சிறுகதை-காதலின் நிறம் சிகப்பு



விமானப் பயணம் களிப்பானது என்று யார் சொன்னது?

அந்தக் கேள்வியின் உத்தேசம் ஒரு பெருமூச்செறிந்தான் சுந்தரம்.அப்போது அவன் ஒரு குட்டி விமானத்தின் ஜன்னலோர இருக்கையை ஒட்டி துருத்தலாய் அமர்ந்திருந்தான்.
சற்று பருத்த சரீரம் அவனுக்கு. விமான நிலையத்துக்கு வரும் வழியில் ஒரு மாற்றுத் திறனாளி அண்டர்கிரவுண்ட் வழித்தடம் ஒன்றில் எடை பார்க்கும் கருவியோடு, பிச்சையைத் தவிர்த்து ஒரு பிழைப்புக்கு வழி கண்டிருந்தார்.

அவர் நிமித்தமும் தன் நிமித்தமும் ஒரு பத்து ரூபாயை விரிந்திருக்கும் துண்டில் போட்டு விட்டு எடைக் கருவிமேல் ஏறி நின்றபோது அந்தக் கருவியின் முள் குடிகாரனைப் போல தள்ளாடி விட்டு 110 கிலோ எடையைக் காட்டியது.45 வயதாகிறது சுந்தரத்துக்கு. அதிகபட்சம் 75 கிலோ இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் ‘நீங்கள் ஒரு நிரந்தர மூட்டை தூக்கி’ என்று சிங்கப்பூரில் இருக்கும் அவனது குடும்ப டாக்டர் சொன்னதும் அந்த நேரம் நினைவுக்கு வந்து, அந்த நினைப்பு உறுத்தவும் செய்தது.

இடுப்பின் சீட் பெல்ட் வேறு இறுக்கிக் கொண்டிருந்தது. விமானப் பணிப்பெண் அதை வற்புறுத்தி போடச் செய்திருந்தாள். விமானம் சேலம் மாவட்ட ஏற்காட்டு மலை மேல் பறந்துகொண்டிருந்தது. கண்ணாடி வழி பார்க்கவும் ஏற்காடு ஏரி ஒரு கண்ணாடிப் படுகையாக கண்ணில் பட்டது. கண்ணிரண்டும் கூட கூசின.சேலத்துக்காரர்களுக்கு ஏற்காடு ஒரு ‘செல்ல’ ஸ்விட்சர்லாந்து! இருபது கிலோ மீட்டர் எனும் சரிவான உயரத்தில் இருக்கும் ஒரு காப்பிக் காடு என்றும் அதைச் சொல்லலாம்.

சேலத்தின் இளவட்டங்கள் சைக்கிளிலேயே வந்து செல்ல முடிந்த ஏழைப் பங்காள மலை! ஏறும்போது மூச்சிரைக்கும். இறங்கி பேசிக் கொண்டே சில இடங்களைக் கடக்க வேண்டியிருக்கும். நான்கைந்து பேராக பேசிக் கொண்டே செல்வதால் பெரிதாய் எதுவும் தெரியாது. இடைவழியில் சன்னமான நீர்ப் பெருக்கில் ஓடைகள். தண்ணீரை அள்ளிப் பருகும் போது வாயெல்லாம் ஏசி-யாகி பற்களில் கொஞ்சம் மின்சாரமும் உற்பத்தியாகும்.

அப்படியே சேலம் நகருக்குள் அடிகுழாய் மூலம் தண்ணீர் பிடிக்கும் தாயின் முகமும் தோன்றி மறையும். அதில் பல சமயங்களில் சாக்கடை கலந்தும் வரும். நாற்றமாய் நாறும். இங்கோ கேட்பாரின்றி ஓடிக் கொண்டிருக்கிறதே இந்த ஓடை... என்றெல்லாம் கேள்வி எழும்பும். அந்த நொடி ‘மலை மலை தான்’ என்றொரு விடை தோன்றி விழிகளும் விரியும். இங்கேயே அப்படியே இருந்து விடலாமா என்றும் தோன்றும்.

