - கால மாற்றம்



நான் என் அரியணையில் அமர்ந்து இருந்தேன். குஷன் சீட். சுழலும் நாற்காலி. மேல்மட்ட அதிகார தோரணை. அட்டெண்டரை அழைக்க அழைப்பு மணி. குளிரூட்டப்பட்ட அறை.

பார்வையாளர்களை உள்ளிருந்தே பார்க்கும் வசதி படைத்த டின்டெட் கண்ணாடி.என் கனவு. என். லட்சியம். இது கிடைக்க நான் பட்ட பாடு. சில வருடங்களுக்கு முன்...திடீரென்று என் கனவுகளை கலைத்த அட்டென்டர் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தார்.“சார். உங்கள பாக்கணும்னு ஒருத்தர் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காரு...”“நான் இப்ப பிஸின்னு சொல்லு...”ஏதோ ஒரு பைலை எடுத்து வைத்துக்கொண்டு அதில் மூழ்கினேன்.

“சொன்னேன் ஸார். ஆபீஸ் அவர்ஸிலே சார் யாரையும் பார்க்க மாட்டார், பேசமாட்டாருன்னு சொன்னேன் ஸார். அதுக்கு அவரு இதுவும் ஆபீஸ் சமாசாரம்தான். நான் பாக்கணும் அப்படினு சொல்றாரு...”நான் கண்ணாடி வழியாக அவரை பார்த்தேன். இவர்... இவரை... எங்கே பார்த்திருக்கிறேன்? திடீரென்று நினைவுக்கு வந்தது.

“அவரு பேரு என்னன்னு சொன்னாரு?’’
“ ஆ... அ ராஜசேகரன்னு சொன்னாரு...”
என் பெயரும் கூட ராஜசேகரன் தான்.
திடீரென்று  ஏதோ தோன்றியது.
அவசர அவசரமாக “அவரை வரச்சொல்லு...” என்றேன்.
சற்று நேரத்தில் அவர் வந்தார். கையில் ஸ்டிக்குடன்  மெல்ல நடந்து வந்தார்.
“வாங்க சார்...” என்றேன்.

வந்தவர் என்னை உற்றுப்பார்த்தார்.
“உக்காருங்க சார்...’’
“பரவாயில்ல மரியாத தெரியுது. இல்ல... மறந்துருப்பீங்களோன்னு நினைச்சேன்...”
நான் பேசவில்லை.  
“வேலையெல்லாம் நல்லா போயிட்டு இருக்கா? உங்க பாஸ் எப்படி?’’
நான் எதுவும் பேசவில்லை.

“என்னை தெரியுதா?”
நான் திணறினேன்.
“எப்படி தெரியும்..? நீங்கதான் என்ன சரியாவே பாக்கலையே...”
நான் எரிச்சலுடன் கேட்டேன். “உங்களுக்கு என்ன வேணும்?’’

அவர் சிரித்தார். “இந்த வேலை வேணும். நீங்க என்கிட்ட இருந்து தட்டிப் பறிச்ச இந்த வேலை வேணும். பஸ் பயணம். விபத்து... ஞாபகமிருக்கா..?” அவர் கேட்டார்.

மறக்க முடியுமா? என்னுள் பஸ் ஓடியது. சில வருடங்களுக்கு முன்... எத்தனை முயன்றும் வேலை கிடைக்காத காலகட்டம் அது.குடும்பத் தேவைகளை புகார்கள் இன்றி குடும்பத்தை கட்டிக்காக்கும் மனைவியாக என்னுடைய சரசா.

“கவலப்படாதீங்க. ஒரு நாள் நமக்கும் நல்ல காலம் வரும்...” ஆறுதல் மொழி. ஓடிக்கொண்டிருக்கும் பம்பரத்தின் கடைசி சுற்றுக்கு முன் அதைக் கைகளில் ஏந்தி அழகு பார்க்கும் என் மனம். ஆனால், அந்த பம்பரம் தலை கவிழ்ந்து விழும்போது ஏற்படுகின்ற சோகம். மாட்டேன்... நான் கவிழ விட மாட்டேன். என் வாழ்க்கை பம்பரத்தை நான் கவிழ விட மாட்டேன்.

நான் வேராக அவளைக் காப்பேன். ஆனால், சுவரில் நுழைந்த வேர் ஒரு கொலைக் கருவி அல்லவா?

