ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
 ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் நிபுணர்கள் மற்றும் வணிகர்களிடம் ஆய்வு நடத்தியே இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஊழல் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.  இந்தப் பட்டியலில் 180 நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இந்தப் பட்டியலில் ஊழல்கள் அடிப்படையில் நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல்படி உலகிலேயே அதிக அளவு ஊழல் நிறைந்த நாடு என்ற பெயரை தெற்கு சூடான் பெற்றுள்ளது. அந்த நாட்டுக்கு வெறும் 10 மதிப்பெண்கள்தான் நூற்றுக்கு கிடைத்துள்ளது. தெற்கு சூடானுக்கு அடுத்து ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 9 மதிப்பெண்களுடன் சோமாலியா 2வது இடத்திலும், 10 புள்ளிகளுடன் வெனிசுவேலா 3வது இடத்திலும் உள்ளன.
சரி... ஊழல் குறைந்த நாடுகள்? அதுவும் பட்டியலில் உண்டு. ஊழல் குறைந்த நாடுகள் லிஸ்ட் டில் முதலில் இருப்பது டென்மார்க். அந்த நாட்டில் ஊழலே இல்லை என இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. டென்மார்க்குக்கு அடுத்து ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் பின்லாந்து இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் 3வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் 135வது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும் உள்ளன. சீனா 76வது இடத்திலும், வங்கதேசம் 146வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இக்கேள்விக்கான பதில் இதுதான்: இந்தப் பட்டியலில் இந்தியா மொத்தம் 38 மதிப்பெண்களைப் பெற்று 96வது இடத்தில் உள்ளது. சென்ற வருடம் இந்தியா 39 மதிப்பெண்களுடன் 93வது இடத்தில் இருந்தது. ஆக, இவ்வருடம் மூன்று இடங்கள் பின்னால் சென்றுள்ளது. இதற்காக வருத்தப்படுவதா அல்லது பாகிஸ்தானை விட கொஞ்சம் பெட்டராக இருக்கிறோம் என மகிழ்வதா?!
என்.ஆனந்தி
|