ஜன்னல் வழி தென்பட்ட ஏற்காடு, சுந்தரத்துக்குள் தன் இளவயது நாள் ஒன்றின் சில மணி நேர சிலிர்ப்புகளை ஞாபக மூட்டிற்று. அதை எல்லாம் எண்ணி முடிப்பதற்குள் கேபினிலிருந்து குழறலான ஆங்கிலத்தில் விமானம் சேலத்தில் தரை இறங்கப் போகும் அறிவிப்பு ஒலித்தது.

அவனிடமும் ஒரு பதற்ற மான பரவசம்!

விமானமும் தரை தட்டிற்று. 80 இருக்கைகள் கொண்ட குட்டி விமானம். வாத்து ஒன்று ராட்சஸ இரும்புப்பறவையாகி தத்து பித்தென்று தரைமேல் ஓடுவது போல்தான் ஒரு பிரமை தட்டிற்று சுந்தரத்துக்கு. போர்டிங் பாய்ன்ட்டில் அது நிற்கும் முன்பே சிலர் எழுந்து மேலிருக்கும் தங்கள் லக்கேஜை எடுக்க முனைய விமான பணிப் பெண் “பீ சீட்டட்...” என்று அலறினாள்.
எழுந்தவர்களும் அரைமனதாக திரும்ப அமர்ந்தனர்.

சுந்தரத்துக்கு அந்த நொடி ரயில்வே கேட்டுகள்தான் உடனே நினைவில் மூண்டன. ரயில் வந்து செல்லும் வரை எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கும் வாகனதாரிகள், கேட் உயர எழும்பும்போதே, குடைந்து கொண்டு செல்லப் பார்க்கும் முனைப்பும் படபடப்பும், அதனால் உண்டாகும் நெருக்கடியும் ‘தூத்தேறி’ என்று எச்சில் உமிழ வைத்துவிடும்.
இது எந்த வகை மனப்போக்கு... எப்படி ஒருவர் விடாமல் இப்படி பொறுமை இழக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழும்பும். இறுதியாக அது ஒரு ‘பொதுப்புத்தி’ என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.

அந்த பொதுப் புத்திக்கு விமானமும் விதிவிலக்கில்லை என்பதை அப்போது சுந்தரம் கண்டான். எரிச்சல் வந்தது. எச்சில் விழுங்கி தணித்துக்கொண்டு இறுதியாக இறங்கினான்.
சிறிய விமான நிலையம்தான்! புதியதும் கூட. பேருந்து மூலமாக கேட்வேயைக் கடக்க வேண்டிய அவசியமில்லை. நடந்தே வெளியேறிக் கொண்டிருந்தனர். சுந்தரமும் நடந்தான். அவனது சக்கர சூட்கேஸ் அவனைப் பின்தொடர்ந்தது. பல சுமைதூக்கி மனிதர்களின் வேலைவாய்ப்பை விழுங்கிவிட்ட பொல்லாத சக்கரங்கள் அவை!

அதை இழுத்துச்செல்வதும் ஒரு அரிஸ்டோகிரசி லட்சணமாகி விட்டது. விமான நிலையம் வரையில் நுழைவதுதான் கடினமான விஷயம். வெளியேறுவதில் சிரமங்களே கிடையாது.

லகுவாக வெளியே வந்த நொடி... டாக்சிகாரர்கள் பொரி உருண்டை ஈக்களைப் போல மொய்க்கத் தொடங்கினர்.

விமானத்தில் பயணித்ததால் கட்டாயம் காரிலும் பயணித்தே தீரவேண்டும் என்பது இந்திய விமான நிலையங்களின் விதி. அப்படி பயணிக்கும் போது அங்குள்ள டோல்கேட்களுக்கும் மேலும் அழ வேண்டும் என்பதும் ஒரு சதியான விதி!

‘ஏரோப்ளேன்லயா வர்றே..? அப்ப கொடு...’ என்பது டோல்கேட் மற்றும் டாக்சிகாரர்களின் முகங்களில் ஸ்க்ரோலிங் போல ஓடியபடியே இருக்கும். நல்ல வேளை சுந்தரத்தை அழைத்துச் செல்ல அவன் பால்ய நண்பன் சாந்தாராம் வந்திருந்தான்!சாந்தாராமைப் பார்க்கவும் சுந்தரத்திடம் ஒரு திகைப்பு. எப்போதும் பூசின மாதிரி பொசு பொசுவெனறிருப்பவன், ஈர்க்குச்சி போல் இருந்தான்!

