மனைவி தயாரிப்பில் அறிமுகமாகிறேன்... சீக்கிரமா மனைவி டைரக்‌ஷன்ல நடிப்பேன்!



முரளி, அதர்வா என வலுவான சினிமா பேக்ரவுண்டுடன் களமிறங்கியுள்ளார் ஆகாஷ் முரளி. விஷ்ணுவர்த்தன் இயக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் வழியாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அப்பா, அண்ணன் போல் எளிமையாகப் பழகும் ஆகாஷ் முரளியிடம் பேசினோம்.சினிமா குடும்பம் என்பதால் நடிக்க வந்தீர்களா?

மூன்று தலைமுறைகளாக சினிமாவில் இயங்கிவரும் குடும்பம் எனும்போது அந்த ஆர்வம் இல்லாமல் இருக்காது. எல்லோருக்கும் அவரவர் அப்பாக்கள் ஹீரோவாகத் தெரிவார்கள். அப்படி எனக்கு என்னுடைய அப்பா.அப்பா ‘இரணியன்’ பண்ணும்போது ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அந்த சமயத்தில் அப்பா செய்த ஸ்டண்ட் காட்சிகள், அவருடைய லுக் என எல்லாமே ஆழமாக மனசுல பதிய ஆரம்பிச்சது.
அதிலிருந்து எனக்கும் ஹீரோவாக வரணும் என்ற ஆசை அதிமாச்சு. என்னுடைய தாத்தா சித்தலிங்கையாவும் நான் சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டார்.ஒருமுறை நாங்கள் குடும்பமாக திருப்பதிக்குப் போனோம். போகும் வழியில் தாத்தா செல்போனில் என்னை வெச்சு சிறிய குறும்படம் எடுத்தார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சாரை வெச்சு பல படங்கள் இயக்கிய என் தாத்தா என்னை டைரக்ட் பண்ணியது பாக்யம்.

எனக்குள் சினிமா ஆசை இருந்தாலும் சமரசம் இல்லாமல் டிகிரி முடிச்சேன். 2019ல் டிகிரி முடிச்சதும் நடிக்கலாம்ன்னு முடிவு பண்ணினேன். அனுபம்கெர் இன்ஸ்டிடியூட்ல சினிமா கோர்ஸ், அப்புறம் கூத்துப்பட்டறையில் பயிற்சி, பிறகு பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் என சில அடிப்படைகளை தெரிந்துகொண்டேன்.

அது கோவிட் டைம் என்பதால் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். அதாவது நல்ல கதைக்காகவும் காத்திருந்தேன். நடுவே இன்னொரு நல்ல விஷயமும் நடந்துச்சு. அது என் திருமணம். சிநேகாவை கரம் பிடிச்சேன். எல்லோரும் சினிமாவுக்கு வந்த பிறகு கல்யாணம் செய்து கொள்வார்கள். நான் திருமணம் முடிச்சுட்டு சினிமாவுக்கு வந்தேன்.

சிநேகாவும் நானும் சேர்ந்து படம் பண்ண முடிவு செய்தோம். விஷ்ணுவர்த்தன் சாரை தம்பதி சகிதமா சந்திச்சு ‘நீங்க அறிமுகம் செய்தால் நல்லாயிருக்கும்’ன்னு எங்கள் விருப்பத்தைச் சொன்னேன்.ஏன் அவரை மீட் பண்ணினேன் என்றால் அவருடைய படங்கள் எனக்குப் பிடிக்கும். ‘பட்டியல்’ படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்திருப்பேன். 

ஆர்யா சாருக்கு அந்தப் படம் அழுத்தமான அறிமுகத்தைக் கொடுத்துச்சு.முதல் சந்திப்பிலேயே சார் ஆர்வம் காட்டினார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையால் விஷ்ணு சார் என்னை வெச்சு படம் இயக்க ஒப்புக்கொண்டார்.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிச்ச அனுபவம் எப்படியிருந்துச்சு?

ஆரம்பத்துல கொஞ்சம் ப்ரஷர் இருந்துச்சு. அஜித் சாரை வெச்சு படம் செய்த இயக்குநர். இந்தியில் பெரிய நடிகர்களை வெச்சு படம் செய்கிறார். அதை நினைக்கும்போது நம்மையும் அறியாமல் ப்ரஷர், பயம் வராமல் இருக்குமா?!சொன்னா நம்பமாட்டீங்க, ஷூட்டிங் துவங்குவதற்கு இரண்டு நாள் முன்னாடி சாப்பாடு, தூக்கம் என எதன் மீதும் கவனம் போகவில்லை. அதுபோன்ற தவிப்பு எல்லோருக்குள்ளும் இருப்பதுதான். அந்த தவிப்பு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்துச்சு.

விஷ்ணுவர்த்தன் சார் பழகும் விதத்துல ஜெம் ஆஃப் எ பர்சன். சக நடிகர், நடிகைகள் என எல்லோரிடமும் அன்பாகப் பேசி தனக்குத் தேவையான நடிப்பை வாங்கிவிடுவார். எல்லோரையும் டென்ஷன் இல்லாமல் கூலாக வழிநடத்துவார். ‘கேமரா அது வேலையைச் செய்யப்போகிறது. நீ உன் பாட்டுக்கு உன் வேலையைச் செய்’ன்னு கூலாக
வழி நடத்துவார்.

