Must Watch



முரா

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம், ‘முரா’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. மனு, மனாவ், ஆனந்த், சஜி ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். இதில் ஆனந்த் மட்டுமே ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். மற்ற மூவரும் மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டவர்கள்.

நான்கு நண்பர்களும் சரியாகப் படிப்பதில்லை. பொறுப்புகளைத் தட்டிக் கழித்து தங்களின் போக்கில் வாழ்ந்து வருகின்றனர். பணத் தேவைகளுக்காக அடியாட்களாக வேலை செய்கின்றனர். 

பயமில்லாமல் நான்கு நண்பர்களும் செய்யும் வேலை உள்ளூர் தாதாவைக் கவர்கிறது. அவரது நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுகின்றனர். அந்த தாதா நான்கு நண்பர்களையும் நம்பி பெரிய வேலையைக் கொடுக்கிறார்.

அந்த வேலை என்ன? அதை நண்பர்கள் செய்து முடித்தார்களா? அந்த வேலையால் நண்பர்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது... என்பதை அறிய படத்தை ஒரு முறை பாருங்கள். எங்கேயும் சலிப்புத் தட்டாமல் திரைக்கதையை சுவாரஸ்யமாக கொண்டு போயிருப்பது சிறப்பு. நான்கு நண்பர்கள் கதாபாத்திரங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் அசத்துகின்றனர். படத்தின் இயக்குநர் முகமது முஸ்தஃபா.

 த ரவுண்ட்அப் : பனிஷ்மென்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் டிரெண்டிங் லிஸ்ட்டில் இருக்கும் கொரியன் படம் ‘த ரவுண்ட்அப் : பனிஷ்மெண்ட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

ஒரு காலத்தில் கொரியன் ஸ்பெஷல் போர்ஸில் இருந்தவர் சாங்-கி. இன்று ஆன்லைன் சூதாட்ட அமைப்புக்கே தலைவராக இருக்கிறார். சூதாட்டக் களத்தில் வெளியேற நினைக்கும் ஒரு வேலையாளை கொலை செய்கிறார் சாங்-கி.

இன்னொரு பக்கம் டிடெக்டிவ் மா சியோக், ஆன்லைன் பண மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பிடித்து வருகிறார்.  சியோக்கிற்கு ஆன்லைன் பண மோசடியில் முக்கிய புள்ளியான ஜோவைப் பற்றித் தெரிய வருகிறது. ஜோவைப் பிடிக்க இறங்கும் முயற்சியின்போதுதான் ஜோ இறந்த விவரம் தெரிய வர, அதிர்ச்சியடைகிறார் சியோக்.

ஜோவின் பிரேத பரிசோதனை அறிக்கை மேலும் சியோக்கை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தனது மகனின் மரணத்துக்கு உண்டான நீதி வேண்டும் என சியோக்கிடம் வேண்டுகிறார் ஜோவின் அம்மா. சியோக் விசாரணையில் இறங்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வேகமாகச் செல்லும் திரைக்கதை எங்கேயும் நிற்கவில்லை.
இப்படத்தின் இயக்குநர் ஹியோ மிங் ஹேங்.

ஹெரால்டு அண்ட் த பர்ப்பிள் கிரயான்

குழந்தைகளுடன் ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்க கிடைக்கிறது ‘ஹெரால்டு அண்ட் த பர்ப்பிள் கிரயான்’ எனும் ஆங்கிலப்படம். தமிழிலும் பார்க்கலாம். ஒரு அட்வெஞ்சர் உலகத்தில் வாழ்ந்து வருகிறான் ஹெரால்டு. 

அவனிடமுள்ள பர்ப்பிள் கிரயானில் எதை வரைந்தாலும் அதற்கு உயிர் வந்துவிடும். இப்படியான சக்தி வாய்ந்த கிரயானை கொடுத்தவரை ஓல்டு மேன் என்கிறார் ஹெரால்டு. அந்த ஓல்டு மேன் நிஜ உலகத்துக்குள் இரு நண்பர்களுடன் வருகிறார்.

ஓல்டு மேனைத் தேடி ஹெரால்டும், அவருடைய நண்பர்களும் அலைகின்றனர். அந்த கிரயானில் ஒரு சைக்கிள் வரைய, நிஜ சைக்கிள் ஒன்று ஹெரால்டின் முன் வந்து நிற்கிறது. அந்த சைக்கிளில் ஏறி , ஹெரால்டும் நண்பரும் பயணிக்கும்போது சைக்கிளின் மீது ஒரு கார் மோதிவிடுகிறது. காரில் இருக்கும் சிறுவன் பெயர் மேல். 

அவன் உடனடியாக ஹெரால்டுடன் நட்பாகிவிடுகிறான். அத்துடன் தனது அம்மாவிடம் கெஞ்சி தங்களது வீட்டிலேயே ஹெரால்டுக்கும், நண்பருக்கும் அடைக்கலம் தருகிறான். ஓல்டு மேனை ஹெரால்டு கண்டுபிடித்தாரா என்பதே கிளைமாக்ஸ். இப்படத்தின் இயக்குநர் கார்லோஸ் சல்தானா.

தொகுப்பு: த.சக்திவேல்