அஜித் டூப் போட மாட்டார்... குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

இவர் ‘துணிவு’, ‘கங்குவா’ ‘அனிமல்’ (இந்தி), ‘தல்லுமாலா’ (மலையாளம்) உட்பட ஏராளமான படங்களில் தன் ஆளுமையை நிரூபித்தவர். ‘அய்யப்பனும் கோஷியும்’ (மலையாளம்) படத்துக்காக தேசிய விருது வாங்கியவர்.சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கும் இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டர்.  அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, தமிழ் இயக்கும் கார்த்தி படம், ராம் சரண் 16, விஷால் பரத்வாஜ் இந்திப் படம், ‘அனிமல்’ சந்தீப் இயக்கும் ‘ஸ்பிரிட்’ (தெலுங்கு) உட்பட இந்திய சினிமாவின் முக்கியமான படங்கள் இவர் வசமே.சென்னையில் மனைவி வண்ணமயில், மகள் ருஹிகா, மகன் சுரேன் ஆகியோருடன் வசித்து வருகிறார். பிசி ஷெடியூலுக்கு மத்தியில் உற்சாகமாக நம்மிடம் பேசினார்.  வாசகர்களுக்கு உங்களைப் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?
 ‘ஸ்டண்ட்டுக்கு தந்தை’ என்று எம்ஜிஆர் சார் அழைத்த ஸ்டண்ட் சோமு என்னுடைய தாத்தா. எம்ஜிஆர் சாருடன் தாத்தா பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்திருந்தாலும் தாத்தா மீதுள்ள அபிமானத்தில் சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தெருவுக்கு ஸ்டண்ட் சோமு தெரு என்று பெயர் சூட்டியது எங்கள் குடும்பத்துக்கும், ஸ்டண்ட் யூனியன் உட்பட அனைவருக்கும் பெருமை.
அப்பா எஸ்.எஸ்.கோபால், அண்ணன் ஆக்ஷன் பிரகாஷ் என எல்லோரும் ஸ்டண்ட் இயக்குநர்கள். இப்போது என் அண்ணன் மகன் சந்தோஷ் நான்காவது தலைமுறையாக இத்துறைக்கு வந்துள்ளார்.ஆரம்பத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் நடுவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்தேன். ராம்போ ராஜ்குமார் மாஸ்டரிடம்தான் தொழிலுக்கான இலக்கணத்தை கத்துக்கிட்டேன். நான் வெற்றியாளனாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம்.
ஸ்டண்ட் இயக்குநருக்கு ஸ்டண்ட் மட்டும் தெரிஞ்சா பத்தாது. இயக்குநர்கள் கதை சொல்லும்போது எடிட்டிங் சென்ஸை மைண்ட்ல ஏத்தி சண்டைக் காட்சியை வடிவமைக்கத் தெரிஞ்சிருக்கணும். அந்த நுட்பத்தை ராம்போ மாஸ்டர்தான் கத்துக்கொடுத்தார்.என்னுடைய பயணத்தில் தளபதி தினேஷ் மாஸ்டரையும் மறக்க முடியாது. அவர்தான் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்களுடன் பழகும் சூழலை ஏற்படுத்திக்கொடுத்து, உடன்பிறவா தம்பியைப் போல் என்னைப் பார்த்துக்கொண்டார்.
ஸ்டண்ட் மாஸ்டராக என்னுடைய முதல் படம் அர்ஜுன் சார் நடித்த ‘ஆணை’. அர்ஜுன் சார்ல ஆரம்பிச்சு இப்போ அஜித் சார் வரை வந்து சேர்ந்திருக்கிறேன். ‘விடாமுயற்சி’யில் இருவரிடமும் வேலை வாங்கியது ஆச்சர்யமான நிகழ்வு.நீங்க நினைச்ச மாதிரி ஸ்டண்ட் டிபார்ட்மெண்ட் எளிமையா இருந்துச்சா?
சினிமாவுக்கு வர்றதுக்கு முன் வீடியோகிராபர், தனியார் நிறுவன வேலை என பல வேலைகள் பார்த்திருக்கிறேன். சினிமாவை விட்டுவிட்டு வேற வேலை பக்கம் ஏன் போனேன் என்றால், என்னுடைய அண்ணன் தினமும் கையில, கால்ல என எங்கேயாவது அடிபட்டுதான் வீட்டுக்கு வருவார். அதைப்பார்த்து இந்த தொழில் வேண்டாம்னு ஒதுங்கியே இருந்தேன்.
