காங்கோ நாடும்... ஸ்மார்ட்போனும்..!
ஆப்பிரிக்கா கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடு காங்கோ ஜனநாயகக் குடியரசு. சுருக்கமாக டிஆர் காங்கோ அல்லது டிஆர்சி (Democratic Republic of the Congo) என அழைக்கப்படுகிறது.
மத்திய ஆப்பிரிக்காவில் சுமார் 12 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடுதான் இப்போது டாக் ஆஃப் த வேர்ல்டு. காரணம் கோல்ட்டன் எனும் தாதுப் பொருள். சமீபத்தில் இந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரான கோமாவை எம்23 என்ற கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி உள்ளனர். இதே படையினர் கடந்த ஆண்டு ருபாயா பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இங்குதான் நிறைய கோல்ட்டன் தாது சுரங்கங்கள் இருக்கின்றன. டிஆர் காங்கோ நாட்டில் அதிக அளவிலான கோல்ட்டன் தாது கிடைக்கும் இடம் ருபாயா.
 ஓராண்டுக்கு 1000 மெட்ரிக் டன் கோல்ட்டன் தாது இங்கிருந்து எடுக்கப்படுகிறது. அந்நாட்டின் கோல்ட்டன் உற்பத்தியில் பாதி அளவை ருபாயா பகுதியே தன்னிறைவு செய்கிறது. ஒரு மெட்ரிக் டன் என்பது ஆயிரம் கிலோ ஆகும். ஆக, பத்து லட்சம் கிலோ கோல்ட்டன் இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இதைத்தான் எம்23 கிளர்ச்சிப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
கோல்ட்டன் தாதுவால் என்ன பயன்?
இன்று ஸ்மார்ட்போன் அனைவரின் கைகளிலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்குத் தேவைப்படும் ஒரு முக்கியப் பொருள் டான்டலும் எனும் உலோகம். இது கோல்ட்டன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஓர் உலோகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டான்டலும் உலோகம் ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் கெபாசிட்டர், ரெசிஸ்டர், கம்ப்யூட்டர், கேமிரா உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்பிற்கும் அத்தியாவசியமானது. குறிப்பாக, எதிர்கால தொழில்நுட்ப உலகத்திற்கு இந்த உலோகம் தேவையான ஒன்று.
இதனால், இதனை வெட்டியெடுக்கப் போட்டா போட்டிகள் நடக்கின்றன. இதுதவிர தங்கம், வைரம், கோபால்ட் எனப் பல்வேறு உலோகங்களும் அதிக அளவில் அங்கே கிடைக்கின்றன. ஆனாலும் டான்டலும் உலோகத்திற்கு ஏற்பட்டுள்ள டிமாண்ட் கடத்தலுக்கு வித்திட்டுள்ளது. இந்தக் கோணத்திலிருந்தே மனித உரிமை உள்ளிட்ட உலகின் பல்வேறு அமைப்புகளும் டிஆர் காங்கோவில் நடக்கும் உள்நாட்டு சண்டைகளை கவனித்து வருகின்றன.
யார் இந்த எம்23?
எம்23 என்பது துட்ஸி எனும் இனக்குழுவினரின் தலைமையில் இயங்கும் ஒரு கிளர்ச்சி ராணுவக் குழுவினர். மார்ச் 23 மூவ்மெண்ட் என்பதன் சுருக்கமே எம்23. இந்தக் குழுவினர் சிறுபான்மையினரின் உரிமையைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தியதாகச் சொல்கின்றனர். இவர்கள் டிஆர் காங்கோவின் கிழக்குப் பகுதியில் உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள நார்த் கிவ் மாகாணத்திலிருந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நார்த் கிவ் மாகாணத்தின் தலைநகர்தான் கோமா.
