சினிமாவும் சிவகங்கையும்...



‘ஒப்பனைகளின் கூத்து’, ‘வேலுநாச்சியார் தீர்ப்பு’, ‘குயிலி: உண்மையாக்கப்படுகின்ற பொய்’, ‘கப்பலோட்டிய கதை’, ‘தோழர் வ.உ.சி’, ‘முத்துவடுகநாதத் தேவர் மாண்பும், மரணமும்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர் எழுத்தாளர் குருசாமி மயில்வாகனன். 
சிவகங்கை மண்ணின் மைந்தரான இவரின் ஒவ்வொரு நூலும் ஆய்வுகளின் அடிப்படையிலும், பல்வேறு நூல்களின் சான்றுகளுடனும் அமைந்திருக்கும். அப்படியாக சமீபத்தில் இவர், ‘சினிமாவிற்குள் சிவகங்கை’ என்ற நூலைக் கொண்டு வந்துள்ளார்.

பொதுவாக தமிழ்ச் சினிமாவில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருபவர்கள் காரைக்குடியைச் சேர்ந்த ஏவி.எம் நிறுவனமும், கவிஞர் கண்ணதாசனும் மட்டுமே. 
ஆனால், குருசாமி மயில்வாகனனின் இந்நூல் 1922 முதல் 2022 வரையிலான நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சினிமா உலகிற்குப் பங்களிப்பு செய்த நூறு சிவகங்கை மாவட்டக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறது.    

இன்னும் சொல்வதென்றால், 1934ம் ஆண்டில் சென்னையிலேயே உருவாக்கப்பட்ட ‘ஸ்ரீனிவாசா கல்யாணம்’ எனும் தமிழ் பேசும் முதல் படத்தைத் தயாரித்து இயக்கியவர் ஒரு சிவகங்கைக்காரர் என நூலில் குறிப்பிட்டிருப்பது வாசிப்பவர்களுக்கு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.

இதற்காக இவர் பல்வேறு நூல்களையும், இணையதளங்களையும் தேடித் தேடி வாசித்துள்ளார். சரியான தகவலா என கிராஸ்செக் செய்வதற்கு பலரிடம் பேசியும் பயணித்தும் இருக்கிறார். ‘‘சினிமாவுக்கும் எனக்குமான உறவு, சிவகங்கை நகருக்கு குடிவந்த என் எட்டு வயதிலேயே தொடங்கிவிட்டது. அதற்குக் காரணம் என் அப்பா. சிறு வயதில் என்னை நிறைய சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். என்னை மட்டுமல்ல. என் அம்மாவையும் சினிமா பார்க்க வற்புறுத்துவார்.

நாங்கள் மூவரும் எங்காவது வெளியூர் போனாலும் அப்பாவின் முதல் தேர்வு சினிமா தியேட்டராகவே இருக்கும். அந்தளவுக்கு சினிமாவுடன் இணக்கமாக என் பால்யம் இருந்தது. அதனால்தானோ என்னவோ அதன் தொடர்ச்சியாக இப்போது என் இரு மகன்களும் அரசு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து சினிமாவில் பயணிக்கின்றனர்.

நான் சினிமாவில் பணியாற்றவில்லை என்றாலும் சிறுவயதில் சினிமா சார்ந்த இதழ்களையும், கட்டுரைகளையும் நிறைய வாசித்தேன். அப்போதெல்லாம் சினிமா தயாரிப்புகள் குறித்த கட்டுரைகளும், சினிமாக்களும் சென்னைக்கு மட்டுமே உரியது எனும் கண்ணோட்டத்திலேயே இருக்கும்.

அது உண்மையும்கூடத்தான். ஏனெனில் சினிமா தயாரிப்பிற்கான வசதிகள் அனைத்தும் சென்னையிலேயேதான் இருந்தன.ஆனால், சினிமா கலைஞர்கள் முதல் தியேட்டர் வசூல் வரை சினிமாவின் இயக்கம் என்பது சென்னையை விட்டு வெளியில்தான் மையம் கொண்டிருந்தது.

அதனால், தமிழ்ச் சினிமாவின் வரலாறு சென்னையில் பிறந்தவர்களால் உருவாக்கப்பட்டதல்ல. அதன் உருவாக்கத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பெரும் பங்குண்டு. இதனடிப்படையில்தான் சிவகங்கை மாவட்டம் தமிழ்ச் சினிமாவிற்குச் செய்துள்ள பங்களிப்பினை எழுத நினைத்தேன்.

அதுமட்டுமல்ல. நமது சொந்த ஊருக்கும் சினிமா பிரபலங்களுக்கும் உள்ள தொடர்புகளை அறியும்போது ஊர்ப்பாசத்தால் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஆச்சர்யமும் இதற்கு ஒரு காரணம்.

