27 மீனவர்களின் போராட்ட வரலாறுதான் இந்த ‘தண்டேல்’!



நாக சைதன்யா Exclusive

தெலுங்கில் ‘லவ் ஸ்டோரி’ படம் மூலம் வெற்றிகரமான ஜோடியாக தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் ‘சரங்க தரியா...’ என ஆட வைத்தார்கள் சாய் பல்லவியும், நாக சைதன்யாவும். இதோ மீண்டும் இந்த ரீல் வெற்றி ஜோடி ‘தண்டேல்’ படம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். 
‘‘‘என் ஹஸ்பண்ட் முகத்தை தாடி இல்லாம எப்போ காட்டுவீங்க?’ இப்படி கல்யாணத்தில் எங்களை வாழ்த்த வந்த அல்லு அரவிந்த் அங்கிள் (அல்லு அர்ஜுன் அப்பா மற்றும் ‘தண்டேல்’ படத் தயாரிப்பாளர்) கிட்ட நேரடியாகவே கேட்டாங்க சோபிதா...’’ முகம் மலர சிரிக்கிறார் நாக சைதன்யா.

‘தண்டேல்’..?

ஒரு படகின் கேப்டன் மற்றும் தலைவன். அதாவது கப்பலை ஓட்டுகிற மாலுமி கிடையாது. தலைவன். அவங்களை ‘தண்டேல்’ன்னு கூப்பிடுவாங்க. மீன் பிடிப்பு குத்தகை, படகு லீஸ் இப்படி எல்லாத்துக்கும் ‘தண்டேல்’தான் முன்னணியாக தலைமை தாங்குவார்.

2018ம் ஆண்டு நடந்த ஆந்திர மீனவர்கள் பிரச்னைதான் கதையா?

அதேதான். 2018ல் ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் இருந்து 27 மீனவர்கள் குஜராத் அருகே அரபிக் கடல்ல மீன் பிடிக்கும் போது தவறுதலா பாகிஸ்தான் எல்லைக்குள் மாட்டி பல மாதங்கள் அங்கேயே ஜெயிலில் இருந்தாங்க.
அவங்களுடைய போராட்டம், ஜெயில்ல பட்ட கஷ்டம், வெறும் மொபைல் தொடர்பில் குடும்பம், நண்பர்கள் கூட பேசிட்டு இருந்து அதுவும் ஒரு கட்டத்தில் இல்லாமல் போக இங்கே சொந்த மண்ணில் என்ன நடக்குது, பாகிஸ்தானில் அவங்களுக்கு என்னென்ன நடந்துச்சு... இப்படி அத்தனையும் சேர்ந்த உணர்வுக் குவியல்தான் கதை.

ஒரு விஷயம் கேட்டு நாங்களே அதிர்ச்சியானோம். பாகிஸ்தான் ஜெயிலில் கைதிகளுக்கு வேலை கொடுப்பாங்க. அதற்கு சம்பளம் தினம் ரூ.10. அதை செலவு செய்யாமல் சேர்த்து வெச்சு ஒருமுறை ஒரு கடிதம் எழுதத்தான் வாய்ப்பு கொடுப்பாங்க. அதிலேயே அந்த 27 பேரும் ஒரே கடிதமா நாலு நாலு வரி எழுதியிருக்காங்க. அதுவும் வந்து சேர 2 மாதமாகும்.

யோசிச்சு பாருங்க... அந்த சூழல் எவ்ளோ மன அழுத்தமா இருக்கும்னு. இதை எல்லாம் கதையாக டாக்குமெண்ட் செய்துதான் சந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கார்.
இந்திய படங்கள், மார்க்கெட் விரிவு... இந்த மாற்றத்துக்குப் பிறகு எந்த அடிப்படையில் கதை கேட்குறீங்க?

எதையும் மனதில் ஏத்திக்காம கதை தேர்வு செய்யறேன். பொதுவா எனக்கு எமோஷனல் டிராமா, உணர்வுகள் சூழ ஒரு கதை சொன்னால் பிடிக்கும். அப்படிப்பட்ட கதைதான் கேட்பேன்.
அந்தந்த நிலம் சார்ந்த கதைகள் எடுத்தாலே மற்ற மொழிகளுக்கு அது ஒர்க்கவுட் ஆகும். எமோஷன் யுனிவர்ஸல் லாங்குவேஜ்... அதை நம்பறேன்.

