89 வயது app டெவலப்பர்!



‘‘உலகின் வயதான app டெவலப்பர் இவர்தான். மட்டுமல்ல, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்குமே தங்களின் விருப்பமான பாதையில் செல்வதற்கான நம்பிக்கையைத் தருகிறார்...’’ என்று மசாகோ வகாமியாவைப் பாராட்டியிருக்கிறார் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக்.  

யார் இந்த மசாகோ வகாமியா?

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில், 1935ம் வருடம் பிறந்தவர், மசாகோ வகாமியா. உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தவுடனே அவருக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. திருமணம் செய்துகொள்ளாத மசாகோ, வங்கிப் பணியிலிருந்து 60 வயதில் ஓய்வு பெற்றுவிட்டார்.ஓய்வுக்குப் பிறகு அவரது வாழ்க்கையில் ஒருவித வெறுமை சூழந்தது. 90 வயதான அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, அம்மாவைக் கவனித்துக் கொள்வதில் நேரத்தைச் செலவிட்டார்.

அரட்டையடிப்பதில் ஆர்வம் மிகுந்த மசாகோ, எப்போதுமே வெளியில்தான் இருப்பார். வங்கி வேலையின் போது உறங்குவதற்காக மட்டுமே வீட்டுக்கு வருவார். தினமும் வேலை முடிந்தவுடன் நண்பர்களைச் சந்திப்பது, ஊர் சுற்றுவது என அவரது வாழ்க்கை இருந்தது.ஓய்வுக்குப் பிறகு பகல் நேரத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல், மசாகோவைத் தொந்தரவு செய்தது. தொண்ணூறுகளில் ஒரு பத்திரிகைச் செய்தியைப் படித்தார்.

‘‘உங்களிடம் கம்ப்யூட்டர் இருந்தால், வீட்டிலிருந்தபடியே நண்பர்களுடன் உரையாடலாம். வீட்டைவிட்டு வெளியே போக வேண்டியதில்லை...’’ என்ற செய்தி மசாகோவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இந்தச் செய்தியைப் படிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரைப் பற்றி மசாகோவுக்கு எதுவும் தெரியாது. கம்ப்யூட்டர் குறித்த விவரங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். அப்போது கம்ப்யூட்டரின் விலை மிக அதிகம். 1992ம் வருடம் தன்னுடைய சேமிப்பில் ஒரு பகுதியைச் செலவிட்டு, சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார்.

கம்ப்யூட்டர் மசாகோவின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிட்டது. கம்ப்யூட்டரை வாங்கிய பிறகே, அதை இயக்குவது குறித்துக் கற்றுக்கொண்டார். அம்மாவைக் கவனித்துக்கொள்ளும் நேரம் போக, மீதி நேரங்களில் கம்ப்யூட்டரை இயக்குவது மட்டுமே அவரது ஒரே பொழுதுபோக்கு. மூன்று மாதங்களில் ஓரளவுக்கு நன்றாக கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்தார்.
கம்ப்யூட்டரில் எக்ஸெல்லைப் பயன்படுத்தி, கலை வேலைப்பாடுகளைச் செய்வது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது.

‘‘பொதுவாக எக்ஸெல்லை அக்கவுன்ட் சம்பந்தமாகத்தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். ஆனால், அதில் டிசைனையும் செய்ய முடியும். எக்ஸெல்லில் செய்கின்ற டிசைன்களை பிரின்ட் எடுத்து, அதை பேக்குகள், ஆடைகளில் பயன்படுத்துவேன்...’’ என்கிறார் மசாகோ. அவர் கம்ப்யூட்டர் வாங்கிய காலத்தில் இணைய சேவை இல்லை. அப்போது தொலைபேசித் தொடர்புகள் போல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் இயங்கி வந்தது.

இந்த நெட்வொர்க் மூலம் ஒரு கம்ப்யூட்டரிலிருந்து, இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்புகொள்ள முடியும். இந்த கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் மூலமாக, வீட்டிலிருந்தபடியே மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் மசாகோ. இப்படி கம்ப்யூட்டர் மூலமாக தொடர்பு கொண்டவர்கள் எல்லோருமே அறுபது வயதைத் தாண்டியவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவைக் கவனிப்பது, கம்ப்யூட்டர் மூலம் மற்றவர்களுடன் பேசுவது என மசாகோவின் நாட்கள் நகர்ந்தன. நாளுக்கு நாள் கம்ப்யூட்டரின் மீதான ஆர்வம் அதிகரிக்க, அது குறித்து மேலும் தெரிந்துகொண்டார். தனக்குத் தெரிந்தவர்களின் மூலமாகவே கம்ப்யூட்டரின் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, புரோகிராமராக மாறினார். ஒரு app-ஐ உருவாக்கும் அளவுக்குக் கம்ப்யூட்டரில் மேதைமை அடைந்தார் மசாகோ.

இந்நிலையில் வயதானவர்கள் எளிமையாக பயன்படுத்தும்படி ஸ்மார்ட்போன்களோ, நவீன கம்ப்யூட்டர்களோ இல்லை என்பதை கண்டறிந்தார். குறிப்பாக ஸ்மார்ட்

போனில் உள்ள appகளை இயக்குவது வயதானவர்களுக்குக் கடினமானதாக இருந்தது; வயதானவர்களின் பொழுதைப் போக்குவதற்கான ஆப்களே இல்லை.

இந்த வெற்றிடம்தான் மசாகோவை ஒரு ஆப் டெவலப்பராக உருவாக்கியது. ‘‘வயதானவர்களுக்கான எந்த கேமிங் app-ஐயும் நான் காணவில்லை. அதனால் எங்களுக்கான ஒரு app-ஐ நானே உருவாக்கினேன்...’’ என்று ‘ஹினடன்’ என்ற என்டர்டெயின்மென்ட் app-ஐ உருவாக்கினார் மசாகோ. ஐபோனுக்கான பிரத்யேகமான app இது.

இதில் ஜப்பானிய டால்ஸ் கேம் விளையாடலாம். தவிர, ஜப்பானிய பாரம்பரியத்தையும் இந்த app மூலம் தெரிந்துகொள்ளலாம். இதை இயக்குவது மிகவும் எளிதானது. இதுபோக ‘நனாகுசா’ என்ற கேமிங் app-ஐயும் உருவாக்கியிருக்கிறார். இதுவும் ஐபோனுக்கானது. இந்த இரண்டு appகளையும் தனது 80 வயதுக்கு மேல்தான் உருவாக்கியிருக்கிறார் மசாகோ.
இன்று ஜப்பான் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறார்.

இந்த மாதிரி வருடத்துக்கு 110 நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதுபோக ஆன்லைனிலும் அவரது உரை நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளுக்கான கால அட்டவணையை கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் வழியாகத்தான் கையாள்கிறார். முக்கியமாக இப்போது செயற்கை நுண்ணறிவின் நுட்பங்களைக் கற்று வருகிறார்.

த.சக்திவேல்