பிழை என்பது  ஒருவகையில் நல்லதுதான். படிப்பதற்கு முன்பு அதை திருத்திக் கொண்டுவிட முடியும். ஆனால், நான் செய்த பிழை... நான் கொலைகாரனா? எனக்குத் தெரியவில்லை.
பலவித மன உளைச்சலுடன் அந்த இன்டர்வியூவிற்கு கிளம்பினேன். இது எத்தனாவது இன்டர்வியூ..?

அப்போது கூட சிரித்த முகத்துடன் சுருங்கிக் கிடந்த என் சட்டையை வென்னீர் பாத்திரத்தில் இஸ்திரி போட்டு எனக்கு அணிவித்தாள் சரசா.
அந்தக் கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டேன். கிளம்பினேன்.

அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது..
நான் கண் விழித்தது மருத்துவமனையில்தான்.
சரசா என்னருகில் அழுது கொண்டு இருக்க... சுற்றிலும் மருத்துவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்க... நான் திகைத்தேன்.
நான் எங்கே இருக்கிறேன்?

நர்ஸ் வந்தார்.
“சார்... உங்க பேரு ராஜ
சேகரா?”
“ஆமா...”
“இது உங்க பிரீஃப்கேஸா பாருங்க...” காண்பித்தார்.
பிரீஃப் கேஸ்? இந்த கேஸ்..?

“இந்தக் காலத்துல யாருக்கு சரியா வேலை கிடைக்குது..? அதுனாலதான் ஒரு பயங்கர ரெகமண்டேஷன் லெட்டரோட நான் போறேன். வேலை நிச்சயம்...’’
என் அருகே அமர்ந்திருந்த  பயணி கூறியது நினைவுக்கு வந்தது. அவர் கைளில் இந்த  பிரீஃப்கேஸ் பார்த்த ஞாபகம். அவர் பேரும் ராஜசேகரா?

அத்தனை பேரையும் காவு வாங்கியது அந்த பஸ் விபத்து. பிணவறை பொங்கி வழிய, தப்பித்த சிலரில் நான் ஒருவன் மட்டும் கொஞ்ச காயங்களுடன் தப்பித்தேன்.

குற்ற உணர்வுடன் நான் அந்த பிரீஃப் கேஸை பார்த்தேன். கிரிட்டிகல் பொஸிஷனில் சிலர் மருத்துவமனையில் கட்டுகளுடன் அலறிக்கொண்டிருந்தார்கள்.  வெளியே காத்திருக்கும் உறவுகள்.

நான் அந்த பிரீஃப் கேஸை திறந்தேன்.“புதுசா வாங்கினீங்களா?” சரசா கேட்டாள்.அவளுடைய கேள்வியைப் புறக்கணித்து நான்  கேஸை திறந்து பார்த்தேன்.
வேலைக்காக நிரப்பப்பட்ட அப்ளிகேஷன், ஒரு சிபாரிசு கடிதம் மற்றும் சில பைல்கள். அநேகமாக என் ரெஸ்யுமுடன் ஒத்துப்போகும் விபரங்கள்.
ஒரே ஒரு வேலைதான் பாக்கி. புகைப்படத்தை மாற்ற வேண்டும். மாற்றினேன்.

புதிய வேலைக்காக அதே கம்பெனியில் இணைந்தேன்.
யாருக்கும் எந்த சந்தேகமும் இன்றி என் பணி தொடர்ந்தது.
வசதி, பணம், அந்தஸ்து, ஆடம்பரம்... எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.
“என்ன சார்... பேச்சையே காணோம்?”
எதிரே இருந்த ஒரிஜினல் ராஜசேகர் கேட்டார்.

நான் பேசாமல் இருந்தேன்.
“ஆள்மாறாட்டம் எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?” அவர் கேட்டபோது நான் கரம் கூப்பினேன்.“தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க. என்னுடைய கதை... கதை எல்லாமே நான் சொல்றேன்...”

“அதெல்லாம் விடுங்க. எனக்குக் கதை கேக்க நேரமில்லை. எங்கிட்டேயும் நிறைய கதை இருக்கு. முதல்ல உங்கள... உங்களோட பாஸை மீட் பண்ணலாம்னுதான் வந்தேன். ஆனா, அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்னுதான்...”நான் சட்டென்று அவர் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டேன்.

அவர் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.எத்தனை எத்தனையோ இன்டர்வியூக்களில் தோற்றிருக்கிறேன். ஆனால், நான் ஜெயித்ததாக நினைத்த பரீட்சையில் இப்பொழுது தோற்றுக் கொண்டிருக்கிறேனோ..?