ஒரு கட்டத்தில் தெரியாத தொழில் செய்வதைவிட தெரிஞ்ச தொழிலை ஏன் செய்யக்கூடாது என்று முயற்சி பண்ணினேன். ராம்போ ராஜ்குமார், தளபதி தினேஷ் போன்ற ஆளுமைகளிடம் கத்துக்கிட்ட தொழில் நுட்பங்களையும், கிடைச்ச வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.
ஆரம்பத்துல குடும்பப் பின்னணியை வெச்சு ஈசியா மாஸ்டராகிடலாம் என்று கனவு கண்ட காலமும் உண்டு. உள்ளே வந்த பிறகுதான் அது எவ்வளவு கஷ்டமான வேலைன்னு தெரிஞ்சது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் தொழில் இது. அது போட்டி அதிகமா இருந்த காலம். இப்போதுள்ள தொலைத்தொடர்பு வசதிகள் அப்போது இல்லை. தினமும் யூனியனுக்கு வந்து வேலை கேட்கணும். பாதுகாப்பு அம்சங்களும் இப்போதுள்ள மாதிரி இருக்காது.
‘அமைதிப்படை’யில் இருபது அடி உயரத்துல இருந்து உருண்டு விழுந்தது, பைக் ஜம்ப், ஃபயர் ஷாட், கிளாஸ் பிரேக்கிங் என குடும்ப சூழலுக்காக நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறேன். இப்போது சேஃப்டி மெஷர்ஸ் நல்லாவே வந்திருக்கு. என்னுடைய ஃபைட்டர்ஸ் பாதுகாப்புக்காக சொந்த செலவில் வெளிநாட்டிலிருந்து பல உபகரணங்கள் வாங்கி வெச்சிருக்கிறேன்.
ஸ்டண்ட்டுக்கான வரையறை என்ன?
இது கிரியேட்டிவிட்டி துறை. பாடலாசிரியரிடம் சிச்சுவேஷன் சொல்லும்போது பாடல் எழுதுவார். டான்ஸ் மாஸ்டரிடம் சாங் கொடுத்துவிட்டால் நடனம் அமைத்துவிடுவார். நாங்கள் அப்படி அல்ல. கதை சொன்னபிறகு சண்டை எப்படி வரணும் என்பதை கிரியேட் பண்ணவேண்டும். அதுதான் ஸ்டண்ட்.
‘துணிவு’, ‘விடாமுயற்சி’, ‘குட்பேட்அக்லி’ என ஹாட்ரிக் அடிச்சதை எப்படி பார்க்கிறீர்கள்?
இயக்குநர் வினோத் ‘துணிவு’ வாய்ப்பு கொடுத்து பேசும்போது, ‘மாஸ்டர், முதலில் ஒரு ஃபைட் கம்போஸ் பண்ணுங்க. அஜித் சாருக்கு எந்தக் கஷ்டமும் இல்லாமல் இருந்தால் தொடர்ந்து பண்ணுவோம்.
இல்லைன்னா நாம தொடரமுடியாது’ என்றார்.என்னுடைய ஒர்க் அஜித் சாருக்குப் பிடிச்சதால பேக் டு பேக் பண்ணலாம்னு சொல்லிட்டார். சேஃப்டியா வேலை வாங்கியதோடு இல்லாம அவர் படங்களில் இல்லாத ஸ்டைலை கொண்டுவந்தேன். அது அஜித் சாருக்கும் ரசிகர்களுக்கும் பிடிச்சிருந்தது. இதுக்காக அஜித் சாரை நிறைய வேலை வாங்கினேன். அவர், எங்கிட்ட சொன்னது, ‘மாஸ்டர், எங்கிட்ட புது நடிகர் மாதிரி வேலை வாங்குங்க, அஜித், பெரிய நடிகர்ன்னு நினைச்சு வேலை வாங்காம இருந்திடாதீங்க’ன்னு சொல்லிட்டே இருப்பார். அந்த வார்த்தைய பிடிச்சுக்கிட்டு அவரிடம் நிறைய வேலை வாங்கினேன்.
‘துணிவு’ல பேங்க் ஃபைட் சீன்ல 360 டிகிரியில் நான்ஸ்டாப்பாக கேமரா சுத்திக்கிட்டே இருக்கும். அஜித் சார் சண்டை போடணும். அஜித் சார் கொஞ்சம் டயர்ட் ஆனதுமே வினோத் சார் பயந்துட்டார். அஜித் சார் விடல.
‘ஷாட் நல்லா வந்திருக்கு. இந்த ஷாட்டை ஓகே பண்ணாம விடமாட்டேன்’னு 11வது டேக்ல ஓகே பண்ணினார். அது ‘குட் பேட் அக்லி’ வரை தொடர்கிறது. ‘குட் பேட் அக்லி’ ரொம்ப மாஸா இருக்கும். ‘விடாமுயற்சி’ கார் ஃபைட் எப்படி படமாக்கினீர்கள்?
