12 மனைவிகள், 102 குழந்தைகள்,500க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள்... இது குடும்பமா, கிராமமா?



‘DINK - Dual Income No Kids...’ அதாவது இரண்டு பேரின் வருமானம்... ஆனால், குழந்தைகள் வேண்டாம். இதுதான் இப்போது அடுத்த ட்ரெண்ட். இப்படி நாம் இருவர் நமக்கு இருவர் காலம் முடிந்து நாம் இருவர் நமக்கு ஒருவர், இப்போது அதுவும் மறைந்து நாம் ஒருவர் நமக்கு ஒருவர், அட அதுவும் வேண்டாம் நாம் ஒருவர் போதும்பா... என காலம் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கும் காலகட்டத்தில்தான் உகாண்டாவைச் சேர்ந்த ஒருவர் 102 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். இவருக்கு 12 மனைவிகள், 500க்கும் மேற்பட்ட பேரன்பேத்திகள். அத்தனை பேரும் ஒரு குட்டி கிராமம் போல் ஒரு காலனியில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும்தானே?

உகாண்டா நாட்டின் புகிசா பகுதியைச் சேர்ந்தவர் மூசா ஹசாஹ்யா. தற்போது இவருக்கு 69 வயது ஆகிறது. இவர் கடந்த 1971ம் ஆண்டு ஹனிஃபா என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். அப்போது மூசாவுக்கு வயது 17. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மூசாவுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 2 ஆண்டுகளில் இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறார்.
உகாண்டா நாடு பல வித்தியாசமான கலாசாரங்களைக் கொண்டது. அங்கு சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல திருமணங்கள் செய்துகொள்ள அனுமதி உண்டு.

பொதுவாக ஒன்றிரண்டு திருமணங்களைச் செய்த பல ஆண்களை அங்கு பார்க்க முடியும். ஆனால், மூசா ஹசாஹ்யா, அரசு கொடுத்த அனுமதியை தன்னால் முடிந்தவரை பயன்

படுத்தி 12 பேரைத் திருமணம் செய்துள்ளார்.

1972ம் ஆண்டு 17 வயதில் மூசாவுக்கு முதல் திருமணம் நடந்தது. மூசாவின் தந்தைக்கு இரண்டே பிள்ளைகள்தான். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வளர்ந்த மூசா, விவசாயம் மற்றும் மாட்டிறைச்சி விற்று குடும்பம் நடத்தி வந்தார்; வருகிறார். இதனால், தனக்குப் பெண் கொடுக்க பலர் முன்வந்ததால் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டதாக அவர் கூறுகிறார்.

இவரது மனைவிகள் உகாண்டாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அத்தனை பேரும் எவ்வித சர்ச்சைகளும் சண்டைகளும் இல்லாமல் ஒரே காலனியில் இருக்கிறார்கள். 

உகாண்டாவில் பழங்காலம் தொட்டே குழந்தைத் திருமணப் பழக்கம் இருந்தது. ஆனால், 1995ம் ஆண்டு இதனை அந்நாட்டு அரசு தடை செய்தது. ஆனால், அதற்கு பதிலாக பலதார மணம் என்பது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. விளைவு, இந்நாட்டில் சுமார் 8.3% பெண்களும் 7.1% ஆண்களும் பலதார திருமண உறவில் இருக்கின்றனர். இதில் ஒருவர்தான் மூசா ஹசாஹ்யா கசேரா.

பார்ப்பதற்கு இது நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால், ‘‘இங்கே அமல்படுத்தப்பட்ட பலதார மண சட்டத்தால் இளமையாக இருக்கும் பொழுது எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலரை திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், நாட்கள் செல்லச் செல்லத்தான் இதில் இருக்கும் கடினமும் சிக்கலும் எங்களுக்கு புலப்படுகிறது. இப்போது எனக்கு 12 மனைவிகள்... 102 குழந்தைகள், 578 பேரன் பேத்திகள்.

இவர்கள் அத்தனை பேருக்கும் உணவு, தங்குமிடம், வசதி என எதுவும் கிடைக்காமல் பல நேரம் அத்தனை பேரும் சேர்ந்து பட்டினி கிடந்த நாட்கள் கூட உண்டு. பலரும் எங்களைப் போன்றவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். ஆனால், இங்கே இருக்கும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.

திருமணம் ஆனபோது எனக்கு 17 வயது. அப்போதைய வயதுக்கு இது சரி, இது தவறு என சொல்லிக் கொடுக்கவும் ஆளில்லை. காரணம், எங்கள் குடும்பம், சொந்தம், எங்கள் நாட்டின் ஆண்கள், பெண்கள் என பலரும் இந்த பலதார மணத்திற்கு பழக்கப்பட்டு விட்டோம்.
ஆனால், இது தவறு என்பது இத்தனை வருடங்களுக்குப் பிறகுதான் புரிகிறது...’’ என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் மூசா.

உகாண்டாவின் இத்தகைய கலாசாரத்தால் அங்கு பிறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகரித்து வரும் பிறப்பு விகிதமும் மக்கள் தொகையும் இணைந்து போதிய மருத்துவ வசதி இல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளவும் முடியாமல் அங்கே இருக்கும் பெண்களும் ஆண்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். 

இதில் இதுதான் பிரச்சனை என வெளியில் வந்து சொன்னவர் மூசா மட்டுமே. இன்னும் எத்தனையோ ஆண்களும், பெண்களும் ஐந்துக்கும் மேலான திருமணங்கள் செய்துவிட்டு அங்கே பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள்.

மூசாவின் 12 மனைவிகளில்இரண்டு பேர் அவரை விட்டுவிட்டுச் சென்று விட்டனர். மூவர் வேறு ஒரு நகரில் வேலை பார்த்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். முடிந்தவரை அத்தனை பேரையும் ஒரே இடத்தில் வைத்திருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் மூசா. இல்லையேல் தனது மனைவிகள் இன்னொருவருடன் சென்று விடக் கூடும் என்பது மூசாவின் புரிதல், அச்சம்.

அப்படியான சம்பவமும் மூசாவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. 6 முதல் 51 வயது வரை குழந்தைகள் கொண்ட மூசாவின் கடைசி மனைவி, மூசாவின் மகளைக் காட்டிலும் வயது குறைந்தவர். அவர் இன்னொருவருடன் சென்று விட்டார்.

இத்தகைய பலதார மணத்தால் குடும்ப வாழ்க்கையில் எந்த நெறியும், கட்டுப்பாடும் இல்லாமல் பாலியல் சார்ந்த நோய்களும் அதிகம் பரவி வருவதாக உலக மருத்துவத் துறைகளும் எச்சரித்து வருகின்றனர். இதில் நாட்டில் நிலவும் பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றால் இதர நோய்களும் அங்கே தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன.

உகாண்டா அரசு விரைவில் செயல்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாகவும் உடனடியாகவும் இந்த பலதார மணத்தை தடை செய்தால் மட்டுமே அங்கே இயல்பான குடும்ப வாழ்க்கை உருவாகும் என்கிறார்கள் சமூகவியல் ஆர்வலர்கள்.மூசாவின் வாழ்க்கையும், பகிரங்கமாக தன்னைப் பற்றி அவர் பொதுவெளியில் பேசி வருவதும் இதற்கான தீர்வை நோக்கி உகாண்டாவை நகர்த்தும் என சர்வதேச நாடுகள் நம்புகின்றன.நல்லதே நடக்கும் என நம்புவோம்.

ஷாலினி நியூட்டன்