மென்மையான காதல் தருணம் கொடுக்கும் இந்தத் தருணம்



வித்யாசமான கதைக்களம், திரில்லர், திருப்பங்கள் என தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அருள்நிதி நடிப்பில் அரவிந்த் இயக்கத்தில் ‘தேஜாவு’ படத்துக்கு இப்போது வரை தெலுங்கிலும் பெரிய ரசிகர்கள் கூட்டம். 
அதனாலேயே தெலுங்கிலும் ‘ரிப்பீட்’ என்கிற பெயரில் அரவிந்த் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இவரின் மூன்றாவது திரைப்படம் முற்றிலும் காதல், ரொமான்ஸ் என டீசர் துவங்கி பாடல் வரை எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.

முதல் படம் டுவிஸ்ட், டர்ன் என கொடுத்துவிட்டு 2ம் படம் அப்படியே வேறு ஒரு ஸோனரில் திட்டம் செய்திட்டீங்களே..?

இந்த டெம்ப்ளேட்டை உடைக்கணும்னுதான் இந்தத் திட்டம். ஓர் இயக்குநர் எந்தக் கதையானாலும் இயக்க தயாராக இருக்கணும்ன்னு நினைக்கறவன் நான். என்னைப் பொருத்தவரை இதுதான் ஸோனர், இதுதான் என் ஸ்டைல்ன்னு இல்லாமல் ஒரு கதை சொல்லியாக ஏதோ ஒரு பாயிண்ட்ல ஒரு கதை அல்லது லைன் மனசுல உதிக்கும். 
அந்தக் கதையை நோக்கி சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பயணிக்கணும்ன்னு யோசிப்பேன். அப்படித்தான் முதல் கதைக்கும் 2ம் கதைக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகாமல் இப்போ காதல், ரொமான்ஸ் கதை. அதுதான் ‘தருணம்’.

நம்ம வாழ்க்கையிலே எல்லாருக்குமே எதோ ஒரு தருணம்தான் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடும் அல்லது நம்ம வாழ்க்கையையே மாத்திடும்.

அதிலும் காதல் எல்லாருடைய வாழ்க்கையிலேயும் ஏதோ ஒரு தருணம் கொண்டு வர்றதுதான். அப்படியான ஒரு தருணத்தை அர்ஜுன், மீரா சந்திக்கிறாங்க. அது அவங்க வாழ்க்கையிலே என்னென்ன விளைவுகளை உண்டாக்குது... அப்படிக் கிடைச்ச தருணத்தை அவங்க எப்படிப் பயன்படுத்திக்கறாங்க என்கிறதுதான் கதை. 

அதிலும் ரொம்ப கிளாசிக் காதலாக இல்லாமல் இப்பவும், இந்த 2கே காலத்திலும் ஒரு சில பக்குவமான காதல்கள் இருக்கு. அதை மையமாக வெச்சுதான் இந்தத் தருணம் பெயரும் கதையும். காதல் கதைகள் என்றாலே நாயகன் - நாயகிதான் மிக முக்கியம். உங்கள் அர்ஜுன் - மீரா பற்றி சொல்லுங்க..?

அர்ஜுனாக கிஷன் தாஸ், மீராவாக ஸ்மிருதி வெங்கட். இவங்க ரெண்டு பேரையுமே பெரிதாக ரொமான்ஸ், காதல் காட்சிகளில் நாம பார்த்திருக்க மாட்டோம்.

பெரும்பாலும் நல்ல நண்பன், நல்ல தங்கை, ‘முதலும் நீ முடிவும் நீ’ படத்திலும் கிஷன் தாஸ் ஒரு டீன் ஏஜ் நாயகனாகத்தான் நடிச்சிருப்பார். அதிகம் பள்ளிக் கால மொமெண்ட்களைத்தான் அந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தத் ‘தருணம்’ கதைக்கு அப்படியான ஃப்ரஷ் ஃபேஸ் தேவைப்பட்டுச்சு. ஜோடியும் இதுவரை யாரும் யோசிக்காத ஒரு ஜோடியாக இருக்கணும்ன்னு யோசிச்சு ஃபிக்ஸ் செய்தேன்.

