வணங்கான் கண்கள்



தமிழ் சினிமாவில் பாலா படங்கள் என்றால் சில அதிர்வுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘வணங்கான்’ படமும் பாலாவின் முத்திரைப் படமாக வெளியாகி, பரவலான பாராட்டுகளை அள்ளியுள்ளது. 
கதையோடும், கதைக்களத்தோடும் பின்னிப்பிணைந்து பார்வையாளர்களுக்கு காட்சி ஊடகத்தின் அனுபவத்தை விஷுவலாகக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ஒளிப்பதிவாளர் குருதேவ். இவர் ‘யோகி’, ‘ஆதிபகவன்’, ‘மேகா’, ‘இரும்புக்குதிரை’, ‘காஞ்சனா - 2’, ‘கொரில்லா’, ‘யுத்தம் செய்’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

‘வணங்கான்’ கதையைப் படிச்சதும் உங்க மனசுல என்ன தோணுச்சு?

பாலா சாருடன் இதுதான் எனக்கு முதல் படம். முதல் சந்திப்பிலேயே ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொன்னதோடு உங்களுடைய ‘இன்புட்’டை சொல்லுங்கன்னு கேட்டார்.
ஸ்கிரிப்ட் படிக்கும்போதே பெரிய ஆர்வத்தைக் கொடுத்துச்சு.

ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுட்பமாக எழுதியிருந்ததைப் படிக்கும்போது எனக்குள் பெரும் வியப்பை உண்டு பண்ணுச்சு.

ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் என்ன டோன்ல படமாக்கலாம், எந்தெந்த லொகேஷன்களில் எடுக்கலாம்ன்னு எல்லா அமசங்களையும் விரிவாக டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சோம்.
அந்த வகையில் கதையைப் படிச்ச முதல் நாளிலிருந்தே கேமராமேனாக என்னுடைய வேலையை ஆரம்பிச்சுட்டேன். அது எனக்கு தினம் தினம் பல புது அனுபவமா இருந்துச்சு.

பாலாவுடன் ஒர்க் பண்ணிய அனுபவத்தைச் சொல்லுங்க?

பாலா சார் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவருடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பமா இருந்துச்சு. சினிமாவுல பல வருஷமா இருக்கிறேன். ஆனால், இந்தப் படத்துக்காகத்தான் அவரை முதன் முதலில் சந்திச்சேன். முதன் முறையாக அவருடன் சேர்ந்து வேலை பார்த்தேன்.பாலா சாரைப் பொறுத்தவரை அவர் எந்தக் காட்சியாக இருந்தாலும் பொறுமையா எடுப்பார். அவர் எதிர்பார்க்கும் நேர்த்தி கிடைக்கும் வரை எடுப்பார்.

கேமராமேன்களுக்கு எந்த டென்ஷனும் இருக்காது. வேலையில் மிகவும் அர்ப்பணிப்போடு இருப்பார். காஸ்டியூம், ஹேர் டிரஸ்ஸிங், ஆர்ட், சண்டை என எல்லா துறைகளும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அந்தளவுக்கு படத்தோட ஒவ்வொரு காட்சி, அதில் இடம்பெறக்கூடிய விஷயங்கள் என எல்லாவற்றையும் துல்லியமாகத் தெரிஞ்சு வெச்சிருப்பார்.

கேமராமேனாக படத்துல என்ன சவால் இருந்துச்சு?

பாலா சாருடன் வேலை செய்வது என்பது பெரிய அனுபவம். அவருடைய சிந்தனை, கேரக்டர் சித்தரிப்பு, காட்சியை விவரித்தல் என எல்லாத்தையும் திரைக்கு கடத்துவது என்பது சவாலான விஷயம். டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட் என எல்லோருடைய பங்களிப்பு இருந்தாலும் என்னுடைய ஆளுமைன்னு ஒருவரும் சொல்ல முடியாதளவுக்கு பாலா சாரின் ‘டச்’ எல்லா துறைகளிலும் இருக்கும்.

நடிகர் ஒரு ரியாக்‌ஷன் காண்பித்திருந்தார் என்றால் அது பாலா சார் வெளிப்படுத்தியதாக  இருந்திருக்கும். கேமராமேனாக என்னுடைய ஒர்க்கை நீங்க பாராட்டுவதாக இருந்தாலும் அதுல பாலா சாரின் சஜஷன், வழிகாட்டுதல் இல்லாமல் இருக்காது.

லொகேஷன் போகும்போதே என்ன மாதிரி எடுக்கலாம்ன்னு பேசி வெச்சுப்போம். படத்துக்காக செட் போடுவதாக இருந்தால் அந்த இடத்தை தேர்வு செய்வதிலிருந்து செட் ஒர்க் முடியும் வரை விசிட் அடிச்சு செட் அவர் எதிர்பார்த்த மாதிரி இருக்கிறதா என்று தெரிஞ்சுக்குவார். அப்படி லொகேஷன் தேர்வுக்காக பல மாதங்கள் அலைந்திருப்போம். அவருடைய மேற்பார்வை இல்லாமல், நாலெட்ஜ் இல்லாமல் படத்தில் எந்த ஃபிரேமும் இடம் பெறாது.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் எடுத்தது பெரிய சவாலா இருந்துச்சு. அந்த இடத்துல வேற யாராவது எடுத்தார்களா என்று தெரியாது.
காற்று பலமாக வீசக் கூடிய பகுதி என்பதால் நெனச்ச மாதிரி லைட் வெக்க முடியாது. ஜிம்மி ஜிப் ஆடி ஆட்டம் கண்டுச்சு. ட்ரோன் ஷாட் கொஞ்சம் உதவியா இருந்துச்சு. திருவண்ணாமலை பகுதியில் எடுத்ததும் சவாலாக இருந்துச்சு.