சாய் பல்லவி உடன் மீண்டும் ஜோடி... அவங்க கூட நடிப்பது எவ்வளவு சவாலா இருக்கு?

ரொம்ப கஷ்டம். நாம கொஞ்சம் உஷாரா இல்லைன்னா மொத்த ஆடியன்சும் அவங்களைப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏற்கனவே அவங்க கூட ஒரு படம்... ‘லவ் ஸ்டோரி’ ஹிட். இப்ப இந்தப் படமும் அந்த தொடர் வெற்றி கொடுக்கும்னு நினைக்கிறேன். 

நடிப்பு, டான்ஸ்... இப்படி அத்தனையும் அசால்ட்டா செய்யக்கூடிய நடிகை. அவங்களுக்கு ‘பிரேமம்’ வந்து பத்து வருஷங்களாகிடுச்சு. அதற்கும் வாழ்த்துகள். இந்தக் கதையே ஓர் ஆழமான காதல் அடிப்படையில்தான் நகரும். சாய் பல்லவி எப்படி காதல் காட்சிகள்ல நடிப்பாங்கன்னு தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இயக்குநர் சந்து மொண்டேட்டி... ஒரு மாயாஜால மந்திரக் கதை சொல்வார்னு நினைச்சோம்?

நானும் அப்படித்தான் நினைச்சேன். அவருடைய ‘கார்த்திகேயா 1 & 2’ அப்படியொரு வெற்றிப்படம். ஆனால், என்கிட்ட ஒரு ரியல் ஸ்டோரி கொண்டு வந்தார்.
ஆக்சுவலி அவர் பெரிதா எந்த டெம்ப்ளேட்டிலும் மாட்ட மாட்டார். அவருக்கு இது மூணாவது படம். ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கேன். இந்தக் கதை நிறைய டிராவல் கேட்டுச்சு, நிறைய லொகேஷன், ஜியாகிராபிகலாகவே நிறைய பேப்பர் வொர்க் செய்யணும்.

டாக்குமெண்ட், ஆராய்ச்சி, உண்மையாகவே போராடி திரும்பியவங்க அனுபவம்... அத்தனையும் அடிப்படையாக இருக்கும். கதை பாகிஸ்தான் வரை பயணிக்கும்.
அதற்கெல்லாம் ஒரு வருடம் எடுத்துக்கிட்டார் சந்து. 

இந்தக் கதைக்காக நிறைய நேரம், உழைப்பு... இப்படி எல்லாமே கொடுத்திருக்கார். அவர் கூட வேலை செய்வது ஓர் அனுபவமாகவே ஒரு பாடம்தான். ஒரு பிரேக்கிங் சொல்றேன்... கூடிய சீக்கிரம் தமிழில் சூர்யா சார் கூட ஒரு ப்ராஜெக்ட்டை சந்து பேசிட்டு இருக்கார். அதற்கான வேலையும் ஆரம்பிச்சாச்சு.  

டி.எஸ்.பி இசையில் ‘புஜ்ஜி குட்டி...’ வைரலா போயிட்டு இருக்கே?

‘புஷ்பா 1 & 2’ வெற்றிக்கு முதல் அடித்தளமே அவருடைய மியூசிக்தான். அவர் மேஜிக்கை அவர் செய்து ப்ரொமோஷன் வேலையில் பாதியைக் குறைச்சிடுவார்.

இந்தப் படத்திலும் ‘புஜ்ஜி குட்டி...’ ஹிட்டாகி டிஜிட்டல் டிரெண்ட். அடுத்து ஒரு சிவன் பாடல்... எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய மியூசிக், சாய் பல்லவி டான்ஸ் காம்போ... ‘ஐலேசா...’ பாட்டு இன்னும் ஸ்பெஷலா இருக்கும்.

அந்தப் பாட்டைக் கூட தமிழ் பாடல்கள் சில சேர்த்து மிக்ஸ் செய்து நிறைய ரீல்ஸ் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. விஷுவல் சம்தத் சைனுதீன். நிறைய தெலுங்கு, மலையாளப் படங்கள் செய்திருக்கார். முக்கியமா ‘விஸ்வரூபம் 1 & 2’ சினிமாட்டோகிராபர் இந்தப் படத்துக்கு விஷுவல். 

