விஸ்காம் படிச்சது நடிகையா உதவுது!
‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜிகர்தண்டா எக்ஸ்’, ‘போர்’ போன்ற படங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் சஞ்சனா நடராஜன். ‘‘விஸ்காம் படிப்புதான் என்னை நடிகையாக்கியது...’’ எனும் சஞ்சனா இப்போது பா.இரஞ்சித் தயாரிப்பில் தினகர் இயக்கியுள்ள ‘பாட்டில் ராதா’வில் நடித்துள்ளார். சினிமாவுக்காக விஸ்காம் படிச்சீங்களா?சினிமாவுக்கு வரணும் என்ற ஐடியாவும் கிடையாது. விஸ்காம் படிக்கும்போது சில குறும்படங்கள் எடுப்பேன். அதன் வழியாக சில வாய்ப்பு கிடைச்சது. முயற்சி செய்து பார்ப்போம், இல்லைனா ஆசையை அடியோடு அழிச்சுடுவோம் என்ற எண்ணத்தில்தான் சினிமா பக்கம் வந்தேன்.
சிலருக்கு படிப்பு வேற வேலை வேறன்னு அமையும். என் விஷயத்துல நான் படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி வேலை கிடைச்சது. கேமராவுல என்ன லென்ஸ் இருக்கும், கதை எழுதுவது எப்படி என டெக்னிக்கலாகவும் விஸ்காம்ல கத்துக்கிட்டேன். அப்படி என்னுடைய படிப்புதான் சினிமாவுக்கான தொடக்கமா இருந்துச்சு.
‘பாட்டில் ராதா’வுல உங்களுக்கு பவர்ஃபுல் கேரக்டர்ன்னு சொல்றாங்க?
இயக்குநர் தினகர், பா.இரஞ்சித் டீம் மட்டுமல்ல, அவருக்கு நெருங்கிய நண்பர். ‘சார்பட்டா பரம்பரை’ பார்த்துட்டு இயக்குநர் தினகர் கூப்பிட்டார். கதையைக் கேட்டதும் என் மனசுல பளிச்சுன்னு ஒட்டிக்கிட்ட விஷயம் மதுவுக்கு அடிமையான ஒருவரின் லைஃப் எப்படி டிராவலாகும் என்பதுதான்.
அதேசமயம் இந்தப் படம் மதுவால் ஏற்படும் விளைவுகளை மட்டும் பேசும் சோகப் படமும் கிடையாது.மதுவுக்கு அடிமையான ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளும்போது எப்படி கன்ட்ரோல் பண்ணிக்க முடியும் என்பதுதான் படம். மதுவுக்கு அடிமையானவர்களைச் சுற்றியுள்ளவர்களின் போராட்டத்தையும் படம் தெளிவாகப் பேசும். படத்துல குருசோமசுந்தரம் ஜோடியா வர்றேன். கேரக்டர் பேர் அஞ்சனம். அந்த மாதிரி கேரக்டரை நிறையப் பார்த்திருப்பீங்க. அஞ்சனம் மனைவியா எப்படி ஃபீல் பண்றாங்க என்பதைவிட மதுவுக்கு அடிமையான ஒருவருடன் டிராவல் பண்ணுகிறவர்களின் உண்மையான உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
உதாரணத்துக்கு, மனைவிக்குதான் அந்த வேதனை, வலி எல்லாம்னு நினைப்போம். அம்மாவுக்கு, மகளுக்கு, நண்பருக்கு என சுத்தி இருக்கிற எல்லாருக்கும் அந்த வலி இருக்கும். என் வாழ்க்கையிலும் அப்படியொரு உதாரணத்தைச் சொல்ல முடியும். சின்ன வயசுலேர்ந்து என்னை வளர்த்தவர், அன்புக்குரிய ஒருவர் சமீபத்துல இறந்தார். அவர் இறப்புக்கான காரணங்களில் மதுவும் ஒன்று. அது எனக்கு பெரிய பயத்தைக் கொடுத்துச்சு.
அப்படியொரு மனநிலையில் இருந்த எனக்கு இந்தக் கதையைக் கேட்டதும் இது மக்களுக்கு கண்டிப்பா போய்ச் சேர வேண்டிய ஸ்கிரிப்ட் மட்டுமல்ல, அதைச் சேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்புன்னும் தோணுச்சு.
இந்த மாதிரி கதை நான் சினிமாவுக்கு வந்த புதுசுல வந்திருந்தாலும் பண்ணியிருப்பேன். அஞ்சு வருஷத்துக்குப் பிறகும் பண்ணியிருப்பேன். தினகர் சார் என் மேல நம்பிக்கை வெச்சு இந்த வாய்ப்பு கொடுத்ததை பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். நானும் இந்த மாதிரி கதைகளில் நடிக்கணும் என்பதை என்னுடைய கடமையாகவும் நினைக்கிறேன்.