துட்ஸி என்பவர்கள் ஆப்பிரிக்காவின் கிரேட் ஏரிகள் எனப்படும் பகுதிகளைச் சேர்ந்த இனக்குழுவினர். அதாவது டிஆர் காங்கோ, ருவாண்டா, உகாண்டா, கென்யா, தான்சானியா, மொசாம்பிக், சாம்பியா உள்ளிட்ட சில கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள நன்னீர் ஏரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் டிஆர் காங்கோ நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள ருவாண்டா நாட்டில் கணிசமாக வசிக்கின்றனர். ஆனால், ருவாண்டாவில் பெரும்பான்மையினராக ஹுட்டு இனத்தினர் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மையினரான ஹுட்டு இனத்தினர், சிறுபான்மையினரான துட்ஸி இனத்தினரை அடக்கி ஆண்டனர். இது காலம் காலமாக நடந்து வந்தது. ஒருகட்டத்தில் தீவிரமான ஹுட்டு இனத்தினர் துட்ஸி இனத்தினரையும், ஹுட்டு இனத்திலுள்ள மிதவாதிகளையும் அழித்தொழித்தனர். ருவாண்டாவைப் போல, அருகிலுள்ள புரூண்டி நாட்டிலும் துட்ஸி இனத்தினர் அழித்தொழிக்கப்பட்டனர். இதனால், துட்ஸி இனத்தினர் இந்த நாட்டிலிருந்து வெளியேறி உகாண்டா, டிஆர் காங்கோவின் கிழக்குப் பகுதி, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் ஹுட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் ஜுவெனல் ஹப்யரிமனாவும், அதே இனத்தைச் சேர்ந்த புரூண்டி அதிபர் சைப்ரியன் டார்யாமிராவும் 1994ம் ஆண்டு ஒரே விமானத்தில் பயணம் செய்தபோது விமானத்தைச் சுட்டு வீழ்த்தி படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை ருவாண்டா இனப்படுகொலைக்கு வித்திட்டது. அந்த ஆண்டு சுமார் 8 லட்சம் துட்ஸி இனத்தினர் மோசமாகப் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ருவாண்டா இனப்படுகொலையும் சேர்ந்தது.
இதன்பிறகு இப்போது ருவாண்டாவின் அதிபராக இருக்கும் துட்ஸி இனத்தைச் சேர்ந்த பால் ககாமே அப்போது துட்ஸி இனக்குழுவினரை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இதனால், நான்கு மாதங்களில் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து துட்ஸி கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த பாஸ்டர் பிசிமுங்கு ருவாண்டாவின் அதிபரானார். துணை அதிபராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பால் ககாமே இருந்தார். இதனால், துட்ஸி இனத்தினர் பாதுகாப்பாகினர்.
ஆனால், ஹுட்டு இனத்தினர் பயத்தில் ஆழ்ந்தனர். இந்த இனத்தைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேர் நாடு கடந்து சென்றனர். குறிப்பாக டிஆர் காங்கோ நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இதனால் ருவாண்டாவின் இராணுவம் இரண்டு முறை டிஆர் காங்கோ மீது படையெடுத்தது. இனப்படுகொலைக்கு காரணமான சிலரைத் துரத்துவதாகக் கூறியது. பிற அங்கிருந்த ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.
இதனால் ஹுட்டு குழுவினருக்கும், துட்ஸி குழுவினருக்கும் 1994ம் ஆண்டிலிருந்து முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. டிஆர் காங்கோவின் கனிம வளம் மிகுந்த கிழக்குப் பகுதியில் ஆயுதமேந்திய குழுக்கள் மோதிக் கொண்டே இருந்தன.
குறிப்பாக ஆயுதக் குழுக்களின் செலவிற்கும், ஆயுதங்கள் வாங்கவும், போராளிகளின் சம்பளத்திற்கும் பணம் தேவை என்பதால் டிஆர் காங்கோ நாட்டின் சுரங்கங்களை இவர்கள் வளைத்து வருகின்றனர். இதனால் டிஆர் காங்கோ ராணுவத்தினர், ஐநா படையினருடன் இணைந்து கிளர்ச்சிப் படையினரை ஒடுக்கினர். இந்நிலையில் 2009ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி துட்ஸி இனக் குழு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, மக்கள் பாதுகாப்புக்கான தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் செயல்படும் இந்த துட்ஸி இனக்குழு ஓர் அரசியல் கட்சியாக மாறுதல், அகதிகளை மீண்டும் ஒருங்கிணைத்தல் மற்றும் இதன் உறுப்பினர்களை அரசு நிறுவனங்கள், காங்கோ இராணுவத்தில் சேர்த்தல் உள்ளிட்டவை அடங்கும்.
