தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.  இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் இருந்து தேவைப்படும் தகவல்களை குடிமக்கள் கேட்டுப் பெறலாம். பாதுகாப்பு ரகசியங்கள், தனிநபர் குறித்த அந்தரங்கத் தகவல்கள் தவிர மற்ற விவரங்களை அரசுத்தரப்பு வழங்க வேண்டும் என்கிறது இந்தச் சட்டம்.  அதாவது அரசாங்கத்தின் பணிகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும், ஊழலை கட்டுப்படுத்தவும், ஜனநாயகத்தை சரியான முறையில் மக்களுக்காக செயல்பட வைக்கும் வகையிலும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதே தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும்.ஜனநாயகத்தின் ஆட்சியாளர்கள் குடிமக்களே என்பதை RTI சட்டம் அங்கீகரிக்கிறது. எனவே அரசிடம் உள்ள தகவல்களைப் பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு.
பெரும்பாலான தகவல்கள் விண்ணப்பிக்காமலேயே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே சரியானது. அனைத்துத் தகவல்களையும் அணுகுவதற்கு ஏற்ற வகையில் அவை பொதுவெளியில் ஆன்லைனில் கிடைக்க வேண்டும். ஆனால், கேட்டாவது பெற முடிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது நடைமுறையில் எந்த அளவில் உள்ளது? 2012ம் ஆண்டு கிரிஷ் தேஷ்பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி PF அலுவலக ஊழியரான லூட்(Lute) என்பவருக்கு வழங்கப்பட்ட அனைத்து காரணம் கோரும் நோட்டீஸ்கள், மெமோக்கள் மற்றும் தண்டனை விபரங்களின் நகல்களை கேட்டிருந்தார். மேலும் அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், முதலீடுகள், வங்கிகளில் பெற்ற கடன் விபரங்கள் போன்றவற்றையும் கோரி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனுதாரர் கோரிய தனிப்பட்ட தகவல்களைத் தரமுடியாது என்பதற்கு ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 8 (1) (J) விலக்கு அளித்துள்ளது’ என்று கூறியது. மேலும் பொது செயல்பாடு அல்லது பொது நலன் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட விபரங்களைத் தரலாம் என்றும் தனிப்பட்ட அந்தரங்க விபரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தது.
எவையெல்லாம் தனிப்பட்ட தகவல்கள்?
மேலே கேட்கப்பட்டதில் அனைத்தும் தனிப்பட்ட தகவல்கள் இல்லை. பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் அவரது பணி நிலைமை பொதுநலன் மற்றும் பொதுமக்கள் சார்ந்து உள்ளது. தனிப்பட்ட தகவல்கள் குறித்த தெளிவான வரையறை எதையும் நீதிமன்றம் வழங்கவில்லை.
எனினும் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, சட்டமன்றத்துக்கோ, பாராளுமன்றத்துக்கோ மறுக்க முடியாத தகவல்களை யாருக்கும் மறுக்க முடியாது என்று எளிமையாக சட்டத்திருத்தத்தை முடித்துவிட்டது.அந்தத் தீர்ப்பில் பொது நலனுக்கு பயன் தராத தனிநபர் தகவல்களை கொடுக்க வேண்டியதில்லை என்றும், ஒரு குடிமகன் தனது சொந்த மற்றும் தனது குடும்பம் உள்ளிட்ட தனி உரிமையை பாதுகாக்க உரிமை உண்டு என்றும் கூறியது. இதன் அடிப்படையில் பெரும்பாலான அரசுகள் இந்தத் தீர்ப்பை குறிப்பிட்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டு, பொது நலன் ஏதும் இல்லாத பட்சத்தில் தனிப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட வேண்டும் என அறிவித்தன.இதையடுத்து நாடு முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதிச் செலவுகள், அதிகாரிகளின் விடுப்பு விவரங்கள், சாதிச் சான்றிதழ்கள், கல்வி விபரங்கள் மற்றும் மானியங்களின் பயனடைந்தோர் பட்டியல்கள் போன்ற பல தகவல்கள் மறுக்கப்படுகின்றன.