சன் ரைஸ், சன் செட், கடை வீதிகள் என எல்லாவற்றையும் லைவ் லொகேஷனில் எடுத்தோம். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் எடுத்தது சவால். அவருடன் வேலை செய்ததில் எந்த அழுத்தமும் இல்லை. எனக்கான சுதந்திரம் இருந்துச்சு. கேமராமேனாக அழுத்தம் இருந்துச்சா என்று கேட்டால், பாலா சாருடன் ஒர்க் பண்ணியதைப் பெருமையாகப்
பார்க்கிறேன்.

அருண் விஜய் எப்படி?

அவருடைய அர்ப்பணிப்பு ஆச்சர்யப்படுத்தும். சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நிறையவே ரிஸ்க் எடுத்தார். இயக்குநரின் நடிகர் எனுமளவுக்கு தன்னுடைய பங்களிப்பை பிரமாதமாகக் கொடுத்தார். ஹீரோயின் ரோஷினி பிரகாஷ் பிரமாதமான நடிகை. தமிழில் சில படங்கள் செய்துள்ளார். படத்துல அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்துச்சுன்னு நீங்களே பார்த்திருப்பீங்க.

ஒவ்வொரு கேமராமேனுக்கும் லைட்டிங், கேமரா கோணங்கள் என தனிப்பட்ட ஸ்டைல் இருக்கும். உங்களுக்கு பிரத்யேகமான ஸ்டைல் இருக்கிறதா?

நான் ஆரம்பத்திலிருந்தே எனக்கு என்று ஸ்டைல் ஃபிக்ஸ் பண்ணவில்லை. நான் வேலை செய்த ஒவ்வொரு படமும் வண்ணமயமாக, வறட்சியாக என ஒவ்வொரு டோனில் இருந்திருக்கும். 

அது எல்லாமே கதை என்ன டிமாண்ட் பண்ணுச்சு, இயக்குநரின் எதிர்பார்ப்பு என்ன என்கிற விதத்தில்தான் இருந்திருக்கும்.தனிப்பட்ட விதத்துல என்னுடைய கேமரா ஆளுமையைப் புகுத்தணும்னு நினைக்கமாட்டேன். எவ்வளவு பெரிய கேமராமேனாக இருந்தாலும் டைரக்டரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் கேமராமேனின் அடிப்படை வேலையாக இருக்கும். நானும் அதே கண்ணோட்டத்தில்தான் வேலை பார்க்கிறேன்.

அப்படி எந்தவிதத்திலும் ஸ்கிரிப்ட்டை டாமினேட் பண்ணாமல் வேலை செய்வதுதான் என்னுடைய ஸ்டைல் என்று சொல்லலாம்.அதுமட்டுமல்ல, கேமரா மேன் தனி ஸ்டைல் இல்லாமல் பண்ணுவதுதான் பெட்டர்னு நினைப்பேன். கதையோடு சேர்ந்து பண்ணும்போதுதான் பேசப்படும். 

அதுதான் கேமராமேனுக்கு பேர் வாங்கித்தரும். ‘சிக்குபுக்கு’, ‘யோகி’, ‘கென்னடி கிளப்’ என்று ஏராளமான படங்கள் பண்ணினேன். அந்தப் படத்தின் கதைக் களத்துக்கு ஏற்ற மாதிரிதான் லைட்டிங், கேமரா கோணங்கள் இருந்திருக்கும்.

எனக்கு கேமரா தெரியும் என்று எந்த இடத்திலும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை, வித்தையைக் காண்பித்திருக்கமாட்டேன். ‘காஞ்சனா’ ஹாரர் படம். அந்தப் படமும் நான் பண்ணியதுதான். வில்லேஜ் படம் என்றால் அதுக்கேத்த மாதிரி இருக்கணும். இல்லையென்றால் படத்தோட நேச்சுராலிட்டி போயிடும்.

தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி இப்போது எப்படி உள்ளது?

நான் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டமா இருந்துச்சு. இப்போது கேமரா தொழில்நுட்பம் ஏஐ வரை வளர்ந்துள்ளது. அதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கலர் கரக்‌ஷனில் ஆரம்பிச்சு டூப் வரை ஏஐ டெக்னாலஜியில் நெனைச்சதைப் பண்ணமுடியும். சிஜி ஒர்க், டிஐ போன்ற வேலைகளைச் செய்வதில் கேமராமேன்களின் பணிகள் எளிதாகியுள்ளது.

எஸ்.ராஜா