தடபுடலா மெட்ராஸ்காரனுக்கு கல்யாணம் நடத்தப் போறோம்!
‘‘ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முகம். ஆனால், இந்த மெட்ராசுக்கு பல முகங்கள். பல கலாசாரங்கள். எத்தனையோ லட்சம் பேர் பிழைப்புக்காகத் தேடி வந்தாலும் அத்தனை பேருக்கும் இடமளித்து கை நீட்டி அரவணைச்சு ஏத்துக்கற ஓர் ஊர். அதில் என்னையும் ஏத்துக்கிட்ட ஒரு ஊர் இது...’’ அவ்வளவு பிணைப்பும், இணைப்புமாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் வாலிதாசன் .
‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்கள் மூலம் தமிழிலும் தனக்கென தனி பார்வையாளர்களை உருவாக்கிய ஷேன் நிகம், ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் மூலம் தற்போது நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார். மட்டுமல்ல; இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக வலது காலை எடுத்து வைத்து கோலிவுட்டுக்கு வருகிறார் வாலி மோகன்தாசன்.
இந்தத் தலைப்பை எப்படி இன்னமும் தமிழ் சினிமா விட்டுவைத்திருக்கிறது?
எனக்கும் அதே ஆச்சர்யம்தான். தலைப்பு முடிவு செய்திட்டு பார்த்தா... யாருமே பதிவு செய்யலை. இந்தத் தலைப்பு கிடைச்சதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
இந்த ஊருக்கு நிறைய பாசிடிவ் முகம் உண்டு. அந்த முகத்தைத் காட்டணும்னு நினைச்சேன். அதுதான் இந்த ‘மெட்ராஸ்காரன்’.
எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டைதான். ஆனால், படிப்பு,வேலை... இப்படி இந்த ஊருக்கு வந்து சென்னை வாசியா மாறி பல வருஷங்கள் ஆச்சு. இந்த ஊரில் வந்து பிழைப்பு தேடி இங்கே தனக்கான ஒரு வாழ்க்கையை ஆரம்பித்து வாழ்ந்துகிட்டு இருக்கிற அத்தனை பேருமே என்னதான்னாலும் சென்னையை விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அப்படியான ஒரு பாசிட்டிவ் பக்கத்தை இந்தப் படம் காட்டும். என்ன கதை..?
ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி வேலைக்காக சென்னை வந்த ஒருவனுக்கு ஊரில் திருமணம். நாயகன் ஷேன் நிகம் புதுக்கோட்டைவாசி. அவருக்குதான் கல்யாணம். அதுக்கு தயாராக சொந்த பந்தங்கள்... இதற்கிடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
அப்ப இருந்து இப்ப வரை தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்துட்டு ஊருக்கு போறவங்களை ‘மெட்ராஸ்காரங்க’ அல்லது ‘மெட்ராஸ் காரன்/காரி’ வந்துட்டாங்களானுதான் எல்லாரும் விசாரிப்பாங்க. அப்படிப்பட்ட ‘மெட்ராஸ்காரன்’ ஒருவனுக்கு கல்யாணம்... அதைச் சுற்றி நடக்கற கதைதான் கதைக்களம். ஷேன் நிகம் எப்படி கதைக்குள் வந்தார்?
எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர். அவர் கூட வேலை செய்யணும்னு ஒரு விருப்பம். கதை சொல்ல நேரம் கேட்டேன். அவரும் உடனே நேரம் ஒதுக்கினார். கதை அவருக்கும் பிடிச்சது. உடனே படப்பிடிப்பு ஆரம்பிச்சுட்டோம். எல்லாமே சிங்கிள் டேக்தான். அவ்ளோ அசால்ட்டா நடிக்கிறார். இன்னொரு மெயின் கேரக்டரில் கலையரசன் நடிச்சிருக்கார். எந்தப் படத்திலும் பார்க்காத ஒரு லுக்கில் ஐஸ்வர்யா தத்தா ரொம்ப முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்காங்க.
‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் நிஹாரிகா கொனிடலா. அவங்க செம ஜாலியான பொண்ணு. எந்த சீன் கொடுத்தாலும் அவ்வளவு ஜாலியா கூலா நடிக்கிறாங்க. ஹீரோவுக்கு மாமா கேரக்டரில் கருணாஸ் சார், அடுத்து பாண்டியராஜன் சாருக்கும் ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டர். கீதா கைலாசம் மேடம் ஹீரோவின் அம்மா கேரக்டரில் நடிச்சிருக்காங்க.