ஆனால், இதனை டிஆர் காங்கோ மக்களில் சிலர் எதிர்த்தனர். இதனால், 2012ம் ஆண்டே இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. முன்பு ஒப்பந்தம் செய்த நாளையே எம்23 எனக் குழுவிற்கு பெயர் வைக்கப்பட்டது. உடனடியாக இவர்கள் கோமா நகரைக் கைபற்றினர். இந்நிலையில் மீண்டும் உள்நாட்டுப் போர் ஏற்பட, டிஆர் காங்கோ மற்றும் ஐநா படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டே வெளியேறியது எம்23 கிளர்ச்சிப் படை.
தொடர்ந்து துட்ஸிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால், எம்23 கிளர்ச்சிக் குழுவினர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால், 2021ம் ஆண்டில் வாக்குறுதிகள் மீறப்பட்டுவிட்டதாகக் கூறி, இந்தக் குழுவினர் மீண்டும் ஆயுதம் ஏந்தினர். இதன் பின்னணியில் ருவாண்டா இருப்பதாக டிஆர் காங்கோ அரசும், அமெரிக்கா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
காரணம், இவர்கள் மூலம் டிஆர் காங்கோவின் கனிம வளங்களை தங்கள் பகுதிக்கு ருவாண்டா கடத்திச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக கோல்ட்டன் தாதுவை அதிகளவில் கடத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐநா நிபுணர்களின் அறிக்கை, கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் சுமார் 120 டன் கோல்ட்டனை எம்23 படையினர் ருவாண்டாவிற்கு அனுப்பியதாகக் கூறுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ருவாண்டாவின் கனிம ஏற்றுமதியில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளதை கவனித்தாலே இது புரியும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. இதில் பெரும்பாலானவை டிஆர் காங்கோவில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்கின்றன தகவல்கள். இதனை அமெரிக்க புவியியல் ஆய்வும் உறுதிப்படுத்தி இருக்கிறது. 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் ருவாண்டாவின் கோல்ட்டன் தாது ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், ருவாண்டா இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுமட்டுமல்ல. எம்23 குழுஒவ்வொரு கிலோ கோல்ட்டனுக்கும் 7 டாலர் வரி விதிக்கிறது. இதனால், ருபாயாவில் கோல்ட்டன் வரிவிதிப்பிலிருந்து எம்23 குழு மாதம் சுமார் எட்டு லட்சம் டாலர், அதாவது 7 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் எனவும், அந்தப் பணம் பின்னர் கிளர்ச்சிக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் சொல்கிறது ஐநா நிபுணர்கள் குழு.
இந்நிலையில் டிஆர் காங்கோ அரசு கடந்த ஆண்டு இறுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் குற்றவியல் வழக்கு தொடர்ந்தது. அதில் பிரச்னைக்குரிய கனிமங்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்துவதாகக் கூறியது.ஆனால், ஆப்பிள் நிறுவனமோ டிஆர் காங்கோ மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளிலிருந்து தாங்கள் டான்டலும் உலோகம் வாங்குவதை நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டது.
இப்போது ருபாயா சுரங்கங்கள், கோமா நகர் ஆகியவற்றை பிடித்துள்ள எம்23 படையினர் விரைவில் புக்காவு நகரையும் கைப்பற்றும் திட்டம் உள்ளதாகச் சொல்லியிருக்கிறது. ஆரம்பத்தில் இரு இனக்குழுக்களுக்கு இடையே தொடங்கிய சண்டை இப்போது தாதுப் பொருட்களைக் கடத்தும் உலக அரசியலாக மாறியிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எது எப்படியிருந்தாலும் உலக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் சந்தோஷமாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியிலிருந்து கோல்ட்டன் கிடைத்தால் போதுமானது.
கடந்த ஆண்டு மட்டும் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்து 120 கோடியை எட்டியிருப்பதாகச் சொல்கின்றன ஆய்வுகள். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் வர்த்தகம் என்பதால் இந்த சண்டைகள் பற்றியோ, அதை நிறுத்துவது குறித்தோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அப்பாவி மக்களின் உயிர்கள் மட்டுமே போய்க்கொண்டு இருக்கிறது.
பேராச்சி கண்ணன்
|