ஆர்ட்டிஸ்ட்களிடம் சின்ன கரெக்‌ஷன் செய்வதாக இருந்தாலும் ‘நீ என்ன பண்ணினாலும் நல்லாத்தான் இருக்கும்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார். அதன் பிறகு அவர் ‘பில்லா’ பண்ணின டைரக்டராக, பேசவே பயப்படுகிற ஆளுமையா தெரியவில்லை. நண்பரா, அண்ணனா, வெல் விஷரா தெரிஞ்சார்.

அந்த வகையில் விஷ்ணு வர்த்தன் சாருடன் ஒர்க் பண்ணின அனுபவம் மறக்க முடியாதது. இன்ஸ்டிடியூட்ல படிச்சிருந்தாலும் சினிமாவைப் பற்றிய பல நுணுக்கங்களை அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் எந்த குறும்படங்களிலும், பைலட் காப்பியிலும் நடிக்கவில்லை. எல்லாமே ஹோம் ஒர்க் என்ற அளவில்தான் இருந்துச்சு. அப்படி ‘நேசிப்பாயா’ படத்தில் என் நடிப்புக்கான பாராட்டு அனைத்தும் விஷ்ணுவர்த்தன் சாருக்குத்தான் போய்ச் சேரும்.

அதிதி ஷங்கர்?

ஸ்வீட் கேர்ள். ‘விருமன்’, ‘மாவீரன்’ போன்ற படங்கள் முடிச்சுட்டு வந்ததால அவருக்கு கேமரா ஃபியர் எல்லாம் போயிருந்துச்சு. நான் டென்ஷனாக இருந்தால் அவர்தான் ‘ரிலாக்ஸ் பண்ணு’ன்னு என்கரேஜ் பண்ணுவார். ரொம்ப சப்போர்ட்டிவ்வான கோ ஸ்டார். என்னால் மிக சுலபமாக நடிக்க முடியும் எனுமளவுக்கு நம்பிக்கைகொடுத்ததில் அவருக்கும் பங்களிப்பு இருக்கு.

இதில் ‘விருமன்’, ‘மாவீரன்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததால் ஷாட் எடுப்பதற்கு முன் அந்த சீனை எப்படி பண்ணலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணுவோம். விஷ்ணுவர்த்தன் சாரும் எங்களுக்கு ஃப்ரீடம் தருவார். அது காட்சியை மேம்படுத்துவது போல் இல்லாமல் எங்க சைட்லயிருந்து என்ன பண்ணமுடியும் என்பதுபோல் இருக்கும்.   

அதர்வா என்ன அட்வைஸ் பண்ணினார்?

அண்ணன் அட்வைஸ் பண்ணமாட்டார். ‘உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு’ன்னு சொல்வார். அண்ணன் எனக்கு சகோதரன் மட்டுமல்ல, அப்பா ஸ்தானத்தில் வெச்சுதான் அண்ணனைப் பார்க்கிறேன். அப்பா இருந்தால் அவரிடமிருந்து எப்படி அன்பும், ஆதரவும் கிடைக்குமோ அதுமாதிரிதான் அண்ணன் என்னிடம் நடந்துகொள்வார். தம்பி என்பதைவிட குழந்தை மாதிரி பார்த்துக்கொள்வார்.

நடிகராகவும் பெரிய அளவில் அட்வைஸ் எதுவும் பண்ணமாட்டார். ‘எனக்குத் தெரிஞ்சு கேமரா முன்னாடி தாடைப்  பகுதியை மேலே தூக்கக்கூடாது’ன்னு சின்னதாக அட்வைஸ் சொல்லியிருக்கிறார். மற்றபடி எப்படி நடிக்கணும் என்பதை நீயே தெரிஞ்சுக்குவேன்னு என்கரேஜ் பண்ணுவார். அண்ணன் முழுசா படம் பார்க்கவில்லை. ‘ரஷ்’ பார்த்துட்டு பாராட்டினார்.உங்க மனைவி சிநேகா அடிப்படையில் இயக்குநர். அவர் டைரக்‌ஷனில் நடிக்கும் ஐடியா இருக்கிறதா?

முதலில் என் மனைவி சிநேகாவுக்கு நன்றி சொல்லணும். அவரால்தான் இந்தப் படம் துவங்குச்சு. இப்போது என்னை வெச்சு படம் தயாரித்துள்ளார். அடுத்து அவருடைய டைரக்‌ஷனில் நடிக்கணும் என்ற ஆசை இருக்கிறது. ஸ்கிரிப்ட் அமையும் போது என் மனைவி டைரக்‌ஷன்ல நடிப்பேன்.  

அப்பா படத்தை ரீமேக் செய்து நடிப்பதாக இருந்தால் உங்க சாய்ஸ் எது?

‘இரணியன்’. அது எனக்குப் பிடிச்ச படம். அது லவ் படம் கிடையாது. பயோபிக் பண்ணணும் என்ற ஆசையும் இருக்கு. ஹாலிவுட் ஆக்டர் டாம் ஹாங்க்ஸ் மாதிரி ரியல் லைஃப் ஸ்டோரியிலும், ‘அமரன்’ மாதிரி கதைகளிலும் நடிக்க ஆசை.

தமிழ் சினிமாவில் என்ன மாதிரி நடிகராக பேர் வாங்கணும்னு ஆசைப்படுறீங்க?

அண்ணன் மாதிரி வெர்சடைல் ஆக்டராக வரணும். 40, 50 வயசுக்குப் பிறகு என்னுடைய படங்களை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கும்போது எல்லா வகை படங்களையும் செய்த மாதிரி இருக்கணும். ஆடியன்ஸ் என்னை குறிப்பிட்ட ஜோனர்லதான் பார்க்கணும் என்று எந்த ஐடியாவும் இல்லை.

எஸ்.ராஜா