போப்புக்கு பரிசாக ரோமுக்கு போன இந்திய யானையின் கதை!



மலையாள எழுத்தாளர்களின் வரலாற்றுத் தேடல்

1500 ம் ஆண்டுகளில் இந்தியாவைச் சுரண்ட பல்வேறு மேற்குலக நாடுகள் போட்டியில் குதித்திருந்த தருணம். பிரித்தானியர்கள், போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் என இந்தப் போட்டி கொலை வெறியில் இந்தியாவில் தாண்டவமாடியது.

ஏற்கனவே சுதேசி மன்னர்களின் கெடுபிடியில் சிக்கிக் கொண்டிருந்த இந்திய மக்கள் ஐரோப்பியர்களின் இந்தச் சண்டை சச்சரவிலும் பாராமுகமாக இருந்தனர். அல்லது ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து மற்ற கட்சிகளுக்கு குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.ஐரோப்பிய நாடுகளின் இந்தியப் போட்டிக்குக் காரணம் அவர்களுக்கு இடையே இருந்த மத நம்பிக்கை வேறுபாடுகள்.
கிறிஸ்தவ மதத்திலேயே ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றியவர்கள் ரோம் நகரத்தில் இருந்த மதத் தலைவரான போப்புக்கு கட்டுப்பட்டிருந்தனர். ஆனால், புரொட்டஸ்டன்ட் எனும் சீர்திருத்தக் கிறிஸ்தவ மதப் பிரிவைப் பின்பற்றியவர்கள் மார்ட்டின் லூதரைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

போர்ச்சுகல் நாடு போப்பை பின்பற்றிய ரோமன் கத்தோலிக்க நாடு. இதனால் போப்பை தாஜா பண்ணாவிட்டால் நாடுகளை கைப்பற்ற முடியாது என்ற நிலை போர்ச்சுகல் நாட்டுக்கு இருந்தது.
இந்த நேரத்தில் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் பிரதேசத்திலிருந்த வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடித்திருந்தார். அவர் இந்தியாவில் இறங்கிய இடம் கேரளத்தின் கோழிக்கோடு. இது நடந்தது 1498ம் ஆண்டில்.

இது போர்ச்சுகலை மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட அந்தஸ்தில் உயர்த்தியது. கடல் வழி மட்டும் கண்டுபிடித்தால் போதுமா..? இந்திய பொக்கிஷங்கள் வேண்டாமா..? இதற்கு போப்பின் ஆசீர்வாதம் வேண்டாமா..?இந்தியாவின் பொருளாதார வளம் எவ்வளவு பெரிது என்பதை போப்புக்கு காண்பிக்க என்ன செய்யலாம் என போர்ச்சுகல் மன்னர் யோசித்தார்.
இறுதியில் ஒரு யோசனை உதித்தது. அதுதான் இந்திய யானையை போப்புக்கு பரிசாகக் கொடுப்பது.

அப்படி ஒரு யானைதான் 1511ம் ஆண்டு அதே கேரள மாநிலம் கொச்சினில் இருந்து லிஸ்பன் வழியாக ரோமுக்கு கொண்டுபோகப்பட்டு போப்பிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

யானையின் இந்தியப் பயணம், யானையோடு சென்ற பாகனின் கதை, ரோமில் அன்று புகழ்பெற்ற ஓவியர்களான டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ மற்றும் ரஃபேல் ஆகியோரின் யானை தொடர்பான ஓவியங்கள் பற்றிய தேடலில் பயணித்தார் மலையாள எழுத்தாளரான இந்துகோபன்.தன் தேடலில் கண்டறிந்ததை வைத்தும் இந்த இந்திய யானையின் ரோம் பயணத்தை வைத்தும் 2023ம் ஆண்டு யானை என்று பொருள்படும்படியாக ‘ஆனோ’ (AANO) எனும் நாவலை எழுதி வெளியிட்டார்.

