கடல் நடுவே இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம்...
கன்னியாகுமரி என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும்தான். கடலினுள்ளே தனித்துவத்துமாக ஜொலிக்கும் இந்த இரண்டு நினைவுச் சின்னங்களையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கண்ணாடி இழைப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மக்களிடையே பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. காரணம், கடலினுள் அருகருகே உள்ள பாறைகளில் அமைந்த விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் படகு மூலம் சென்றே இதுநாள் வரை கண்டுகளிக்க முடியும்.
விவேகானந்தர் மண்டபத்தை கண்டு ரசிப்பவர்கள் சமயங்களில் கடல் அலைகளின் சீற்றம், காற்றின் வேகம் ஆகியவற்றால் திருவள்ளுவர் சிலைக்குப் போகமுடியாமலேயே திரும்பும் நிலை இருந்தது. அந்தக் குறையைத்தான் தமிழ்நாடு அரசு இப்போது ரூ.37 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள கண்ணாடி இழைப் பாலம் மூலம் போக்கி இருக்கிறது. சுமார் 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டது இந்தப் பாலம். கடல் அரிப்பையும், கடல் காற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் bowstring arch bridge எனப்படும் வில்நாண் வளைவு பாலமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது முழுவதும் கண்ணாடி இழையால் ஆனதல்ல. பத்து மீட்டர் அகலமுள்ள பாலத்தில் 2.5 மீட்டர் அகலத்தில் தடிமனான கண்ணாடித்தளம் நடுவில் போடப்பட்டுள்ளது. பாலத்தில் நடப்பவர்கள் இதன்வழியாக கீழே கடல் அழகை ரசிக்க முடியும்.
முழுவதும் கண்ணாடித்தளமாக அமைத்திருந்தால் சிலருக்கு அதில் நடக்க தயக்கமும், பயமும் ஏற்படலாம் என்பதாலும், மழைக்காலங்களில் கண்ணாடிப் பாலம் வழுக்கலாம் என்பதாலும் நடுவில் கண்ணாடித்தளமும், இருபுறங்களிலும் கான்கிரீட்டும் போடப்பட்டுள்ளன.இந்நேரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட கதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
கடந்த 2000ம் ஆண்டு முக்கடல் சங்கமமாகத் திகழும் இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் மண்டபம் அருகே இருந்த பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால், 2000ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டாலும் அதற்கான விதை என்பது அதற்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தூவப்பட்டது.
ஆம். கடந்த 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக திருவள்ளுவர் சிலைத் திட்டம் தொடர்பான அறிவிப்பை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டார். ஆனால், அந்நேரம் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் திட்டம் அறிவிப்போடு முடங்கியது. பின்னர் தமிழக முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார். அவரின் காலத்தில் 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான கால்கோள் விழா கோலாகலமாக நடந்தது.
இதில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது 40 அடி உயரத்தில் பீடமும், அதன்மீது 30 அடி உயரத்தில் சிலை அமைப்பது என்றும் திட்டமிடப்பட்டது.ஆனால், அடுத்துவந்த இரண்டு ஆண்டுகளில் திருவள்ளுவர் சிலை அமைத்தல் தொடர்பான பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு 1981ம் ஆண்டு புதியதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதில் திருவள்ளுவர் சிலை வடிவமைப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி 45 அடி உயரத்தில் பீடம், 75 அடி உயர சிலை என மொத்தமாக 120 அடிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அதுவும் அறிவிப்புடனே இருந்தது.அதுமட்டுமில்லாமல் மாற்றம் செய்யப்பட்ட திட்டத்தில் சிலையை உட்பகுதி வழியாகச் சென்று தலைப்பகுதி வரை பார்வையிடும் வகையில் சிலைக்கு உள்ளேயே லிஃப்ட் வசதி ஏற்படுத்தவும், அங்கிருந்து கடல் அழகை ரசிக்கவும் அரசு முடிவு செய்தது.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தெய்வப்புலவர் என்று வர்ணிக்கப்படுகின்ற திருவள்ளுவர் சிலையில் அவரது தலைமீது ஏறி நின்று பார்வையிடுவது அவரை அவமதிப்பது போன்றது எனக் கருத்துக்கள் வந்தன.
இதன்பிறகு, திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் முடங்கியது. மீண்டும் 1989ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வர் கலைஞர் கருணாநிதி திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவித்தார்.
சிலைக்குள் லிஃப்ட் அமைக்கும் திட்டத்தை மாற்றவும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒருவழியாக 1990 - 91ம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் திட்டத்திற்கு முதல்முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்துடன் திருக்குறள்களின் 133 அதிகாரங்களை மையப்படுத்தி சிலையின் உயரமும் 133 அடி என மாற்றம் செய்யப்பட்டது. 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி கன்னியாகுமரியில் சிலை அமைக்கும் பணிகளை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் இருந்து கற்கள் வெட்டி வடிவமைப்பு செய்து கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்டன.
முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 1994ம் ஆண்டு வரை சிலை அமைப்பு பணிகள் நடைபெற்றன. இருந்தும் மீண்டும் திட்டம் முடக்கத்தை சந்தித்தது.
பின்னர் 1996ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் திருவள்ளுவர் சிலை அமைக்கும் திட்டத்திற்கு உயிரூட்டினார். சிற்பி கணபதி ஸ்தபதி தலைமையிலான குழுவிடம் முழுப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. அம்பாசமுத்திரத்தில் இருந்து 5 ஆயிரம் டன் கற்களும், சோழிங்கநல்லூரில் இருந்து 2 ஆயிரம் டன் கற்களும் கொண்டுவரப்பட்டன. ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட சிற்பிகள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மொத்தமாக 3 ஆயிரத்து 681 கற்கள் வெட்டிச் செதுக்கி படகு மூலம் பாறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி திருவள்ளுவர் சிலை திறப்புவிழா சிறப்பாக நடந்தேறியது.
தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புடைசூழ அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையைத் திறந்துவைத்தார். இப்போது 25 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது வான்போற்றும் வள்ளுவரின் சிலை!
பேராச்சி கண்ணன்
பேரறிவு சிலை...
இந்தியாவின் உயரமான 25 சிலைகளில் ஒன்றாக விளங்குகிறது திருவள்ளுவர் சிலை. குறிப்பாக கடலுக்குள்ளே கல்லால் அமையப்பெற்ற மிக உயரமான சிலைகளில் திருவள்ளுவர் சிலை முதலிடம் பிடித்துள்ளது.இதன் மொத்த எடை 7 ஆயிரம் டன்கள் ஆகும். சிலை 95 மீட்டர் உயரமும், ஆதார பீடம் 38 மீட்டர் உயரமும் கொண்டது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் கம்பீரமாக இருந்தது.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் தலைவர்கள் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட தனிப்படகில் செல்வது வழக்கம். அப்படிச் சென்ற அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம், 10 குறள்களை திருவள்ளுவர் சிலை பீடத்தில் பொறிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவரின் விருப்பப்படி திருவள்ளுவர் சிலையில் 10 குறள்கள் பொறிக்கப்பட்டன.
இதுதவிர 133 திருக்குறள்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிலையின் பீடத்தையொட்டிய பகுதிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை ‘பேரறிவு சிலை’ எனப் பெயர் சூட்டி அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார்.
|