இயக்குநர், துணை முதல்வரின் மனைவி, முதல்வரின் மருமகள்...எப்படி அத்தனை பொறுப்புகளையும் பேலன்ஸ் செய்யறீங்க..?



‘‘பொறுமையாதான் நான் படம் எடுப்பேன். அவசரப்பட்டு எண்ணிக்கைக்குப் படம் கொடுக்கற வழக்கம் எனக்குக் கிடையாது. கதை எழுதப் பிடிக்கும். நிறைய எழுதுவேன். ஆனால், சினிமா பெரிய விஷயம். அதற்கான காத்திருப்பு தேவை...’’ இயக்குநர், கதையாசிரியர், துணை முதல்வரின் மனைவி, முதல்வரின் மருமகள்... என அத்தனை பொறுப்புகள் இருப்பினும் பக்குவமாகப் பேசுகிறார் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்.

பட்டி தொட்டி எங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட மந்திரத்தால் ‘இழு இழு இழுவென...’ இழுத்து கட்டிப் போட்டிருக்கிறது ‘காதலிக்க நேரமில்லை’ படம். காதலும் காதல் நிமித்தமுமாக வெளியான அத்தனைப் பாடல்களும் ஹிட். படத்துக்கும் எதிர்பார்ப்புகள் எகிறி இருக்கும் நிலையில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலினை சந்தித்தோம்.  
பிரபலமான ‘காதலிக்க நேரமில்லை’ தலைப்பு இந்தப் படத்துக்கு ஏன்..?

இன்னைக்குதான் உண்மையாவே ‘காதலிக்க நேரமில்லை’ சூழல்ல இருக்கோம். எல்லாமே இன்ஸ்டா லவ்தான். முக்கியமான விஷயம்... பெண்கள் கிட்ட சகிப்புத்தன்மை ரொம்ப குறைஞ்சிடுச்சு. எதுக்கும் அனுசரிக்கக் கூடாதுனு மாறிட்டாங்க. 
எல்லாத்துக்கும் சண்டை. அப்படியான ஒரு பெண் கேரக்டர்தான் இந்தப் படத்தின் நாயகி நித்யா மேனன்.அதே மாதிரி ஆண்களும் இப்ப மாறி வருகிற சமூகத்திற்கு ஏத்த மாதிரி எதை மாத்திக்கணும், எதை மாத்திக்கக் கூடாதுனு தெரியாம குழப்பத்துல இருக்காங்க. இந்த ரெண்டு சிக்கலும் ஒண்ணா சேரும்போது உறவு என்ன ஆகும் என்பதுதான் கதை.

ஜெயம் ரவி - நித்யா மேனன்..?  

ரெண்டு பேருமே இதுவரையிலும் சேர்ந்து நடிக்காத ஒரு ஜோடி. அதேபோல் காதல் மற்றும் காதல் கதைகள்னு தமிழ் சினிமாவில் யோசிச்சாலே நித்யா மேனன் முகம்தான் முதல்ல நினைவு வரும். அதேபோல ஒரு சார்மிங் நடிகர்னாலே ஜெயம் ரவி ஞாபகம் வருவார். கதை உருவாகும் போதே முதல் சாய்ஸில் இருந்தவர் ஜெயம் ரவிதான். அவரும் ‘கதை பிடிச்சிருக்கு செய்யலாம்’னு சொன்னார். அப்படிதான் இவங்க ரெண்டு பேரும் உள்ளே வந்தாங்க.

எப்பவும் எவ்வளவு நேரம் படத்துல இருப்போம்னு நித்யா மேனன் யோசிக்கவே மாட்டாங்க. தன்னுடைய கேரக்டர் என்ன செய்யப் போகுதுனு மட்டும்தான் பார்ப்பாங்க.
இவங்க ரெண்டு பேரையும் சுற்றித்தான் கதையே. நிறைய இடங்கள்ல ரெண்டு பேருக்கும் காட்சியை விளக்கும் அவசியம் ஏற்படலை. அசால்ட்டா நடிச்சாங்க.  
ட்ரெண்டிங் கதை சொல்லியான நீங்க... ஏன் அதிகம் இடைவேளை எடுத்துக்கறீங்க?