இதேநேரம் தியோடர் பாஸ்கரன் சார் எழுதிய நூல் ஒன்றை வாசித்தேன். அதில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் சினிமாவான ‘ஸ்ரீனிவாசா கல்யாணம்’ படத்தை 1934ல் தயாரித்து இயக்கியவர் சிவகங்கையைச் சேர்ந்த ஏ.நாராயணன் ஐயர் என்பதை அறிந்தேன். அப்போது எனக்குள் ஏற்பட்ட வியப்பிற்கு அளவே இல்லை.

இப்படியொரு மகத்தான சாதனையைச் செய்தவரை சினிமா வரலாறு குறித்து எழுதியுள்ள பலரும் ஓரிரு வரிகளில் மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றிருக்கும் அலட்சியத்தையும் கவனித்தேன்.

இதன்பிறகே ஏ.நாராயணன் ஐயரையும் அவரைத் தொடர்ந்து சென்ற மற்றவர்களையும் குறித்துப் புத்தகமாக எழுத வேண்டும் எனும் எண்ணம் என்னுள் இன்னும் வலுப்பெற்றது.
ஆனாலும் ‘நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்’ இல்லையெனில் இந்த எண்ணம் செயல் வடிவம் பெற்றிருக்காது. அவர்கள்தான் உத்வேகம் தந்து இந்நூலை வெளியிட்டனர்...’’ என்றவரிடம் இதற்கான தகவல்களை எங்கிருந்தெல்லாம் சேகரித்தீர்கள் என்றோம்.

‘‘ஏற்கனவே என்னிடம் சினிமா சார்ந்த ஏராளமான நூல்கள் இருந்தன. இதுதவிர இணைய தளங்கள், யூடியூப் சேனல்கள் வழியாக தகவல்கள் பெற்றேன். இதிலிருந்த பின்னூட்டங்கள் வழியாக சில தொடர்புகள் கிடைத்தன. பிறகு நேரடியான விசாரிப்புகளும் செய்தேன்.இயக்குநர் மிஷ்கின் ஊரைத் தவிர பயணமாக வேறெங்கும் செல்லவில்லை. 

அவர் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பிறகு தொடர்ச்சியாக அலைபேசியில்தான் தொடர்பு கொண்டேன். எல்லா வழிமுறைகளிலிருந்தும் வந்த தகவல்கள் சில்லுச்சில்லாகச் சிதறியே கிடைத்தன. அவற்றைப் பொறுமையாகப் பொருத்திப் பார்த்து இணைத்தேன்.

இதற்கு பலர் உதவி செய்தார்கள். குறிப்பாக 1978 - 1979ல் என்னோடு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படித்த, ‘பத்தாம் வகுப்புப் பசங்க’ எனும் நண்பர்கள் குழுவினர் நிறைய உதவிகள் செய்து என்னை உற்சாகப்படுத்தினர்.

இவர்கள்தவிர இயக்குநர் காரைக்குடி நாராயணன், கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகர் (குண்டு) கருப்பையாவின் மகன் குண்டு கல்யாணம் மற்றும் மகள் அல்லி சரவணன், இயக்குநர் டி.என்.பாலுவின் மகன் டி.என்.பி.கதிரவன், வேம்பத்தூர் கிருஷ்ணன் மகன் வாசுதேவன் ஆகியோருடன் உள்ளூர்க்காரர்கள் சிலரும் தகவல்களைத் தந்து உதவினார்கள்.

இருந்தும் ஏவி.எம், கவிஞர் கண்ணதாசன், பஞ்சு அருணா சலம் போன்ற செட்டிநாட்டுப் பங்களிப்பாளர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோரின் விவரங்கள் எல்லாமே துண்டுதுண்டாகக் கிடைத்து சேகரிக்கப்பட்டவைதான். கிடைத்த ஒவ்வொரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. 

பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு யாரை, எப்படித் தொடர்பு கொள்வதென்றே எனக்குத் தெரியவில்லை. பின்னர் 2022ம் ஆண்டு வரைக்குமான கலைஞர்கள் பற்றிய தகவல்களுடன் சேகரிப்பதை நிறுத்திக்கொண்டு, கிடைத்தவரை எழுதுவோம் என்று தொடங்கியதுதான் இன்று நூலாகி இருக்கிறது...’’ என்றவர், இதிலுள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘இதில் ஏராளமான சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. குறிப்பாக, 1945ல் வெளிவந்த ‘பர்மா ராணி’ எனும் பிரபலமான பழைய படத்தின் கதாநாயகி கே.எல்.வி.வசந்தாவைக் குறிப்பிடலாம்.
இவர் அந்தக் காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என அறியப்பட்டவர். இவரின் இனிஷியலிலுள்ள ‘கே’ என்பது அனைத்துப் பதிவிலும் ‘குன்னத்தூர்’ என்றே இருந்தது. ஆனால், ‘திரை இசை அலைகள்’ நூலாசிரியர் வாமனன் சார் மட்டும் தனது நூலில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரிடம் கேட்டபோது, தான், வசந்தாவைச் சந்தித்து நேரில் கேட்கையில் அவ்வாறு சொன்னதாகக் குறிப்பிட்டார். இருந்தும் அதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இந்நிலையில் எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா சுடப்பட்ட வழக்கு விசாரணை நூலை வாசித்தேன்.

