முன்பு நடிகை... இப்போது சந்நியாசி...



உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) மகா கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்றுகூடும் இந்நகரின் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.குறிப்பாக இந்நிகழ்வில் குவிந்துள்ள அகோரிகள் மற்றும் நாக சாதுக்கள் பற்றிய செய்திகள் தினந்தோறும் ஊடகங்களை அலங்கரித்தபடி இருக்கின்றன.

அதேநேரத்தில் இந்திய நடிகைகள், மாடல்கள் பலர் ஆன்மீகத்திற்குள் தங்களை முழுவதும் அர்ப்பணித்த கதைகளும் வைரலாகி வருகின்றன. அப்படி சந்நியாசியாக, இனி ஆன்மீகமே தங்கள் வாழ்க்கை என்று மாறிய அந்தப் பிரபலங்களைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு இது.

மம்தா குல்கர்னி

பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வந்த மம்தா குல்கர்னி, இந்த மகா கும்பமேளாவில் சந்நியாசியாக துறவறம் பூண்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் தமிழில் வெளியான ‘நண்பர்கள்’ படத்தில்தான் மம்தா குல்கர்னி முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர், ‘நண்பர்கள்’ படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதன்வழியாக அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகி பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.

இந்நேரம் மும்பை நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு என சர்ச்சையிலும் சிக்கினார். 
இந்நிலையில் 2002ம் ஆண்டிற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி வெளிநாடு சென்றுவிட்டார்.
இதனையடுத்து போதை கடத்தல் வழக்கிலும் அவர் பெயர் அடிபட்டது. போதை கடத்தலில் ஈடுபட்ட விக்கி கோஸ்வாமியுடன் தொடர்பில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல. மம்தா குல்கர்னி, இந்த விக்கி கோஸ்வாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், மம்தாவோ, தான் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு ஆன்மீகமே காரணம் என்கிறார். 1996ல் தனக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் குரு ககன் கிரி மகாராஜை சந்தித்ததால் ஆர்வம் அதிகரித்ததாகவும், பிறகு பாலிவுட்டை விட்டுவிட்டு தவத்தில் ஈடுபட்டதாகவும் சொல்கிறார். 

இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகா கும்பமேளாவிற்காக இந்தியா வந்தவர், கின்னார் அகடா என்ற ஆன்மீக அமைப்பில் சேர்ந்து காவி உடை அணிந்து சந்நியாசியாக மாறியுள்ளார். அவருக்கு மகாமண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டது. ஸ்ரீ யமை மம்தா நந்த் கிரி என்ற ஆன்மீகப் பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டுள்ளது.

பர்கா மதன்

முன்னாள் மாடல், பியூட்டி குயின், நடிகை எனப் பன்முகத்துடன் பாலிவுட்டில் வலம் வந்தவர் பர்கா மதன். 1994ம் ஆண்டு, ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றியாளர்களான சுஷ்மிதா சென் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து போட்டியிட்டவர். 

1996ம் ஆண்டு அக்‌ஷய்குமார், ரேகா நடிப்பில் வந்த ‘கிலாடியோன் கா கிலாடி’ படத்தில் அறிமுகமானார். பின்னர் படங்களைத் தேர்ந்தெடுத்து இந்தி மற்றும் பஞ்சாபி மொழிப் படங்களில் நடித்து வந்தார். 2003ம் ஆண்டு ராம்கோபால் வர்மாவின், ‘பூத்’ படத்தில் பேய் வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து டிவி தொடர்களிலும் நடித்தார்.

இந்நிலையில் புத்த மதத்தின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு தலாய் லாமாவின் தீவிர பற்றாளரானார். 2012ம் ஆண்டு புத்த துறவியாக மாறினார். இப்போது கியால்டன் சாம்டன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தொலைதூர மலை மடங்களில் வசித்தபடி, ஆன்மீக வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தனது அமைதியான அந்த ஆன்மீகப் பயணத்தின் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொள்கிறார் கியால்டன் சாம்டன்.

அனு அகர்வால்

மாடல் கம் நடிகையாக இருந்தவர் அனு அகர்வால். 1990ம் ஆண்டு பிரபல இயக்குநர் மகேஷ் பட் படமான, ‘ஆஷிகி’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையெல்லாம்விட நமக்கு, ‘திருடா, திருடா’ படத்தில் கொஞ்சம் நிலவு பாடலுக்கு ஆடும் நடிகை என்றால் சட்டென நினைவுக்கு வந்துவிடுவார் அனு அகர்வால். இதன்பிறகு தொடர்ந்து அவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார்.

1997ம் ஆண்டு யோகா மீது ஈடுபாடு கொண்டு அதனைக் கற்றுக்கொண்டார். பின்னர் 1999ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். பழைய நினைவுகளை இழந்தார். இதிலிருந்து மீண்டவர், 2001ம் ஆண்டு துறவியாக அவதாரம் எடுத்தார். பின்னர் தலையை மொட்டையடித்துக் கொண்டு ஒரு பையுடன், மலைப்பகுதியில் எளிமையான சூழலில், மனதையும் மனித உளவியலையும் படித்தார்.

ஆறு ஆண்டுகள் இந்த வாழ்வில் இருந்தவர், பின்னர் சாதாரண யோகா வாழ்வுக்குத் திரும்பினார். இப்போது அனு அகர்வால் பவுண்டேஷன் மூலம் யோகா கற்றுத் தருகிறார். ‘யோகாவில் நான் நிம்மதியைக் கண்டேன். இன்றைய எனது முயற்சி, பலரிடமும் இந்த வாழ்க்கைமுறையை வாழவேண்டும் என்ற எண்ணத்தை விழித்தெழச் செய்வதே ஆகும்’ என்கிறார் அனு அகர்வால்.

வினோத் கண்ணா

பாலிவுட்டில் சிறந்த நடிகராகவும், பின்னர் பாஜகவில் இணைந்து அமைச்சராகவும் இருந்தவர் வினோத் கண்ணா. 1968ல் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 1982ம் ஆண்டு வரை பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தார்.

இதன்பின்னர் ஓஷோ மீது கொண்ட ஈடுபாட்டால் திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டு ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள ரஜ்னீஷ்புரத்தில் துறவு வாழ்வை மேற்கொண்டார். பின்னர் 1987ம் ஆண்டு மீண்டும் மும்பை திரும்பி நடிக்கத் தொடங்கினார். இதன்பிறகு அவரின் அரசியல் வாழ்வும் அமைந்தது.

மற்றும் சிலர்...

இவர்கள் தவிர பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர். பாலிவுட் நடிகர் ராகுல் ராயின் சகோதரி, மாடல் அழகி பிரியங்கா ராய், ஹரிமா என்ற பெயரில் துறவியாக மாறியுள்ளார். அடுத்து இந்தி பிக்பாஸ் புகழ் சோபியா ஹையத் மாடலாக இருந்து கன்னியாஸ்திரியாக மாறி, இப்போது உடற்பயிற்சியாளராக திரும்பியுள்ளார்.

இதுதவிர, ‘சக்திமான்’ தொடர் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இந்தி நடிகை நுபுர் அலங்கர், நம்மூர் நடிகை ரஞ்சிதா உள்ளிட்டவர்கள் சந்நியாசியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேராச்சி கண்ணன்