20 வருட திரை வாழ்க்கைல முதல் முறையா அஜித் சார் கூட நடிச்சு இருக்கேன்!
ரெஜினா Open Talk
நடிக்க வந்து ஒரு நல்ல ரோல் கிடைத்து அதன்பிறகு தொடர்ந்து படங்கள், இதெல்லாம் எப்படி திட்டமிட்டாலும் இரண்டு வருடங்கள் நிலைத்து நிற்பதுடன் சர்ச்சைகள், கிசுகிசுக்கள் இல்லாமல் இருப்பது பெரிய டாஸ்க். ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/2.jpg) ஆனால், 20 வருடங்களாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு இப்போதும் தனித்துவமான கேரக்டர்களில் பயணித்து வருகிறார் ரெஜினா கசாண்ட்ரா. இதோ ‘விடாமுயற்சி’, இந்தியில் சன்னி தியோலுடன் ‘ஜாட்’ என பிஸி தருணங்களுக்கு இடையே கண்ணாடியில் தன்னை சரி செய்துகொண்டே மேக்கப் பிரஷ் சகிதமாக ஹலோ என்றார். ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/2a.jpg) 20 வருடங்கள்..?
9 வயதில் ஆரம்பிச்ச கரியர். நிறைய ஏற்ற இறக்கம், சில வெற்றிகள், பல பாடங்கள். திரும்பிப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. ஆனா, பல நேரங்கள் சினிமாவைவிட்டுப் போயிடலாமான்னுகூட யோசிச்சதுண்டு. இப்படி செய்தியேகூட வந்துச்சு. ஆனா, நான் போகணும்னு நினைக்கும்போது சட்டுனு இப்படி ஒரு பெரிய படம், பெரிய வாய்ப்பு வந்து கதவைத் தட்டி என்னை ஓட வைக்கும்.
![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/2b.jpg) அப்படித்தான் லாக்டவுன் டைம்ல கூட உலகமே வேலை இழந்து இருந்தப்ப எனக்கு சீரிஸ் தேடி வந்தது. இப்படி நான் நினைக்கும்போது சினிமாவும், சினிமா நினைக்கும்போது நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் ஓடிட்டு இருக்கோம். ஆனா, உண்மையா என்னுடைய உழைப்பைக் கொடுக்கற காரணம்தான் இந்த 20 வருடங்கள். மேஜிக்கா இருக்கலாம். பட், இதுதான் நிஜம்.
‘விடாமுயற்சி’..?
அஜித் சார் கூட நடிக்கணும் என்கிறது ஒரு பாக்கெட் லிஸ்ட் விருப்பம். ரொம்ப நாள் காத்திருப்பு. இப்ப அது நிறைவேறியிருக்கு. அவர் பற்றி நிறைய படிச்சிருக்கேன், ஃப்ரெண்ட்ஸ் சொல்லிக் கேட்டிருக்கேன். நிஜமாகவே அவர் ஒரு ஜென்டில்மேன்தான். எந்த பெரிய ஹீரோ தோரணையோ, பந்தாவோ, எதுவும் இருக்காது. சொல்லப் போனால் நானும் மனுஷன்தான். எல்லார்கிட்டேயும் பேசுற மாதிரி என் கிட்ட இருங்கன்னு நம்மை கம்ஃபர்ட் ஆக்கிடுவார்.
![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/2c.jpg) அர்ஜுன் சாரும் அப்படிதான். அதனால்தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு வைப் செட்டாகுது போல. ஜாலியா, கேஷுவலாக நீங்க எந்தத் தயக்கமும் இல்லாமல் பழகலாம்.
இயக்குநர் மகிழ் சார் பக்கா பிரில்லியன்ட். நிறைய புத்தகங்கள் கொடுத்த பக்குவமானு தெரியலை... அவர்கிட்ட ஒரு கம்போஸ்ட் வொர்க் பார்க்கலாம்.