அச்சம்பவத்தின்போது உடனிருந்த, ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் தயாரிப்பாளர் புதுக்கோட்டை வாசு ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் நடிகை வசந்தா தனது மனைவியென்றும், அவரது பழைய பெயர் வெள்ளைக்கண்ணு என்றும், சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியைச் சேர்ந்தவரென்றும் சொல்லியிருந்தார். குன்றக்குடி எல்.வெள்ளக்கண்ணுதான் கே.எல்.வி.வசந்தா ஆகியிருந்ததை உறுதிப்படுத்தினேன்.

அடுத்து சோழவந்தானைச் சேர்ந்த சீனிவாச ஐயரும் புதுக்கோட்டை கண்ணாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயரும் தாங்கள் பயிற்சி பெற்ற நாடகக் கம்பெனி இருந்த ஊரின் பெயரைத் தங்களது பெயர்களுடன் இணைத்துக் கொண்டனர். அப்படியாக இவர்கள் கொத்தமங்கலம் சீனுவாகவும் கொத்தமங்கலம் சுப்புவாகவும் தங்களை வெளிக்காட்டினர்.

பிறகு, இதுவரையில் மேலூரைச் சேர்ந்தவர் என அறியப்பட்ட நடிகர் ராமராஜனின் தகப்பனார் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரிலிருந்து போனவர் என்பது தெரிந்தது. அதுமட்டுமல்ல, மதுரையைச் சேர்ந்தவர் என அறியப்படும் வைகைப்புயல் வடிவேல்கூட சிவகங்கை நகரைச் சேர்ந்தவரென்பது என்னை வியப்படைய வைத்தது. அவரின் தம்பியே ஒரு பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்புறம், ஏ.நாராயண ஐயரின் மனைவி மீனாள் நாராயணன்தான் இந்தியாவின் முதல் பெண் ஒலிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலைக் கண்டுபிடித்தது தியோடர் பாஸ்கரன் சார்தான். 

இதனையும் நூலில் குறிப்பிட்டுள்ளேன். இதுதவிர மனோரமா, எல்.ஆர்.ஈஸ்வரி, குலதெய்வம் ராஜகோபால், இயக்குநர்கள் பஞ்சு அருணாச்சலம், மகேந்திரன், இராம.நாராயணன், எஸ்பி.முத்துராமன், வசந்த், நடிகர் சரத்குமார், கரு.பழனியப்பன், பாடலாசிரியர் பழனிபாரதி எனத் தமிழ்ச் சினிமாவில் இயக்குநர்களாக, தயாரிப்பாளர்களாக, நடிகர், நடிகைகளாக, ஒளிப்பதிவாளர்களாக, பாடலாசிரியர்களாக ஜொலித்த, ஜொலித்துக் கொண்டிருக்கிற பலரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்...’’ என்றவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘அதேபோல இந்நூலிலுள்ள உள்தலைப்புகளும் வித்தியாசமாக வைத்துள்ளேன். இதில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு விளக்கம் உள்ளது. அத்துடன் இந்நூலில் பல தவறுகளும், விடுபடல்களும் இருக்கலாம். அதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கும்படியும் இந்நூல் வாசிக்கும் வாசகர்களிடம் முன்னுரையில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ்ச் சினிமா, சென்னைக்கு மட்டுமே சொந்தமானதல்ல. மற்ற ஊர்களிலிருந்து சென்றவர்களே சினிமாவை உருவாக்கியுள்ளனர்.

என்னுடைய இந்த நூல் சிவகங்கை வட்டார அளவிலான சினிமா வரலாறு மட்டுமே. இதேபோல் மற்ற மாவட்டக் காரர்களும் எழுதவேண்டும். கோயமுத்தூர், சேலம் மற்றும் மதுரைக்காரர்கள் உடனடியாக முன்வர வேண்டும். இதனால், தமிழ்ச் சினிமாவிற்கு பங்களித்தவர்களின் விவரங்கள் முழுமையாகக் கிடைக்கும்...’’ என்றவரிடம் அடுத்த கட்டம் குறித்து கேட்டோம்.

‘‘அரசோ அல்லது சினிமா ஆய்வு நிறுவனங்களோ உதவி செய்ய முன்வந்தால் இந்த சிவகங்கை சினிமா குறித்த நூலையே இன்னும் 2 ஆயிரம் பக்கங்களுக்கும் கூடுதலாக விரிவாக்கம் செய்ய முடியும். அடுத்து நான் சினிமா சார்ந்து, ‘தமிழ் சினிமா இசையமைப்பு வரலாறு’, ‘செட்டிநாடும் சினிமாவும்’ என்ற தலைப்புகளில் எழுத திட்டமிட்டுள்ளேன். ஆனால், இதற்கும் முறையான
உதவிகள் தேவை...’’ என்றார் எழுத்தாளர் குருசாமி மயில்வாகனன்.

பேராச்சி கண்ணன்