இனிமே இந்த பிரேக் எடுக்கவே கூடாதுனு முடிவு செய்துட்டேன். சினிமா மட்டும்தான் ஜாலியா ரிலாக்ஸா பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு துறை. அதில் ஏன் இவ்வளவு மன அழுத்தம் எடுத்துக்கணும்? பொதுவா ஒரு படம் முடிந்ததும் ஒரு பிரேக். தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுக்கான வேலையை பொறுமையாதான் ஆரம்பிப்பேன். அதனால் முன்பு அதிக இடைவேளை எடுத்துப்பேன்.

ஒரு விஷயம் தெரியுமா..? என்னதான் சொந்த ப்ரொடக்‌ஷன் கம்பெனியா இருந்தாலும் என் சுய முயற்சியில் படம் செய்து எனக்கான அடையாளத்தை முதல்ல தேடிக்கணும்னு விரும்பினேன். இப்ப ஓரளவு அதை அச்சீவ் செய்துட்டேன்னு நினைக்கறேன். இனி வருடத்திற்கு ஒரு படம் கொடுக்கணும்னு முடிவு செய்திருக்கேன்.  

இயக்குநர், துணை முதல்வரின் மனைவி, முதல்வரின் மருமகள்... எப்படி அத்தனை பொறுப்புகளையும் பேலன்ஸ் செய்யறீங்க..?

எல்லா காலத்திலும் நானும் அவரும் நாங்களாதான் இருக்கோம். வெளியில் இருந்து பார்க்கிறப்ப அரசியல் குடும்பமா தெரியலாம். ஆனா, வீட்டுக்குள்ள சாதாரண குடும்பம்தான். அவங்க அவங்க ரோலை பொறுப்பா செய்கிறோம். 

என்ன... முன் பை விட எனக்கும் அவருக்குமான நேரம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. என் கணவரை விட என் மாமனார் இன்னமும் பிசியாகிட்டார். குடும்பத்துக்கு குறைவான நேரம் கிடைக்கறதால எந்த அளவுக்கு அதை எக்ஸ்க்ளூசிவா மாத்திக்க முடியுமோ அப்படி மாத்திக்கறோம்.

அவர் எப்பவுமே பிஸிதான். இப்ப இன்னும் கொஞ்சம் பிஸியா இருக்கார். அதேபோல் மனைவியான என்னுடைய வேலை என்ன... எனக்கான நேரம் என்ன... இதையும் மதிக்கத் தெரிந்தவர் அவர். ஆக்சுவலா என் முதல் க்ரிடிக் அவர்தான். பிடிச்சிருக்குன்னா, ‘பிடிச்சிருக்கு’னு கூட சொல்ல மாட்டார். 

ஆனா, பிடிக்கலைனா உடனே சொல்லிடுவார்.‘காதலிக்க நேரமில்லை’ படம் எடுத்து முடிச்சுட்டு அவர்கிட்ட காண்பிச்சேன். இதுவரை என் ப்ராஜெக்ட் எதுக்கும் பதில் சொல்லாதவர், இந்தப் படத்துக்கு உடனடியா ‘நல்லா இருக்கு’னு ஒரு பாசிட்டிவ் ரியாக்‌ஷன் கொடுத்தார்.

இன்றைய தலைமுறை எதையும் சீரியஸா எடுத்துக்கறதில்லையே..?

நம்ம பாட்டி, அம்மா காலம் வரை எதுக்கும் ‘நோ’ சொல்ல முடியாம வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருந்தாங்க. இன்னைக்கு அப்படியில்ல. பெண்கள் சுதந்திரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. தனக்கு ஒரு விஷயம் பிடிக்கல அல்லது சரிப்பட்டு வராதுனா உடனே ‘நோ’ சொல்லிடறாங்க. இதை வரவேற்கும் அதே சமயம் ‘எதுக்கு நோ சொல்றோம்’, ‘எதுக்கு எஸ் சொல்றோம்’ என்கிற தெளிவு வேணும்... அப்பதான் நல்ல உறவுகள் சின்னச் சின்ன விஷயங்களுக்காக உடையாம இருக்கும்.  

மறைமுகமாகவே உங்கள் கதைகளில் ‘மீ டைம்’ என்பது அழுத்தமா இருக்கே..?