மேலும் என்னுடைய முந்தைய படமான ‘தேஜாவு’ படத்தில் கொஞ்ச நேரம் வரக் கூடிய கேரக்டரா இருந்தாலும் ஸ்மிருதி ரொம்ப அருமையா நடிச்சிருந்தாங்க. அவங்க திறமையை இன்னும் தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்திக்கலை. இவங்க ரெண்டு பேருடன் ராஜ் அய்யப்பா இருக்கார். 

மொத்த கதையும் இவங்க மூன்றுபேர் மேலேதான் டிராவல் ஆகும். பாலசரவணனுக்கு சமீப காலமா நல்ல கதைகள் வந்திட்டு இருக்கு. ஆனால், அதற்கெல்லாம் முன்பே ‘தருணம்’ படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகிட்டார். கீதா கைலாசம், ஜா ரவி, விமல் இவங்க எல்லாருக்குமே நல்ல ரோல்.

என்னுடைய முந்தைய படத்துக்கு கோ-புரடியூசரே பி.ஜி.முத்தையா சார்தான். அவரைத் தாண்டி இன்னொரு சினிமாட்டோகிராபர் கிட்ட போக எந்த இயக்குநரும் யோசிக்க மாட்டாங்க. அவர் படத்துக்குள் வரும் முன் சாய்ஸில் இருந்தவர் ராஜா பட்டாச்சார்ஜி. அப்போ மிஸ் ஆகி, இப்போ இந்தப் படத்துக்கு அவர்தான் சினிமாட்டோகிராபி. 

விஷுவலாகவும் படத்துக்கு நல்லகலரிங் டோன் கொடுத்திருக்கார்.  ‘தேஜாவு’ படத்திற்கு வேலை செய்த அருள் இ. சித்தார்த் இந்தப் படத்துக்கு எடிட்டிங், இசை தர்புகா சிவா. காதல் பாடல்கள் அவருக்கு அசால்ட். இந்தப் படத்திலும் பாடல்கள் நல்லா வந்திருக்கு. மேலும் ‘எனை நீங்காதே நீ...’ ஏற்கனவே டிரெண்டிங்கில் இருக்கு.

பின்னணி இசை அஷ்வின் ஹேமந்த், ஆர்ட் டைரக்‌ஷன் வர்ணாலயா ஜகதீசன். நான் கேட்ட பட்ஜெட்டைக் கொடுத்து அருமையா படத்தை தயாரிச்சிருக்காங்க ஸென்
ஸ்டூடியோஸ்.

‘தருணம்’ படம் எப்படிப்பட்ட தருணத்தை ஆடியன்ஸுக்குக் கொடுக்கும்?

பெரும்பாலும் வயலன்ஸ் படங்கள்தான் அதிகமா வருது. அதற்கிடையில் மென்மையான ஒரு காதல் தருணத்தை எதிர்பார்த்து வரலாம். இப்போதைய ஜெனரேஷனுக்கு எந்தக் கருத்தும் சொல்லாம அதே சமயம் ஒரு பக்குவமான காதல் கதையா இருக்கும்.

உங்க அடுத்த படம் திரில்லரா?

காதலா?

எல்லா ஸோனரிலும் கதைகள் எழுதுகிறவன் நான். ஆனால், அதற்குரிய ஆர்ட்டிஸ்ட்ஸ் கிடைக்கும்போது கதை படப்பிடிப்புக்குப் போயிடும். இப்போதைக்கு ‘தருணம்’ படத்தின் தருணங்களில் மும்முரமா இருக்கேன். இந்தப் படத்தின் ரிலீஸுக்கு அப்பறம்தான் மத்த வேலை.

ஷாலினி நியூட்டன்