படத்தில் எந்த காட்சியை ரசிச்சு பண்ணினீங்க?
வீட்ல படமாக்கப்பட்ட முக்கியமான காட்சி அது. நானும் என்னுடைய இரண்டு பசங்களும் அந்த சீன்ல இருப்போம். ரொம்ப பவர்ஃபுல்லான சீன். என்ன சீன்னு ரிலீஸுக்கு முன்னாடியே சொல்ல முடியாது. ஆனால், அதுதான் என் மனசுக்குப் பிடிச்ச காட்சி. சிங்கிள் டேக்ல எடுத்தோம்.
சஞ்சனா என்றாலே அழுது வடியும் கேரக்டருக்குதான் அழைப்பு வருகிற மாதிரி தெரியுதே..?
கலர்ஃபுல் கதை எடுத்தால் கலர்ஃபுல்லா பார்க்கலாம். இப்போதுவரை நான் செய்துள்ள படங்கள் எல்லாமே தனித்துவமானது. இது எனக்கு மட்டுமல்ல, சினிமாவுல உள்ள எல்லோருக்கும் நடக்கும். சினிமாவுல டைப் காஸ்ட்டை தவிர்க்க முடியாது. ஒரு பேட்டியில் குருசோமசுந்தரம் சார், ‘கதை, கேரக்டர் பிடிச்சிருந்தாலும் இனிமேல அப்பா கேரக்டர் பண்ணமாட்டேன்’னு சொல்லியிருந்தார். ஆக, டைப் காஸ்டிங் எனக்கு மட்டும் நடக்கும் பிரச்னை அல்ல.
ஒரு வழி இருக்கு. எனக்கு வரும் படங்களைத் தேர்வு செய்யும்போது அடுத்தடுத்த படங்களில் இது மாதிரி என்னை காண்பிக்க நினைக்கிறேன்னு தேர்வு செய்யலாம்.தனிப்பட்ட விதத்துல எனக்கும் டைப் காஸ்ட் பண்ணாம பரீட்சார்த்த முறையில் கேரக்டர்ஸ் பண்ணணும் என்ற ஆசை இருக்கு. அது ஃபிலிம் மேக்கர்ஸ் கையில் உள்ளது.
இதுவரை நான் செய்த படங்கள் எதுவுமே ஒரே மாதிரி இருக்காது. ‘பாட்டில் ராதா‘, ‘ஜிகர்தாண்டா’, ‘போர்’ என எல்லாமே வித்தியாசமான கேரக்டர்ஸ். ‘போர்’ல முற்றிலும் மாடர்ன் கேரக்டர். அந்தப் படத்துக்கும் ‘பாட்டில் ராதா’ படத்துக்கும் எந்த ஒற்றுமையும் இருக்காது. அதேசமயம் நடிகையாக கமர்ஷியல், சீரியஸ் என எந்த வேடம் கொடுத்தாலும் செய்ய ஆயத்தமா இருக்கிறேன். உங்களுக்கு திருப்புமுனை கொடுத்த படம் எது?
‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜெகமே தந்திரம்’ போன்ற படங்கள் என் மீதான அட்டென்ஷனை ஏற்படுத்துச்சு. நடிகையாக என்னை உணர வெச்ச படம் ‘பாட்டில் ராதா’. வாய்ப்பு தேடும் காலங்களில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
என் மனநலம் நன்றாக இருக்க காரணம் ஃபேமிலி சப்போர்ட். வேலை இல்லாம வீட்ல இருந்தாலும் என்கரேஜ் பண்ணுகிறவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். நான் சோர்வா இருந்தால் அவர்கள் சப்போர்ட் பண்ணுவார்கள். எந்த கட்டத்திலும் என்னுடைய முயற்சி, காத்திருப்பு வேஸ்ட்ன்னு ஃபீல் பண்ண வெச்சதில்லை.
பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் பற்றி?
ரெண்டு இயக்குநர்களுடனும் தலா இரண்டு படங்கள் பண்ணியிருப்பதை ஆசீர்வாதமா பார்க்கிறேன். ஒரு வாய்ப்பு கொடுப்பதே பெரிய விஷயம். ரெண்டாவது வாய்ப்பு தருகிறார்கள் என்றால் நான் எதாவது ஒரு விஷயம் பண்ணியிருக்கிறேன், அவர்கள் நம்பிக்கையை வீணாக்காமல் நடிச்சிருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.
எஸ்.ராஜா
|