இஸ்ரோவில் கெத்து காட்டும் தமிழ்நாடு
நேற்றும் தமிழர்தான்... இன்றும் தமிழர்தான்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் வி.நாராயணன். முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளது தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. மேம்பட்ட விண்வெளி ஆய்வுகளிலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களிலும், மனித விண்வெளி பயணங்களிலும் இஸ்ரோ முன்னேற்றம் அடைந்துவரும் சூழ்நிலையில் டாக்டர்.வி.நாராயணனின் தலைமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேலக்காட்டுவிளை என்ற சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் வி.நாராயணன். அங்குள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் கல்வி பயின்றார். பின்னர் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் முதல் ரேங்க் எடுத்தார். தொடர்ந்து இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எஞ்சினியர்ஸின் ஏஎம்ஐஇ தேர்வில் வெற்றி பெற்றார். இதன்பிறகு அவர் கரக்பூர் ஐஐடியில் எம்.டெக் கிரையோஜெனிக் எஞ்சினியரிங் படித்தார். முதல் வகுப்பில் வெள்ளிப் பதக்கத்துடன் வெளிவந்தார். இதனுடன் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங்கில் பிஹெச்.டியும் செய்தார்.
1984ம் ஆண்டு அவர் இஸ்ரோவில் சேர்ந்தார். திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து அவரின் கிராஃப் தொடங்கியது. திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (Liquid Propulsion Systems Centre) இயக்குனராக அமர்வதற்கு முன் பல்வேறு விண்வெளித் திட்டங்களில் முக்கிய பங்காற்றினார்.
அதாவது Propulsion Systems உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஆரம்ப நாட்களில் வளிமண்டல ஆய்விற்கான ரோகிணி சவுண்டிங் ராக்கெட், ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்தார்.
இதுதவிர சந்திராயன் 1, 2, 3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, ககன்யான் திட்டம் ஆகியவற்றிலும் இவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளின் உருவாக்கத்திலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
ஜிஎஸ்எல்வி மார்க் III சி25 கிரையோஜெனிக் திட்டத்தின் இயக்குனராக இருந்தார். இது சந்திரயான் 2, 3 திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. அப்போது இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், 2018ம் ஆண்டு திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் வி.நாராயணன்.
பின்னர் 2019ம் ஆண்டு சந்திரயான் 2 மிஷன் கடினமாக தரை இறங்கியதற்கான காரணங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்தார். அவரது குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது வெற்றிகரமாகவும் அமைந்தது. வி.நாராயணன் தனது பங்களிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் தங்கப்பதக்கம், ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய ஏரோநாட்டிக்கல் பரிசு உள்ளிட்டவை அடங்கும். இஸ்ரோவில் நாற்பது ஆண்டுகால அனுபவமுள்ள அவர் இப்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஹரிகுகன்
|