பழைய பொம்மைகளில் புதிய வீடு!



இருபத்தைந்து வருடங்களில், அதாவது 2050ம் வருடம் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை, அங்கே வசிக்கும் மீன்களின் எடையைவிட அதிகமாக இருக்கும் என்று அதிர்ச்சியளிக்கின்றனர் சூழலியல் நிபுணர்கள். அந்தளவுக்குத் தினமும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2019ம் வருடத்திலிருந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 37 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது. 1950 முதல் 2018ம் வருடம் வரை உலகம் முழுவதும் 630 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகியிருக்கின்றன.

இந்தப் பிளாஸ்டிக்குகள் பல்வேறு பொருட்களாக வடிவம் பெற்று, அவை பழையதாகி, பிளாஸ்டிக் குப்பைகளாக மாறியிருக்கும். அந்தப் பிளாஸ்டிக் குப்பைகளில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மற்றவை கடலில் கலந்து, சூழலுக்கு எதிராக மாறுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதால் ஏற்படும் பிரச்னைகள் தனிக்கதை. இன்னொரு பக்கம் 90 சதவீத கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கும் என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் ஒருவர், பொம்மை வீடு மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற புது வழியைக் காண்பிக்கிறார். அவரது பெயர் ஸ்ரீஜேஷ்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்திருக்கும் குக்கிராமம், கக்குனி. 
இங்கே பிறந்து, வளர்ந்தவர் ஸ்ரீஜேஷ். இயற்கையின் மீது பெருங்காதல் கொண்ட ஸ்ரீஜேஷ், வங்கியில் பணி செய்து வருகிறார். சூழலுக்கு இசைவான ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பது அவரது நெடுநாள் கனவு. சமீபத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட, சூழலுக்கு இசைவான ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்.

ஆம். பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த பொம்மை வீட்டைக்கட்டியிருக்கிறார் ஸ்ரீஜேஷ்‘‘ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டினரிடமிருந்தும் பழைய பிளாஸ்டிக் பொம்மைகளைச் சேகரித்தேன். ஆனால், அவை போதுமானதாக இல்லை. பிறகு வார விடுமுறை நாட்களில் கோழிக்கோட்டில் உள்ள ஸ்கிராப் யார்டுகளுக்குச் சென்று பிளாஸ்டிக் பொம்மைகளைச் சேகரித்தேன்.

பயன்படுத்தி, தூக்கி விசப்பட்ட இந்த பொம்மைகளில் சிறந்தவற்றை மட்டுமே வீடு கட்டுவதற்காக தேர்வு செய்தேன். அந்த பொம்மைகளுக்குள் சிமென்ட்டை வைத்து, இந்த வீட்டைக் கட்டினேன். 

வெறும் அழகியல் நோக்கத்திற்காக மட்டுமே இதைச் செய்யவில்லை. பொம்மைக்குள் இருக்கும் சிமெண்ட் இன்னமும் வீட்டை வலுவாக்கும். குப்பைகளாக மாறிய அந்த பிளாஸ்டிக் பொம்மைகள் கடலில் கலக்காது...’’ என்று பேச ஆரம்பித்த ஸ்ரீஜேஷின் நோக்கமே, இயற்கைக்குத் தொந்தரவு செய்யாத ஒரு வீட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

மக்கள் பயன்படுத்தி தூக்கி வீசிய பல பொருட்களில் கட்டடம் கட்டுவதற்குத் தேவையானதை மறுசுழற்சி செய்து பயன்படுத்தியிருக்கிறார். மண் ணாலான டைல்ஸ், ஸ்ரீஜேஷுக்கு சொந்தமான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், அந்த மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கல், செங்கல் உருவாக்கத்தின்போது உபரியான மண், குறைந்த அளவில் சிமென்ட் என்று வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களில் கூட அதீத கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்.

இதுபோக வீட்டின் கூரையை சிமென்ட் ஓடுகளாலும், தரையை ஆக்ஸைடாலும் கட்டமைத்திருக்கிறார். குறிப்பாக சிமென்ட் மற்றும் ஸ்டீலை குறைந்த அளவு பயன்படுத்தியிருக்கிறார்.

வீட்டைக் கட்டும்போது ஸ்ரீஜேஷுக்கு உதவியாக அவரது மனைவியும், குழந்தைகளும் இருந்திருக்கின்றனர். ‘‘வீடு கட்டுவதைவிட, இதை ஒரு நல்ல நினைவாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனாலேயே பழைய இடிந்துபோன வீடுகளின் சுவர்களை எடுத்து வந்து, எனது வீட்டின் சுவராக மாற்றியமைத்தேன்.

இவ்வீட்டில் எதுவுமே புதிது கிடையாது. கேரளாவின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத்தான் ஓடுகளையே பயன்படுத்தினேன். யாருமே குடியிருக்காத பழைய வீடுகளின் எஞ்சிய பகுதிகளைப் பயன்படுத்தி இந்த வீடு உருவாகியிருப்பதால் இதை பழைய வீடுகளின் நினைவுச் சங்கமம் என்று கூடச் சொல்லலாம்...’’ என்கிற ஸ்ரீஜேஷின் வீடு, கோடை காலத்தில் கூட குளுமையாக இருக்கும்.

பெரிய பெரிய கான்கிரீட் வீடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இது. இவ்வீட்டை மனிதனின் புது கண்டுபிடிப்பு என்று கூட சொல்லலாம்.

அந்தளவுக்குப் புதுமைகள் நிறைந்திருக்கின்றன. முக்கியமாக, பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பொம்மைகளால் இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.

‘‘பெரும்பாலும் பிளாஸ்டிக்குகளால்தான் பொம்மைகளைச் செய்கின்றனர். அந்த பொம்மைகள் பழையதாகிவிட்டால் குப்பையில் வீசிவிடுகின்றனர். பொம்மைகள் பிளாஸ்டிக் குப்பைகளாக மாறுகிறது. அது மக்குவதில்லை. அந்தப் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, பயனுள்ளதாக மாற்றவேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டதுதான் இந்த பொம்மை வீடு. 

இயற்கையை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதுதான் இந்த வீட்டைக் கட்டுவதற்காக வேலை செய்த கட்டடக்கலைஞர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. பிளாஸ்டிக் குப்பையை அகற்றுவதும், நல்ல நினைவை உண்டாக்குவதும்தான் இந்த வீட்டுக்கான நோக்கமே...’’ என்று அழுத்தமாக முடித்தார் ஸ்ரீஜேஷ்.

த.சக்திவேல்