ஃபார்முலா 4 கார் ரேஸில் கலக்கும் நடிகை...



பொதுவாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது ஆண்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது பெண்களும் நம்பிக்கையாக தங்கள் திறமையை பல்வேறு மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
இதற்கு இந்தியாவில் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் மனிஷா கேல்கர். சமீபத்தில் இவர் துபாயில் நடந்த முதல் ஃபார்முலா வுமன் குளோபல் நேஷன்ஸ் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

உலக அளவில் 25 நாடுகளைச் சேர்ந்த ஐம்பது பெண்கள் இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டனர். இதிலிருந்து 38 பெண்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர். அதில் ஒருவராக மிளிர்கிறார் மனிஷா கேல்கர். 
வரும் மே மாதம் இதன் இறுதிப் போட்டி துபாயில் நடக்க இருக்கிறது. அதில் வெற்றி பெற மனிஷா கேல்கருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே மனிஷா கேல்கர், மோட்டார் ஸ்போர்ட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஃபார்முலா 4 கார் ரேஸில் கலக்குகிறார். இவர் பாலிவுட் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பையின் வொர்லி பகுதியில் பிறந்து வளர்ந்தவர் மனிஷா கேல்கர். தந்தை ராம் கேல்கர், திரைக்கதை ஆசிரியர். 1993ம் ஆண்டு இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த, ‘கல்நாயக்’ படத்திற்கு திரைக்கதை எழுதியவர். அம்மா ஜீவன்கலா, நடிகை மற்றும் கதக் டான்ஸர். இந்தப் பின்புலம் அவரை சினிமா உலகிற்குள் கொண்டு சென்றது.  

ஆனால், சிறுவயதில் மனிஷாவுக்கு போர் விமானி ஆகவேண்டும் என்பதே ஆசை. இருந்தும் அப்போது பெண்களுக்கு இந்தப் பணி இருக்கவில்லை. அதனால், வேதனையுடன் அந்தக் கனவிலிருந்து வெளிவந்தவர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ரேஸிங்கில் ஈடுபடத் தொடங்கினார்.

எஃப்ஐஏ எனப்படும் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் ஃபார்முலா 4 ரேஸிங்கில் அமெச்சூர் டிரைவராகப் பயிற்சிக்குச் சேர்ந்துள்ளார். இந்த ஃபார்முலா 4 என்பது திறமையை வெளிக்கொணரும் என்ட்ரி லெவல் ஆகும். அதாவது ஃபார்முலா 3க்கும் ஓபன் வீல் கார்ட்ஸ் போட்டிக்கும் பாலமாக இருப்பது ஃபார்முலா 4. இதில் சேர்ந்து நிறைய பயிற்சியை மேற்கொண்டார் மனிஷா.

‘‘ஆரம்பத்தில் நான் டிராக்கில் கார் ஓட்டுவதற்குமுன் ராஷ் டிரைவிங் எனும் அதிவேக ஓட்டுநராகவே இருந்தேன். ஆனால், ரேஸிங் டிராக்கில் நீங்கள் விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதனால் என் வேகத்தைக் கட்டுப்படுத்தி அதனுள் என்னைப் பொருத்திக் கொண்டேன்...’’ என்கிறார். பின்னர் படிப்பு முடிந்ததும் சினிமாவிற்குள் நுழைந்தார். 

‘ஹயான்சா கஹி நேம் நஹி’ என்ற மராத்தி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மராத்தி படங்களிலேயே நடித்து வந்தார். இடையில், ‘லாட்டரி’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் அட்டர் பிளாப் ஆனது.

பின்னர் மராத்தி படங்களில் நடித்தபடியும், சில டிவி ஷோக்களின் தொகுப்பாளராகவும் இருந்தார். இதனிடையே கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்நிலையில்தான் அந்தச் சம்பவம் நடந்தது.2018ம் ஆண்டு ரேஸ் டிராக்கிலிருந்து ஹோட்டலுக்கு திரும்பும்வழியில் ஒரு காரில் பயணித்துள்ளார். அந்தக் கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் கொடூர விபத்தைச் சந்தித்ததாகச் சொல்கிறார் மனிஷா.

‘‘நான் காரின் பின்இருக்கையில் இருந்தேன். சீட் பெல்ட் என்னை துளைத்தது. என் முதுகெலும்புகள் உடைந்தன. 13வது விலா எலும்பு உடைந்தது. எனக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது என் பெற்றோரோ அல்லது தெரிந்தவர்களோ யாரும் அருகில் இருக்கவில்லை. 

யார் மருத்துவமனை படிவங்களில் கையெழுத்திட்டனர் என்பதுகூட தெரியாது. நான் பல மாதங்களாக படுக்கையில் இருந்தேன். தசையை இழந்து முற்றிலும் பலவீனமானேன்...” என அந்த நாட்களை இப்போதும் திகிலுடனும் வேதனைகளுடனும் நினைவு கூர்கிறார் மனிஷா.

இதன்பிறகு அவரை மருத்துவர்கள் கார் டிராக் பக்கமே செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதனால், டிவிகளில் கார் ரேஸ்களைப் பார்த்து பொழுதினை கழித்துள்ளார்.

பின்னர் யோகா, தியானம் என மனதை அமைதிப்படுத்தி ஒருவழியாக மீண்டவர், டாக்டர்களின் அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு மெல்ல மெல்ல கார் ரேஸ் பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.
‘‘அந்த நாட்களில் நான் என்னுடனே போட்டி போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இந்தியாவுக்காக போட்டியிடுகிறேன்...’’ என்கிறார் மனிஷா.அந்த விபத்து சம்பவத்திற்கு முன்னர்தான் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் மனிஷா.

அப்போது இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 900 பெண் ரேஸர்களிலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஒருவராக மனிஷா கேல்கர் இருந்தார். அதாவது இந்தியாவின் முதல் முழு பெண் ஃபார்முலா எல்ஜிபி கார் பந்தய அணியில் ஒருவராக அவரும் இருந்தார்.

ஆனால், அடுத்த ஆண்டு அவரால் இந்த அணியில் இடம்பெற முடியவில்லை. இதன்பிறகு தொடர்ந்து பயிற்சியெடுத்தவர், லண்டனில் நடந்த தனது முதல் சர்வதேச பந்தயத்தில் பங்கேற்றார். அடுத்தடுத்த போட்டிகளில் நம்பிக்கையாகக் கலந்துகொண்டு தன்னை நிரூபித்தபடி இருந்தார்.

இந்நிலையில்தான் ஃபார்முலா வுமன் குளோபல் நேஷனஸ் கோப்பையின் தகுதிச் சுற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார். இந்தப் போட்டி துபாயில் மே மாதம் நடக்கும்போது அங்கே 40 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது பெண்ணான மனிஷாவிற்கு பெரிய சவாலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், மனிஷாவோ, ‘‘நீங்கள் இந்த ரேஸிங் ஹெல்மெட்டை அணிந்தவுடன் உங்கள் பாலினம் மரியாதையற்றதாகிவிடும். ஆண், பெண் என்ற வித்தியாசம் ரேஸ் டிராக்கிற்குத் தெரியாது. உங்கள் திறமை மட்டுமே இங்கே பேசும்...’’ என தம்ஸ்அப் காட்டிச் சிரிக்கிறார். அந்தச் சிரிப்பில் அத்தனை நம்பிக்கை கீற்றுகள் தெரிகின்றன.

பேராச்சி கண்ணன்