“சாந்தா... எப்படிடா இருக்கே?”

“வா சுந்தரம்... நீ என்ன இப்படி ஊதிட்டே?”

“நீ என்னடா இப்படி இருக்கே... என்னாச்சு..?”

“சொல்றேன். கொரோனாவுல பாழான உடம்பு. கூடவே சுகர் வேற... எப்பவும் முந்நூறுக்கு மேலதான்னா பாத்துக்கோ. நான்லாம் உயிரோட இருக்கறதே பெருசு சுந்தரம். நல்ல வேளை நீ இந்த நாட்டை விட்டே போய் தப்பிச்சிட்டே...” என்று சுந்தரத்தின் சக்கர சூட்கேஸை, தான் கேட்டு வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினான் சாந்தாராம்.

டூவீலர் பைக்கில்தான் விமான நிலையத்துக்கு வந்திருந்தான் சாந்தாராம். அதனருகே சென்றவன், “சுந்தரம்... என் வசதி இவ்ளோதான்! இதுலயே வந்துட்றியா... இல்ல டாக்சி பிடிக்கட்டுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“டேய்... நான் அதே சுந்தரம்தான்டா. உடம்பு போட்டிருக்கலாம். மத்தபடி எதுலயும் என்கிட்ட எந்த மாற்றமுமில்லை. சிங்கப்பூர்ல கூட தினமும் பஸ்சுலயும், மெட்ரோவுலயும்தான் வேலைக்கு போய்ட்டு வரேன்...”“சந்தோசம். 

இரு... வண்டிய ஸ்டார்ட் பண்ணிக்கறேன்...” என்ற சாந்தாராம், சாவியால் அதன் துவாரம் குடைந்து திருகவும் எஞ்ஜினில் கமறல். சைட் ஸ்டாண்டை விலக்கிக் கொண்டு ஒரு அரை ரவுண்டு கட்டி திரும்பி வந்து அவனது சக்கர சூட்கேஸை வாங்கி முன்புறம் வைத்துக் கொண்டான்.“நீ நல்லா இரண்டு பக்கமும் கால் போட்டு உக்காரு...” என்று சொல்லவும் சுந்தரமும் அப்படியே ஏறி அமர்ந்து கொண்டான்.

அங்கிருந்து புறப்படவும் விமானத்தில் வந்திறங்கிய எல்லோரும் கார்களில் அவர்களைக் கடந்து கொண்டிருந்தனர். சிலர் திரும்பிப் பார்த்துச் சிரித்தனர். அதை சாந்தாராமும் கவனித்தான்.
“சாரிடா சுந்தரம்...” என்றான்.“எதுக்குடா?”

“பேசாம நான் டவுன் பஸ்ல வந்துட்டு உன்னை கார்ல கூட்டிகிட்டு போயிருக்கலாம். பாரு எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறத...”“மூடிக்கிட்டு வண்டிய ஓட்டு. இப்படி டூவீலர் பின்னால உக்காந்து எத்தன வருஷம் ஆச்சு தெரியுமா?”“நீ எனக்காகச் சொல்றேன்னு நல்லா தெரியுது...”“சத்யமா இல்லை. நான் சிங்கப்பூர்ல வேலை பாக்கறதால என்னை என்ன கோடீஸ்வரன்னு நினைக்கிறியா?”
“அப்ப நீ இன்னுமா கோடீஸ்வரனாகல?”

‘‘டேய் நாம பேச எவ்வளவோ விஷயம் இருக்குடா... இப்ப எதுக்குடா இந்தக் கேள்வி..?”“ஆமாமா... பேச எவ்வளவோ இருக்குதான். அதுல முக்கியமான விஷயம் 20 வருஷம் கழிச்சு நீ இப்ப திரும்பி சேலம் வந்திருக்கே பார்... அதுவும் ஒண்ணு...”“ஏன் நான் வரவே மாட்டேன்னு நினைச்சிருந்தியா?”“ஆமாம் சுந்தரம்... நான் கூட உன்னை மறந்துட்டேன். நீ என் நம்பரைக் கண்டுபிடிச்சு போன் பண்ணப்ப கூட என்னால நம்ப முடியல. ஆமா... என் நம்பரை எப்படி கண்டுபிடிச்சே?”

