மாமனாரும் மனைவியும் இல்லைனா நான் பிசினஸ்மேன் ஆகியிருக்க முடியாது!
சென்னை வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும். அப்படித்தான் பலரும் நகர வாழ்க்கையைக் கடந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் கை நிறைய சம்பளம் இருந்தும் அது வேண்டாம் என்று உதறிவிட்டு சொந்த ஊரில் விவசாயம் மற்றும் தொழில் செய்யலாம் என்ற முடிவு எடுத்தது மட்டுமில்லாமல் அதனை திறமையாகவும் செயல்படுத்தி வருகிறார்கள் ஜெனி மற்றும் டேனிக் ராஜா வளவன் தம்பதியினர்.
நஷ்டத்தில் செயல்பட்டு வந்த பழச்சாறு நிறுவனத்தை இவர்கள் தங்கள் கைவசம் எடுத்தது மட்டுமில்லாமல்அதனை லாபகர நிறுவனமாகவும் மாற்றியுள்ளனர்.
மனைவி நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேஷன் பார்த்துக்கொள்ள கணவர் ராஜா விவசாயம் மற்றும் விற்பனையை பார்த்துக் கொள்வதால் நொடிந்த நிலையில் இருந்த நிறுவனத்தை இருவராலும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. “பொறியியல் படிப்பு... அதன்பிறகு எம்பிஏ முடிச்ச கையோடு ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். பிசினஸ் என்னுடைய தளம் கிடையாது. அது எப்படி செய்யணும்னு கூட எனக்கு தெரியாது.
நான் இந்தத் துறைக்கு வர என் மாமனாரும் மனைவி ஜெனியும்தான் காரணம். என் மாமனார் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தார். அதனால் அவருக்கு பிசினசை எவ்வாறு நடத்த வேண்டும்ன்னு தெரியும். அதில் நல்ல அனுபவசாலியும் கூட. என் மனைவி சின்ன வயசில் இருந்தே தன் அப்பா பிசினஸ் செய்வதைப் பார்த்து வளர்ந்தவர். என் மனைவியும் பொறியியல் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். அவர் நிர்வாகத் துறை சார்ந்த வேலையில் இருந்தார். அதனால் அந்தத் துறையில் நல்ல அனுபவம் அவருக்கு இருந்தது.
அவர் படிக்கும் காலத்தில் இருந்தே தன் தந்தையின் பிசினசில் உதவி செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரு தனியார் நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு என் மாமனார் என்னிடம் ‘வேறு ஒருவரிடம் கை கட்டி வேலை பார்ப்பதற்கு நீங்க ஏன் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கக் கூடாது’ன்னு கேட்டார்.
ஆரம்பத்தில் எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. பிசினஸ் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி அதில் கால் பதிப்பது என கொஞ்சம் பயந்தேன். ஆனால், என் மனைவியும் மாமனாரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தர முன்வந்ததால், பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தேன்.
ஒருவரிடம் கைகட்டி மாச சம்பளம் வாங்குவதற்கு பதில் நமக்காக வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்து நாமும் வேலை செய்ய முடிவு செய்தேன். உடனே சொந்த ஊரான கம்பத்திற்கு வந்தேன்...’’ புன்னகைக்கும் ராஜா, தனக்கு விவசாயம் குறித்த அரிச்சுவடி கூடத் தெரியாது என்கிறார். ‘‘கம்பம் முழுக்க விவசாயம் சார்ந்த இடம்.
எனக்கோ விவசாயம் தெரியாது. அதனால் ஆக்ரோ சார்ந்த தொழில் செய்ய முடிவு செய்தேன். அந்த சமயத்தில் ஏற்கனவே பழச்சாறுகள் மற்றும் ஸ்க்வாஷ் போன்ற பானங்களை தயாரித்து வந்த நிறுவனம் ஒன்று நஷ்டத்தில் இருப்பதால் அவர்கள் தங்களின் நிறுவனத்தை விற்க இருப்பது பற்றி தெரிய வந்தது. அந்த நிறுவனத்தை நான் வாங்க முடிவு செய்தேன். அதை முழுமூச்சோடு செயல்படுத்த திட்டமிட்டேன். அந்த நிறுவனத்தில் திராட்சை, மாம்பழச்சாறுகள் ஸ்க்வாஷ் போன்ற பானங்களை தயாரித்து வந்துள்ளனர். சரியான முறையில் நிர்வாகம் செய்ய முடியாத காரணத்தால் அவர்களால் அதனை சக்சஸ்ஃபுல்லாக செயல்படுத்த முடியவில்லை. அதனால் விற்க முன்வந்துள்ளார்கள்.