லாஜிக்கா வேலை செய்வார்.இதெல்லாம் என்னுடைய வொர்க் எக்ஸ்பீரியன்ஸ். படமாக நாங்க எல்லாருமே எங்களுடைய பங்கை உண்மையா கொடுத்திருக்கோம். நல்ல மெமரியாவே இந்தப் படம் மறக்க முடியாத படம். இனி... இனி... ஆடியன்ஸ் கையிலதான் எல்லாமே இருக்கு.
எந்த கிசுகிசுவும் இல்லாத ஒரு நடிகை... இது எப்படி சாத்தியப்பட்டது ?
இதை நானும் பலமுறை யோசிச்சிருக்கேன். சில சர்ச்சைகள் வரும். அப்ப கூட எங்கேயாவது பேட்டிகளில் நான் இப்படி சொல்லிட்டேன்... தவறா எதையோ பேசிட்டேன்... இப்படியான சர்ச்சைகள், பிரச்னைகள்தான் வந்திருக்கே தவிர அந்த நடிகருடன்... இந்த இயக்குநருடன்... இப்படி நானும் படிச்சதே கிடையாது. அவ்வளவு ஏன்... என்னுடைய படங்களில் என்னுடைய கவர்ச்சி பத்தி கூட நான் செய்திகள் படிச்சிருக்கேன். ஆனா, கிசுகிசு..? நான் படிச்சதில்லை.
பொதுவா என்கிட்ட ஒரு பிரச்னை இருக்கு. யார்கிட்டயும் ரொம்ப நெருங்கிப் பழக மாட்டேன். வேலை முடிந்ததும் நேரா வீடு. ஃபிரண்ட்ஸ், பார்ட்டி, அவுட்டிங் இதெல்லாம் கிடையாது. எனக்கான வாய்ப்புகளில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கிறதுக்கு காரணமும் இதுதான். எனக்குன்னு ஒரு சின்ன நெருங்கிய நட்பு வட்டம்... அவர்கள் கூடதான் நேரம் செலவழிப்பேன். சினிமா இல்லைனா வேறு ஏதாவது திட்டம் இருந்ததா... சைக்காலஜியில மாஸ்டர் டிகிரி வரை செய்திருக்கீங்க..?
என் லைஃப்ல எதுவுமே நான் திட்டமிடலை. சின்ன வயதிலேயே கேமரா, மேக்கப் இதெல்லாம் என்னைத் தேடி வந்தது. தொடர்ந்து என்னைத் தேடி வந்த வாய்ப்புகளை செய்ய ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் அதேதான்.என்னை நம்பி வருகிற கதைகள், கேரக்டரை செய்கிறேன். மனிதர்களைப் படிக்க பிடிக்கும். அதுக்கு ஒரே வழி சைக்காலஜிதான். அப்படி ஒரு இன்ட்ரஸ்டில்தான் சைக்காலஜி படிச்சேன். ஒருவேளை சினிமா இல்லைனா சைக்காலஜிஸ்ட் ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன்.
‘மேக்கப் இல்லை என்றாலும் ஒரு நடிகையாக உங்ககிட்ட ஒரு தன்னம்பிக்கை இருக்கும்...’ இப்படி உங்களை வைத்து படம் இயக்கிய டைரக்டர்ஸ் சொல்றாங்களே..?
எந்தெந்த இயக்குநர்கள் அப்படி சொன்னாங்களோ... அவங்களுக்கு நன்றி.
ஒருவேளை படிப்பு கொடுத்த தன்னம்பிக்கையாக இருக்கலாம். நான் பார்த்த வரைக்கும் திரிஷா, காஜல் அகர்வால்... இவங்க கூட சேர்ந்து வேலை செய்திருக்கேன். இவங்ககிட்ட கூட இப்படியான தன்னம்பிக்கையை நான் பார்த்ததுண்டு. இவங்க எல்லாருமே படிச்சவங்க. அதனால்தான் பெண்களுக்கு கல்வி ரொம்ப அவசியம்னு சொல்றோம். படிச்சிட்டா நமக்கே தெரியாம நமக்கு ஒரு பவர் இருக்குற மாதிரி உணர்வோம்.