நேஷனல் அவார்ட் வின்னர் (‘ஜெர்சி’ படத்துக்காக) எடிட்டர் நவீன் நூலிதான் இந்தப் படத்துக்கும் படத்தொகுப்பாளர். ‘புஷ்பா 2’, ‘லக்கி பாஸ்கர்’ உட்பட எடிட்டர் அவர்தான். பான் இந்தியா எடிட்டரா எங்களை விட பக்கா பிஸி நவீன்தான். அவருடைய எடிட்டிங் இந்தப் படத்துக்கு பெரிய பலம்.

தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் வெளியீடு... ஏன்... மற்ற மொழிகளில் ரிலீஸ் யோசிக்கலையா?

ப்ரொஃபஷனலா, பர்சனலா தமிழ் எனக்கு ரொம்ப நெருக்கம். அப்பா நாகார்ஜுனா ஏற்கனவே ஒரு பெரிய அடித்தளம் இங்கே அமைச்சிருக்கார். மேலும் எனக்கும் வெங்கட் பிரபு சார் ‘கஸ்
டடி’ மூலமா ஒரு நல்ல அறிமுகம் கொடுத்திருக்கார். அதனால்தான் தமிழ். இந்தி... எப்பவுமே தெலுங்கு டப்பிங் கலவை அதிகமா நடக்கும். ஆனால், மலையாளம், கன்னடம் மார்க்கெட் புரிஞ்சுக்க இன்னும் டைம் தேவை.

முதலில் இந்தப் படத்தை பான் இந்தியாவா நாங்க திட்டமிடல. படம் வெளியாகி அது செய்கிற பிசினஸ் பொறுத்து தொடர்ந்து மற்ற மொழிகள்ல டப்பிங் செய்யலாம்னு முடிவு செய்தோம் .  
மார்க்கெட் ஸ்ட்ரேட்டர்ஜி எங்களை விட அல்லு அரவிந்த் அங்கிளுக்கு நல்லாவே தெரியும். ‘கீதா ஆர்ட்ஸ்’ வரலாறு அப்படி. அதனால் அவர்கிட்ட பொறுப்பை கொடுத்திட்டோம்.
தமிழ் அறிமுகம் கிடைச்சாச்சு... அடுத்து தமிழில் தொடர் படங்கள் எப்போது ?

மணி சார்... கேட்டுச்சா?! அப்பாவுக்கு அந்த வாய்ப்பு ‘இதயத்தை திருடாதே’ படத்துல கிடைச்சது. மேலும் இதோ LCU யுனிவர்ஸா ‘கூலி’ படம்னு தெரியலை. ஆனால், அந்தப் படத்திலும் அப்பா இருக்கார். 

அப்படி எனக்கும் லோகேஷ் கனகராஜ் படத்திலும் நடிக்கணும்னு ஆசை இருக்கு. இயக்குநர்கள் அடிப்படையில் லிஸ்ட் கேட்டாலே என்கிட்ட பெரிய லிஸ்ட் இருக்கு. நானும் தமிழ்ல படம் செய்ய காத்திருக்கேன். நல்ல கதைகள் தமிழில் வருது. வெற்றி மாறன் சார் மேஜிக் செய்கிறார். எல்லார் கூடவும் வேலை செய்யணும்.

டிஜிட்டல் விமர்சனங்கள், சர்ச்சைகள்... இவற்றை எப்படி பார்க்கறீங்க?

படத்துக்கு விமர்சனமா இருந்தா நிச்சயம் எடுத்துப்பேன். மற்றவை என் லிஸ்ட்ல இருக்காது. எல்லோருக்கும் அவங்க பர்சனல் முக்கியம். அதிலே யாரும் தலையிடறதை யாருமே விரும்பமாட்டாங்க. நானும் அப்படித்தான்.

அடுத்த படங்கள்..?

‘விருபாக்‌ஷா’ பட இயக்குநர் கார்த்திக் வர்மா இயக்கத்தில் என்னுடைய 24வது படம். தொடர்ந்து எனக்கு ‘மஜ்லி’ பட வெற்றி கொடுத்த இயக்குநர் ஷிவ நிர்வாணா கூட 25வது படம்.
இதற்கிடையில் குடும்ப வாழ்க்கைக்கு கொஞ்சம் நேரம் கொடுக்கணும். கல்யாணத்தில் கூட தாடி எடுக்காம இருந்தேன். ஷோபிதா நேரடியாக அல்லு அங்கிள்கிட்ட கேட்டுட்டாங்க.
ஸோ... ரெண்டு வருடங்கள் கழிச்சு முதலில் தாடியை ஷேவ் செய்யப் போறேன்!

ஷாலினி நியூட்டன்