இதற்கு முன் வழங்கப்பட்ட ADR, PUCL தீர்ப்பில் பொது ஊழியர்களாக இருந்து தேர்தலில் போட்டியிடுபவர்களின் சொத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ள குடிமக்களுக்கு உரிமை உண்டு என இதே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆனால், இந்த வழக்கில் குடிமக்கள், பொது ஊழியர் ஒருவரின் சொத்து விபரங்களை தெரிந்து கொள்ள உரிமை இல்லை என்பதாக ஆகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4வது பிரிவில் ஒவ்வொரு அதிகாரியும் பெறும் மாதாந்திர ஊதியம், மானியம் பெறும் பயனாளிகளின் விபரங்கள், அரசின் சலுகைகள் பெறுபவர்களின் விபரங்கள் ஆகியவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது பல பொதுத் தகவல் அதிகாரிகள் இந்த தகவல்களைக் கூட வழங்க மறுக்கின்றனர்.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தனிப்பட்டதாக கூறப்படும் பெரும்பாலான தகவல்களை மறுப்பதற்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் 2010ம் ஆண்டு வரை 19 (1) (a) சட்டத்தின் வரம்பை தொடர்ந்து பாதுகாத்து விரிவு படுத்தியுள்ளது. அதன் பிறகு தகவல் பெறும் உரிமையை படிப்படியாக கட்டுப்படுத்தத் தொடங்கியது.
2019 டிசம்பரில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, “ஆர்டிஐ சட்டத்தினை அதிக அளவில் பயன்படுத்துவதன் விளைவாக அரசாங்கமே முடக்கப்படுவது போன்ற அச்ச உணர்வை அது ஏற்படுத்துகிறது. எனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள் முடிவுகளை எடுப்பதை இது தடுக்கிறது...” எனக் குறிப்பிட்டார். சட்டத்தின் ‘தவறான பிரயோகத்தை’ அடிக்கோடிட்டு காட்டிய அவர் RTI நிகரற்ற உரிமை அல்ல என்பதால் அதன் பயன்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டியது அவசியம் என்றார்.
நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அச்சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்ததாகக் கூறுகிறார்கள். தகவல் ஆணையர்களை தீர்மானிப்பதைப் போல அவர்களின் பதவிக் காலத்தையும், அவர்களுக்கான ஊதியத்தையும் ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என திருத்தம் செய்யப்பட்டது. தன்னாட்சி ஆணையமாக இல்லாமல் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.
பாராளுமன்றத்தின் இந்தச் செயலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு தகவல் அறியும் உரிமைக்கான மறுப்பை விரிவுபடுத்தியுள்ள நிலையில், இது குறித்து விவாதம் கூட எழவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புகள் குறித்து மெதுவாக நாடு முழுவதும் தெரிய வருகிறது. ஆனால், இந்தத் தீர்ப்பானது பொதுத் தகவல் அலுவலர்கள் தகவல்களைத் தர விரும்பாத போதெல்லாம் தகவல்களை மறுப்பதற்கு - சாக்குப் போக்குகளை சொல்வதற்கு - வசதியாக உள்ளது எனவும் உணர்கின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான தகவல் பெறும் கோரிக்கைகள், ‘இது தனிப்பட்ட தகவல்’ எனக் கூறி மறுக்கப்படுகின்றன. எனவே தகவல் அறியும் உரிமை இப்போது தகவலை மறுக்கும் உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இருந்த உரிமை மறுக்கப்பட்டு பொது ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக மாறியுள்ளது.
இப்படித் தகவலை மறுப்பதன் மூலம் ஊழலை மறைக்கவும், தவறான சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்களை பாதுகாக்கவும் முடியும். மேலும் பல்வேறு திட்டங்களின் பொய்யான பயனாளிகளை கண்டறிய முடியாமலும் போகலாம். எனவே எந்த நோக்கத்திற்காக இந்த சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதோ, அந்த சட்டத்தின் நோக்கம் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
பொதுமக்களின் கருத்தைக் கேட்டு, சட்டத்துறை வல்லுனர்கள் மற்றும் நீதித்துறையினர் இந்த விவகாரத்தை விவாதித்து உரிய தீர்வினைக் காணவேண்டும் என்பதே மக்கள் அனைவரது விருப்பமும்.ஒன்றிய அரசு இதற்கு செவி சாய்க்குமா?
என்.ஆனந்தி
|