எழுதியதோடு இந்த யானை பயணப்பட்ட வழியில்  பயணித்த கதையையும் இன்னொருமலையாள எழுத்தாளரான பென்யாமினுடன் சேர்ந்து அண்மையில் வெளியிட்டார்.
‘திருடன் மணியன்பிள்ளை’ எனும் பிரபல தமிழ் மொழிபெயர்ப்பு நாவலுக்கு சொந்தக்காரரான இந்துகோபனிடம் இதுகுறித்து பேசினோம்.‘‘2013ம் ஆண்டுல அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சில்வியோ பெடினி என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தை வாசிக்க நேரிட்டது.

அந்தப் புத்தகத்தின் பெயர் ‘போப்’ஸ் எலிஃபண்ட்’ (Pope’s Elephant). இதில்தான் 1511ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சினிலிருந்து ஒரு வெள்ளை யானை போர்ச்சுகீசிய மாலுமிகள் மற்றும் அதிகாரிகளால் அவர்கள் நாட்டிலுள்ள லிஸ்பனுக்கு கொண்டுசெல்லப்பட்டது என்ற செய்தி இருந்தது. வெள்ளை யானை என்பது ஒரு பெயருக்காகத்தான். உண்மையில் இந்த யானை அல்பினோ வகையைச் சேர்ந்தது. 

அது இஞ்சியின் மஞ்சள் கலந்த பிரவுன் நிறத்தில் இருக்கும். யானை கருப்பாக இல்லாததால் மற்ற நிறங்களுக்கு வெள்ளை யானை என்று சொல்வது வழக்கம். இதுதான் இந்த யானைக்கும் பொருந்திப் போனது...’’ என்று சொல்லும் இந்துகோபன் இந்த நாவல் வரலாறும், புனைவும் சேர்ந்த கலவை என்கிறார்.

‘‘முதலில் பெடினி சொல்லும் பொதுயுகத்துக்கு முந்தைய வரலாறு, அதில் பிழைகளைக் களைந்த சில உண்மைகள் மற்றும் மத்திய காலத்தில் இருந்த கேரள மற்றும் ஐரோப்பிய வரலாற்றை எல்லாம் சேர்த்துதான் இந்த நாவலை எழுதினேன். 

இந்த நாவல் 2023களில் ‘மாத்ருபூமி’ மலையாள இதழிலும் தொடராக வந்தது. அப்போது கேரளாவை ஆண்டவர்கள் சாமுத்திரிகள். கேரளாவின் கருப்பு மிளகு மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொள்ளையடிப்பதற்காக பிரித்தானியர், போர்ச்சுகீசியர் மற்றும் டச்சுக்காரர்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவிய காலம் அது.

இந்த நேரத்தில்தான் போர்ச்சுகீசியர்கள் கொச்சின் யானையை லிஸ்பனுக்கும் பிறகு ரோமுக்கும் கொண்டுபோகும் கதை நாவலில் சொல்லப்படுகிறது. யானையோடு ஓர் இந்திய பாகனும் சென்றான். போர்ச்சுகீசியர்கள் சாமுத்திரி மன்னர்களுக்கு எதிரிகளாக இருந்தாலும் அந்த பாகன் சாமுத்திரி மன்னரால் அனுப்பப்பட்டவன். இந்தப் பாகன் மன்னர் படையில் இருந்த ஒரு தற்கொலைப் படை வீரன். இந்த செய்தியையும் கலந்துதான் நாவல் பயணிக்கிறது.

அத்தோடு அப்போது ரோமில் இருந்த புகழ்பெற்ற ஓவியர்களான டாவின்சி, ரஃபேல் போன்றவர்களின் வரலாற்றையும் சொல்லவேண்டும். உண்மையில் டாவின்சியின் வீடு ரோம் நகர போப்பின் வாட்டிகன் கட்டடத்துக்கு பக்கம் இருந்தது. இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில்தான் யானையும் வசித்தது. ஆனால், டாவின்சியின் யானை ஓவியம் கிடைக்கவில்லை. ஆனால், ரஃபேல் வரைந்த ஓவியத்தின் முன்நகல் மட்டும் இப்போது கிடைக்கிறது.