நான் அந்த நிறுவனத்தை மீண்டும் ஃபிரஷ்ஷாக ஆரம்பிக்க திட்டமிட்டேன். நிறுவனத்தின் நிர்வாகத்தை நானும் என் மனைவியும் கையில் எடுத்தோம். நான் ஐடி துறையில் கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குறித்த வேலையில் ஈடுபட்டு வந்ததால், நஷ்டத்தில் இருக்கும் தொழிலை எவ்வாறு மீட்டு எடுக்க முடியும்ன்னு திட்டமிட ஆரம்பித்தேன்...” என் ராஜா நிறுத்த, தொடர்ந்தார் அவரது மனைவி ஜெனி.
“நாங்க வாங்கிய நிறுவனத்தில் ஏற்கனவே 200 பேர் வேலை பார்த்து வந்தாங்க. பொதுவாக ஒரு நிறுவனம் புதிய நிர்வாகத்தின் கைக்கு மாறும்போது அங்கு வேலை பார்த்த பழைய ஊழியர்களை நீக்குவது வழக்கம். புதிய நிர்வாகம் புதிய வேலையாட்களை நியமிப்பார்கள்.
நாங்கள் அப்படிச் செய்யல. அதற்கான முதல் காரணம் அவர்கள் அனைவரும் அனுபவ முள்ளவர்கள். மேலும் பழச்சாறுகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள். எல்லோரும் பெண்கள் என்பதால், வேலையிலும் பொறுப்பாகச் செயல்படுவார்கள்.
தயாரிக்கப் போகும் பழச்சாறுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை மட்டும் நான் கொண்டு வந்தேன். பொருட்கள் தயார். அடுத்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து சொந்தமா ஒரு அவுட்லெட் போடலாம்ன்னு முடிவு செய்தோம்.
எங்களுக்கு சொந்தமா திராட்சை தோட்டம் இருக்கு. அதில் ஒரு விற்பனை கவுண்டரை அமைத்தோம். அதனைத் தொடர்ந்து திராட்சை தோட்டத்தைப் பார்க்க பார்வையாளர்களை அனுமதித்தோம்.
பலர் திராட்சை தோட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாங்க. ஆனால், அதனை நேரில் பார்த்திருக்க மாட்டாங்க. அவ்வாறு பார்க்க விரும்புபவர்கள் எங்களின் திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம். அங்கு நேரடியாக திராட்சை பழரசத்தை சுவைத்தும் மகிழலாம். இங்கு வருபவர்கள் எங்களின் பழச்சாறு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரடியாக பார்க்கும்படி ஒரு மினி டூர் ஏற்பாடு செய்தோம்.
தோட்டத்திற்கு டூர் வருபவர்கள், அதனை சுவைத்துப் பார்த்து வாங்கவும் செய்தார்கள். வெளியூரில் இருந்தும் ஆர்டர் வரத் துவங்கியது. படிப்படியாக விற்பனையும் அதிகரித்தது.
அடுத்து எங்களின் தோட்டத்தினை கூகுள் மேப்புடன் இணைத்திருக்கிறோம். அதனால் பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்ல முடிகிறது.