அசிஸ்டென்ட் இயக்குநரா உங்க கிராஃப் ரொம்ப வித்தியாசமா இருக்கே?
ஆமாம். வஸந்த் சார் கூட ரொம்ப நாட்கள் வேலை செய்திருக்கேன். அதுதான் எனக்கு சினிமா ஸ்கூல். அடுத்து எழில் சார் கூட ஒரு படம் வேலை செய்தேன். அவருடைய செட் மொத்தமாவே அவ்வளவு ஜாலியா இருக்கும். அடுத்து இயக்குநர் விஜய். அவருடைய ஃபிலிம் மேக்கிங் வேறு விதமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு இயக்குநர் கூட வேலை பார்த்ததும் பல்வேறு முறைகளில் சினிமாவை படிச்ச மாதிரி இருக்கு. எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை.
விஸ்காம் படிக்க சென்னை வந்தேன். தொடர்ந்து குறும்படங்கள்... அதைத்தொடர்ந்து அசிஸ்டென்ட் இயக்குநரா நிறைய பெரிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கேன். முதல் படம் ‘ரங்கோலி’, தொடர்ந்து ‘ஷ்ஷ்ஷ்’.இப்ப ‘மெட்ராஸ்காரன்’. இந்தப் படத்துக்கு சினிமாட்டோகிராபி பிரசன்னா கே குமார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘பூமராங்’, ‘பிச்சைக்காரன்’ உட்பட நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறார்.
எடிட்டராக வசந்தகுமார். விஜய் சாருடன் ‘தலைவா’, ‘மிஷன்: சாப்டர் 1’ ப்ராஜெக்ட்களில் அசிஸ்டென்ட் எடிட்டராக வேலை செய்திருக்கார். படத்துக்கு மியூசிக் சாம் சி எஸ். ‘தை தக்க கல்யாணம்...’ பாடல் பயங்கர ஹிட் ஆயிடுச்சு.
பொதுவாகவே உங்களுக்கு கம்மிங் ஆப் ஏஜ் கதைகள் ரொம்ப சுலபமா வருதே?
முதல் படமே ‘ரங்கோலி’. முழுக்க முழுக்க ஸ்கூல் டீன் ஏஜ் பசங்கள மையமாக வைத்துதான் எடுத்தேன். என்னவோ அவங்ககிட்ட வேலை வாங்குறது ரொம்ப சுலபமா இருக்கு. ஒரு விஷயம் சொன்னா அவங்க கிட்ட சொல்லாமலேயே இன்னும் நிறைய க்யூட்டான ரியாக்ஷன், நடிப்பு எல்லாமே கிடைக்கும்.
அதைத்தொடர்ந்து ஓடிடி ஆந்தாலஜி சீரிஸான ‘ஷ்ஷ்ஷ்’ குறும்படத் தொகுப்பிலும் என்னுடைய படம் பள்ளிப் படிப்பில் செக்ஸ் எஜுகேஷன் என்பதை அடிப்படையாக வச்சு கதை செய்திருப்பேன். குழந்தைகள்கிட்ட ஒரு விஷயம் சொன்னா, சொன்னதை அப்படியே இயல்பா செய்வாங்க. அதனாலேயே அவங்க கூட வொர்க் பண்ண பிடிக்கும். உங்க அடுத்த படம்..?
இயக்குநர் விஜய் சார் தயாரிப்பில் படம் செய்திட்டு இருக்கேன். அது கிட்டத்தட்ட நிறைவை நெருங்கிடுச்சு. அந்தப் படத்தை பிரகாஷ்ராஜ் சார், தயாரிப்பாளர் ராஜசேகர் சார், இயக்குநர் விஜய் சார் மூணு பேரும் சேர்ந்து தயாரிக்கிறாங்க. அந்தப் படம் நவீன் சந்திரா சார், டிஜே அருணாச்சலம், பிரகாஷ் ராஜ் சார், வாணி போஜன் மேம், அம்ரிதா ஐயர், ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ்...
இப்படி நிறைய நடிகர்கள் பட்டாளங்களுடன் முழுமையா சென்னையின் பாசிட்டிவ் முகத்தை மையமாக வச்சு உருவாகிட்டு இருக்கு. ‘மெட்ராஸ்காரன்’ வெளியானபிறகு அந்தப் படத்தின் ரிலீஸ் வேலைகளை ஆரம்பிச்சிடுவோம். இன்னும் தலைப்பு வைக்கலை. கூடிய சீக்கிரம் அறிவிப்பு வரும்.
ஷாலினி நியூட்டன்
|