டாவின்சி வரைந்தால் யானைக்கு என்னவெல்லாம் நடக்கும் என்றும் கற்பனையாக இந்த நாவல் விவரிக்கிறது...’’ என்று சொல்லும் இந்துகோபன் யானைக்கு நடந்த சில நிஜ சம்பவங்களையும் விவரித்தார்.‘‘பொதுயுகத்துக்கு முன் சீசர் காலத்தில் ரோமில் யானைகள் எல்லாம் இருந்தனதான். ஆனால், பிறகு ஐரோப்பாவில் யானைகளின் வரலாறு மங்கத் தொடங்குகிறது. ஆகவே கொச்சின் யானைதான் முதன்முதலில் மத்திய காலத்தில் ஐரோப்பாவுக்கு காலடி வைத்த முதல் யானை.

1500ல் பிறந்து அடுத்த வருடமே லிஸ்பனுக்கு செல்லும் இந்த யானை 5 வருடத்தில்,அதாவது 1516ல் இறந்துவிடுகிறது. பால், வெண்ணெய், சோறு எல்லாம் கொடுத்து பராமரிக்கின்றனர்.
இங்கே என்றால் இயற்கையான காய்கறி உணவுகளைத்தானே யானை  உண்ணும்? ஆதலால் ரோமில் அவர்கள் கொடுத்ததை உண்டு வயிற்று வலி வந்து அந்த யானை சில வருடங்களிலேயே இறந்துபோகிறது.

அப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மதமும், அரசியலும் போட்டிபோட்டுக்கொண்டு இயங்குகின்றன. யானையை சதித்திட்டம் தீட்டிக்கூட கொன்றிருக்கலாம். ஆனால், பெடின் இயற்கையாகவே வலி வந்து இறந்திருப்பதாகத்தான் சொல்கிறார். அந்தக் காலத்தில் போப்பை எல்லாம் விஷம் வைத்துக் கொன்ற சம்பவங்கள்கூட இருந்திருக்கிறது...’’ என்று சொல்லும் இந்துகோபன் மற்றுமொரு மலையாள எழுத்தாளரான ‘ஆடுஜீவிதம்’ புகழ் பென்யாமின் இந்த யானை பாதையில் இணைந்தது பற்றியும் விளக்கினார்.

‘‘2023ல் நாவல் வந்தாலும் போன வருடம் இந்த யானைத் தடத்தில் நாமும் பயணப்பட்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது. இதை என் நண்பரான பென்யாமினிடம் பகிர்ந்து கொண்டேன். தானும் வர அவர் விரும்பினார். இப்படித்தான் இந்தப் பயணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தது. கேரளாவில் இருந்து லிஸ்பன்... பிறகு லிஸ்பனிலிருந்து யானை போன பாதைகளில் கப்பல் மற்றும் விமானத்தில் பயணித்தோம். ஆம். அந்த யானை போன பாதைகளை நேரில் பார்த்தோம்.

யானை முழுக்க முழுக்க கடல் வழியாகவே இந்தத் தடத்தில் பயணம் செய்தது. ஆனால், இன்று அந்தப் பாதை எல்லாம் மாறிப்போயிருக்கிறது. யானை ஓய்வு எடுத்த இடம், கடைசியில் ரோமுக்குப் போன பாதை மற்றும் அது தொடர்பான ஓவியம் மற்றும் புகைப்படங்களை எல்லாம் சேர்த்து ‘யானைக்குப் பின்னே...’ எனும் தலைப்பில் இந்தப் பயணத்தை இருவருமாக சேர்ந்து எழுதியிருக்கிறோம். நிச்சயம் இந்த முயற்சி வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புனைவு எழுத்தாளர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்...’’ புன்னகையுடன் சொல்கிறார் இந்துகோபன்.

டி.ரஞ்சித்