“சரி ஒரே ஒரு டீல்...’’“சொல்லுங்க சார்...” என்றேன்.‘‘இனிமே என்னால வேலைக்குப் போக முடியாது, இந்த ஸ்டிக்கோட உடல் நலமும் சரியில்லாத நிலையில். நான் அந்த விபத்தில் இருந்து மீண்டு வர இத்தனை வருஷம் ஆயிடுச்சு. அது பழைய கதை. ‘அன்பே சிவம்’ சினிமா மாதிரி... உங்களுக்குத் தேவையில்லை. இதெல்லாம் இனி ஒத்து  வராது.

நீங்க செய்கிற வேலை என்னுடையது இல்லையா? ஆறு இலக்க சம்பளம் வாங்குறீங்க இல்லை? மாசா மாசம் உங்க சம்பளம் வந்த உடனே இதோ இந்த அக்கவுன்டுக்கு மணி டிரான்ஸ்பர் பண்ணிடுங்க. பாதி சம்பளம் அப்படியே எனக்கு அனுப்பிடணும்.

என் விசிட்டிங் கார்டு குடுக்குறேன். அதுக்கு பின்னால பேங்க் டீடெயில்ஸ்  எல்லாம் எழுதித் தரேன்...”அவர் கடகடவென்று எழுதித் தந்தார். விஸிட்டிங் கார்டை திருப்பினேன். அன்னபூரணி என்ற பெயரில் வங்கி விவரங்கள். அன்னபூரணி எனக்கு அன்னமிட்ட தேவதை தாய். நான் கைகூப்பினேன். அவர் விடைபெற்றார்.

அதன்பிறகு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. மாதம் தவறாமல் என் அக்கவுன்டிலிருந்து பாதி பணம் அன்னபூரணி அக்கவுன்டுக்கு  டிரான்ஸ்ஃபர் ஆகி விடும். என் மனைவி இதில் எல்லாம் தலையிட மாட்டாள்.

கையில் கிரெடிட் கார்டுடன் கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பாள். ஒரிஜினல் ராஜசேகர் அதன்பின் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கும் போய் பார்க்க நேரமில்லை. வேலை சரியாக இருந்தது. ஆனால், ஒரு உறுத்தல். என்னதான் இருக்கட்டுமே... மாதாமாதம் சுளையாக லட்சக்கணக்கில் பணத்தை இழப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள்... கிட்டத்தட்ட பத்து  வருடங்கள். அதற்குப் பிறகு இதோ... இதோ... இப்போதுதான் பதவி உயர்வு பெற்று மீண்டும் இதே ஊருக்கு வந்தேன். எல்லாமே அவர் தந்ததுதான். ஆனாலும்...அன்னபூரணியின் விலாசம் தேடிப் போக வேண்டும். அன்னபூரணியின் வங்கி விலாசம்தேடிப் போனேன். 

அவர்கள் இடம் மாறி விட்டதாக சொன்னார்கள்.சேன்ஜ் ஆப் அட்ரஸ் கொடுத்திருக்கிறார்களாம். சொன்னார்கள். நான் அந்த விலாசம் தேடிப் போனேன்.ஒரு காலனி. அதிலேயே பல வீடுகள். என்னவாயிற்று... வசதியாகத்தானே இருந்தார்?நான் ‘அன்னபூரணி அம்மா’ என்று கேட்டவுடனே ‘அது... அந்த வீடுதான்’ என்று சிலர் கைகாட்டினார்கள்.

ஒரு எளிமையான சாதாரண வீடு. இந்த வீட்டிலா..?
நான் கதவு தட்டினேன். ஒரு பெண் கதவைத் திறந்தாள். மத்திம வயது. “அன்னபூரணிங்கிறது..?” நான் தயங்கினேன்.

“நான்தான். நீங்க யாரு..?”

நான் பிரமித்தேன். நெற்றி வெறுமையாக  இருந்தது. ஒரு விதவையின் திருக்கோலத்திலேயே அவள் நின்றிருந்தாள். நான் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரிஜினல் ராஜசேகர் புகைப்படத்தில் மாலையுடன் சிரித்தார்.