எதுவும் இல்லை... எக்ஸ்ட்ரா ஒரு மொழி தெரிஞ்சாலே நமக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருக்கும்.
அதனால்தான் எந்த மொழிக்கு போனாலும் எனக்கான இடத்தை என்னால் கண்டுபிடிக்க முடியுது. ஒருவேளை நான் தன்னம்பிக்கையா இருக்கிறதா மற்றவங்களுக்கு தெரிஞ்சா அது என் கல்வி கொடுத்ததாதான் இருக்கும். பல மொழிகளில் படங்கள்... இதை எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்?
ஒரு விஷயம் நான் சொல்லணும். வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் சினிமா துறை ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. அதிலும் குறிப்பாக நடிகைகள் வாழ்க்கையைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில் மரியாதையா இருக்கு. பாலிவுட்ல யாரும் யாரிடமும் பேசலாம். அவங்களுக்கு ஆங்கிலம் தெரிஞ்சாலே போதும். உங்ககிட்ட ரொம்ப சுலபமா நெருங்க முயற்சி செய்வாங்க.
ஆனா, இங்கே அப்படி இல்லை. யாரா இருந்தாலும் ஒரு ஸ்டெப் தள்ளி நின்னு நமக்கான மரியாதை கொடுப்பாங்க. இந்த வித்தியாசங்களைத்தான் நான் வட இந்திய சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கு மிடையில பார்க்கறேன்.
மத்தபடி எந்த மொழியானாலும் அதனுடைய அடிப்படை கலாசாரம், பழக்க வழக்கங்களை தெரிஞ்சுக்க முயற்சி செய்வேன். அப்பதான் புரிந்து நடிக்க முடியும். மொழி தெரியலைன்னாலும் புரிஞ்சுக்க முயற்சி செய்வேன்.
இந்த 20 வருட காலங்களில் இந்திய சினிமாவில் நீங்க பார்த்த மிகப்பெரிய மாற்றம் என்ன?
இந்திய படங்களா உருவாக்க ஆரம்பிச்சி இருக்கோம். நடிகர்கள், டெக்னீசியன்கள் மொழி கடந்து வேலை செய்றாங்க. வாய்ப்புகள் நிறைய உருவாகி இருக்கு. எல்லாத்துக்கும் மேல பெண்கள் அவங்களுக்கு நடக்குற பிரச்னையை தைரியமா வெளியே சொல்லலாம் என்கிற இடம் கிடைச்சிருக்கு.
இதெல்லாம் ரொம்ப பெரிய மாற்றம். அதே போல் திருமணம் ஆகிட்டா அல்லது 30 வயதைக் கடந்துட்டா ஒரு நடிகைக்கு ஹீரோயினா அல்லது மெயின் கதாபாத்திரமா நடிக்க வாய்ப்பு கிடைக்காது. அக்கா, அண்ணி... இப்படி ஈஸியா மாத்திடுவாங்க. அந்த நிலை மாற ஆரம்பிச்சிருக்கு. 40 கடந்தாலும் லீடிங் நடிகைகளா நிறைய நடிகைகள் ஜெயிச்சுட்டு இருக்காங்க. இதெல்லாம் பார்க்க சந்தோசமா இருக்கு.
உங்க அடுத்தடுத்த படங்கள்..?
‘விடாமுயற்சி’க்காக காத்திருக்கேன். தொடர்ந்து சன்னி தியோல் சார் கூட ‘ஜாட்’ படம். அவருடைய ‘கடார் 2’ படத்துக்குப்பிறகு இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியடையும்னு நம்பறேன்.
அப்புறம் நவாசுதீன் சித்திக் சாருடன் ‘செஷன் 108’, தமிழில் ஏற்கனவே ‘ஃபிளாஷ் பேக்’ படம் முடிஞ்சு ரிலீசுக்கு காத்திருக்கு.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|