எங்க தோட்டம் சபரிமலை போகும் ஹைவே சாலையில் அமைந்திருப்பதால், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அந்த சமயத்தில் அன்னதானம் செய்வோம். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்கு இளைப்பாறிச் செல்வார்கள். சிலர் எங்களின் பழச்சாறுகளை வாங்கியும் செல்வார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் இருந்தும் பலர் தோட்டத்தைப் பார்க்க வருகிறார்கள்...’’ என்ற ஜெனி, திராட்சை, மாம்பழம், அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்களில் இருந்தும் பழச்சாறுகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.‘‘பழங்களைப் பொறுத்தவரை எல்லாப் பழங்களும் 365 நாட்களும் கிடைக்காது. சீசனுக்கு ஏற்பதான் பழங்களின் விளைச்சல் இருக்கும் என்பதால், அதற்கு ஏற்பதான் பழங்களை நாங்க வாங்குவோம்...’’ என்று பேசத் துவங்கினார் ராஜா.
‘‘சில பழங்கள் சீசனுக்கு ஏற்ப குறிப்பிட்ட மாதத்தில் விலை குறைவாகக் கிடைக்கும். அந்த சமயத்தில் பழங்களை வாங்கி பழச்சாறுகள் தயாரிப்போம். அன்னாசி கேரளாவிலும், மாம்பழம் கிருஷ்ணகிரியிலும், ஆப்பிள் இமாச்சலப்பிரதேசத்தில் இருந்தும் நேரடியாக வாங்குகிறோம். காரணம், மூலப்பொருட்கள் தரமாக இருந்தால்தான், அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் தரமாகக் கொடுக்க முடியும்.
பழங்கள் மட்டுமில்லாமல் பழச்சாறுகள் நிரப்பக்கூடிய பாட்டில்களைக் கூட நாங்களே தயாரிக்கிறோம். நான் பொறியியல்பட்டதாரி என்பதால், பாட்டில்களைத் தயாரிக்கக் கூடிய இயந்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வடிவமைத்து அதனை ரெடி செய்தேன். பழச்சாறுகளைத் தொடர்ந்து பழங்களில் இருந்து வைனும் தயாரிக்கிறோம்.
ஆனால், எங்களின் முக்கிய பிசினஸ் பழச்சாறுகள் என்றாலும் தோட்டத்திற்கு வருபவர்கள் வைன் குறித்து கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற்று மது அல்லாத வைனை தயாரித்து விற்பனை செய்கிறோம். வைனைப் பொறுத்தவரை அதனை நொதிக்க வைக்கும் முறையில்தான் அது மதுவாக மாறுகிறது. 2% குறைவாக அதன் நொதித்தல் தன்மை இருந்தால் அதில் மதுவின் தன்மை இருக்காது. அதுவே கொஞ்சம் அதிகமானால் மதுபானமாக மாறும். அதற்கு முக்கியமாக வைனில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்த வேண்டும். எங்க தோட்டத்தில் தயாரிக்கப்படும் வைன் மதுபான வகையில் சேராது என்பதால், அனைவரும் சாப்பிடலாம்.
பழச்சாற்றினை - வைனை - பருகியதும் புளிப்புத் தன்மையுடன் அதைக் குடித்த உணர்வு ஏற்படுமே தவிர போதை தராது. வைனை திராட்சையில் மட்டுமில்லாமல் ஆப்பிள், நேந்திரம் பழம் மற்றும் அன்னாசிப் பழத்தில் இருந்தும் தயாரிக்கிறோம். திராட்சைதான் எங்களின் மெயின் மூலப்பொருள் என்பதால், அதில் இருந்து ஊறுகாய், ஜாம், டீ போன்றவற்றை தயாரித்து வருகிறோம்.
என்னதான் நான் தொழில் வளர்ச்சியடைய பல பொருட்களைத் தயாரித்தாலும், ஒரு நிறுவனத்திற்குத் தேவையான நிர்வாகத்திறமை இருந்தால் மட்டுமே அதனை லாபத்தில் கொண்டு செல்ல முடியும். அதற்கு என் மனைவி எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகள் முன்பு என் மாமனார் தவறிவிட்டார். அவர்தான் எங்களின் முழு பலம். அவரின் வழிகாட்டுதலில் இந்த நிறுவனத்தை மட்டுமில்லாமல் அவரின் பண்ணையையும் தன் அக்காவுடன் இணைந்து ஜெனி பார்த்துக் கொள்கிறார்.இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இதில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தினை பார்த்திருக்க முடியாது...’’ என்கிறார் டேனிக் ராஜா.
ப்ரியா
|