காரணம் நான் அப்படிதான். எனக்கான நேரம் ரொம்ப முக்கியம். எல்லா பெண்களுமே தனக்கான நேரத்தை ஒதுக்கி தனக்குப் பிடிச்ச விஷயங்களில் ஈடுபாடு செலுத்தணும். நம்மை நாம் சந்தோஷமா வைச்சுகிட்டாதான் சுத்தி இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.

அதனால் ஒரு படம் எடுத்த பிறகு எனக்கான நேரத்தை எனக்குப் பிடிச்ச மாதிரி செலவு செய்வேன். ஆணோ, பெண்ணோ எல்லாருக்கும் பிரைவசியான நேரம் நிச்சயம் தேவை. இதை ‘வணக்கம் சென்னை’ படத்தில் பிரியா ஆனந்த் மூலமா கொஞ்சம் சொல்லி இருப்பேன். ‘பேப்பர் ராக்கெட்’ சீரிஸ்ல இன்னும் ஆழமா சொல்லி இருப்பேன்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்ஸ்..?

வினய் புது ரோல் செய்திருக்கார். யோகிபாபுவுக்கு கதைல முக்கியமான பார்ட் இருக்கு. லால் சார், லட்சுமி ராமகிருஷ்ணன் மேம்னு படம் முழுக்க பெரிய கேரக்டர்ஸ் இருக்காங்க. குடும்பமாகவும் இந்தப் படம் ஃப்ரெஷ்ஷா இருக்கும். பியூர் ஃபேமிலி என்டர்டெயினர். காவேமிக் யூ ஆரி-யின் விஷுவல்ஸ் படத்துக்கு பலம்; கலர்ஃபுல்லா இருக்கும். எடிட்டிங், லாரன்ஸ் கிஷோர்.

‘இழுக்குதடி...’, ‘லேவண்டர் நேரம்...’னு ரஹ்மான் மேஜிக் எல்லாருடைய பிளே லிஸ்ட் டையும் ஆக்கிரமிச்சிருக்கே..?

அவர்கூட வேலை செய்யணும் என்பது கனவு. இப்ப நிறைவேறியிருக்கு. அவர்கிட்ட பாடல் கேட்கும்போதே, மெனு மாதிரிதான் கொடுத்தேன். ‘சார் ஒரு லவ் சாங், மதர் சாங், ஸ்போர்ட்ஸ் சாங், பிரேக் அப் சாங்...’ இப்படிதான் அவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்டுட்டு ‘அட... வெரைட்டியா இருக்கே. செய்யலாம்’னு சொன்னார். ஆனா, சார் செம பிஸி. ஆனாலும் நான் ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும்போது ‘சார்... நீங்க இந்தப் படத்துக்குள்ள வரவரைக்கும் காத்திருக்கேன்’னு சொல்லிட்டேன்.

நம்மை விட அவ்வளவு இளமையா துடிப்பா யோசிக்கிறார். துறுதுறுன்னு ஸ்டூடியோவில் அவர் வேலை செய்வதைப் பார்க்கலாம். அந்த ட்ரெண்டிங் மைண்ட்தான் இப்பவும் அவரை ட்ரெண்டில் வெச்சிருக்கு.மொத்தம் அஞ்சு பாடல்கள். எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் வித்தியாசமாக இருக்கும். ‘காதலிக்க நேரமில்லை’... யாருக்கு?

என் பசங்க கதை கேட்டுட்டு அவங்க லைஃப்ல என்ன பார்க்கறாங்களோ அது அப்படியே கதையில் இருக்கறதா சொன்னாங்க. இப்ப இருக்கும் இளைய தலைமுறை எப்படிப்பட்ட சூழலை சந்திச்சுட்டு இருக்காங்க... அவங்க காதல், ஆண் - பெண் உறவுகள் எப்படி இருக்கு... இதை மையமாக வைத்துதான் இந்தப் படமே. இந்தத் தலைமுறைக்கு ஏற்ற மனநிலை இருக்கிற மக்களும் இதை விரும்புவாங்க. நியூ ஏஜ் கதை. ஆனா, படத்தில் எங்கேயும் பிரசாரமோ அல்லது கருத்துத் திணிப் போ இருக்காது.    

ஷாலினி நியூட்டன்