இந்தியாவின் பணக்காரக் கட்சி!



இந்திய அரசியல் கட்சிகளின் 2023 - 24ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜக இருக்கிறது!2023 - 2024 நிதியாண்டில் பாஜக 4,340 கோடி ரூபாய் நிதி வாங்கியுள்ளது. 
கடந்த 2022 - 2023ல் இது ரூ.2,360 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கிடைத்த நிதியில் ரூ.1,685.6 கோடி தேர்தல் பத்திரம் வழியாக பாஜக வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தேர்தல் பத்திரம் மூலமாக மிக அதிக நன்கொடையை வசூலித்த கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது.

இதைத்தவிர வட்டி மூலம் ரூ.37.92 லட்சம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி மூலம் ரூ.368.65 கோடி, பிற வருவாய் மூலம் ரூ.1.57 கோடி அந்த கட்சிக்கு கிடைத்துள்ளதாம்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சூழலில், பாஜகவுக்கு அதிக அளவு நிதி சேர்ந்தது இந்த அறிக்கை வழியாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாஜகவின் செலவுகளைப் பொறுத்தவரை பணியாளர்களுக்கான ஊதியமாக ரூ.73.52 கோடி, நிர்வாகச் செலவு ரூ.349.71 கோடி, நிதிச் செலவு ரூ.56.38 லட்சம், தேர்தல் செலவு ரூ.1,754 கோடி, இதர செலவு ரூ.3.21 கோடி என கடந்த நிதியாண்டில் மொத்தம் 2,211 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இதில் தேர்தல் செலவுகளில் விளம்பரத்துக்காக மட்டும் 591.39 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு அதிக நன்கொடைகளை வாங்கியுள்ளது.

2023 - 2024ம் ஆண்டில் அந்தக் கட்சி 1,129.66 கோடி ரூபாயை நன்கொடையைாகப் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் இது 320 சதவிகிதம் அதிகம்.
இந்த நன்கொடைகளில் 73 சதவீதம் தேர்தல் பத்திரம் மூலமாகவே கிடைத்துள்ளது. 

அக்கட்சியின் கடந்த ஆண்டுச் செலவு 619.67 கோடி ரூபாய் என்கிறது ஆண்டறிக்கை.
திரிணமூல் காங்கிரஸின் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, மம்தா பானர்ஜியின் கட்சி பெற்ற நன்கொடை 2022 - 23ம் ஆண்டில் ரூ.333.46 கோடியாக இருந்து, 2023 - 24ல் ரூ. 646.39 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 95% தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவை.

என்.ஆனந்தி