ஹம்மர் கார்ல எடுத்த அந்த ஃபைட்டை எல்லோரும் பார்த்துட்டு ஹாலிவுட் தரத்துல இருந்துச்சுன்னு சொன்னதோடு, கதையை மீறாம ரியாலிட்டியா எடுத்திருக்கீங்கன்னு பாராட்டினார்கள்.
அந்த ஃபைட்டுக்காக ஹம்மர் காரை பிரிச்சு எடுத்தோம். இயக்குநர் மகிழ் திருமேனி முழு சுதந்திரம் கொடுத்தார். எல்லாமே ரியல் ஃபைட். இரண்டு டயரில் கார் நிற்கும். துபாய்ல கார் ஷோ ஓட்டுபவர்கள் வண்டி ஓட்டினார்கள். வழக்கமாக அவர்கள் ஓட்டும் இசுசூ கார் 2 டன் எடை உள்ளது. ஹம்மர் 4 டன்.
அதை ஓட்டுவது கடினமா இருந்துச்சு. பயிற்சி எடுத்து ஓட்டினார்கள்.அஜித் சார் எப்போதும் டூப் போடவிடமாட்டார். எங்கே வலிக்கும், எந்த இடத்துல பேட் போடணும்னு கேட்டு அவரே பண்ணுவார். அஜித் சார் மட்டுமல்ல, மற்ற ஹீரோக்களும் டூப் இல்லாம நடிப்பாங்க. சூர்யா சார் ‘கங்குவா’ல கடினமா உழைச்சார். ஒரு ஷாட் கூட ஒன் மோர் கேட்க மாட்டோம். எல்லாமே சிங்கிள் டேக்ல ஒகே பண்ணுவார்.விஜய் சார், விஷால் சார், சிவகார்த்திகேயன் சார் என எல்லோரும் ஆக்ஷன்ல பின்னியெடுப்பாங்க.
பாலிவுட் வாய்ப்பு எப்படி?
‘தல்லுமாலா’ தியேட்டர் ஃபைட் எல்லோராலும் பேசப்பட்டது. அதைப்பார்த்துவிட்டு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா சாரிடமிருந்து அழைப்பு வந்துச்சு. 20 நாட்கள் ஹீரோவுக்கு பயிற்சி கொடுத்தேன். அனைத்து ஃபைட்டும் பேசப்பட்டன. அந்தப் படத்துக்குப் பிறகு இந்தியில் பல படங்கள் பண்ணினேன். அந்த ஃபைட் பார்த்துட்டு ராம்சரண், பிரபாஸ், நாகசைதன்யா என தெலுங்கிலும் கூப்பிட ஆரம்பிச்சாங்க.
எந்த ஸ்டைல் சண்டையில் நீங்கள் ஸ்பெஷலிஸ்ட்?
மலையாள நடிகர் செம்பன் வினோத் ‘கோலிசோடா’ பார்த்துவிட்டு ‘உங்க ஃபைட்ல ரியாலிட்டி ப்ளஸ் ஸ்டைல் இருக்கு. மலையாளத்துக்கு வாங்க’ன்னு அவர் தயாரிச்ச படத்துக்கு கூப்பிட்டார்.தொடர்ந்து ஃபகத் பாசில் படம், ‘அய்யப்பனும் கோஷியும்’, மம்முட்டி சாரின் ‘பீஷ்ம பர்வம்’, மோகன்லால் சார் படம் என ஏராளமான படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். ‘மின்னல் முரளி’, ‘தல்லுமாலா’ பெரியளவில் பேசப்பட்டது.
‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்காக தேசிய விருது வாங்க மேடை ஏறியது நினைவு இருக்கிறதா?
அதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கு. நான் ஸ்டண்ட் யூனியன் தலைவராக இருக்கும்போதுதான் அரசாங்கத்திடம் விருது வகைகளில் ஸ்டண்ட்டையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.ஏனெனில், 60 வருடமாக தேசிய விருதுகளில் ஸ்டண்ட் வகைப்படுத்தப்படவில்லை.
உடனே எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து பட்டியலில் சேர்த்தார்கள். 64வது வருட விருது நான் வாங்கினேன். 61வது வருடம் பீட்டர் ஹெயின், 62 வது வருடம் அன்பறிவ் ஆகியோர் விருது வாங்கினார்கள்.மற்றபடி விருதுக்காக எதையும் பண்ணமாட்டோம். படத்தோட வெற்றியை நோக்கிதான் உழைப்பு இருக்கும். விருது கடவுள் தரும் பரிசு.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|