விஜய் சேதுபதி பாடல் எழுத... சித்தார்த் கூட சேர்ந்து பாடியிருக்கேன்!
கண்சிமிட்டுகிறார் காவாலா ஷில்பா ராவ்
இந்தியில் ‘ஜவேதா ஜிந்தகி...’ (அன்வர்), ‘அபச்சா...’ (கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்) , ‘ஒரு மாலை நேரம்...’ ( நான் மகான் அல்ல) இப்படி மொழிக்கு ஒரு பாடலுடன் பாடகியாக அறிமுகமானவர் ஷில்பா ராவ். இப்போது 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பிஸி பின்னணி பாடகி.
 ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா...’ பாடல் மூலம் தமிழகத்தையே கதிகலங்க ஆட வைத்து இதோ இப்போது ‘பன் பாட்டர் ஜாம்’ படத்தில் ‘ஏதோ பேசத்தானே...’ பாடலை நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பாட அதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எழுத இப்போது ஒரு மில்லியனைக் கடந்து டிரெண்ட்.
 தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி... எப்படி இத்தனை மொழிகளில் பாடல்?
 ஒவ்வொரு மொழியையும் அதன் அர்த்தம் புரிஞ்சு, அதன் நிலக் கலாசாரம் தெரிஞ்சுதான் பாடுவேன். முக்கியமா மொழியே தெரியலைன்னாலும் முதல்ல அதனுடைய பண்பாடு, கலாசார பொருள் தெரிஞ்சா, தானாகவே வார்த்தைக்குரிய எமோஷன் வந்திடும். அதைத்தான் ஃபாலோ செய்யறேன்.
உங்களைப் பற்றி.. ?
சொந்த ஊர் ஜாம்ஷெட்பூர். அப்பா வெங்கட் ராவ், அம்மா ராஜநளா ஷ்யாமளா. இப்ப மும்பை வாழ்க்கை. ஸ்டேட்டிஸ்டிக்சில் மாஸ்டர் முடிச்சிருக்கேன். அப்பா வெங்கட் ராவ் இசையில் பட்டம் பெற்றவர். அவர்தான் என்னுடைய குரு. ராகங்கள்ல இருக்கும் வித்தியாசமான நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.
அதுதான் இசைக்கு மொழி தடை கிடையாதுன்னு எனக்குப் புரிய வெச்சது. 13 வயதில் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் குருகிட்ட அடுத்தகட்ட பயிற்சி. இடையில் ஹரிஹரன் சார், ஷங்கர் மகா தேவன் சார் இப்படி நிறைய மாஸ்டர்கள் பார்வையில் பல மியூசிக் ரியாலிட்டி நிகழ்ச்சிகள். தொடர்ந்து முதல் பாடல் ‘அன்வர்’ படத்திலே அமைஞ்சது. இப்ப ‘காவாலா சில்பா’. ‘காவாலா...’ பாடல் மற்றும் தமிழ் திரையிசை..?
மற்ற மொழிகளில் வார்த்தைகள் உச்சரிப்புக்கு பயிற்சி எடுக்கணும். தமிழ் மொழியில்தான் எழுத்துகளுக்குக் கூட நான் பயிற்சி எடுத்தேன்! அவ்வளவு அழகான மொழி. சில உணர்வுகளை புரிஞ்சு பாடும்போது, பாடல்கள் கேட்கும்போது அந்த உலகத்துக்கே கூட்டிட்டு போயிடும். ‘காவாலா...’ அனிருத்துக்கு நன்றி. தலைவர் படத்தில் ஒரு பாடல், அதுவும் டிரெண்டிங் பாடல் கொடுத்து இன்னைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவும் வழி அமைச்சுக் கொடுத்திருக்கார்.
விஜய் சேதுபதி வரிகளில், சித்தார்த்துடன் இணைந்து ‘ஏதோ பேசத்தானே...’ பாடல் ?
ஒரு பாடகியாக நமக்கு பிடிச்ச நடிகராவே இருந்தாலும் அவரை பார்க்கக் கூடிய வாய்ப்பு எல்லா நேரமும் கிடைக்காது. பாடுவோம், கிளம்பிடுவோம். ஆனால், இந்தப் பாட்டு ரொம்ப ஸ்பெஷல். ரெண்டு ஹீரோக்கள்... அதுவும் திறமையான ஹீரோக்கள். ரெண்டு பேரும் மியூசிக்கில் ஒண்ணா வேலை செய்திருக்காங்க.
ரெண்டு பேரையும் நடிகரா பார்த்து வியந்திருக்கேன்.இந்திய நடிகர்கள், விஜய் சேதுபதி வரிகள், சித்தார்த் பின்னணி ஆண் குரல்... இந்த காம்போவில் நான். நிவாஸ் கே பிரசன்னாதான் என்னை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்தார். அவருக்கும் என்னுடைய நன்றி.
தற்போதைய இந்திய இசை எப்படி இருக்கிறது?
வாய்ப்புகள் அதிகரிச்சிருக்கு. சினிமா இசை மட்டுமே பெரிய அளவில் மார்க்கெட்டை உருவாக்கி இருந்த நிலையில் தற்போது இண்டிபெண்டன்ட் பாடல்களும் ஆல்பமும் வெளியாகி
டிரெண்டாகுது.
டெக்னிக் கலா நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. இசை எல்லோருக்கும் சொந்தமாகி இருக்கு. யாரும் எப்போது எப்படி வேண்டுமானாலும் இசையை சுலபமாக கத்துக்க்கலாம். படிப்பு, வேலை, இதற்கிடையில் கூட மியூசிக்கை கத்துக்கிட்டு அதன்மூலம் இன்னொரு வருமானமும் பார்க்கிற நிறைய இளைஞர்களைப் பார்க்க முடியுது. இன்ஸ்டாகிராம், யூடியூப்... இப்படி திறமையைக் காட்டவும் நிறைய தளங்கள் பெருகி இருக்கு. மியூசிக் ரைட்ஸ் சீரான காரணத்தால் உலக அளவில் இந்திய இசைக்கான அங்கீகாரமும் அடையாளமும் அதிகரிச்சிட்டிருக்கு.
உங்க அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ்..?
அது நிறைய இருக்கு. லிஸ்ட் பெருசு. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகள் இப்படி ஏராளமான பெரிய பட பாடலகள் வரப்போகுது. மேலும் இண்டிபெண்டன்ட் ஆல்பங்களும் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்ஸ் கூட ஒப்பந்தமாகி இருக்கேன். அதனுடைய முழு விபரமும் சீக்கிரம் வரும்.
ஷாலினி நியூட்டன்
|