“நீங்க?’’
“நான்... நான்... சாரோட ஃப்ரெண்ட். எனக்கு தகவல் தெரியலையே...” நான் தயங்கித் தயங்கி சொன்னேன். “எப்படிங்க..? வெளியே போனார். வழக்கமா பணம் எடுக்கத்தான் போவார். அப்படிதான் நான் நினைச்சேன். ஆனா, பிரமை புடிச்ச மாதிரி  திரும்பி வந்தார். என்ன கேட்டும் பதில் சொல்லவே இல்ல. மாசா மாசம் அவரோட நண்பர் யாரோ பணம் அனுப்புவாராம். இந்த மாசம் அவரு அனுப்பலையாம். அதுனால என்ன? அடுத்த மாசம் வந்துட்டு போகுது. இதுக்குப்போய்  மனம் தளராதீங்கனு சொன்னேன்.

சில மாதங்கள் ஏமாற்றத்துடன் பிரமை பிடித்த மாதிரி இருந்தார். அதற்குப் பிறகு படுத்த படுக்கையானார். எதையும் என்னிடம் சொல்லவில்லை.  மருந்து எதுவுமே செல்லவில்லை. அதற்கு செலவழிக்க பணமுமில்லை. நான் சொன்னேன்... நமக்கு எதுக்குங்க ரெண்டு அக்கவுன்ட்? அக்கவுன்ட் க்ளோஸ் பண்ணி த மினிமம் பேலன்ஸ் பணத்தை எடுத்தா இந்த செலவுக்காவது ஆகுமேன்னு சொன்னேன்.

அவரு சொன்னாரு... ‘வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும். வற்றிய குளத்தை மூடக் கூடாது. மறுபடியும் மழை வரும் காத்திருப்போம்...’ அப்புறம் என்னலாமோ ஆகிப் போச்சுங்க.
அவர் இறந்த பிறகு அவருடைய அக்கவுன்ட்டை க்ளோஸ் பண்ணிட்டு நான் வேற வழியில்லாம இடம் மாறி இந்த வசதி இல்லாத இடத்துக்கு வந்தோம். இது மட்டும் இல்ல... வயசு காலத்துல பிறந்த ஒரு ஆட்டிச குழந்தை வேற. 

அதுக்கு ட்ரீட்மென்டுக்கு பணம் இல்ல. ஆயுர்வேதா, ஹோமியோபதி... அப்படி இப்படின்னு ஏதோ கஷ்ட ஜீவனமா போயிட்டிருக்கு வாழ்க்கை. என்னோட டைலரிங்கிலேதான் வீட்டுச் செலவு நடக்குது. அக்கம் பக்கம் மனுஷங்ககிட்ட துணி வாங்கி  நான் தச்சு...”நான் காதுகளை மூடிக்கொண்டேன். ஒரு உடைந்த நாற்காலியில் ஒரு  வளர்ச்சியற்ற சிறுவன் அமர்ந்திருந்தான், எங்கேயோ பார்த்தபடி அழுவதும் சிரிப்பதுமாக.

குற்றவாளி நான்தான். ஏற்கனவே ஆள் மாறாட்ட குற்றம். இப்போது..? தவறு என்னுடையதுதான். என் பிழையை நான் திருத்திக் கொள்ளவே இல்லை.நான் வேறு வேலைக்கு மாற்றிக்கொண்டேன். அதன்பிறகு பதவி உயர்வு பெற்று வெளிநாடு சென்றேன். இதன் நடுவில் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டேன். இப்படி கிட்டத்தட்ட ஐந்து வருட காலம் ஆகிவிட்டது.

நான் ஏமாற்ற நினைத்தேன். ஆனால், கர்மா தொடர்வது அப்போது  தெரியவில்லை.நான் மெல்ல சொன்னேன்.

“சார் என்னோட ஃப்ரெண்ட். நான் அவருக்கு கடன் பட்டிருக்கேன். நீங்க இனிமே இங்க இருக்க வேண்டாம். எல்லா ஏற்பாடும் பண்ணிடறேன். தயாரா இருங்க. நாம போகலாம்...”
“நீங்க..?”“சாரோட நிழல்னு நினைச்சிக்குங்க. இல்ல சாரோட தம்பின்னு நினைச்சுக்கங்க...”அவள் கை கூப்பினாள். நான் மனசுக்குள் கூறிக் கொண்டேன்.

‘சரசா... குழந்தை இல்லைன்னு கோயில் கோயிலா  போனியே... கவலைப்படாதே. இப்போ வளர்ந்த குழந்தையே பிறந்தாச்சு. இனிமே நீதான் பேர் வைக்கணும். என்ன..?’அந்த ஆட்டிச சிறுவன்  “ப ப் பா...” என்றான்.நான் கண்ணீர் துடைத்து அவன் கைப்பற்றினேன்.புதிய வசந்தம் என் முன் மலர்ந்தது.

- விமலா ரமணி