“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன... நீ பாத்து வண்டிய ஓட்டு.. இந்த ஊரு எப்படி மாறிடுச்சு பார்த்தியா? முந்தி வந்தபோது கூட இந்தளவுக்கு டெவலப் ஆகலை...’’
“ஆமாம்... ஊர் நல்லா மாறிடுச்சு... நாங்கதான் அப்படியே இருக்கோம்...’’

‘‘அப்படியேனா..?’’
‘‘என் வீட்லதானே தங்கப் போற... அப்ப தெரியும் பார்...’’
சாந்தாராம் சன்னமாய் ஒரு சஸ்பென்ஸ் வைத்தான்.

அந்த பைக்கில் ஒரு வழியாக அவன் வீட்டு முன் வந்து இறங்கிய போது சுந்தரத்துக்குள் தன் பால்ய கால நினைவுகள் சுற்றத் தொடங்கின.சாந்தாராம் வீடு துளிகூட மாறவில்லை.சரிந்த ஓட்டுக்கூரை வீடு. முகப்பில் சிமெண்டு திண்ணை. மரக்கதவு - அதன் மையத்தில் பளிச்சென நாமம். அதற்கும் மேல் கருப்பு பெயின்ட். வட்டத்தின் மேல் வெள்ளை பெயின்ட்டால் எழுதப்பட்ட டோர் நம்பர்.யாராக இருந்தாலும் குளிந்துதான் நுழைய வேண்டும்.

நுழைந்த மாத்திரத்தில் இடப்பக்கமாய் நெசவுத் திண்ணை! அதனிடமிருந்து நீண்டிருக்கும் பட்டுப் பாவு. பாவுக்குக் கீழே கொண்டை சுற்றும் ராட்டை. ராட்டைக்கு நூலைத் தரும் திருவட்டம். பக்கவாட்டுச் சுவரில் கலைஞர் தந்த இலவச டிவி. அதில் அணையாது ஓடியபடி இருக்கும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள்.டிவி மேல் ஒரு பார்வை, தறிமேல் ஒரு பார்வை என்று தறியை இயக்கும் சாந்தாராமின் மனைவியான சம்யுக்தா.

சுந்தரமும் சாந்தாராமும் உள் நுழையவும் தறி நெய்வதை விட்டவள் ‘‘வாங்கண்ணா...’’ என்று சுந்தரத்தை மேடை மேல் இருந்தபடியே வரவேற்றாள்.“இதான் சம்யுக்தா... என் பொண்டாட்டி...” சாந்தாராமும் அறிமுகத்தை முடித்தான். பதிலுக்கு சுந்தரம் இணக்கமாய்ச் சிரித்தான்.“சுந்தரம்... தனியா ரூமெல்லாம் கிடையாது. இதோ இந்த தறிக்குக் கீழயே நாங்க ரெண்டு பேரும் படுத்துக்குவோம். அதனாலதான் உனக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணட்டுமான்னு கேட்டேன். நீ வேண்டவே வேண்டாம்னுட்டே. இப்ப சொல்லு... இங்க எங்க கூட உன்னால தங்க முடியுமா..?”“வெளிய திண்ணை இருக்குல்ல..?”

“கொசு பிச்சுத் தின்னுடும்...”
“வலையை வாங்கி கட்டிப்போம்...”
“உனக்கென்னடா தலையெழுத்து. எங்களாலதான் இந்த நெசவ தாண்டி உருப்பட முடியல...”“போதும் சாந்தாராம். நான் சிங்கப்பூரை மறந்து பழைய சுந்தரமா ஒரு நாலு நாளாவது வாழற ஆசைலதான் வந்துருக்கேன். என்ன அன்னியப் படுத்தாதே...”சுந்தரம் அப்படிச் சொல்லவும் அதன் பின் சாந்தாராம் எதுவுமே பேசவில்லை. அவன் மனைவி சம்யுக்தா ஓடிப்போய் டீ போடத் தொடங்கினாள்.கொல்லைப்புறம் சென்று சுந்தரமும் முகம் கழுவிக் கொண்டான்.

கொல்லைக் கிணறு அழிந்து விடாமல் அப்படியே காட்சி தந்தது. எட்டிப் பார்த்தபோது முகம் தெரிந்தது. பக்க வாட்டில் வாழை தழைத்து குலை போட்டிருந்தது. பக்கத்திலேயே பப்பாளியும் காய் பிடித்திருந்தது.மண்தரை முழுக்க ஈர நொதிப்பு. கற்பூரவல்லி, அந்தி மந்தாரை என்று செடிகளின் அடர்த்திவேறு. கயிற்றுக் கொடியில் சம்யுக்தாவின் புடவையோடு, சாந்தாராமின் வேட்டி சட்டை காய்ந்து கொண்டிருந்தது. எல்லாமே பழுப்பேறியுமிருந்தது!

சுந்தரம் அவைகளை எல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்தான்.“என்னடா... எல்லாம் அப்படியே இருக்குதா?”“ஆமாண்டா... சேலமே தலைகீழா மாறிடிச்சு. ஆனா, நீ, உன் வீடு... எதுவுமே மாறலியே..?”“என் வீடு மட்டுமில்ல... நெசவு நெய்யற யார் வீடும் மாறலை...”“எதனால?”

“அவ்வளவுதான் எங்களுக்கான மதிப்பு. பவர்லூம் வந்து முதல் அடி கொடுத்திச்சு. அப்புறம் மில் துணிங்க..! இதுங்களோட கைத்தறியால போட்டி போட முடியலடா...”
“அப்ப நீயும் மாறிக்க வேண்டியது தானே..?” சட்டென்று வந்து விட்டது அந்தக் கேள்வி.  சாந்தாராமிடமோ அதே வேகத்தில் பதிலில்லை. 

சற்று கலக்கமாய் பார்த்தான்.அப்போது சம்யுக்தா டீ கொண்டு வந்து கொடுத்தாள்.“குடிச்சிட்டே பேசுங்க. அண்ணே... உங்களுக்கு இட்லியும், பொட்டுக் கடலை சாம்பாரும் பிடிக்கும்தானே?” என்றும் கேட்டாள்.“நீ சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறுது...” என்றான் சுந்தரம்.

சாந்தாராமோ மௌனமாகவே இருந்தான்.“என்னடா சாந்தா... நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?”

“அதெல்லாம் இல்லடா. தலைமுறை தலைமுறையா இந்த நெசவுதான்டா எங்களுக்கு சோறு போட்டுச்சி. அப்படிப்பட்ட அந்த திண்ணையை இடிச்சு தறியையும் ஏறக்கட்ட மனசு வரவே மாட்டேங்குதுடா. ஆனா, என் பையன் நான் தறி நெய்ய மாட்டேன்னுட்டு, ஒரு மெடிக்கல் ஷாப்ல வேலைக்கு போய்ட்டான். 

கொஞ்ச நாள்ல நானும் ஒரு மெடிக்கல் ஷாப் வெச்சிடுவேன்னு சொல்லிக் கிட்டிருக்கான். கைத்தறியோட கடைசி தலைமுறைடா நான்!”“உனக்குள்ள இப்படி ஒரு சென்டிமென்ட்டா... ஹும்...”“ஏன்டா... முட்டாள்தனமா படுதா?”

“அப்படிச் சொல்லிட முடியாது... ஆனா, மாற்றங்களை நாம் ஒண்ணுமே பண்ண முடியாது. ஒரு பழமொழியே உண்டு தெரியுமா... மாற்றம் ஒன்றே மாறாததுன்னு...”
“அப்ப நானும் இந்த நெசவுக்கு முழுக்கு போட்டுட்டு வேற வேலைக்கு மாறிட்றதுதான் புத்திசாலித்தனமா?”

(அடுத்த இதழில் முடியும்)

கடந்த நவம்பர் 10 அன்று காலமான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன், ‘குங்குமம்’ வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை இது. அக்டோபர் முதல் வாரத்தில் மின்னஞ்சலில் அவரது சிறுகதை வந்ததுமே ‘பொங்கல் 2025’க்கு பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அவர் விரும்பியபடி இரு வார சிறுகதையாக ‘காதலின் நிறம் சிகப்பு’ பிரசுரமாகிறது...

இந்திரா சௌந்தர்ராஜன்